புத்தாண்டில் எல்லாம் பொங்கட்டும் !!

 அனைவருக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !
பிடித்த ஜாதி, மத, வர்க்க, இன, பேத பீடைகள் எல்லாம் ஒழியக் கடவது.

வழக்கம் போலவே பொங்கல் வந்து விட்டது. கடவுள் நம்பிக்கையில்லை என்பதால்  கூட்டத்தில் “நின்று சாமி கும்பிடுவது” போல் நடித்துவிட்டு வருவதில் விருப்பமில்லை. சும்மா சடங்குக்காக குறுஞ்செய்திகள் அனுப்புவதும் “மகிழ்ச்சிப் பொங்கல்” என்று ஆங்கிலத்தில் வாழ்த்துவதும் இல்லை. மற்றபடி உறவினர்கள் வருவார்கள் வீட்டில் அனைவருடனும் ஓரிரு நாட்கள் ஒன்றாக சேர்ந்து இருப்பதே ஒரே மகிழ்ச்சி. சிறுவயதில் ஏன் பொங்கல் பிடிக்குமென்றால் அதற்குத்தான் நான்கு நாட்கள் சேர்ந்தது போல் விடுமுறை கிடைக்கும். தமிழ்நாட்டில் எல்லோருமே தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் மயங்கிக் கிடப்பதால் எந்தப் பண்டிகையாக இருந்தாலும் தொலைக்காட்சிப் பெட்டியில்தான் விடுமுறையும் கொண்டாட்டமும் கழிகிறது

மற்ற எந்த கொண்டாட்டங்களை  விடவும் பொங்கல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஏனெனில் இது மட்டும்தான் சோறு போடும் விவசாயிகள், உழைப்பாளிகள்  கொண்டாடுவது, மாடுகளுக்கும் கதிரவனுக்கும் நன்றி செலுத்துவது, மேலும் தீபாவளியைப் போன்று வாழ்க்கைக்கு சற்றும் பொருந்தாத சூழலை நாசமாக்கும் வெட்டியான கொண்டாட்டமல்ல, திணிக்கப்பட்டதுமல்ல. இது தமிழுடன் பண்பாட்டுடன்  தொடர்புடையது என்பதில்தான் எனக்கு இன்னும் பற்று அதிகம். அதற்காக இது தமிழர்க்கு மட்டுமே சொந்தமானது என்பதல்ல. வெவ்வேறு மொழியினரும் சற்று வேறான சாயலில் பெயரில் பொங்கலைக் கொண்டாடுகின்றனர்.


இந்தமுறை பொங்கலை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நிலையில் விவசாயிகள் இல்லை. இந்தமுறை மட்டுமல்ல எபோதுமே அவர்கள் நிம்மதியாக இருக்க விட்டதில்லை அரசுகள். இருக்கும் பிரச்சனைகள் போதாதென்று இப்போது முல்லைப் பெரியாறு பேராபத்தில் மாட்டிக் கொண்டுள்ளது. இதற்கெதிராக அனைவரும் பொங்கி எழுந்திருப்பது சிறப்பு. இந்தப் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தால் அது இன்னும் சிறப்பு.

தமிழ்ப்புத்தாண்டு :

இந்த முறை ஜெயலலிதா பதவியேற்றதும் முந்தைய திமுக ஆட்சியில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்திருந்ததை மாற்றி சித்திரையிலேயே இருப்பதாக திரும்பவும் அறிவித்து தனது புத்தியைக் காட்டிக் கொண்டுள்ளார். பல பேர் இது கருணாநிதி ஜெ. இடையிலான சண்டையாகவே பார்க்கிறார்கள். கருணாநிதி மாற்றியதால் மட்டுமே அதைக்  கேலியும் செய்கிறார்கள்.  பல வருடங்களாக மக்கள் கொண்டாடுவதை மாற்ற முடியாது எனில் ஜாதி கூடத்தான் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகிறது அதற்காக அதை ஏற்றுக்கொள்ள முடியுமா. எது சரியோ   அதுதான் முறைப்படுத்தப் பட வேண்டியது. மேலும் இது ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பின் ஒரு வடிவம்தான் தமிழே இல்லாத பெயர்கள் தமிழ்ப் மாதங்களாக இருப்பதும் அதைப் புத்தாண்டாகக் கொண்டாடுவதும். இழிவானதே.

இதோ புரட்சிக்கவி பாரதிதாசனின் கவிதை தமிழர்களை நோக்கி:

'நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக் கூட்டம் கற்பித்ததே
அறிவுக் கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல்நாளே
தமிழ்ப் புத்தாண்டு '

கூகிள் பேஸ்புக் தடை செய்யப்படுகின்றனவா ?

இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டுள்ளதாக யாஹூ  உட்பட 21 சமூக வளைதளங்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை  அனுப்பும்படி கேட்டுள்ளது. இணையத்தில் கட்டற்ற சுதந்திரம் என்பது தான் அதன் சிறப்பும் அதே நேரம் குறையும். சில குறைகளைக் காரணம் காட்டி அவைகளைத் தடை செய்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. அரபு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைக் கண்டு ரொம்பவும் அச்சப்படுகிறார்கள். இருக்கும் கொஞ்ச நஞ்ச கருத்துரிமையையும் காவு வாங்க முயல்கிறார்கள். கூகிள் தடை செய்யப்பட்டால் என்னைப் போன்ற பலருக்கு வேலையே கிடையாது. கூகிளார் தரும் விவரங்களை வைத்துத்தான் எனது பணியே நடக்கிறது. பேஸ்புக் இல்லையென்றால் பாதிப் பேருக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.

 மஞ்சு விரட்டு

ஜல்லிக்கட்டு எனப்படும் மஞ்சுவிரட்டு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் பரவலாக நடத்தப் படுகிறது. இதற்கு விலங்கு உரிமை ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் தடை செய்யவும் வலியுறுத்துகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு என்று இதை நடத்துகிறவர்கள் கூறுகின்றனர். தமிழ் கலாசாரம் என்பதற்காக இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா ? இது ஆதிக்க ஜாதியினரின் பண்பாடாகவும் கருதப்படுகிறது. பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் மஞ்சுவிரட்டு இருந்தாலும் தற்போதுள்ளது போல் மாடுகளை கொடுமைப்படுத்தி மனித உயிரைக் கொள்ளும் விபரீதமாக இருந்திருக்கவில்லை. தற்போதும் ஸ்பெயினில் என்று நினைக்கிறேன் இது போன்று விளையாடுவார்கள். சாலையின் இருமங்கிலும் மக்கள் நிற்பார்கள். மாடுகளை அந்த சாலையில் ஓடவிட்டு விடுவார்கள் பின்னே இளைஞர்கள் ஓடுவார்கள்  இதனால் மாடுகளுக்கோ மக்களுக்கு காயமேற்படாது.  இது குறித்த செய்தி இங்கே

நான் :

பதிவுலகில் இப்பொது பல புதிய பதிவர்கள் வந்து  சிறப்பாக எழுதிவருகிறார்கள், சிலரைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது அவர்களைப்போல் எழுத முடியவில்லையெ என்று எனினும் இரு வருடங்களுக்கு முன்பிருந்த அளவுக்கு செறிவான கருத்துடன் எழுதும் பலர் காணாமல் போய்விட்டார்கள். பலர் கூகிள் பஸ்ஸில் மட்டுமே எழுதிவருகிறார்கள் என்றும் கேள்வி, தற்போது அது தடை செய்யப்பட்டதால் இனி கூகிள் ப்ளசில் சங்கமிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டு வருடங்களாக எழுதினாலும் (!!!??) 50 பதிவுகள் கூட வரவில்லை சோம்பேறித்தனம்தான் காரணம், கூடவே நேரமின்மையும். வழக்கம் போலவே இந்த வருடத்திலாவது அதிக பதிவுகள் எழுத வேண்டுமென நினைக்கிறேன்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் மற்றும் தங்களது அன்பு உறவுகளுக்கும், இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்