வாட்ஸ்-ஆப் அந்தரங்கக் காணொளிகள் - பகிர்தலும் குற்றமே !

இந்த வாட்ஸ் அப் என்பதை கட்செவிஅஞ்சல் என்று தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள். இந்த கட்செவி அஞ்சலோ மனிதனைப் படுத்தி எடுக்கிறது. குறுஞ்செய்திகளுக்குக் கட்டணம் செலுத்தி காய்ந்து போயிருந்த நமக்கு, திறன் பேசியுடன் வந்த சீதனமே இந்தக் கட்செவி அஞ்சல். இதில் நாம் குறுஞ்செய்திகள் மட்டுமன்றி, நெடுஞ்செய்திகள், புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பவும் இயலும். இது இணைய இணைப்பின் வழி இலவசமாகக் கிடைத்ததால் குறுஞ்செய்தி சேவை நமக்குத் 99 % தேவையில்லாமலே போய்விட்டது. இது ஒரு மக்கள் ஊடகமாக அற்புதமாகப் பயன்படுத்துகின்றனர். சின்னச் சின்ன சாதனைகள், அட போட வைக்கும் கவனிப்பாரற்ற மனிதர்களின் சாகசங்கள் என காணொளிகள் களைகட்டுகின்றன. ஊடகங்களில் வராத செய்திகள் கூட இதில் மிகவேகமாகச் சென்று சேர்கிறது. ஆனால் என்ன ஒன்று திறன்பேசி+வாட்ஸ் அப் + இணைய இணைப்பு இருக்க வேண்டும்.

நம் மனிதர்கள் எப்படிப் பயன்படுத்துவார்கள் என்பதைப் பார்க்கிறோமல்லவா ?  இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக ஆளாளுக்கு ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு கண்டதையும் பகிர்கின்றனர். இதில் நன்மை இல்லாமலும் இல்லை. ஆனால் ஒரு செய்தியின் உண்மைத்தன்மையைப்பற்றி எந்த வித முன்னெச்சரிக்கையும் பொறுப்புமின்றி வெளியிடுகின்றனர். சரி இலவசமாகக் கிடைப்பதால் அதை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமல்லவா ? அதை யார் கேட்கப்போகின்றார்  ? முன்பு ஃபேஸ்புக் பரபரப்பாக இருந்த போது ஒரு செய்தி பொய் எனில் அதை ஒருவர் சொன்னால் எல்லார்க்கும் தெரியும் இன்றோ மூடிய கதவுக்குள் இருக்கும் கட்செவி அஞ்சலில்(Whatsapp) கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று அலைகின்றனர். நான் இதில் நம் மக்கள் எவ்விதம் சீரழிக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன்.

இதில் கொடுமையின் உச்சம் என்னவென்றால் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் பயங்கரவாதிகளின் காணொளிகள் கூட மிக எளிதாக நம்மை வந்தடைகிறது. தலையை வெட்டுவது, அடித்துத் துன்புறுத்துவது, கையை வெட்டுவது, சுட்டுக் கொல்வது என்ற மனித இனத்தின் இழிவை அப்படியே காட்சியாக்கிக் குழந்தைகள் வரை அதை சாதரணமாகக் கொண்டு எவ்வித உணர்ச்சியுமின்றி வந்து நம்மிடம் காட்டுகின்றனர். அவைகளைப் பார்த்தால் நமக்கு ஈரல் குலை நடுங்குகிறது. ஏனெனில் குழந்தைகள்தான் திறன்பேசியை அதிகம் வைத்துப் பயன்படுத்தி வருகின்றனர். அதிலுள்ள டெம்பிள்ரன், சப்வேசர்ஃப் வகை விளையாட்டுக்களில்தான் அவர்கள் திளைத்துக் கிடக்கின்றனர்.

அடுத்து நான் முக்கியக் குற்றவாளியாகக் குறிப்பிட விரும்புவது ஆண்களை, குறிப்பாக இளைஞர்களை. இவர்கள் எவ்வகைக் காணொளிகளை எவ்விதமான குற்ற உணர்ச்சியோ அறவுணர்ச்சியோ இன்றிப் பகிர்ந்து கொள்கின்றனர் என்று நான் சொல்லாமலேயே புரிந்திருக்கும். பெண்களின் குளியளறையிலும், கழிவறையிலும் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், காணொளிகள் கணக்கற்ற வகையில் பரவி வருகின்றன. இதை எல்லா வயது ஆண்களும் ரசித்தும், கேட்டு வாங்கியும், பரப்பியும் வருகின்றனர்.

வாட்ஸ் அப்பில் பெண்கள் பற்றி அவதூறு பரப்புபவர்களுக்கு 7 ஆண்டு சிறை: போலீஸ் எச்சரிக்கை என்று அறிவிப்பு வந்தாலும் அதனால் இது வரை தண்டிக்கப் பட்டவர் யாருமில்லை. ஆனால் பரவும் காணொளிகளுக்கு மட்டும் குறைச்சலில்லை.  இது எப்படி நிற்கும். பரப்புகிறவர் திருந்தினாலொழிய நிற்கப் போவதில்லை. அந்தப் பெண்களின் மனநிலை குறித்து கொஞ்சமாவது மனசாட்சியைக் கொண்டு சிந்திக்க வேண்டும். சிந்திப்பார்களா ?

ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வன்முறை செய்து கொன்று, தூக்கு தண்டனைக்காகக் காத்திருப்பவனே அந்தப் பெண் மீதுதான் குற்றம் சாட்டுகிறான்(டெல்லி பாலியல் குற்றவாளி முகேஷ் சிங்). ஆக பாலியல் வன்முறை செய்தவனே, கொன்றவனே அதைக் குற்றமாகக் கருதாமல், அப்பெண்ணையே குற்றவாளி ஆக்கும் சமூகத்தில் இது போன்ற நிர்வாணப் படங்களை பரப்பி இன்பம் காண்பவர்கள் ஏற்றுக் கொண்டு நிறுத்தவா போகிறார்கள். ஊர் தவறாமல் சாராயக்கடை இருக்கும்போது கோக் குடிக்காதே உடலுக்குத் தீங்கு என்றால் எள்ளி நகையாடத்தானே செய்வார்கள்.

அவர்கள் ஏன் தங்களைத்தானே குளியலறையில் வைத்து தற்படம் () கைப்படம் (selfie) எடுத்துக் கொள்ள வேண்டும் ? அவர்களாகத்தான் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பியிருப்பார்கள். எனவே இது அவர்களின் தவறு.

இவர்கள் கள்ளக்காதல் செய்யும் எடுத்ததைப் பரப்பினால் என்ன வந்துவிடும், அவர்களே தவறு செய்தவர்கள்தானே அவர்கள் மீது என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது.

இது எல்லார்க்குமே தெரியும். எவனோ ஒருவன் எனக்கு அனுப்பினான் நானும் அனுப்புகிறேன். மற்றதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலையில்லை. நான் அனுப்பாததால் இது பரவாமல் இருக்கப் போகிறதா ?

அவர்கள் ஏன் படுக்கையறையில் இருக்கும் போது உடலுறவு கொள்வதைப் பதிவு செய்ய வேண்டும் இப்போது வருந்த வேண்டும்.

அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் அனுப்புவேன் உனக்கென்ன ?

இப்படியெல்லாம் பதில் வரும். இவையனைத்தையும் ஒரே கேள்வியில் மடக்கி விடலாம். அந்தக் குறிப்பிட்ட வீடியோவிலோ, ஆடியோவிலோ இருக்கும் பெண் உங்களது வீட்டுப் பெண்ணாகவோ, உங்களுக்கு வேண்டிய பெண்ணாகவோ இருந்து விட்டால் என்ன செய்வார்கள். "என்ன" செய்ய வேண்டுமோ அதைத்தானே செய்வார்கள். நம் வீட்டுப் பெண்கள் என்றால் ஒரு நியாயம் தெரியாத பெண் என்றால் ஒரு நியாயமா ? என்றுதான் கேட்கிறேன். தன் வீட்டுப் பெண் பத்தினியாக இருக்க வேண்டும். அடுத்த வீட்டுப் பெண் பரத்தையாக இருக்க வேண்டும் என்று எண்ணும் ஆண்கள்தான் திருந்த வேண்டும். இது தவறு என்று ஒவ்வொருவரும் உணரவேண்டும். மனசாட்சியுள்ள ஒவ்வொருவருக்கும் இது நிச்சயம் புரியும்.

சரி அவர்கள் வாதத்தின் படி வைத்துக் கொண்டால், அந்தப் பெண்ணோ ஆணோ குற்றம் செய்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் குடும்பம் என்று ஒன்று இருக்குமல்லவா ? அவர்கள் எத்தகைய சங்கடத்தை எதிர் கொள்வார்கள் என்றாவது யோசிக்க வேண்டாமா ? நமது குடும்ப உறுப்பினர் செய்யும் தவறுக்கு நாம் பொறுப்பாக முடியாது, அவரைக் கட்டுப் படுத்தவும் முடியாது. ஆனால் அந்தத் தவறுக்கு நாமும் சேர்ந்தல்லவா பாதிக்கப் படுவோம் ?

இதற்கு முன்பு இணைய வெளியெங்கும் பல்வேறு தளங்களில் இது போன்ற வீடியோக்கள் வெளிவந்தன. சைபர் க்ரைமும் இதற்கு ஒரு தடை போட முடியாமல் திணறின. இன்றும் திணறிக் கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் இங்கிருந்து எடுக்கப்படும் வீடியோக்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்கும் அயோக்கிய நாதாரிகள் மூலமாக இணையத்தில் ஏற்றப்பட்டு வெளியாகின. இதனால் அவர்களைப் பிடிப்பது இயலாத செயலானது. இன்றோ வாட்ஸ் - அப் மூலமாக இது பல மடங்கு அதிகமாகி விட்டது.

இதை பெண்களின் தவறாக/திமிராக சித்தரிப்பதே தவறானது. ஒருவருக்குத் தெரியாமலே அவரது மடிக்கணினி கேமராவின் மூலமாகவே இதை எடுக்கவும் முடியும். யாருடைய வீட்டின் குளியலறையிலும், படுக்கையறையிலும் ஸ்பை கேமரா வைத்து படம் பிடிக்க முடியும். வீட்டு வேலை செய்பவர், வயரிங் வேலை, ப்ளம்பர், கேபிள் ஆப்ரேட்டர் என்றெல்லாம் சொல்லி வீட்டுக்குள் நுழையும் தெருப்பொறுக்கிப் பன்னாடைகள் இந்தக் கேமராவை ஒளித்து வைத்து எடுக்கின்றனர். எடுக்கப்பட்ட வீடியோவை வைத்து சம்பந்தப்பட்ட பெண்களிடம் வேண்டியவற்றை கறந்து விட்டுப் பின்னர் வீடியோக்களையும் இணையத்தில் ஏற்றி விடுகின்றனர்.

தன்னையே நிர்வாணமாகவோ அரை நிர்வாணமாகவோ படம் எடுத்துக் கொள்பவர்கள் எல்லாரிடமும் அனுப்புவதற்காக எடுப்பதில்லை. திரைப்படம், விளம்பரங்களில் வரும் பெண்களைப் போலவே தங்களை ஒப்பனை, பாவனை செய்து கொள்பவர்கள் தம்மீது கொண்ட குறுகுறுப்பு உணர்வினால் புகைப்படம் எடுப்பர், (அவரவர் படுக்கையறையில், என்னென்ன செய்கிறார்கள் என்று அவரவர்க்குத் தெரியுமல்லவா இதில் என்ன வேடிக்கை இருக்கிறது)

இன்னும் சிலர் விளையாட்டுத்தனமாக ஆபாசமாகப் படம் பிடித்தது எனப் பல வகை வீடியோக்கள் உலாவருகின்றன. பர்தாவுடன் இருக்கும் பெண்கள் கூட இந்த வீடியோக்களில் சிக்கியுள்ளனர்.

உங்கள் வீட்டின் அடுத்த தெருவில் அப்படி ஒரு பெண் இருப்பதே உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அவள் வெளியேகூட வந்திருக்க மாட்டாள். ஆனால் அவளுடைய பெயரும் அலைபேசி எண்ணும் அடுத்த ஊரின் பொதுக்கழிவறைச் சுவற்றில் எழுதப்பட்டிருக்கும் "மேட்டர்" என்ற அடைமொழியுடன். அவள் நண்பனுடன் ஏதாவது பிரச்சனை வந்து விட்டால், அவனும் ஒரு மாதிரியான ஆளாக இருந்தும் விட்டால் மேலே நான் சொன்னபடிதான் நடக்கும்.

அலைபேசியில் பெண்களை வேண்டுமென்றே உடலுறவு, கைமைதுனம் குறித்துப் பேசவைத்து அதைப் பதிவு செய்து எல்லோர்க்கும் பரப்பி அதை ஒரு வைரல்-ஆக மாற்றி பரபரப்பூட்டி மகிழ்கின்றனர். இவர்களை நம்பி தமது அந்தரங்கம், உணர்வுகள், படுக்கையைப் பகிர்ந்து கொள்பவர்களை ஏமாற்றி அவர்கள் மானத்தை வாங்குகின்றனர். ஆனால் பெண்கள்தான் காசுக்காக ஏமாற்றுகிறார்கள் என்று  நடிகர்களும் வசனம் பேசுகிறார்கள். எல்லோரும் அதை வரவேற்று சிரிக்கிறார்கள்.

அது போன்ற வீடியோக்கள், புகைப்படங்கள் எடுத்தவர்கள் அதை அழித்து விட்டாலும், அந்த அலைபேசியோ, மெமரி கார்டோ இதற்கென்றே அலையும் நபர்களின் கையில் கிடைத்தால் ரெட்ரைவல், ரிகவரி மென்பொருட்களைப் பயன்படுத்தி, அந்த வீடியோக்களையும், புகைப்படங்களையும் மீட்டு எடுத்து அவைகளைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

சராசரிப் பெண்களின் நிலையே இப்படியென்றால் நடிகைகளைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். மாதம் ஒரு நடிகையின் நிர்வாண வீடியோக்கள் வருகின்றன. அதை ஊடகங்களே தலைப்பிட்டுப் பரப்பி அவர்களின் மானத்தை வாங்குகின்றன. நடிகை ஆபாசமாக நடிக்கிறாள் என்று அவளுடைய படம், வீடியோ க்ளிப்பிங்க்ஸ் களைப் பார்த்துப்,  பகிர்ந்து பழகிய ஆட்கள், நடிகையாக இல்லாத சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் எந்தவித குற்றவுணர்ச்சியும் இன்றிப் பரப்பியும், பேசியும் மகிழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு நிர்வாண உடல் மட்டும் போதுமாக இருக்கிறது. யார் எக்கேடு கெட்டால் என்ன என்று இருக்கின்றனர். ஏதாவது ஒரு நாள் அவரவர் வீட்டுப் பெண்கள் இதில் மாட்டினால் தெரியும். ஆனால் அப்போது நாம் வருந்துவதைப் போல மற்றவர்கள் வருந்தாமல் வீடியோ பகிர்ந்து கொள்ளப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். அப்போது பகிராதே எனது குடும்பத்தைப் பாதிக்கிறது என்று சொல்லும் தகுதியையே இழந்திருப்பார்கள். 

இதனால் கொலை, தற்கொலைகள், பணம் பறிப்புகள் எனப் பல நிகழ்வுகளை நாம் செய்தியாகப் படிக்கிறோம். ஆனால் இது போன்ற வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் வந்தால் பரப்புவது தவறு என்றோ நாமும் அச்செயலுக்குத் துணை புரிகிறோம் என்றோ யாரும் உணர்வதில்லை. என்னுடைய வேண்டுகோளெல்லாம் ஒன்றுதான். உங்களுக்கு வரும் எவ்விதமான செய்தியோ, வீடியோ, ஆடியோ- வாக இருந்த போதிலும் அதை மற்றவருக்குப் பகிராதீர்கள். அதை உங்களுக்கு அனுப்பும் நபருக்கும் புரிய வைக்க முயற்சி செய்யுங்கள். நம்மால் பாலியல் வன்முறை நடப்பதைத் தடுக்க முடியாது, ஆனால் நாம் பாலியல் வன்முறை நடபெறுவதற்குத் துணை புரியாமல் இருக்க முடியும். அதில் பங்கெடுக்காமல் இருக்க முடியும். இது அவரவர் அறவுணர்ச்சி சார்ந்தது. அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று சாக்கு சொல்லிவிட்டு நீங்களும் தவறு செய்ய முடியாது. சாராயக்கடை எல்லா ஊரிலும் இருக்கிறது என்பதற்காக எல்லாரும் குடிப்பதில்லையே, வைராக்கியத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள். ஊரெல்லாம் கறிக்கடை இருக்கிறது என்பதற்காக சைவ உணவுக்காரர்கள் போய் வாங்கிவிடுகிறார்களா ?


Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. //ஒரு பெண்ணை கொடூரமாக பாலியல் வன்முறை செய்து கொன்று தூக்கு தண்டனைக்காகக் காத்திருப்பவனே அந்தப் பெண் மீதுதான் குற்றம் சாட்டுகிறான் //

    கொடுமையான கொடுமை. என்னுடன் வேலை பார்க்கும் வெளிநாட்டு பெண்கள் பாலியல் வன்முறை செய்தவனிடம் பேட்டி எடுத்த வெளியிட்ட பெண் bbc செய்தியாளரை கடுமையா கண்டித்தார்கள்.நான் அதன் நியாயம் என்பதை ஏற்று கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேகநரி அந்த bbc நிருபரைத் திட்டுவத் வீண் வேலை. அவர் அப்படிச்செய்ததால்தான் அவனது மனநிலையை அறியமுடிந்தது. அது சராசரி இந்தியனின் மனநிலையிலிருந்து அதிகம் வேறுபடவில்லை என்பதே கவலையான செய்தி

      நீக்கு
  2. நண்பர்கள் அனைவரும் பகிர்கிறார்கள் வாட்ஸ் அப் இதனை தடுக்க Block / report போன்ற Option-களை வைக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். இல்லையென்றால் சிறிதும் தடங்கலின்றிப் பரவிக் கொண்டேயிருக்கின்றன

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்