விவசாயிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவசாயிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

விவசாயிகளை இழிவு செய்த விஜய பாரதம்

டெல்லியில் கடந்த ஒரு மாதமாக தமிழக விவசாயிகளின் போராட்டம் நடந்து வருகிறது. அவர்கள் தங்களை எந்தளவு தாழ்த்திக் கொள்ள முடியுமோ அதைவிடக் கீழான நிலைக்கும் சென்று போராடுகிறார்கள். அவர்கள் செய்யும் போராட்டங்களையெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.ஆயினும் அவர்கள் கோரிக்கைகள் செவிமடுக்கப் பட்டு விடவில்லை. இந்த நிலையில் அவர்களைக் கேவலப்படுத்தி நடிகர்கள் என்று கிண்டலடித்து கேலிச்சித்திரம் வெளியிட்டுள்ளது, R.S.S. - இன் இதழான விஜயபாரதம். இவர்களின் மனநிலையை எதனுடன் ஒப்பிடுவது என்று யாராவது சொல்ல முடியுமா ?

 படம் உதவி - ஃபேஸ்புக்

.

Download As PDF
Bookmark and Share

Post Comment

நந்திகிராமை நினைவூட்டும் வகையில் கூடங்குளம் போராட்டத்தின் மீது அடுத்த அவதூறு - நக்சல்கள் தொடர்பாம்

கூடங்குளம் போரட்டத்தில் நக்சல் தொடர்பு என நாராயணசாமி சொல்லியிருக்கிறார். அடுத்து நேரடியாகவே பாகிஸ்தான் தொடர்பு மாவோயிஸ்டுகள் மற்றும் சீனாவின் சதி என்று தொடங்கினாலும் ஆச்சரியமில்லை. இடிந்த கரையில் உதயகுமாருக்குப் பதிலாக உபயதுல்லாவோ உமர் முகமது என்ற பெயரில் தலைவரும், கிறித்தவர்களுக்குப் பதிலாக இசுலாமியர்களும் இருந்திருந்தால் மிக எளிமையாக வேலையை முடித்திருப்பார்கள் ஐ எஸ் ஐ உளவாளிகள் பாகிஸ்தான் சதி என்று. இன்னும் எத்தனையெத்தனை அவதூறுகள் கொண்டுவந்து கொட்டினாலும் இவர்கள் வெற்றி பெறப்போவதில்லை. இது போன்ற மக்களின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் எந்த வகையான திட்டங்களைக் கொண்டுவரும்போதும் வெளிப்படும் பரவலான மக்கள் எதிர்ப்பை ஊடகங்கள் மறைத்தே வருகின்றன. போராட்டம் வலுவாக இருக்கும்போது பேச்சுவார்த்தை, வேலைவாய்ப்புக்கான உறுதிப்பாடு, நலத்திட்ட உதவி, இழப்பீடு என்ன அனைத்துப் பித்தலாட்டங்களையும் செய்து ஆசை காட்டுவார்கள். மசியவில்லையெனில் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல் வேறு ஒரு தளத்திலிருந்து பேசுவது வேறுவகையில் செய்தியை வெளியிடுவது வேலைக்கு உத்தரவாதமளிப்பது, பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பது என்ற பொய் வாக்குறுதிகள், அணு உலை பாதுகாப்பானது என்ற பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வது.
பேஸ்புக்கில் ஒருவரிடமிருந்து எடுத்தது


அடுத்து உளவியல் போரை நிகழ்த்த வேண்டியது. போராளிகளை ஆளுமைக் கொலை செய்வது. வெளிநாட்டுப் பண உதவி, மதவாதம், தீவிரவாதம், தேசதுரோகம், பொருளாதார வளர்ச்சி என்று ஊடகங்கள் மூலமாக அவதூறுகளையே வெளியிட்டு அதைப் பொதுக்கருத்தாக்கிப் பின்பு காவல்துறையையும் இராணுவத்தையும் விட்டு வன்முறை வெறியாட்டங்களை நடத்த வேண்டியது. இதுதான் நந்திகிராமில் நடந்தது. இடிந்தகரையிலும் நடக்கிறது. இது காந்தி நாடு இல்லை என்று எப்போதும் ஆட்சியாளர்கள் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள், எதில் என்றால் காந்திய வழியில் நடக்கும் போராட்டங்களைக் கூட நாங்கள் எப்படி எதிர்கொளவோம் என்று இராணுவத்தையும் துப்பாக்கிகளையும் வைத்துப் பதில் சொல்லுகிறார்கள். கொலை செய்து விட்டு கலவரத்தில் இறங்கினார்கள் சுட்டோம் என்று முடிப்பார்கள். மிச்சத்தை தினமலம் பார்த்துக் கொள்ளும். நந்திக்கிராம் போராட்டம் நடந்த போது மாவோயிஸ்டுகள் சதி என்றார்கள், மகிழுந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்கவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கவும் விவசாயிகளிடமிருந்து முப்போகம் விளைந்த விவசாய நிலங்களைப் பிடுங்கவென்று வெறியாட்டம் போட்டார்கள். அங்கு பெருமளவில் முஸ்லிம்கள் இருந்தார்கள் நந்திகிராம் வெறியாட்டம் முடிந்தபின்பு சிபிஎம் இல்லாத மற்றக் கட்சித்தலைவர்கள் மக்களைப் "பார்வையிட" சென்றார்கள். அங்கிருந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் தாய்மார்கள் சிபிஎம் கட்சியினராலும் காவல்துறையினராலும் நடந்த கொடுமைகளை அத்வானியிடம் சொல்லி அழுதார்களாம்.

இப்படி எதிரியிடமே சென்று அவர்களைக் கதற வைத்த கொடுமையைச் செய்தனர் அன்றைய மேற்கு வங்க ஆட்சியாளர்கள். இன்று அம்மா அவர்கள் தமது கொடுங்கரங்களை ஏவியுள்ளார். அதற்கு ஒத்தூதிய தோழர் தா பாண்டியன் கூடங்குளம் மக்கள் பண்த்தை  வாங்கிக்கொண்டு வெளியேற வேண்டும் என்று வெறிபிடித்துக் கத்தியுள்ளார். இதனால் மனம் நொந்த எழுத்தாளர் பொன்னீலன் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளார். இது மிகத் தாமதம் என்றாலும் இது சரியான முடிவுதான். இதே தா பாண்டியன் இரு வருடங்களுக்கு முன்பு பேசியதை மறக்க முடியாது. ஈழப்போரின் போது அம்மா திடீரென்று ஈழ ஆதரவ அவதாரமெடுத்தார் வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு. அப்போது ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தையும் நடத்தினார். அதில் கலந்து கொண்ட வைகோ, தா. பாண்டியன் ஆகியோர் அம்மாவுக்குப் புகழாரம் சூட்டினார்கள். அதில் பாண்டியன் ஒரு உலகமகா வக்கிரம் பிடித்த ஒரு பொய்யைச் சொன்னார். அது "அம்மா உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கினார் என்று தெரிந்த ஒரு ஈழப்பெண் வவுனியாவிலிர்ந்து தொலைபேசியில் இவரிடம் பேசினாராம். அவர் சொன்னாராம் அம்மா உண்ணாவிரதம் கேட்டு மிகவும் மகிழ்ந்த அவர் இனிமேல் என் தலையில் குண்டு விழுந்தாலுமே பரவாயில்லை என்று. என்ன ஒரு வக்கிரம் இது போலெல்லாம் பொய்யடிக்க யாரால்தான் முடியும்.

உள்ளம் பதைக்க வைக்கிறார்கள் என்னவாகுமோ என்று. உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒரு பெண்ணுக்குப் பிரசவமாகிவிட்டதாம். இது போன்று போராட்டங்களெல்லாம் கொச்சைப் படுத்தப்படுகின்றன. ஊடகங்கள் அடுத்து அண்ணா ஹசாரேயின் போராட்டத்திற்கு முரசு கொட்டத் தொடங்கிவிட்டன. 200 நாட்களுக்கும் மேலாக துளி வன்முறையில்லாமல் நடந்து வரும் போராட்டத்திற்கு முடிந்த வர கேவலப்படுத்தும் வேலைகளும் எதிர்க்கருத்து உருவாக்கும் வேலைகளும் செவ்வனே நடக்கின்றன. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத தினமலம் தொடர்ந்து வேலையைக் காட்டி வருகின்றது. அரசியல் கட்சிகள் வழக்கம் போ உயிர்நாடியான பிரச்சனையான கூடங்குளம் போராட்டத்தை ஆதரிப்பதை விட்டு தமது வேலையில் ஆழ்ந்துள்ளன. வாக்கு வங்கிக் கட்சிகள் ஆயிரமாவது முறையாக தமது புத்தியைக் காட்டியுள்ளன. சுரணை கெட்ட தமிழர்கள் கூடங்குளம் போராட்டத்தை தமது வயித்தெரிச்சல்களால் கரித்துக் கொட்டுகிறார்கள். என்னவோ உலை திறந்தவுடன் ஒரு பொத்தானை அமுக்கியவுடன் நாளையே மின்வெட்டு நீங்கி விடும் என்று கனவு காண்கிறார்கள். நாளையே உலை வெடித்து ஆயிரம் பேர் இறந்தாலும் குற்ற உணர்வு கொள்ள மாட்டார்கள் இவர்கள். அடுத்து அம்மா துரோகம் செய்து விட்டார்கள் என்று அங்கலாய்க்கிறார்கள் சிலர். நிச்சயம் அம்மா துரோகம் செய்ய மாட்டார். அதில் அவர் நேர்மையானவர். கருணாநிதியைப் போல அல்ல அவர். அவரை நம்பியது யாருடைய தவறு. ஈழமாகட்டும் கூடங்குளமாகட்டும் அவர் இப்படித்தான் செய்வார். ஈழ ஆதரவாளர்களுக்கு இடிந்த கரை ஒரு பாடம்தான் ஆனால் அதற்குக் கொடுக்கும்  விலைதான் அதிகம். ஒருவேளை 2009 - இல் நடந்த தேர்தலில் கருணாநிதி தோற்று அம்மா வென்றிருந்தால் இப்படித்தான் ஆப்படித்திருப்பார். ஈழப்போர் வழக்கம் போலவே நடந்து முடிந்திருக்கும்.
Download As PDF
Bookmark and Share

Post Comment

புத்தாண்டில் எல்லாம் பொங்கட்டும் !!

 அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
பிடித்த ஜாதி, மத, வர்க்க, இன, பேத பீடைகள் எல்லாம் ஒழியக் கடவது.

வழக்கம் போலவே பொங்கல் வந்து விட்டது. கடவுள் நம்பிக்கையில்லை என்பதால்  கூட்டத்தில் “நின்று சாமி கும்பிடுவது” போல் நடித்துவிட்டு வருவதில் விருப்பமில்லை. சும்மா சடங்குக்காக குறுஞ்செய்திகள் அனுப்புவதும் “மகிழ்ச்சிப் பொங்கல்” என்று ஆங்கிலத்தில் வாழ்த்துவதும் இல்லை. மற்றபடி உறவினர்கள் வருவார்கள் வீட்டில் அனைவருடனும் ஓரிரு நாட்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதே ஒரே மகிழ்ச்சி. சிறுவயதில் ஏன் பொங்கல் பிடிக்குமென்றால் அதற்குத்தான் நான்கு நாட்கள் சேர்ந்தது போல் விடுமுறை கிடைக்கும். தமிழ்நாட்டில் எல்லோருமே தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் மயங்கிக் கிடப்பதால் எந்தப் பண்டிகையாக இருந்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் விடுமுறையும் கொண்டாட்டமும் கழிகிறது

மற்ற எந்த கொண்டாட்டங்களை  விடவும் பொங்கல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஏனெனில் இது மட்டும்தான் சோறு போடும் விவசாயிகள், உழைப்பாளிகள்  கொண்டாடுவது, மாடுகளுக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்துவது, மேலும் தீபாவளியைப் போன்று வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத சூழலை நாசமாக்கும் வெட்டியான கொண்டாட்டமல்ல, திணிக்கப்பட்டதுமல்ல. இது தமிழுடன் பண்பாட்டுடன்  தொடர்புடையது என்பதில்தான் எனக்கு இன்னும் பற்று அதிகம். அதற்காக இது தமிழர்க்கு மட்டுமே சொந்தமானது என்பதல்ல. வெவ்வேறு மொழியினரும் சற்று வேறான சாயலில் பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.


இந்தமுறை பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிலையில் விவசாயிகள் இல்லை. இந்தமுறை மட்டுமல்ல எபோதுமே அவர்கள் நிம்மதியாக இருக்க விட்டதில்லை அரசுகள். இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று இப்போது முல்லைப் பெரியாறு பேராபத்தில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கெதிராக அனைவரும் பொங்கி எழுந்திருப்பது சிறப்பு. இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் அது இன்னும் சிறப்பு.

தமிழ்ப்புத்தாண்டு :

இந்த முறை ஜெயலலிதா பதவியேற்றதும் முந்தைய திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்ததை மாற்றி சித்திரையிலேயே இருப்பதாக திரும்பவும் அறிவித்து தனது புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளார். பல பேர் இது கருணாநிதி ஜெ. இடையிலான சண்டையாகவே பார்க்கிறார்கள். கருணாநிதி மாற்றியதால் மட்டுமே அதைக்  கேலியும் செய்கிறார்கள்.  பல வருடங்களாக மக்கள் கொண்டாடுவதை மாற்ற முடியாது எனில் ஜாதி கூடத்தான் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது அதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா. எது சரியோ   அதுதான் முறைப்படுத்தப் பட வேண்டியது. மேலும் இது ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு வடிவம்தான் தமிழே இல்லாத பெயர்கள் தமிழ்ப் மாதங்களாக இருப்பதும் அதைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதும். இழிவானதே.

இதோ புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதை தமிழர்களை நோக்கி:

'நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே
தமிழ்ப் புத்தாண்டு '

கூகிள் பேஸ்புக் தடை செய்யப்படுகின்றனவா ?

இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளதாக யாஹூ  உட்பட 21 சமூக வளைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை  அனுப்பும்படி கேட்டுள்ளது. இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் என்பது தான் அதன் சிறப்பும் அதே நேரம் குறையும். சில குறைகளைக் காரணம் காட்டி அவைகளைத் தடை செய்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரபு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு ரொம்பவும் அச்சப்படுகிறார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச கருத்துரிமையையும் காவு வாங்க முயல்கிறார்கள். கூகிள் தடை செய்யப்பட்டால் என்னைப் போன்ற பலருக்கு வேலையே கிடையாது. கூகிளார் தரும் விவரங்களை வைத்துத்தான் எனது பணியே நடக்கிறது. பேஸ்புக் இல்லையென்றால் பாதிப் பேருக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.

 மஞ்சு விரட்டு

ஜல்லிக்கட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக நடத்தப் படுகிறது. இதற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் தடை செய்யவும் வலியுறுத்துகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று இதை நடத்துகிறவர்கள் கூறுகின்றனர். தமிழ் கலாசாரம் என்பதற்காக இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா ? இது ஆதிக்க ஜாதியினரின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் மஞ்சுவிரட்டு இருந்தாலும் தற்போதுள்ளது போல் மாடுகளை கொடுமைப்படுத்தி மனித உயிரைக் கொள்ளும் விபரீதமாக இருந்திருக்கவில்லை. தற்போதும் ஸ்பெயினில் என்று நினைக்கிறேன் இது போன்று விளையாடுவார்கள். சாலையின் இருமங்கிலும் மக்கள் நிற்பார்கள். மாடுகளை அந்த சாலையில் ஓடவிட்டு விடுவார்கள் பின்னே இளைஞர்கள் ஓடுவார்கள்  இதனால் மாடுகளுக்கோ மக்களுக்கு காயமேற்படாது.  இது குறித்த செய்தி இங்கே

நான் :

பதிவுலகில் இப்பொது பல புதிய பதிவர்கள் வந்து  சிறப்பாக எழுதிவருகிறார்கள், சிலரைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது அவர்களைப்போல் எழுத முடியவில்லையெ என்று எனினும் இரு வருடங்களுக்கு முன்பிருந்த அளவுக்கு செறிவான கருத்துடன் எழுதும் பலர் காணாமல் போய்விட்டார்கள். பலர் கூகிள் பஸ்ஸில் மட்டுமே எழுதிவருகிறார்கள் என்றும் கேள்வி, தற்போது அது தடை செய்யப்பட்டதால் இனி கூகிள் ப்ளசில் சங்கமிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களாக எழுதினாலும் (!!!??) 50 பதிவுகள் கூட வரவில்லை சோம்பேறித்தனம்தான் காரணம், கூடவே நேரமின்மையும். வழக்கம் போலவே இந்த வருடத்திலாவது அதிக பதிவுகள் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
Download As PDF
Bookmark and Share

Post Comment