இப்போது அத்திவரதர் அடுத்து என்னவோ ?

அத்தி வரதர் என்ற பெயர் என் அம்மாவுக்கு சொல்ல வரவில்லை. நாப்பது வருசங் கழிச்சு ஒரு சாமி வந்திருக்குதாமா என்று, நேரடியாக எதிலோ காட்டுகின்ற தொலைக்காட்சியாலாவது போட்டுக் காட்டச் சொன்னார். அம்மாவின் நண்பர் ஒருவர் அங்கே சென்றதாகக் கூறியதிலிருந்து அவருக்கும் ஆர்வம் தாங்கவில்லை. அதைத் தொலைக்காட்சியிலாவது பார்த்து விடலாம் என்பது என்ன நம்பிக்கை என்று புரியவில்லை.

வாடிக்கையாக தங்களுக்கு இருக்கும் வழிபாடுகளைத் தாண்டிய ஆர்வம் எல்லோருக்கும் இருக்கிறது. சிலர் ஐயப்பன், முருகனுக்கு மாலை, மேல்மருவத்தூர், கொஞ்சம் மேல்தட்டு மக்களுக்கு ஈஷா, வாழும் கலை, வாழ்க வளமுடன், நித்தியானந்தா, மித்ரேஷிவா... என்று போகும். இந்துக்களுக்கு புதுசு புதுசாக ஏதாவது பண்டிகையோ, கடவுளோ, புது விதமான வழிபாடுகளோ, ஜோசியமோ, பரிகாரம், ஹோமம், யாகம், திருக்குடமுழுக்கு, ஆண்டு விழா, கோயில் புனரமைப்பு, புதிய கோயில் கட்டுவது, ஏதாவது கேள்விப்படாத ஊரில் இருக்கும் கோயில் அல்லது அம்மன் அல்லது அத்திவரதர் மாதிரியான திடீர் இன்ப அதிர்ச்சிகளோ தேவை. 

ஒன்று இவைகளை தாங்களாகவே செய்ய வேண்டும். இல்லை செய்தவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். இல்லாவிட்டால் ஃபேஸ்புக், வாட்சப்பில் கோயில், கடவுள் மகாத்மியங்கள் பற்றிய வீடியோ, கட்டுரைகளைப் பகிர்வது, இல்லையென்றால் அதைத் தொலைக்காட்சியில் பார்த்தே அருள் பெறுவது என்று இந்துக்களின் நம்பிக்கை நீள்கிறது.

வாழ்க்கையில் கடவுள் ஏதாவது அதிசயம் நடத்தி தங்களை இன்னலிலிருந்து மீட்டு விடுவார் கடவுள் என்று நம்பும் மக்கள் எந்த வித வழிபாட்டு முறைகளையும் தவறாமல் ஒரு "உள்ளேன் ஐயா" போட்டு விட எத்தனிக்கிறார்கள். இன்னலில் தவிப்பவர்கள் இந்த எண்ணத்துடன் வருகிறார்கள் என்றால், வாழ்வின் அனைத்து வசதிகளையும் துய்த்துக் கொண்டு இருப்பவர்கள் தமது "ஆன்மிகத் தேடலுக்காகவும்" பொழுது போக்கிற்காகவும் வருகின்றனர்.  40 வருடங்களுக்கு ஒரு முறைதான் "அத்திவரதர்" தரிசனம் "தருகிறார்" என்பதால் அடுத்த 40 வருடம் தாம் இருக்க மாட்டோம் என்று பாதி பேரும், 40 வருடங்களுக்கு முன்பு வந்ததை அறியாமல் விட்டு விட்டோமே என்று மீதி பேரும் எப்பாடு பட்டேனும் அத்தியை கண்டு விட வேண்டும் என்று வருகின்றனர். 

அட்சயதிரிதியை, தொடங்கி தாமிரபரணி புஷ்கரணி, கும்பகோணம் மகாமகம், கும்பமேளா, அத்திவரதர் என்ற பல வருடங்களுக்கு ஒருமுறை என்று பரபரப்பு ஏற்றப்பட்ட வழிபாடுகள் ஊடகங்களின் வெறித்தனமான பரப்புதல்கள் மூலம் வணிக நோக்கில் பரப்பப் படுகின்றன. இனியும் வரும் காலங்களில் இவை போன்ற புதிது புதிதான கடவுள்கள், வரலாறுகள், அறிவியல் உண்மைகள், கொண்டாட்டங்கள் வந்து கொண்டே இருக்கும். 

இப்படியான புதுப்புது கதைகளைச் சொல்வதும் கேட்பதும்தான் இந்துக்கள் தங்கள் நம்பிக்கைக்காக செய்யும் செயலாக இருக்கிறது. மற்ற மதங்களில் எல்லாம் மதத்தைப் பரப்புவதற்கு ஒரு குழுவோ தனி நபரோ இருப்பார். இந்து மதத்தைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு தனிநபரும் மதத்தை பரப்பும் மதவாதியாக இருக்கிறார்கள். 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்