2017 இல் வந்த படத்தை இப்போதுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்து நிறைவாகவும் கனமாகவும் உணர்ந்தேன். காதல் என்பது எப்போது திகட்டாத உணர்வு. இதை வைத்துத்தான் இந்தியத் திரைப்படங்கள் 95 விழுக்காடுகள் உருவாக்கப்படுகின்றன. அதிலும் 99 விழுக்காடுகள் இளைஞர்களின் காதலை மட்டுமே பேசுகின்றன. காதல் என்பது எல்லா வயதினருக்கும் வருவதுதான் என்றபோதிலும் அதற்கான வாய்ப்புகள் எல்லோர்க்கும் இருப்பதில்லை. நம்முடைய சமூகத்தைப் பொறுத்தமட்டில் திருமணம் தோல்வியடைந்தவர்கள், திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் போன்றவர்கள் பரிதாபத்துக்குரியவர்களாகத்தான் பார்க்கப்படுகின்றனர். திருமணம் செய்துவிட்டதால் மட்டுமே வேறு வழியில்லாமல் குழந்தைகளுக்காகவும் பிடிக்காத நபருடன் கொடுமையான வாழ்க்கையை வாழவும் சிலர் விதிக்கப்பட்டுள்ளனர்.
இப்படி சமூகம் தரும் நன்னடத்தைச் சான்றிதழுக்கும், குடும்ப மானம் என்று தாங்கள் நம்பும் ஒன்றுக்காகவும் தமது வாழ்க்கையையே நரகமாக்கிக் கொண்டு வாழும் இணையர்களையும் நாம் நேரடியாகக் கண்டிருப்போம். இப்படி விருப்பப்பட்டவரை மணக்க முடியாமலும், மணந்தவரை விரும்ப முடியாமலும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் மனிதர்கள் நிரம்பியதுதான் நம் சமூகம். அதே போல் பருவ வயதுக் காதல் பெரும்பாலும் தோல்வியில் முடிந்திருக்கும். சொல்ல முடியாமலும் சொல்லி ஏற்கப்படாமலும் இருதரப்பு வீட்டாரின் எதிர்ப்பால் பிரிந்ததாகவும் தோல்வியின் காரணங்கள் இருக்கலாம்.
களவாடிய பொழுதுகள் என்ற இப்படத்திலும் சேரமுடியாத காதலர்கள் தமது திருமணத்தின் பின்னர் சூழ்நிலையால் சந்திக்க நேர்கிறது. அதன் பின்பு அவர்களின் பரிதவிப்பும், மனப்போராட்டமும்தான் படம். நடிகர்களாக இன்பநிலாவும், பிரபுதேவாவும், பூமிகா சாவ்லாவும், பிரகாஷ் ராஜும் மிகச்சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இப்படம் காதலிப்பவர்கள், காதலித்து வென்றவர்கள், காதலித்துத் தோற்றவர்கள் காதலென்றால் என்னவென்றே தெரியாதவர்கள் என எல்லாத்தரப்பு மக்களையும் கவரும் வகையில் இருந்தாலும் சில காட்சிகள் துருத்திக் கொண்டும், தேவையில்லாமலும் உறுத்திக்கொண்டும் இழுவையாகவும் இருக்கின்றன.
கதை:
வாடகை வாகன ஓட்டுனரான பொற்செழியன், விபத்தில் சிக்கிய ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார். அவர் மிகப்பெரிய தொழிலதிபரான சௌந்தரராஜன். பொற்செழியன் விபத்தில் காயமடைந்த சௌந்தரராஜனுக்காக தனது பணத்தை மருத்துவமனையில் கொடுக்கிறார். அவர் வீட்டுக்கும் தகவல் கொடுக்கிறார். பின்பு வெளியில் சென்று வரும் பொற்செழியன், மருத்துவமனையில் சௌந்தரராஜனின் மனைவி இருப்பதைப் பார்க்கிறார். அது அவரது கல்லூரிக் காலத்தில் அவரைக் காதலித்த ஜெயந்தி. அதிர்ச்சியடைந்த பொற்செழியன் அங்கிருந்து சொல்லாமல் வெளியேறுகிறார். குணமடைந்த சௌந்தரராஜனும் ஜெயந்தியும் மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றிய நபர் சொல்லாமல் சென்று விட்டதால், அவருக்கு அலைபேசியில் அழைத்து அவரை வரச்சொல்லுமாறு கேட்கின்றனர். பேசாமல் தவிர்த்துச் செல்லும் பொற்செழியன் ஒரு கட்டத்தில் ஜெயந்தியின் அலைபேசி அழைப்பை ஏற்று பேசுகிறார். ஜெயந்தியை மருத்துவமனையில் கண்டதால் பிரச்சனை வேண்டாமென்று தான் சென்று விட்டதாகக் கூறுகிறார். இருவரும் அழுகின்றனர்.
அவர்களது கல்லூரிக்காலக் காதல் பற்றி கதை செல்கிறது. பணக்காரவீட்டுப் பெண் ஜெயந்தி நடுத்தரக் குடும்ப பொற்செழியன் இருவரும் ஒருவருக்கொருவர் விரும்புகின்றனர். இது ஜெயந்தியின் அப்பாவுக்கு பிடிக்காததால் வேறொரு வழக்கில் சிறையில் இருக்கும் பொற்செழியனை காவல்துறைக்கு பணம் கொடுத்து, பொய்வழக்கில் அவரை சிறையிலேயே இருக்க வைக்கிறார். இதற்கிடையில் தொழில் நட்டமடைந்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடக்கும் ஜெயந்தியின் அப்பா, தனது விருப்பத்திற்கேற்றவாறு ஒருவரை மணந்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி திருமணமும் செய்வித்து விடுகிறார். இது நடந்து சில வருடங்கள் கழிந்துத்தான் இப்படி அவர்கள் சந்திப்பு நடக்கிறது.
தன் உயிரை காப்பாற்றிய செழியனுக்கு ஏதாவது கைம்மாறு செய்யவேண்டுமென்று துடிக்கும் சௌந்தரராஜன், தனது மனைவியிடம் பணம் கொடுத்து அதை செழியனிடம் கொடுத்து வருமாறு அனுப்புகிறார். அதை செழியனின் வீட்டிற்குச் சென்று கொடுக்க நினைக்கிறார். அவரது வீட்டில் பொற்செழியனின் மனைவியிடம் கொடுக்கும் ஜெயந்தி, அவனது குழந்தைக்கு யாழினி என்ற பெயர் வைத்திருப்பதைக் கேட்டு நெகிழ்கிறாள். காதலிக்கும் காலத்தில் ஜெயந்தி செழியனிடம் தமக்கு பெண்குழந்தைதான் பிடிக்கும் என்றும் பெயர் யாழினி என்று வைக்க வேண்டும் என்று கூறியதை நினைத்துப் பார்க்கிறாள்.
பொற்செழியனுடன் அவனது வாகனத்தில் பயணிக்கும் ஜெயந்தி தன் உதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்கிறாள். பணத்தை வாங்கிக் கொண்டு வேறு ஊரிலாவது நல்லதொரு வாழ்க்கையை வாழுமாறு கெஞ்சுகிறாள். பிடிவாதமாக மறுத்துக் கொண்டே இருக்கிறான் பொற்செழியன். மனைவி வைத்திருக்கும் பணத்தை கொண்டு போய் சௌந்தரராஜனிடம் கொடுத்து விடச் சொல்கிறான். சௌந்தரராஜன் ஒரு மரியாதைக்காகவாவது தன்னை வந்து பார்க்குமாறு சொல்கிறார். அப்படி வந்த பொற்செழியனை அவர் தன்னுடனே இருக்கும்படி வற்புறுத்தி வைத்துக் கொண்டு, தனது நிறுவனத்தில் உயர்ந்த பதவியையும் கொடுக்கிறார். இது வரையில் பொற்செழியனின் ஊதியத்தைக் கொண்டு ஏழ்மையில் வாழ்ந்த பொற்செழியனின் இணையர் ராணி, நல்வாய்ப்பாகக் கருதி இந்த புதிய வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிக்கிறாள்.
இடையிடையே ஜெயந்தியை சந்திக்க நேர்வதும், பேச நேர்வதும் இருவருக்கும் மனப்போராட்டத்தை உண்டாக்குகிறது. முடிந்த வரை ஜெயந்தியைத் தவிர்க்கிறான் பொற்செழியன். தன்னைக் காணவருமாறு பொற்செழியனை நச்சரிக்கும் ஜெயந்தி இயலாமையால் அவன் வராவிட்டால் தன்னை உயிருடன் பார்க்க முடியாது என்று மருட்டுகிறாள். வேறு வழியில்லாமல் அவளைக் காண வருகிறான் செழியன். அங்கே தனியறையில் மீண்டும் தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எங்காவது போய்விடுமாறும், பணத்தைக் கொண்டு சிறந்த முறையில் வாழவும் வேண்டுகிறாள். அவன் மறுக்கிறான். உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருவரும் அணைத்துக்கொண்டும் முத்தமிட்டுக் கொள்கிறார்கள்.
இதற்கிடையில் ஜெயந்தி-பொற்செழியனின் காதல் குறித்து அறியவரும் சௌந்தரராஜன் சற்று குழம்பி, பின்னர் அவர்கள் சூழ்நினையைப் புரிந்து கொண்டு மனைவியை சமாதானம் செய்ய முனைகிறார். ஆனால் குற்ற உணர்ச்சி காரணமாக ஜெயந்தி தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சேர்க்கப் படுகிறாள். பொற்செழியன் குடும்பத்துடன் ஊரை விட்டுச் செல்கிறான். சௌந்தரராஜனின் அலைபேசி அழைப்பை புறக்கணித்து, தனது சிம் அட்டையை உடைத்து எறிகிறான்.
என் கருத்து,
நல்லவேளையாக தாமதமானாலும் இப்படத்தை தவறவிடவில்லை என்று தோன்றுகிறது. இப்படம் முழுக்கவும் உணர்வுகளின் போராட்டமாக இருக்கிறது. பொற்செழியனுக்கு ஏன் அந்த வறட்டு கௌரவம் என்பது புரியவில்லை. ஜெயந்தி விரும்பியவாறு பணத்தைப் பெற்றுக் கொண்டு வேறெங்கேனும் சென்றாவது சற்றே மேம்பட்ட வாழ்க்கையை வாழுமாறு கேட்பதைக் கூட ஏன் ஏற்றுக்கொள்ள மறுத்தான் என்று புரியவில்லை. பொற்செழியனின் வீம்புக்காக அவனது இணையர் ராணியும் அவர்களது மகள் யாழினியும் சேர்ந்து அல்லல்படுகிறார்கள். ராணி தற்காலத்தில் பெரும்பான்மையான ஏழைப் பெண்களின் நிலையை நினைவூட்டுகிறார். ஏழ்மையின் கட்டாயத்திற்காக வாழ்க்கைப்பட்டு, கணவனின் முரட்டுப் பிடிவாதத்தால் கண்ணீர் சிந்திக் கொண்டே இருக்கிறார். இப்படி ஆண்களின் உணர்ச்சிக் குழப்பத்தில் தன்னுடைய வீட்டில் இருக்கும் பெண்களின் கண்ணீரின் வேதனையை உணர்வதில்லை. இப்படி முரட்டுத்தனமான புனிதத்தைப் பேணவும், வறட்டுக் கௌவரவத்துக்கும், சமூக மதிப்புக்காகவும் இவைகளைக் காப்பாற்ற வாழ்வோரை/இறப்போரை நம்பி எத்தனையோ உள்ளங்கள் நித்தம் அழுது கொண்டுதான் உள்ளன.
கதை தங்கர் பச்சான் எழுதியதாம். தனது தமிழுணர்வை முடிந்த வரையில் காட்ட முற்படும் தங்கர் பெரியாரையும் தோழர் ஜீவாவையும் கூட உணர்ச்சியூட்டும் வசனம் பேச வைத்து தமிழனுக்கு விழிப்புணர்வூட்ட முனைகிறார். படம் ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முந்தையது என்பதால் ஈழப்போரைப் பற்றியும் பெரியார் (சத்யராஜ்) பேசுகிறார். குத்துப்பாடல்களை குறைசொல்லும் தங்கர் தனது படத்தில் வந்த குருவி கொடைஞ்ச கொய்யாப்பழம் என்ற பாடலையும் நேர்மையாக சுட்டியிருக்கிறார்.
மே நாள், காரல் மார்க்ஸ் என்று பாட்டுப் பாடும் பொற்செழியன் தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயல்வதாகக் காட்டாமல், திடீரென்று சௌந்தரராஜனின் சேரன் நிறுவனத்தின் Board of directors சந்திப்பில் முதலாளியின் ஊதிய உயர்வை உயர்த்தியும், இலாபத்தையும் பேசுவது பெரிய முரண்.
நெறியாளுநர் தங்கர பச்சான் வசனங்கள் மூலமாக,
குழந்தைகளுக்கான பெயர்கள் தமிழில் இருக்க வேண்டுமென்பதை மறைமுகமாகச் சொல்கிறார்
வங்கிகளில் படிவங்களில் இந்தியும் ஆங்கிலமும் இருப்பதை எதிர்க்கிறார்
முருகனுக்கு செங்கிருதத்தில் மந்திரம் சொல்வதை விமர்சிக்கிறார்.
சக்திவேல் முருகனார் என்ற தமிழ் பண்பாட்டுப் போர்வாளுக்கு அறிமுகம் கொடுக்கிறார். (இவ்விரண்டு வசனங்களை பேசுகிறவர்கள் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் என்பது இனிமை)
வேலு சரவணன் என்ற குழந்தைகளுக்கான கலைஞருக்கு பொன்னாடை போர்த்தி மதிப்பு அளிக்கிறார்
பிரபுதேவாவின் சமீபத்திய படங்கள் எல்லாமே 15 வருடங்களுக்கு முன்னர் வந்த படங்களின் காட்சிகளையே நினைவூட்டுகின்றன. சார்லி சாப்ளின் 2, குலேபகாவலி மற்றும் களவாடிய பொழுதுகள் உட்பட
பிடித்த காட்சிகள்
வங்கியில் இந்தி ஆங்கிலத்திற்கு எதிராக பொற்செழியன் பேசும்/போராடும் காட்சி
"ஆயிரம் மலர்களே" என்ற பழைய சோகப்பாடல் பின்னணியில் ஒலிக்க அதற்குப் பிறகு ஜெயந்தியும் பொற்செழியனும் பேசுவது
பொற்செழியனின் மகள் பெயரை யாழினி அறிந்து கொள்ளும் ஜெயந்தி, தாங்கள் காதலித்த நாட்களில் சொன்னதை நினைவு கூர்வதும், தொலைபேசியில் அதற்கு பொற்செழியனிடம் நல்ல பெயர் என்று சொல்வதும் அழகோ அழகு.
தனது இணையரின் பழைய காதலை அறிந்து சௌந்தரராஜன் தனது மனைவி ஜெயந்தியைத் தேற்றும் காட்சி அற்புதம்
பிடித்த வசனங்கள்
ஜெயிச்ச காதல் எல்லாம் குழந்த குட்டியோட முடிஞ்சு போயிடுது தோல்வியடைஞ்சு நிறைவேறாத காதல்தான் காவியமாகுது
காதலிப்பவர்கள் கல்யாணம் பண்ணிக்கணும். தோத்துப்போயிடவே கூடாது. அப்புறம் வாழ்க்கையே நரகமாயிடும்
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்