உயிரை வாங்கிய உயிரிநுட்பவியல் - பகுதி 1

என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? இதை தேர்ந்தெடுத்துப் படித்தால் எதிர்காலம் நன்றாக  இருக்கும் என்ற விளம்பரங்கள் மலிந்துவிட்ட நிலையில் பெரும்பான்மையான பட்டப்படிப்புகள் கல்வி நிறுவனங்களின்  வெறும் வணிக நோக்கத்திற்காகவே இருப்பதாகவே தோன்றுகிறது. அதில் ஒன்று உயிரிநுட்பவியல் அல்லது உயிரித்தொழில் நுட்பவியல் என்ற சொல்லுக்குக் கவர்ச்சி அதிகம். எங்கள் பள்ளியில், கல்லூரியில் படித்தால் தரமான கல்வி வளமான எதிர்காலம் என்று கல்வி நிறுவனங்கள் வணிக நிறுவங்களைப் போல் விளம்பரம் செய்து கொண்டிருக்கின்ற அளவில் கல்வி வணிகப் பொருளாகிவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக எத்தனை பணத்தைக் கொட்டியழுது படித்து முடித்தும் வேலையில்லாமல் போவது. அது குறித்து எனது அனுபவத்திலிருந்து சிலவற்றைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. 
  
உயரகல்வியில் மருத்துவம், பொறியியல் தவிர்த்து அதிகம் பேர் படிப்பது அல்லது படித்தது (குறிப்பிடத்தக்க அளவில் கடந்த 10 வருடத்தில்) கணினி அறிவியல் தொடர்பான பிரிவுகள், அறிவியல் துறைகள் எனக் கொண்டால் அதில் முதலில் வருவது உயிரிநுட்பவியல் (Biotechnology ). இந்தப் படிப்பு கலை அறிவியல் கல்லூரிகளில் மட்டுமின்றி பொறியியல் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. இந்த உயிரிநுட்பவியல் பிரிவில் பயின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் வேலைவாய்ப்புகளின் அவர்களுக்கு இடஒதுக்கீடு தருமளவில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். எல்லா கிராமங்களிலும் ஒர் உயிரிநுட்பவியல் பட்டதாரி இருக்கக்கூடும்.

மருத்துவம், பொறியியல் பயில இடம் கிடைக்காதவர்கள், படிக்க விரும்பாதவர்கள், அல்லது அதிகம் செலவு செய்து படிக்க முடியாதவர்களின் புகலிடமாக இருக்கிறது உயிரிநுட்பவியல்.  சில காலமாகவே உயிரிநுட்பவியல் இந்தியாவில் எதிர்காலத்தில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கிவிடும் எனும் கருத்துக்கள் பரப்பபட்டன. கல்லூரிகளின் விளம்பரங்கள் தமது கல்வி நிலையங்களில் உயிரிநுட்பவியல் துறை சிறந்த உள்கட்டமைப்புடைய நவீன ஆய்வகங்களுடன் கொண்டுள்ளது என்று காட்டிக் கொள்வதில் கவனமாக இருந்தன. ஊடகங்கள் அவ்வப்போது உயிரிநுட்பவியல் மூலம் வரப்போகும் வேலைவாய்ப்புகளைப் பற்றி கட்டுரைகள் வெளியிட்டன. இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்திற்கு அடுத்தளவில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையாக உயிரிநுட்பவியல் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் உயிரிநுட்பவியல் துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் வளர்ந்த நாடுகளில் மட்டுமே குறிப்பிட்ட அளவில் இருகிறது. இந்தியாவில் மிகச்சிறு அளவிலேயே இருகிறது. 


பெங்களூரு நகரில்தான்  உயிரிநுட்பவியல் நிறுவனங்கள் சிறியதும் பெரியதுமாக நூற்றுக்கணக்கில் உள்ளன.  சென்னை , ஹைதராபாத், டெல்லி போன்ற மற்ற பெருநகரங்களில் மிகச் சொற்பமான எண்ணிக்கையில் உள்ளன. இவை  மென்பொருள், சேவைத்துறை நிறுவங்களில் நடப்பதுபோல் அதிகளவான நேர்காணல்களை நடத்துவதில்லை.இவைகளில் சேர்வதற்கு முன் அனுபவம் தேவை. மேலும் தக்க நபர்களின் பரிந்துரையும் தேவை. சில சிறிய நிறுவனங்களில் சேர இயலும் ஆனால் ஊதியம் என்று பார்த்தால்  பெரிய அளவில் கிடைக்காது, ரூ 3000 தொடங்கி 6000 வரையில் இருக்கும். இது போன்ற ஆய்வகங்களில் வருடக்கணக்கில் இருந்தாலும் பத்தாயிரத்தைப் பார்க்க முடியாது. நேர்முகத்தேர்வுக்காக செல்லும் போது சில நிறுவனங்களின் வாயிற்காவலாளியே "உயிரிநுட்பவியல் பட்டதாரிகளுக்கு தற்போதைக்கு தேவையில்லை" என்று திருப்பியனுப்பியதும் உண்டு. வேலைவாய்ப்புத் தகவல்களைத் தரும் சில இணையத்தளங்களில் சில நிறுவனங்களின் நேர்முகத்தேர்விற்கான் தகுதிகள் என்ற இடத்தில் "உயிரிநுட்பவியல் பட்டதாரிகள் தவிர", உயிரிநுட்பவியல் பட்டதாரிகள் தேவையில்ல" (biotech graduates are not required) என்ற வாசகங்களும் இருந்ததுண்டு. 


மேற்படி முதுகலைப்பட்டம் பெற்ற பின்பும் வேலை கிடைக்காமல் இருப்பதொன்றும் புதிதில்லைதான். ஆனால் உயிரிநுட்பவியல் படிப்பதற்கு ஆகும் செலவு மிக அதிகம். அனைத்துக் கல்லூரிகளிலும் உயிரிநுட்பவியல் பிரிவில் படிப்பிற்கான கட்டணமே அதிகம். சில கல்லூரிகளில் கட்டாய நன்கொடையும் உண்டு. 5 வருடங்கள் முன்பு நான் படிக்கும் போதே இளங்கலைப்பட்டம் முடிக்கவே ஒரு இலட்சத்திற்கும் மேலாக செலவானது. முதுகலைப் பட்டத்திற்கோ பருவக் கட்டணமாக குறைந்தபட்சம் 20000 தொடங்கி 50000 வரையில் கல்லூரிகளைப் பொறுத்து கட்டணம் மாறுபடும். இது தவிர ஒவ்வொரு வருடமும் ஆய்வகத்தில் உடைந்த கண்ணாடிக் குடுவைகள் , பயன்படுத்திய இரசாயனத் திரவங்கள் ஆகியவற்றுக்காக ஆயிரக்கணக்கில் அபராதம் பெறப்படும்.

எத்தனை செலவு செய்து படித்தாலும் வேலைக்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இது உயிரிநுட்பவியல் மட்டுமன்றி உயிர்த்தகவலியல்,  உயிரிவேதியியல், நுண்ணுயிரியியல்   போன்ற பிரிவுகளுக்கும் இது பொருந்தும்.   
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. பெயரில்லா22/9/10 6:55 AM

    மிகவும் சரி. தொலை காட்சியில் கல்லுரி முதல்வர் வேலை வாய்ப்பு பற்றி பேசுகிறார் ஏன் எந்த தொலை காட்சியும் ஒரு கம்பெனி மேனேஜர்ய் அழைத்து பேச வில்லை

    பதிலளிநீக்கு
  2. நண்பரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !
    //தொலை காட்சியில் கல்லுரி முதல்வர் வேலை வாய்ப்பு பற்றி பேசுகிறார் ஏன் எந்த தொலை காட்சியும் ஒரு கம்பெனி மேனேஜர்ய் அழைத்து பேச வில்லை//

    உண்மை. அவரை அழைத்தால் அவர் என்ன கூறுவார் ? எமது நிறுவனத்திற்கு பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் இல்லை என்று கூறினால் கல்வி நிறுவனங்களின் நிலை ? அவருக்கு ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை . ஆட்களைக் குறைக்க வேண்டும் என்பதுதான் அவரது பிரச்சனை. ஆனால் கல்லூரிகளுக்கு ஆட்களை அதிகரிக்க வேண்டும். எனவே தான் கல்லூரிகள் தமது விளம்பரத்திற்கு தொலைக்காட்சி, வார இதழ்களையும் பணம் தந்து பயன்படுத்துகிறார்கள்.

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்