தந்தை பெரியார் - 132இன்று தந்தை பெரியார் ஈ. வெ. இராமசாமியின் 132 - வது பிறந்த நாள். தற்போது நடக்கும் நிகழ்வுகளைக் காணும்போது அவர் இன்னும் நூறு ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என்றுதான் பேராசைப்படுகிறேன். எங்கெங்கு காணினும் சாதியின் அவலமும், மூடநம்பிக்கைகளும். படித்தவர்கள் நிரம்பிய இக்காலத்திலேயே நாம் சொல்லத்தயங்கும் பல முற்போக்குக் கருத்துக்களை பாமரர்கள், அறிவிலிகள், தற்குறிகள் நிரம்பிய அக்காலத்திலேயே சொன்னதோடல்லாமல் அத களத்தில் போராடி நிறைவேற்றிக் 
காட்டியவர் பெரியார்.

சாதி ஒழிப்பு, கடவுள், மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண் விடுதலை, விதவை மறுமணம், இன உணர்வு, பகுத்தறிவு, சுயமரியாதை என பனமுகம் காட்டிய மிகப்பெரும் ஆளுமை மிக்க தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரே தகுதி படைத்த மனிதர் பெரியார். இன்று தமிழர்க்குத் தலைவராகத் தமது தொண்டர்களால் புகழப்படும் பத்துக்கணக்கான் தலைவர்கள் இருந்தும் பெரியாருக்கு முன் அவர்களுக்கு நிற்கும் தகுதி கூட இருக்கவில்லை. நானறிந்த வரையில் மனசாட்சிப்படி பேசியும், எழுதியும் அவ்வாறு வாழ்ந்தும் காட்டிய ஒரு மாமனிதன் பெரியார். 

அவர் ஒருமுறை கூறினார். இன்னும் பல வருடங்களுக்குப் பின் வரும் தலைமுறையைச் சார்ந்த மக்கள் என்னைப் பற்றிக் கூறும்போது பெரியார் என்ற மூடநம்பிக்கையாளர் இருந்தார் அவர் இருக்காத கடவுளை ஒழிக்கப் பாடுபட்டார்". அதாவது இன்னும் சில காலத்தில் கடவுள் என்ற மூட நம்பிக்கை அழிந்துவிடும், அந்நாளில் மக்கள் கடவுளை மூடநம்பிக்கையாகவே கருதுவார்கள் எனும் பேராசை உடையவராக் இருநதிருக்கிறார். ஆனால் நடக்கும் மதக்கலவரங்களையும், பிள்ளையார் ஊரவலங்களையும், வாஸ்து, சோதிடம், தீமிதித்தல் , நரபலி போன்றவற்றைக் காண்கையில் அவர் இன்னும் வாழ்ந்திருந்தால் கூட இவைகளை ஒழித்திருக்க முடியாது போலும். 

பெரியாரின் வாழ்க்கையே ஒரு முரண்நகையாக உள்ளது. அவருக்கு இருந்த செல்வத்தின் அளவுக்கு அவர் தெருவில் நடக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் அவர் ஏறக்குறைய 60 ஆண்டுகள் மக்களுக்காக ஊர் ஊராக பயணம் மேற்கொண்டார். மக்களுக்காகப் பேசினார். எழுதினார், போராடினார், சிறை சென்றார். கடைசிவரை எளிய மனிதனாகவே வாழ்ந்தார். கடவுள் இல்லை என்று சொன்னாலே பெரியாரின் பெயர் வரும். ஆனால் அவர் தமது இளமைககாலத்தில் அதாவது திருமணம் முடிந்த பிறகு துறவியாக வட இந்தியாவுக்குச் சென்றார். புராண, வேத, இதிகாசங்கள் பற்றி கற்றதாலும், அங்கு அவர் கண்ட போலித்தனங்கள் ஆன்மிகம், கடவுள் போன்றவற்றின் பெயரால் நடக்கும் சமூகப்பகைமையையும் உணர்ந்தார். மேலும் மக்கள் படும் துயரங்களுக்குக் காரணம் கடவுளல்ல மனிதர்களே என்றறியாமல் மக்கள் மூடநம்பிக்கை களில் சிக்கியிருப்பதைக் கண்டு வெதும்புகிறார்.  

ஆரம்பத்தில் இந்து மதத்தை சீர்திருத்தத்தான் எண்ணினார் பெரியார். ஆரம்பத்தில் கடவுள் மறுப்பையும் வலியுறுத்தவில்லை. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு விளையும் அனைத்து வகையான் துனபங்களுக்கும் சாதி அமைப்பே காரணமாக உள்ளதாகவும் அதைத் தாங்கும் அமைப்பாக உள்ள இந்து மதத்தை ஒழிப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதாலும், சாதிகளைத தாங்கிப்பிடிக்கும் கடவுளையும் எதிர்க்கிறார். கோயிலைப் பீரங்கியால் தகர்த்து சாலை அமைக்கச் சொன்ன இந்துமத எதிர்ப்பாளர்,  இறைமறுப்பாளரான பெரியார்தான் தாழ்ததப்பட்ட இந்துக்கள் கோயிலுக்குள் நுழையும் உரிமைக்காகப் போராடினார். ஆண்கள் இரண்டு வைப்பாட்டிகள் வைத்துக்கொண்டால் பெண்கள் நான்கு வைப்பாட்டன்கள் வைத்துக் கொள்ள வேண்டு என்ற "ஆம்பளைச் சிங்கம்" பெரியார்.

அவர் கன்னடர் என்பதால் தமிழ் மொழியை இகழ்ந்தார் என்பதும் பொய்யாகும். அவருக்கு தனது தாய்மொழியான கன்னடத்தைக் காட்டிலும் தெலுங்கு அதிகம் பழக்கமானதாக இருந்தது. திராவிடம் என்ற சொல்லைப் பார்ப்பன எதிர்ப்பாகவே கையாண்டார். தமிழின் பெயரால் தமிழரின் பெயரால் மதவாதிகள், உயர்சாதியினரின் ஆதிக்கம் நிலவியதாலேயே தமிழர் என்பதற்குப் பதிலாக திராவிடம் என்ற ஆற்றல்மிகு சொல்லைப் பயன்படுத்தினார்.இதனாலேயே திராவிடர் என்ற சொல் கசந்தது. மேலும் அவர் தமிழல்லாத மற்ற திராவிட மொழிகளைத் தனி மொழியாகவே காணவில்லை, தமிழின் சிதைந்த வடிவமாகவே காணுகிறார். இதற்கு சான்று அவர் மொழி குறித்துப் பேசியபோது, பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"தமிழ்மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும், நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே என்றும்; அந்தக் கருத்தைக்கொண்டே “திராவிடம்’ என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது என்றும் அகராதிகளும், ஆராய்ச்சி உரைகளும் கூறுகின்றன. நாட்டிலும் இதை வெகுகாலமாகவே ஒப்புக்கொண்டு வழக்கத்திலும் கொண்டு வந்திருக்கிறோம்.

வடமொழி ஆதாரங்களான இலக்கியம், இதிகாசம், புராணம் ஆகியவற்றிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழ் மொழியையும், நாட்டையும், மக்களையும் குறிக்கப் பழங்காலத்திலிருந்தே பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். தேசம் சரித்திரங்களிலும் திராவிடர், திராவிடம் என்ற சொற்கள் தமிழர், தமிழ்நாடு என்பவற்றிற்குப் பதிலாக உபயோகப் படுத்தப்பட்டு வந்திருக்கிறதையும் காண்கிறோம். ஆனால், தெலுங்கு நாட்டாராகிய ஆந்திரர்களும், கன்னட நாட்டாராகிய கன்னடியர்களும், மலையாள நாட்டாராகிய மலையாளிகளும் இதை ஒப்புக்கொள்ளத் தயங்குகிறார்கள். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பதுபோல் – தமிழும் ஒரு மொழி என்றுதான் சொல்லுகிறார்களே ஒழிய, இவையாவும் தமிழ்தான் என்பதை ஒப்புக் கொள்ள வெட்கப்படுகிறார்கள்; சிலர் மறுக்கவும் செய்கிறார்கள்.

காரணம், அவர்களது மொழிகளில் ஆரியச் சொற்கள் பெரும்பான்மையாகக் கலந்துவிட்டன. ஆதியில் ஒரே கூட்டமாக வாழ்ந்த திராவிட மக்கள், இடநெருக்கத்தால் பல பிரிவுகளாகப் பிரிந்து சென்று ஆங்காங்கு கூடி வாழவும், அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கேற்ப அவர்களது மொழியில் சில நீட்டலும், குறுக்கலும் ஏற்படவும், அக்காலத்திய போக்குவரத்து வசதிக்குறைவு காரணமாக ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்கும் தொடர்பில்லாமல் போனதால், நாளடைவில் அந்தந்த இடத்தில் வடநாட்டிலிருந்து வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்கள், தமது மொழிக்குக் கடவுள் பேரால் பல மதத் தத்துவங்களை எடுத்துக் கூறி, அந்தந்தப் பிரதேச மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வடமொழியை அதிகமாக உபயோகப்படுத்தும்படிச் செய்து, அதன்மூலம் தமது கலை, ஆச்சார அனுஷ்டானம் ஆகியவைகளைப் புகுத்திவிட்டனர். அந்த வடமொழிக் கலப்புக் காரணமாகவும், அந்தக் கலாச்சாரப் பண்புகளினால் ஏற்பட்ட பற்றுதல் காரணமாகவும், அந்தந்த மக்களுக்குத் தமது மொழி, தமிழ் அல்லாத வேறு மொழியாகும் என்ற கருத்தும் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், என் சிற்றறிவிற்கு, என் அனுபவத்திற்கு, ஆராய்ச்சிக்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் தனித்தனி மொழிகளென்றோ அல்லது தமிழ் தவிர மற்ற மூன்றும் தமிழிலிருந்து பிரிந்த மொழிகளென்றோ தோன்றவில்லை. ஒரே மொழி அதாவது தமிழ்தான் நான்கு இடங்களில் நான்கு விதமாகப் பேசப்பட்டு வருகிறது என்றே நான் அபிப்பிராயப்படுகிறேன். உதாரணமாக, இங்கு (சென்னையில்) “தோட்டத்திற்குப் போகிறேன் என்றால், வயலுக்கு, விளைநிலத்துக்குப் போகிறேன் என்று அர்த்தம், “கொல்லைக்குப் போகிறேன்’ என்றால், “கக்கூசுக்குப் போகிறேன்’ என்று அர்த்தம். சோழநாட்டில் தோட்டத்துக்குப் போவதென்றால், கச்கூசுக்குப் போவதாகவும், கொல்லைக்குப் போவதென்றால் வயலுக்குப் போவதாகவும் அர்த்தம் செய்து கொள்ளுவார்கள். ஒரே தமிழ்ச் சொல் இரண்டு இடங்களில் வெவ்வேறு பொருளில் வழங்குகிறது. ஒரு பொருளுக்குப் பல சொற்கள் இருந்தால், ஒவ்வொரு சொல்லும் ஒரு மொழியாகிவிடுமா?

முன்பு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, நான் மலையாளத்துக்கு வியாபார விஷயமாய் சென்றபோதெல்லாம் நான் சிறிது அழுத்தியும், குறுக்கியும், மடித்தும் பேசிய தமிழை அங்குள்ளவர்கள் புரிந்து கொண்டுதான் இருந்தார்கள். நான்கு மொழிகளிலும் தேர்ச்சிப் பெற்ற பண்டிதர்களைக் கொண்டு, அந்தந்த மொழியிலுள்ள வடமொழி வார்த்தைகள் அத்தனையும் நீக்கிவிட்டுப் பார்த்தால், எஞ்சி நிற்கும் வார்த்தைகள் அத்தனையும் அநேகமாகத் தமிழ்ச் சொற்களாகவே இருக்குமென்று என்னால் அறுதியிட்டுக் கூறமுடியும்; அகராதி கொண்டு மெய்ப்பிக்கவும் முடியும். சமீபகாலம் வரையிலும் கூட அவைகளுக்கு எழுத்தோ, இலக்கியமோ இருந்ததில்லை."


             தமிழைக் காட்டுமிராண்டி மொழியெனக் கூறிய பெரியார் எழுத்துச் சீர்திருத்தமும் செய்தார். கட்டாய இந்தித் திணிப்புப் போராட்டத்திலும் முன்னோடியாக இருந்தார்.   வாழ்நாள் முழுவதும் பார்ப்பணியத்தைக் கடுமையாக எதிர்த்த பெரியார் தனிப்பட்ட முறையில் பகையின்றி அவர்களுடன் நட்பு பாராட்டினார் உதாரணம் இராஜாஜி. 

இவ்வாறு பல சாதனைகளைச் செய்த பெரியாரின் கலகங்களுக்கு எதிராக விளைந்தது எதிரிகளைக் காட்டிலும் அவருடன் இருந்து பிரிந்து சென்ற அவரது வாரிசுகளே என்பது மிகையாகாது. "கடவுள் இல்லை, இல்லவே இல்லை" என்று முழக்கமிருந்த போதே தம்பிமார்கள் "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்று சமரசம் செய்து கொண்டார்கள். அவர் ஒழிக்க விரும்பிய பேராயக் கட்சியின் ஆட்சிக்கு முட்டுக் கொடுப்பதே பெரியாரின் வாரிசு என்று தம்மை அறிவித்துக் கொள்ளும் கலைஞரின் தி.மு.க. காலமெல்லாம் அவர ஒழிக்கப் போராடிய பாரப்பனர்களின் அபிமானத்திற்குரிய ஒருவர், தம்மை சட்டமன்றத்திலேயே பாப்பாத்திதான் என்ற ஒருவர் அண்ணா, திராவிடம் என்ற சொற்களைக் கட்சிப் பெயராகக்  கொண்ட கட்சியின் தலைவராக உள்ளார். ஈழப்பிரச்சனையின் போது பெரியார் தி.க. - உடனான மோதலில் பெரியாரின் சிலையை உடைத்தனர் தி.மு.க.வினர். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தொடங்கிய தி.மு.க. வைச் சேர்ந்த ஒருவரின் மகனே இந்தித் திணிப்பின் அடையாளமான இந்திய ரூபாயின் சின்னத்தை வடிவமைத்திருப்பது காலத்தின் அலங்கோலம். 


பெரியாரின் கருத்துக்கள் இன்றும் தேவையாக உள்ளன. அவரின் எழுத்துக்களைப் படித்தால் ஏதோ இன்று நடப்பதப் பார்த்துவிட்டு எழுதியதைப் போன்று உள்ளது. எடுத்துக்காட்டுகள்

(வாக்கு அரசியல் குறித்து ) இறுதிப் பேருரையிலிருந்து

அரசியல் ஓட்டுப் பொறுக்கிகள் !

ஓட்டு என்றால் எதைக் கொடுக்கிறான் ? பெண்டாட்டி தவிர, எல்லாவற்றையும் கொடுக்கிறானே ! முன்னேற்றக் கழகத்துக்குக் கூட கோயில் கட்டும் வேலை தான் முக்கியம் !
இன்னும் கொஞச நாள் போனால் பெண்டாட்டியயும் கொடுத்துவிட்டு ஒட்டு வாங்கும் நிலை வந்துவிடும். எனென்றால் அவர்களுக்கு உத்தியோகம், பதவிதான் பெரிது!

பேராயக்கட்சி குறித்து

அடுத்தாற்போல் ஒழிய வேண்டியது காங்கிரசு; அது ஒழிந்து விட்டது. இனிமேல் தேறாது! இப்பவே இரண்டு பேரும் தொங்குகிறார்களே! இரண்டாகப் பிரிந்தது; ஒன்றுக்கொன்று மானங்கெட்டுத் திரியுது; இப்ப மீண்டும் சேர்ந்தால் என்ன ஆகப்போகுது? காங்கிரசிலே என்ன இருக்கிறது ? எவன் ஆதரிப்பான் காங்கிரசை ? மானங்கெட்டவனைத் தவிர!

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்