பள்ளியில் படிக்கிற காலத்தில் மருத்துவமோ, விவசாயமோ அல்லது ஏதாவதொரு அறிவியல் தொடர்பான துறைகளில் மேற்படிப்பு தொடரவேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது. மேனிலைப்பள்ளியில் உயிரியியல், கணிதம் பிரிவில் படித்தேன்( 1 st group ). கணிதம் சுட்டுப்போட்டாலும் வராது என்பதாலும் உயிரியல் எனக்கு விருப்பமான பாடம் என்பதாலும், பொறியியலில் சேர்வதைத் தவிர்த்துவிட்டு கலை அறிவியல் கல்லூரிகளில் ஏதாவ்தொன்றில் உயிர்நுட்பவியல் சேர்ந்து விடுவது என்று முடிவு செய்தேன்.
கல்லூரிகளில் சேர்வதெனில் ஓரளவாவது தரமான, பரவலாக அறியப்பட்ட கல்லூரிகளில் படிப்பது நல்லது என்ற எண்ணம் பொதுவாக உள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கு ஓரளவிற்கு இவ்விதி பொருந்தும். அவைகளில் ஒரு சில மட்டுமே வளாகத்தேர்வுக்கு பெரிய நிறுவனங்களைக் கொண்டு வருகின்றன. கலை அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு(MBA, MCA தவிர்த்து) படிப்பு தொடர்பான வேலைவாய்ப்பும், நிறுவனங்களும் அரிது ஆகையால் எந்தக் கல்லூரியில் படித்தாலும் பெரிய வேறுபாடில்லை.ஆனாலும் மொத்தமாக நிராகரிக்க முடியாதபடி சில கல்லூரிகளில் சேவைத்துறை (BPO), அழைப்பு நடுவம்(Call Center) ஆகியவற்றுக்கான வேலைவாய்ப்புகளுக்கான சில கல்லூரிகளில் நேர்முகத் தேர்வுகளும் நடக்கின்றன.
சென்னையில் லயோலா, மாநிலக் கல்லூரி, கிறித்தவக்கல்லூரி, திருச்சியில் செயின்ட் ஜோசப், பிஷப் ஹீபர், கோவையில் பூசாகோ (PSG) போன்ற சில கல்லூரிகளில் படிப்பது வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெறமுடியும், நமது திறன்களை வளர்த்துக் கொள்ளவும் இயலும், அங்கு படிப்பதே ஒரு பெருமைஎன்றெல்லாம் கேள்விப்பட்டுள்ளேன். ஒரளவிற்கு இது உண்மை. இவைகளில் சேர்வது மிகவும் கடினம், மிக அதிக மதிப்பெண்கள் அல்லது பெரிய புள்ளிகளின் பரிந்துரை (நன்கொடையும்) தேவை. மேற்படி சமாச்சாரங்கள் நமக்கு உதவாதென்பதால் அடுத்த சுற்றில் ஓரளவு பெரிய பெயர் பெற்ற கல்லூரியில் சேர்ந்து விடத் தீர்மானித்தேன். பொதுவாக இவைகளில்தான் ஆய்வகங்கள் வசதிகளுடன் இருக்கும். ஊர்ப்பக்கம், கிராமத்திலிருந்து வரும் பெற்றோர்கள், மாணவர்கள் தனியார் கல்லூரிகளின் பிரம்மாண்டக் கட்டிடங்களிலேயே பிரமித்து விடுவார்கள், சேரவும் முனைவார்கள். இது போன்ற கல்லூரி நிறுவனங்களின் சொந்தக்காரர்கள் பெரும் தொழிலதிபர்களாக, அரசியல்வாதிகளாக, பினாமிகளாக, இருப்பார்கள். சில சமயம் முன்னாள் சாராய வணிகர்களாக, கட்டப்பஞசாயத்துக்காரர்களாகவும் இருப்பார்கள். இதனால்தான் பணம் வெள்ளமெனப் பாய்ந்து அறக்கட்டளைகளையும், கல்லூரிகளையும் நிறுவியிருப்பார்கள். இவர்களின் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளின் கட்டிடங்கள் அமெரிக்க, ஐரோப்பியப் பலகலைககழகங்களுக்கு நிகராகக் காணப்படும்.
முதன் முதலில் சேர்வதற்காக நான் கல்லூரிக்குள் செல்லும் போது வாயிற்காவலர், “இங்கே எல்லாமே இருக்கும் போங்க, குழந்தையை LKG -ல சேர்த்தா PHD முடிக்கிற வரைக்கும் எல்லா வசதியும் இருக்குது” என்று சொல்லியனுப்பினார். பெரிய படிப்புனு எல்லாரும் சொல்றாங்க, மதிப்பெண் பத்தாது என்று சொன்னாலோ, 40 பேர் முன்னாடி ஏதாவது நேர்காணல் வைத்து ஆங்கிலத்தில் கேள்வி எதுவும் கேட்டு விட்டாலோ என்ன செய்வது என்று அச்சத்துடனேயே சென்றேன். அப்படி எதுவும் நடக்கவில்லை. உள்ளே சென்றபோது சுடச்சுட வெவ்வேறு படிப்புகள் விற்பனையாகிக் கொண்டிருந்தன. மதிப்பெண் எவ்வளவு என்று கூடக் கேட்கவில்லை. சேர்க்கை முடியப்போகிறது, நாளைக்கு வந்தால் கூட இடம் கிடைக்காது என்கிற பாணியில் பேசினார்கள். பிறகென்ன தயக்கம் சேர்வதற்கு? சேர்ந்தாயிற்று.
சேர்ந்த பின்புதான் தெரிந்தது, அதே வசனத்தை (சேர்க்கை முடியப்போகிறது, நாளைக்கு வந்தால் கூட இடம் கிடைக்காது) பலரிடம் சொல்லியிருக்கிறார்கள். வகுப்பில் 40 வதாக சேர்ந்தவரிடமும் அதே வசனம் பேசியிருக்கிறார்கள், அவனுக்குப் பிறகு 50 பேரைச் சேர்த்துவிட்டார்கள். அவ்வருடம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 91. கல்லூரி வேலைநாள் தொடங்கும் முன்பே நாளைக்கே சேர்க்கை முடிந்து விடும் என்றவர்கள் கல்லூரி தொடங்கி சில மாதங்கள் வரையும் சேர்த்துக் கொண்டே இருந்தார்கள். கேரளாவிலிருந்து நிறையப் பேர் வந்திருந்தனர்.கட்டிடங்களின் பிரம்மாண்டமும், ஆய்வகங்களின் மினுமினுப்புமே அவர்களையும் ஈர்த்திருக்கக்கூடும். அதுதான் காரணம் என்று அவர்களே பின்னாட்களில் சொன்னார்கள். அம்மாணவர்களின் அப்பாவோ, சிற்றப்பாவோ, மாமாவோ ஏதோவொரு கல்விக்கண்காட்சியில் இக்கல்லூரியின் prospectus - ஐ வாங்கிப் பார்த்தார்கள். பின்பு இதிலேயே சேர்ந்து விடுமாறு வலியுறுத்தினார்கள் என்று புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
கேரளா மாணவர்களினால்தான் பல தமிழகக் கல்லூரிகளின் வண்டியே ஓடுகிறது. கேரளக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களின் தரம் தமிழகத்துடன் ஒப்பிடும்போது மிகவும் மோசம். எனவே அவர்கள் இங்கு படிக்க விரும்புகிறார்கள். ஓரளவு வசதியுள்ள நடுத்தரவர்க்கத்தினரின் பிள்ளைகள் பெரும்பாலும் தமிழ்நாட்டில்தான் படிக்கின்றனர். இவர்கள் தவிர ஆந்திர, வட இந்திய மாணவர்களும் உள்ளனர். வட இந்திய மாணவர்களைச் சேர்க்க சில கல்லூரிகளின் நிர்வாகங்கள் தத்தமது கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் கொடுத்து முகவர்களாகவும் பயன்படுத்துகின்றனர்.
கடந்த 10 வருடங்களில்தான் வடகிழக்கு மாநிலங்களிலிருந்தும் மாணவர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வரத்துவங்கினார்கள். நான் சேர்ந்தபோது மணிப்பூரிலிருந்து மாணவர்கள் கூட்டமாக வந்திருந்தார்கள். அவர்களை அமுக்கக் கல்லூரியின் முகவர்கள் மிகப்பெரும் கதையை அவிழ்த்து விட்டுள்ளனர். அக்கல்லூரி ஈரோட்டிற்கு அருகிலுள்ளது. இதை சென்னையிலிருந்து 10 நிமிட பேருந்துப் பயணத்தில் சென்றுவிடலாம் என்பதாக அளந்திருக்கிறார்கள். இவர்களும் சென்னைக்குப் பக்கத்தில்தானெ என்று நம்பிவந்து விட்டார்களாம். எப்படி இணையத்தில் கூட தேடிச் சரிபார்க்காமல் வந்தார்களோ?
இப்படி கோழி அமுக்குவது போல் ஆட்களை வளைத்து வளைத்துப் போடுவதால்தான் தொடர்ந்து பல கிளைகளையும் தொடக்குகிறார்கள். தனியார் கல்லூர்க்ளின் அறக்கட்டளைகள் பலவும் பள்ளி தொடங்கி கலை அறிவியல், பொறியியல், பல் மருத்துவம், பாலிடெக்னிக், ஐடிஐ, ஆசிரியர் பயிற்சிப்பள்ளி என மருத்துவம் தவிர்த்து அனைத்துப் துறைக்கல்வியையும் "வழங்குகின்றன". வருடம் முழுக்க புதுபுதுக் கட்டிடங்கள் திறக்கப்படுகின்றன. சென்னையிலுள்ள SRM கல்லூரி வட இந்தியாவில் புகழ் பெற்றதைத் தொடர்ந்து அங்கும் (டெல்லி) ஒரு கிளை தொடங்கப்பபட்டது.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்