ஆண்டாள் பெயரால் தருமப் போராளிகளின் போலிப் போராட்டம்

தமிழை ஆண்டாள் என்ற பெயரில் வைரமுத்து சொன்ன ஒரு கருத்துக்காக ஒரு பெரிய போராட்டம் நடைபெறுகிறது. இது நாள் வரையிலும் எதற்காகவும் போராடியிராதவர்கள், வேறு யாரேனும் எதற்காகப் போராடினாலும் நக்கலடித்தவர்கள் இப்போது போராளிகளாக மாறியிருக்கின்றனர். 

தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பாளர்கள் அனைவரையும் போராளிகள் என்று நக்கலடிப்பது இந்துத்துவர்கள் மரபு. அதே மோடி ஆதரவாளர்களை நாம் "பக்தாள்" என்று அன்போடு அழைப்போம். இப்போது இன்ப அதிர்ச்சியாக பக்தாளே போராளியாக விஸ்வரூபம் எடுத்துள்ளனர். ஓ அவர்களுக்கு தருமப் போராளிகள் என்று இன்னொரு பெயரும் உண்டு என்று நமக்கு உணர்த்தியுள்ளனர்.

வைரமுத்து 100 கோடி இந்துக்கள் வணங்கும் ஆண்டாள் ஒரு தேவதாசின்னு சொன்ன மாதிரி கதறித் தீர்த்தார் ராசா. இந்த தேவதாசி முறை என்ன பிரிட்டிஷ்காரனோ இல்ல முசல்மானோ கொண்டு வந்ததோ இல்லையே. இருக்கற பண்பாடுகள் எல்லாத்தையும் சொந்தம் கொண்டாடற இந்து மதத்தின் ஒரு அங்கம்தானே தேவதாசி முறை. அது இந்துக் கோயில்ல இருந்த முறைதானே. அதில் சிக்கியவர்கள் இந்துப் பெண்கள்தானே. அதை ஒழிக்க இந்து எதிர்ப்பாளர்கள் முயன்றபோது எதிர்த்தவர்களும் இவர்கள்தானே. 

இந்தப் போராட்ட/எதிர்ப்புக் கூத்தில் கொஞ்சமும் அடிப்படையே இல்லை. தேவதாசி முறை இந்து மதத்தில் இருந்ததால் குற்ற உணர்வு இல்லை. ஆனால் ஆண்டாள் தேவதாசி என்றால் புண்படுகிறதாம். ரொம்ப நல்ல மனசு.

ஆண்டாள் ஒரு தேவதாசி என்று சொன்னதால் எப்படி அவரை இழிவுபடுத்துவதாகும் என்று சொன்னால் நலம். இராமன் ஒரு குடிகாரன் என்று ராமாயணத்திலேயே இருக்கிறது என்று கருணாநிதி சொன்னால், அதை எப்படித் திரிப்பார்கள் மதவாதிகள் ?.  கருணாநிதி ராமனைக் குடிகாரன் என்று பழித்தார் என்பார். அதாவது கருணாநிதி தனது சொந்தக் கருத்தினைச் சொன்னது போல் மாற்றினார்கள். அது போலவே இங்கும் வைரமுத்தையும் தினமணி வைத்திநாதனையும் சொல்கிறார்கள். ஆனால் ஆண்டாள் தேவதாசியாக இருந்தார் என்ற வரலாறு மிகவும் சராசரியான செய்திதான்.வைரமுத்துவை பேச வைத்து அதை வெளியிட்டவர் யார் ? தினமணி ஆசிரியர் வைத்தியநாதன். தினமணியில் ஆன்மிகத்தை தூக்கிப் பிடிப்பவர், தமிழையும் தூக்கிப் பிடிப்பவர். தீவிரமான ஜெயலலிதா ஆதரவாளர். காந்தியவாதி. மோடியின் ஆதரவாளர்.  இந்துத்துவா ஆதரவாளர். ஆன்மிகவாதி, தமிழ் ஆர்வலர்.  இவர் இந்து மதத்தையோ, பக்தி இலக்கியத்தையோ ஆன்மிகத்தையோ இழிவு செய்யும் செயலை 101% விழுக்காடுகள் உறுதியாக செய்ய மாட்டார் என்று சொல்ல முடியுமே. ஆனாலும் இதை விடாமல் பிரச்சனையாக்கி குளிர்காய வேண்டுமே மதவாதிகளுக்கு. அதற்கு தினமணி ஆசிரியர் வைத்தியநாதனையும் சேர்த்து திட்டித் தீர்க்கிறார்கள். 

இந்து முன்னணியினர் நிர்வாகிகள் 10 பேர் சேர்ந்து விநாயகர் சதுர்த்திக்கு கூட்டம் நடத்தினாலே அதை செய்தியாகப் போடுவார். இவர் மீதே இந்து முன்னணியினர் தற்போது வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். எதற்காகவோ ஜெயமோகனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இந்து மக்கள் கட்சியைப் போல இப்போது வைணவர்கள் தினமணி வைத்தியநாதனையும் நையப்புடைக்கிறார்கள்.

இது ஹேராம் படத்தில் வரும் காட்சி. மனைவியைப் பெரிதாகக் கண்டுகொள்ளாத கணவனிடம் மனைவி சொல்வது போல் இருக்கிறது. என்னை ஆம்படையாளா ஏத்துக்காட்டியும் பரவால்ல ஆண்டாளாவாவது ஏத்துக்கலாம்ல என்ற ரீதியில் வரும் இந்த உரையாடல் ஹேராம் படத்தில் வருவதாகும். இந்த மாதிரி வசனம் இப்போது வந்திருந்தால் ஆண்டாளை இழிவு செய்கிறார் கமல் என்று கூட போராட்டம் நடத்தியிருப்பார்கள். ஆணால் கமல் கொஞ்சம் வைணவ அடையாளங்களை தனது திரைப்படங்களில் அதிகம் பயன்படுத்துவதால் வழக்கமாக சைவ சமயத்தவரே அதிகமாக அவரை விமர்சனம் செய்வார்கள். ஆண்டாளை விட பெரிய சர்ச்சைகள் ஹேராமில் இருந்ததால் அதிகமாகத் தெரியவில்லை.
இந்தியாவையே (தமிழகத்தையும்) கைப்பற்றி விட்ட காவி பயங்கரவாதக் கூட்டத்துக்கு இன்னும் தமிழகத்தில் மதவெறியும் ஜாதிவெறியும் அது சார்ந்த கலவரங்களும் (பெருமளவில்) இல்லாமல் இருப்பது எரிச்சலாக இருக்கிறது. 

இங்கே நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் தமிழினம் சார்ந்ததாகவும், ஈழத்தமிழர் ஆதரவு, ஜல்லிக்கட்டு போன்றவை (அதுவும் இனவெறி இல்லாமல்), நீட் எதிர்ப்பு போன்ற சமூக நீதி சார்ந்தும் தான் நடக்கிறது. ஊடகங்களிலும் அவைதான் முதன்மைச் செய்திகளாக வருகிறது. விநாயகர் சதுர்த்தியிலும் பெரிய கலவரமாக மாற்ற முடியவில்லை. இந்து முன்னணித் தலைவர்களில் படுகொலையையும் பெரிதாக்கிக் கலவரம் தூண்டப் பார்த்தார்கள். எதிலும் இவர்கள் எதிர்ப்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இருந்தும் விடுதாயில்லை. 

திமுகவின் திராவிட இந்து மத எதிர்ப்பினால திமுகவின் மீது கடும் வெறுப்பு கொண்ட இந்துக்கள்/ஜாதிவெறியர்கள் காட்டும் அதிகபட்ச எதிர்ப்பு கருணாநிதிக்கு அம்மா பரவால்ல என்று அதிமுக ஆதரவுடன் நின்று விட்டது. 

இங்கே திராவிடக் கட்சிக்கு எதிராக நடக்கும் போராட்டம் என்றால் அது டாஸ்மாக் எதிர்ப்பு ஒன்றுதான். அதிலாவது இவர்கள் திராவிட எதிர்ப்பை வலுவாகப் பதிய வைக்கலாம். அந்தளவுக்கு அவர்கள் யோக்கியர்களும் இல்லை. இந்து முன்னணிக்கு ஆட்களுக்கு மது இல்லாமல் எப்படி ஆட்டம் போட, எப்படிக் கலவரம் பண்ணுவதாம். 

இவர்களுக்கு மக்கள் நலத்தில் துளியும் அக்கறையில்லாததால் போராடுவதற்கோ காலூன்றுவதற்கோ எந்தக் களமும் இல்லை. கலவரம் செய்வதைத் தவிர வேறு அரசியல் தெரியாது. எனவே மதவெறியைக் கிண்டி விடத் தனக்குக் கிடைத்த சிறு சந்துகளில் பூந்து பயங்கரமாக performance பண்ணுகின்றனர். அதில் தோல்வியுற்றாலும் மதவெறி சிறுகச் சிறுகப் பரவிக் கொண்டுதான் இருக்கிறது.

மெர்சல் படத்தில் வந்த மிகச் சராசரியான கோயிலை இடித்து பள்ளி கட்ட வேண்டும் என்பது போல ஒரு வசனத்தை வைத்து மதவெறியைத் தூண்டினார்கள்.  அது ஏற்கெனவே பாரதியார் சொன்னதுதான். உன்னால் முடியும் தம்பி என்ற பாலச்சந்தரின் படத்தில் ஒரு பாடலில் கூட அவ்வரிகள் வந்தன.  ஆனாலும் அதை ஒரு காரணமாகச் சொல்லி மதவெறியைத் தூண்டி மதவெறிக் கருத்துக்களை அனைவரிடமும் ஊடக விவாதங்கள் வாயிலாக விதைத்தனர்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது நியாயமெனில். புத்த விகாரைகள் இருந்த இடம் தற்போது கோயில்களாக மாற்றப்பட்டுள்ளன, எனவே கோயில்களை இடித்து விட்டு புத்த விகாரைகள் கட்ட வேண்டும் என்று சொல்ல முடியுமா என்று தர்க்கமாகப் பேசியதை மாற்றி இந்துக் கோயிலை இடிக்கச் சொல்லும் திருமா என்று புரளியைக் கிளப்பிக் குளிர் காய்ந்தனர்.  திருமாவளவன் பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக வெளியிட்ட ஒரு கருத்தை மாற்றி மதவெறியைத் தூண்டுகிறார்கள்.

அதே வகையில் இப்போது ஆண்டாளை அவமானப்படுத்தி விட்டதாக அடித்து விடுகிறார்கள்.  ஆனால் சில வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு இங்கே ஒரு உதாரணம் பாருங்கள். நடிகர், நாடக இயக்குநர் எஸ்.வி. சேகர் "மகாபாரதத்தில் மங்காத்தா" என்று ஒரு நகைச்சுவை நாடகம் போட்டிருக்கக் கூடும். அதை எப்படி மதவெறியாக மாற்றுகிறார்கள். சேகர் ஒர் இந்துத்துவாவாதி, அவர் இந்து மதத்தை இழிவு செய்வாரா ? மகாபாரத்தைப் பயன்படுத்தி ஒரு நகைச்சுவைப் பாத்திரத்தைப் புகுத்தி ஒரு சிரிப்பு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் போலிருக்கிறது. அதை என்னவோ பயங்கரமான தெய்வகுத்தமாகக் கருதி இம்மாதிரி பதாகை தயாரித்தவருக்கும் இப்போது ஆண்டாளுக்காகப் போராடுகிறவர்களுக்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ? இது மாதிரியெல்லாம் இந்து மதத்தை இழிவு செய்வதற்கு எதிராகப் போராட்டம்/பிரச்சனை செய்யத் தொடங்கினால் நூறு காரணங்கள் கண்டுபிடிக்கலாம். போராடிக் கொண்டே இருக்கலாம்.


வைரமுத்துவும், தினமணியும் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்ட பிறகும் இது போன்ற போராட்டங்கள் நடப்பது வெறும் விளம்பரத்துக்காகவும், மதவெறியை விதைக்கவும் என்பதே தெளிவு. இதுமாதிரியெல்லாம் இவர்கள் செய்வது பொய் என்றும் வரலாற்றுப் பிழை என்றும் நமக்குத் தெரியும். சராசரி மக்களிடம் அறியாமையால் எழும் கேள்விகளையே நியாயமாக மாற்றி அதை மதவெறியாக மாற்றுகிறார்  எச். ராசா.

இப்படி இவர்கள் பொய்யாக பரபரப்பைக் கிளப்பி விவாதம் நடந்து கொண்டிருக்கும் நாள்களில் மக்களுக்கு முட்டாள்தனமான வரலாற்றுப் புரட்டுக்களுடன் கூடிய இந்துக்களை கிருஸ்தவ மிஷனரிகள், திராவிட ஆட்சியாளர்கள், முஸ்லிம்கள், காங்கிரஸ், கம்யூனிஷ்டுகள் என அனைத்துத் தரப்பினரும் இந்து மதத்தை அழிக்கிறார்கள் என்கிற ரீதியில் வாட்சப் வதந்திகள் பரவும். இதில் உள்ள ஒரே நல்ல விடயம், இது போன்ற கூத்துக்களை இந்துக்களே பரபரப்புச் செய்தியைப் போல மறந்து விடுகிறார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்