ஆன்மிக அரசியல் மதவாதமே

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள் !

இந்தாண்டும் புதியன பலவும் கற்போம். மத, ஜாதி, இன பேதங்களை இடைவிடாது எதிர்ப்போம். நம்மையும் திருத்திக் கொள்வோம் நாளும்.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதாகக் கூறியிருக்கிறார். விரைவில் தனிக்கட்சி துவங்கப்போவதாக சொல்லியிருக்கிறார். இதுவரை எந்தக் கொள்கையும் இல்லை என்றாலும் ஆன்மிக அரசியலாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஏதோ ஒரு விழாவில் என் வழி பெரியார் வழி என்று சொன்னார். இப்போது ஆன்மிக அரசியல் என்கிறார். 

அறிக்கை விடுவதற்கும், போராட்டம் நடத்துவதற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதை நாம் செய்ய வேண்டாம் என்கிறார். அறிக்கை விடுவதும் போராட்டம் நடத்துவதும்தான் அரசியல் அதில்லாமல் என்ன அரசியல் செய்யப் போகிறார். இப்படி போராடுகிறவர்கள் வெறும் கூட்டமாகப் பார்ப்பது வெறும் தந்நலவாத நடுத்தரக் கண்ணோட்டம். போராடுகிறவர்கள் தனக்காக மட்டுமன்றி பிறருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். 

இந்த ஆன்மிக அரசியல் என்பது மதவாதமாக மாறுவதற்குத்தான் வழிவகுக்கும். எப்படி என்றால் ரஜினி தனது ஆன்மிக அரசியல் என்று சொன்னதை வரவேற்றவர்கள் யாரென்று பாருங்கள். பாஜகவின் எச். ராஜா, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி. இவர்களுக்கும் ஆன்மிகத்துக்கும் ஏதாவது தொடர்பிருக்கிறதா ? இவர்கள் இருவருமே மதவெறியர்கள். பாஜகவுக்காக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கு பெறும் நாராயணன் இதை மோடி அமித்ஷாவின் அதிரடி என்று தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். பாஜகவின் தலைவர் தமிழிசை 2019 தேர்தலில் ரஜினி பாஜகவை ஆதரிப்பார் என்கிறார்.


ரஜினி தன்னுடைய வழிகாட்டியாக மறைந்த துக்ளக் ஆசிரியர் சோ வைக் குறிப்பிடுகிறார். அவர் உயிரோடு இருந்தால் தனக்கு 10 யானைகளின் பலம் இருந்திருக்கும் என்று கூறுகிறார். சோ ராமசாமி என்பவர் தான் இறக்கும் தறுவாயில் கூட திமுக அழிய வேண்டும் என்கிறார். நான் திமுக இல்லை. ஆனால் திமுக வை எதிர்க்கும் சோ திமுக வை விட சிறந்த கட்சியைத்தான் ஆதரிக்க வேண்டும். ஆனால் என்ன செய்வார் திமுக வை விட எல்லா வகையிலும் பல மடங்கு மோசமான பாஜகவின் ஆதரவாளர். இவர் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ரஜினியை மூளைச் சளவை செய்து மோடியின் முன்னர் பாஜகவில் இணைய வைத்திருப்பார். 

ஆன்மிகம் வேறு மதம் வேறு என்று நம்பும் ஆன்மிக வாதிகளுக்கு, ரஜினியின் ஆன்மிகத்துக்கு ஏன் மதவாதிகள் ஆதரிக்கிறார்கள் என்று பதில் சொல்ல முடியுமா ? இங்கே இருப்பவர்கள் பெரும்பாலாலான ஆன்மிக வாதிகள் வெறும் மதவாதிகளே ! மதவெறியர்களே ! ஆன்மிகம் என்றால் ஹிந்துத்துவா, பாஜகவை ஆதரிப்பதே அவர்கள் மேற்கொள்ளும் ஆன்மிகம். 

மதவெறியை கக்கும் ஹெச். ராஜா பாராட்டுகிறார். குருமூர்த்தி 60 ஆண்டுகால திராவிடத்துக்கு மாற்றம் வரும் என்கிறார். ஆன்மிகம் என்று ரஜினி நம்பும் ஒன்று உண்மையில் நடைமுறைக்கு ஒத்து வராதது. அதாவது அரசியலில் ஆன்மிகம் என்பது இது போன்று மதவாதிகளுக்கே சாதகமாகும். உண்மையான ஆன்மிகவாதிகள் என்று சொல்லப்படுகிறவர்கள் மதத்தை கடந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படியிருக்க டிடிவி தினகரன், ஸ்டாலின் போன்றவர்கள் ஜனநாயக முறையில் ரஜினியை வரவேற்க, பாஜகவினர் ஆன்மிகம் என்றவுடன் பாராட்டுகின்றனர். 

மகாபாரதப் போரில் எதிரிகளைக் கொல்றதுக்கு அர்ஜுனன் தயங்க, எதிர்ல இருக்கறவங்க எல்லாம் என்னோட உறவினர்கள். அங்காளி பங்காளிகள், மாமன் மச்சான்கள். அவர்களை கொல்வதற்கு என்னோட மனம் அஞ்சுது அப்படின்னு தயங்குகிறான். இது சராசரி மனிதனுக்கோ அல்லது பக்தனுக்கோ வரும் சராசரியான உணர்ச்சி இது.

கிருஷ்ணர் என்ன சொல்கிறார் "அவர்களெல்லாம் வெறும் உடல்கள். அவர்களின் ஆன்மாவை எப்போதோ நான் கொன்று விட்டேன். நீ கொல்லப்போவது அவர்களின் ஆன்மாவை அல்ல வெறும் உடல்களைத்தான். நீ அவர்களுடன் போர் புரிந்து அவர்களைக் கொல்லத்தான் வேண்டும். அதுவே உன் கடமை இல்லையென்றால் கோழை என்று உலகம் உன்னை ஏசும் என்றெல்லாம் சொற்ச்சிலம்பம் ஆடி அவனைப் போர் புரியத் தூண்டுகிறார்.

சுருக்கமாக ஆன்மிகம் என்பது எந்த வித தவறுகளையும் புரிய இயலாத தத்துவப்பூர்வமாக இறைவனின் பெயரால், ஞானத்தின் பெயரால், கர்மாவின் பெயரால் நியாயப்படுத்தும். அதை தனிமனிதர்கள் தமது சொந்த வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு பொருத்திப் பார்த்து அதிலிருந்து பாடம் பெறவோ அல்லது சரியாக நடந்து கொள்ளவோ சரியாக இருக்கலாம். ஆனால் மக்களை வழிநடத்தும் அரசியலுக்கு ஒத்து வராது. அதுவும் இன்றைய நிலவரத்தில் அரசியலுக்கு வரும் கொள்கையில்லா அறிவிலி ஆன்மிகம் பேராபத்து. கொள்கையே தனக்கு இல்லை என்று வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் ரஜினியை எளிதாக மதவாதிகள் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஆன்மிகம் மதம் எல்லாம் தனி மனிதர்களுக்கு மட்டுமாக இருக்க வேண்டும். அரசியலுக்கான சித்தாந்தமாக இருக்க தகுதியில்லாதது.  ஆன்மிகம் மதமாக மாறி மதவெறி அரசியலாக மாறும். ஏற்கெனவே அப்படித்தான் இருக்கிறது. 

நானும் சில வருடங்கள் ஆன்மிக வாதியாக வாழ்ந்திருக்கிறேன். அந்த சில வருடங்கள் என்னை மிகவும் பண்படுத்தியதாகவும் உணர்கிறேன். ஆனால் அதை மற்றவருக்கு என்னால் பரிந்துரைக்க முடியாது. என்னைப் போல் மற்றவருக்கும் அது பலனளிக்கும் என்று என்னால் உறுதி கூற இயலாது. ஒவ்வொரு மனிதனையும் ஏதாவது ஒரு சிந்தாந்தமோ, மதமோ, தத்துவமோ, நூலோ கூட சிறந்த இயல்புடைய மனிதனாக மாற்றலாம். அது எல்லாருக்கும் பொருந்தாது. அரசியலுக்கு அது பொருந்தவே பொருந்தாது. எந்த சிந்தாந்தவாதியாக இருந்தாலும், மதவாதியாக இருந்தாலும் அடிப்படை அறவுணர்ச்சி, மனிதநேயம் இருக்க வேண்டும். மத, ஜாதிய, இன அடையாளத்தை, கலாச்சாரத்தைக் காப்பாற்றப் புறப்பட்ட கட்சிகளிடம் அதைக் காணவே முடியவில்லை. 

நாம் ஒரு மனிதனை அவனது ஜாதியைக் கொண்டு கீழ்மைப் படுத்துகிறோமே என்று ஒருவனை சிந்திக்க வைக்குமா ஆன்மிகம், உத்தரவாதமில்லை. ஆனால் அவனது கர்மா அது அதை அவன் செய்வது அவனது கடமை. இறைவன் எல்லாம் அறிந்தவன் எனவே அவனை சாக்கடை அள்ளவோ மலம் அள்ளவோ பணித்திருக்கிறான். அதில் ஒரு காரணகாரியம் இல்லாமலா இருக்கும் என்று நியாயப்படுத்தும் மனநிலையே ஆன்மிகம். கொலை செய்தவனையும் கொலைகாரனையும் இறைவனின் உருவங்களாக லீலைகளாக சமத்துவமாக பார்ப்பதே ஆன்மிகம்.

பௌத்த மதக் கோட்பாடுகளுக்கும், இலங்கையின் இனவாத அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் பௌத்த பிக்குகளுக்கு எத்தனை வேறுபாடுகள் இருக்கும் என்று பாருங்கள். புத்தரின் கோட்பாடுகளில் பற்றுக் கொண்டு பின்பற்றி வாழாமல் வெறுமனே புத்தரை கடவுளாக்கி பௌத்தத்தை மதமாக்கி வணங்கி வெறும் சடங்குகளில் மூழ்கினால் அது இனமாக, மதமாக, மொழியாக அடையாள அரசியலாகும். பின்பு அடையாள வெறியாகி வெறுப்புக்கும் கலவரத்துக்கும் இனப்படுகொலைக்கும் வழிவகுக்கும். ஏற்கெனவே அதையெல்லாம் நடத்தி முடித்து வெற்றிகரமாக ஆட்சியிலும் அமர்ந்திருக்கும் ஒரு கூட்டம் ரஜினியை அனுப்பி வெள்ளோட்டம் பார்க்கிறது. 
x
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. அருமையான கண்ணோட்டம்

    பதிலளிநீக்கு
  2. நடிகர் எம்ஜிஆர் அரசியலுக்கு வரும்போது தனது கட்சிக் கொள்கைகளில் காந்தியிசம், கம்யூனிசம்,கேபிடலிசம் என்று சொன்னாராம். அவரும் அவரால் கட்சிக்கு கொண்டுவரபட்ட நடிகை ஜெயலலிதாவும் தமிழ் மக்களிடம் பெரும் வெற்றி பெற்றார்கள். நடிகர் ரஜினிகாந்த்தும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி எதாவது உளறி கொட்டினால் தான் வெற்றி பெற முடியும் என்று நினைத்திருக்கலாம்.மதக் கோட்பாடுகளுக்குக்குட்பட்ட நாடு எமது அயல் நாடு-இஸ்லாமிய குடியரசு பாகிஸ்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் ஏன் மத அடிப்படைவாத சட்டங்களைக் கொண்டிருக்கும் நாட்டை எதிர்க்கிறோம் என்பதற்கு அருமையான உதாரணம் பாகிஸ்தான். அந்நாட்டின் சீரழிவுக்கு மதவாத அரசும் முக்கியக் காரணம்

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்