மே 18 ஈழத்தமிழ் இன அழிப்பு நினைவு நாள்

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்து 10 வருடங்கள் கழித்து, இன்று இன்னொரு சிறுபான்மையினரான தமிழ் முஸ்லிம்கள் மேல் கலவரங்கள் தொடங்கியிருக்கும் நிலையில்,

த்து வருடங்களுக்கு முன்னர் நினைத்துப் பார்த்தால் இன்னும் வேதனையாக இருக்கிறது. அப்போதுதான் இணையம் பயன்படுத்துவது அறிமுகமாயிருந்தது. பணிக்குச் சேர்ந்த புதிதில் வேலையை முடிக்க முடியாமல், ஈழப்போரின் செய்திகளைக் காண ஆர்வம் மிகுதியால் இடையிடையே தமிழ்மணம், புதினம், பதிவு, தமிழரங்கம், வினவு உட்பட பல இணையத் தளங்களில் படித்து நொந்து போய் இருந்த காலம். 

போர் நின்றால் போதும் என்ற நல்ல செய்திக்காக ஏங்கி ஏங்கி பல்வேறு வகையான போரின் பேரழிவைக் காட்டும் புகைப்படங்களும் மக்களின் துயரங்களும் இடம்பெயர்வுகளும் கையறு நிலையும் தமிழ்நாட்டில் இருந்த நம்மைப் போன்றவர்களின் நிம்மதியையே பறித்தன. மிகப்பெரிய குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கின. புலிகள் ஏதேனும் திருப்பு முனையை ஏற்படுத்த மாட்டார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மனம் மாறி ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் ஒழிய நடக்காது என்று தெரிந்து போனது. 

வரலாறும், அவர்களின் நடவடிக்கைகள் மீதான விமர்சனங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்ததால், உணர்ச்சிவயப்பட்ட விடுதலைப் புலி ஆதரவாளனாக/எதிர்ப்பாளனாக இல்லாத போதும், புலிகளை அழிக்க முடியாது என்ற பெரும் நம்பிக்கை இருந்த போதே, போரின் போக்கானது புலிகள் இல்லாமல் ஆக்கப்படுவார்கள் என்று உள்ளுணர்வு மூலம் சொல்லிக்கொண்டே இருந்தது.  இதை என்னுடைய பாமரத் தமிழ் மனம் ஏற்காமல் இறைஞ்சிக் கொண்டிருந்தது. சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான தமிழ்ப் பெருமிதமாகவே அவர்களின் குற்றங்களைத் தாண்டி ஏற்றி வைத்து இருந்தேன். 

பொதுமக்களின் அழுகையும், குழந்தைகளின் குதறப்பட்ட உடல்களும், படுகாயமடைந்த மனிதர்களும், பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும், புலிகளின் படுதோல்வியும் விரக்தியின் உச்சத்துக்கு இட்டுச் சென்றன. இனி ஈழம் என்னவாகுமே என்ற கேள்வியும் வாட்டியது. 

போரின் கொடுந்துயரை நமக்குக் கொடுத்தன. ஈழப்போர் முடிந்தும், 6 மாத காலம் வரை அரைப் பைத்தியம் பிடித்த நிலைதான் இருந்தது. அதற்குப் பிறகும் மேன் மேலும் வந்து கொண்டிருந்த மோசமான செய்திகள் இராணுவத்தால் கொலை செய்யப்படும் வீடியோக்கள் என துயரம் அதிகரிக்கச் செய்யும் நிகழ்வுகளாகவே இருந்தன. 

                                           

ஆர்க்குட் இல் இருந்து சேமித்த சில புகைப்படங்களைப் பகிரத் தோன்றியது.      

                                            

ஈழப்போரின் இறுதி நாட்களில் முல்லைத் தீவுக்குள் தோல்வியின் விளிம்பிலிருந்த புலிகளை அழிக்கும் போர்த் திட்டத்தைப் பற்றிப் பார்வையிட வந்திருந்த வேற்று நாடுகளின் (அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், வங்கதேசம், மாலத்தீவுகள், இந்தியா, பாகிஸ்தான்) பாதுகாப்பு ஆலோசகர்கள். இதில் இந்தியா பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ஒன்றாக சிங்கள இராணுவத்தினரின் திட்டத்தை கவனிக்கின்றனர். 

புலிகளும் மக்களும் உடல் சிதறிச் செத்த பல புகைப்படங்களால் நான் அடைந்த அதிர்ச்சியைக் காட்டிலும், இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் என்று பகைவர்களாக இருக்கும் நாடுகள் எப்படியெல்லாம் ஒன்றாகின்றனர் என்று அதிர்ச்சியடைந்தேன். 2008 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் இப்புகைப்படங்கள் என்னை இன்னும் வியப்பில் ஆழ்த்துகின்றன.
#Justice4TamilGenocide
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்