உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 5


கல்லூரியில் படிப்பை முடித்து வெளியே வந்ததும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒன்றும் தெரியாது. ஒரு வேலையில் அமரும் வரை தலைவலிதான். அதுவும் நமது நணபர்களில் ஒவ்வொருவராக வேலை கிடைத்துச் செல்லச் செல்ல மன அழுத்தம் இன்னும் அதிகமாகிக் கொண்டே செல்லும். உயிர்நுட்பவியல் படித்தவர்களுக்கு இந்த அனுபவமிருக்கும்.  கல்லூரியில் படிக்கிற காலத்திலெல்லாம் நண்பர்கள், உறவினர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் என பலரும் "நீங்க எதப் பத்திப் படிக்கிறீங்க ?, படிச்சா எந்த மாதிரியான வேலை கிடைக்கும் ?" போன்ற கேள்விகளுக்கு முகம் கொடுத்திருப்பார்கள். நானும்தான். சும்மாவாச்சும் எதையாவது சொல்லித் தப்பிக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது மருந்து கம்பெனியில் வேல கிடைக்கும் என்று அள்ளிவிட்டு சமாளித்து வந்தேன்.

உண்மையில் என்ன வேலைகளில் சேரமுடியும், அல்லது கிடைக்கும் என்பது குறித்து யாருக்கும் தெரியாது.படிக்கிறவர்கள் மட்டுமல்ல் பாடம் நடத்துகிற விரிவுரையாளர்களாலேயே சொல்ல முடியாது. அவர்களே வேறு வேலை கிடைக்காமல்தான் இங்கு வந்து பாடம் நடத்திக் கொண்டிருக்கும் நிலையில் வேறென்ன சொல்ல முடியும் ?. நான் இளநிலை மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த போது, அதற்கு முந்தைய வருடம்தான் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்துவிட்டு விரிவுரையாளராகச் சேர்ந்திருந்தார். அவர் அப்போதுதான் முடித்தவர் என்பதால் கொஞ்சம் உரிமை எடுத்துக் கொண்டு பேசவும் பழகவும் ஏதுவாக இருந்தது. அப்பவெல்லாம் பல்கலைக்கழக்த்தில் படித்தவர் என்றால், பெரிய அறிவாளியாகவும் இருக்க வேண்டும், படிக்கும்போதே வேலை கிடைத்து விடுமென்றும் நம்பிய காலம். ஏன் சார் இந்த வேலைக்கு வந்தீங்க ? என்று கேட்டேன். அவர், " என்னடா பண்றது, வீட்ல சும்மா இருக்க முடியல. வண்டிக்குப் பெட்ரோல் போடவாவது காசு வேணும்ல? என்றார். 


கலை அறிவியல் கல்லூரிகளில் படித்தவர்களுக்கு இந்த நிலையென்றால், பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் எங்களைக்காட்டிலும் சிரமப்பட்டுப்படித்திருப்பார்கள், செலவும் கூடுதலாகவே செல்வாகியிருக்கும். அவர்களுக்கும் இதே நிலைதான். பலபேர் இப்படிப் புலம்புவார்கள். "பேசாமப் பொண்ணாப் பொறந்திருக்கலாண்டா. படிப்ப முடிச்சமா, கல்யாணத்தப் பண்ணி வ்ச்சிருவாங்க. இப்படித் தெருத்தெருவா அலைய வேணாம்". 


பல நூற்றுக்கணக்கான அறிவியல் இளையர்களும் (BSc), அறிவியல் நிறைஞர்களும் (MSc) எல்லா மாநிலங்களிலிருந்தும், மாவட்டங்களிலிருந்தும், படிப்பை முடித்த கையோடு, பெட்டியுடன் வந்திறங்கி டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத், பெங்களூர், ஓசூர், சென்னை, கோவை போன்ற நகரங்களிலும், சிறுநகரங்களிலும் வாடகைக்கு அறைகளைப் பிடித்தும், நண்பர்களுடன் ஒண்டிக்கொண்டும், உறவினரின் வீட்டில் இருந்துகொண்டும்,  resume - ஐக் கையில் கொண்டு தெருதெருவாக முட்டிதேய நடந்து கொண்டிருக்கிறார்கள். இது எந்தவொரு பட்டதாரிகளுக்கும், படிப்புகளுக்கும் பொருந்தும். வேலை வாய்ப்புக் கண்காட்சியில் அரைகிலோமீட்டர் நீளத்திற்கு வரிசையில் காத்திருந்து நொந்து நூலாகிவிட்டு ஏண்டா படித்தோம் என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். 

இதெல்லாம் அவநம்பிக்கையூட்டவோ, குழப்பவோ சொல்லவில்லை. மொத்தமாக வேலை ஒன்றுமே கிடையாது என்பதும் இல்லை. ஒரு சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. பல பேருக்கு சிரமமாகத்தான் உள்ளது. இதுதான் நிலை என்பது ஓரளவிற்கு எல்லொருக்கும் தெரிந்ததுதான். அதனால் உயிர்நுட்பவியல் போன்ற படிப்புகளில் சேரவிரும்புகிறவர்கள் ஒன்று பண வசதியுடைவராக இருப்பவர்களானால் வெளிநாடு சென்றுவிடுவார்கள், இல்லை மிகவும் நன்றாகப் படிப்பவர்கள் ஏதாவது ஆராய்ச்சிக் கல்வியில் சேர வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் கிடைத்து விடும். குடும்பச் சுமையில் பங்கெடுக்க வேண்டிய நடுத்தர மாணவர்கள் பிரமாதமாகப் படிக்கவும் இயலாமல்  அல்லது பணவசதியுமில்லாமல் அதிக நாட்களுக்கு அப்பாவின் காசில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் நிலைக்கு ஆளாக வேண்டும். என்து சொந்தக் கருத்து என்னவென்றால் , இது போன்றவர்கள் இளநிலைப் பட்டம் முடித்தவுடன் வேலை தேடத்தொடங்குவதுதான் சிறந்தது. 

இதை ஏன் கூறுகிறேனென்றால் அதிகம் வேலைவாய்ப்பை வழங்கும் துறைகள்  தகவல் தொழில்நுட்பத்துறையும், அதை சார்ந்தியங்கும், சேவைத்துறையும் தான். இவற்றில் பெரும்பாலானவை தமது வேலைக்குத் தேவையான  தகுதியாக ஒரு இளநிலைப் பட்டத்தையே அளவுகோலாக வைத்துள்ளனர். சில நேர்காணல்களில் என்னை வெளியேற்றியதற்குக் காரணம் என்னுடைய முதுகலைப் பட்டமே. ஏனென்றால்  கூடுதல் தகுதியாம் (over qualification ). இன்னும் சில இடங்களில் நீங்கள் உயிர்நுட்பவியல் படித்தவர்கள். வேறு நல்ல வேலை கிடைத்தால் இதை விட்டுவிடுவீர்கள். அதனால் உங்களை நம்பி வேலை கொடுக்க முடியாது என்றும் சொன்னார்கள். அதாவது நான் சும்மா தற்போதைக்கு இதுல சேர்ந்திட்டு வேற "நல்ல" வேலை கிடைத்துச் சென்று விடுவேனாம். வேலை தரமுடியாது என்பதைக் காட்டிலும் இந்தக் காரணம் ரொம்பவே மோசமான உறுத்தலாக இருந்தது.

அதனால்தான் சொல்கிறேன். இளநிலை படித்தவுடன் வேலை தேடத் துவங்கினால் ஒரிரு வருடங்களுக்குள் எதாவதில் நுழைந்து நிலைத்து விடலாம். ஆனால் பின்பொருநாளில் நாம் படிக்காமல் விட்டு விட்டோமென்று வருந்தக் கூடாது. யாரையும் குற்றம் சொல்லக்கூடாது. வேலை பார்த்துக் கொண்டே இன்னும் விருப்பமிருந்தால் தொலைதூரக் கல்வியில் படிக்கலாம். ஏனெனில் கையில் காசைப் பார்த்துவிட்டு பின்பு வேலையை விட்டுவிட்டு படிப்பதற்கெல்லாம் மனம் வராது. நாம் வேலை தேடும் வரையில்தான் நமது பட்டத்திற்கு மதிப்பு. ஒரு இடத்தில் வேலையில் சேர்ந்துவிட்டால் பின்பு வேலை அனுபவச் சான்றிதழுக்குத்தான் மதிப்பு. அதுதான் உங்களது தகுதியைச் சொல்லும்.  

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்