எழவூடு

ஜாதி என்பது எப்படி இயங்குகிறது. ஒரே ஜாதியில்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது முதல் விதி. பிறகு, சில ஜாதிகளுடன் குறிப்பிட்ட எல்லை வரை பழகலாம், இயங்கலாம், உண்ணலாம் உறங்கலாம் என்று நீளும். ஜாதி பல வகையில் வெளிப்படும். அதில் ஒன்றுதான் இறப்பு வீட்டில் தாழ்த்தப் பட்டவர்கள் துக்கம் கேட்கும் விதம்.

எழவு வீடு என்றால், வயதாகி இறந்தவர் என்றால் பெரிய அளவில் துக்கம் வழிந்தோடாது. வீட்டிற்குள் மட்டும் பெண்களின் அழுகைச் சத்தம் கேட்கும். ஆண்கள் யாரும் வரும் உறவினர்களிடம் கட்டிப் பிடித்து அழுவதில்லை. வெளியே உட்கார்ந்து கொண்டு அன்றைய சூடான அரசியல் விவாதங்களையும், வேறு ஏதாவதும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

துக்கம் விசாரிக்க யாரேனும் வந்தால், இறந்தவரின் மகனோ அல்லது அவரது உடன் பிறந்தவரின் மகனோ, தம்பியோ முன்னால் அமர்ந்து வருபவருக்கு வணக்கம் சொல்லி விசாரிப்பார்கள். வணக்கம் சொல்வது எப்படியென்றால், இழவு கேட்க வருபவர், இழவு வீட்டாரின் கையைத் தொட்டு வணங்கிக் கொள்வார்கள். அவர் கையைத் தொடும்போது இவர் (இறப்பு வீட்டுக்காரர்) கையை ஏந்தியவாறு வைப்பார் (துக்கம் கேட்க) வருபவர் அதைத் தொட்டுக் கும்பிடுவார்கள். பின்பு இருவரும் அருகருகே அமர்ந்து என்ன ஏது எப்படி நடந்தது, இறந்தவர் எத்தனை நாட்களாகப் படுக்கையில் இருந்தார், எந்தெந்த மருத்துவமனைக்குச் சென்றீர்கள், எத்தனை செலவாச்சு என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். பின்பு பேச்சு அவரவர்களின் சொந்தப் பிரச்சனை குறித்தோ, அல்லது தொழில் குறித்தோ திரும்பி விடும். முதல் நாள் இழவு வீட்டில் இருக்கும் துக்கம் இரண்டாவது நாள் இருக்காது. வெறுமனே ஒரு திருமண வரவேற்பு முடிந்த பின்னர் இருப்பது போல்தான் இருக்கும்.

இப்படி ஒரு நாளில்தான் நானும் சென்றேன். கெக்கே பிக்கே என்று அரட்டையடித்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தார்கள். இறந்தவரின் தம்பிதான் துக்கம் கேட்க வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் வந்தார். வந்தவர் அழுகையுடன் இறந்தவரின் தம்பியின் காலில் விழுந்து அழுதார்.

"அந்த மகராசன் எங்களுக்கு எத்தனை பண்ணினார், கேக்கறப்பெல்லாம் எத்தனை தடவை எங்களுக்குக் காசு குடுத்தார்"  என்றெல்லாம் என்று என்னென்னவோ சொல்லி, இழுத்து இழுத்து  அழுதார். (காலில் விழுந்தவாறேதான்). அதற்கு அந்த மனிதரோ,  "சரி சரி விடு விடு, வயசாயிடுச்சு போயிட்டார். எல்லாரும் ஒரு நாளு சாகறதுதானே. எல்லாரும் ஒரு நாள் போய்த்தானே ஆகணும்' என்றார். பின்பு அதே போல் இன்னும் ஒரு மொக்கையான வசனத்தைப் பேச அதையும் நகைச்சுவையென்று ஆதரித்து இரண்டொருவர் சிரித்து வைத்தனர். பின்னர் அந்தப் பெண் போய் அந்த வீட்டின் மாட்டுத் தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கத் தொடங்கினார்.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா ? அந்த வீடு ஒரு மேல்ஜாதிக்கார (கொங்கு வேளாளக்கவுண்டர்கள்) வீடு. அந்தப் பெண் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர். இப்படி இழவு வீட்டிலும் அந்தப் பெண் வந்து செத்துப் போனவனின் சொந்தக்காரன் காலில் விழுந்துதான் "துக்கம் கேட்க" வேண்டியிருக்கிறது.  என்ன கேவலம். இப்படி துக்கம் கேட்க வருவோரே காலில் விழுந்துதான் எழவேண்டும் என்பது என்ன வகை உணர்வு ? சடங்கு சம்பிரதாயம் ? ஆண்ட பரம்பரைக் கனவில் மிதப்பவர்கள் இது போன்ற இழிசெயல்களை எப்படி நியாயப்படுத்துகிறார்கள். இந்த மேல் ஜாதி உணர்வு என்பது ? இப்படி அடுத்த மனிதனை பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும் தள்ளி வைத்து, அவனை அவமானப்படுத்து உணர்வே ஜாதி. 

நன்றி - புகைப்படம்  ஃபேஸ்புக்கில் சங்ககிரி ராஜ்குமார் (திரைப்பட இயக்குநர்) பகிர்ந்தது. இந்தப்படத்திற்கும் நான் எழுதியிருக்கும் கருத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் ஜாதி என்பது எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஏனென்றால் பலரும் ஜாதியை ஏன் எதிர்க்கிறார்கள், அது வெறும் அடையாளம்தானே இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும் நினைக்கக்கூடும். ஆனால் அது எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இந்தப் படமே உதாரணம். கிராமங்களில் மேல்ஜாதிக்காரர்களின் தேநீர் கடையோ வீடோ, இன்றும் இப்படித்தான் தாழ்த்தப்பட்டவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் இப்படித்தான் இரு கைகளாலும் வாயில் வைத்துக் குடிக்க வேண்டும். மேல்ஜாதிக்காரர்களின் பாத்திரத்தில் குடிக்கக் கூடாது. இல்லையெனில் அவர்களுக்கென்று கொட்டாங்குச்சியையோ, தனிக் குவளையோ தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். யூஸ் அன்ட் த்ரோ காகிதக் குவளைகள் வந்ததால் இது அதிகமாக வெளியே தெரியாமல் நடக்கிறது. எங்கள் ஜாதிக்காரர்கள் இப்படி ஒரு மனிதனை நடத்த மாட்டார்கள் என்று எந்த ஆண்ட பரம்பரை ஜாதி வெறியனாவது சொல்ல முடியுமா ? இல்லை இது எங்கள் ஊரில் இல்லை என்று மறுக்கத்தான் முடியுமா ?
இதற்கெல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது. இந்த இழிபிறவிகளின் வக்கிர உணர்வே ஆண்ட பரம்பரைப் பெருமையெல்லாம். இல்லாதப் பட்டவர்களை அதிகாரம் செய்து திரியும் இவர்கள் தங்களை மேல் ஜாதியினர் என்று பீற்றீக் கொள்கிறார்கள். எல்லா மேல் ஜாதிகளின் உணர்வும் இப்படித்தான் இருக்கிறது. இந்த "உணர்வு"க்குப் பேரும் "உணர்வுதான்". இதையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்க்கும் என்னையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். ஜாதி என்பது எந்தக் கோணத்திலும் மன்னிக்க இயலாதது. இவர்களுடன்தான் நானும் வாழ்ந்து இறக்கவேண்டும் என்பது எனக்கொரு தண்டனை.

ஆனால் எந்தக் கவுண்டரும் (மற்றெல்லா மேல் ஜாதிக்காரர்களும்தான்), கீழ்ஜாதிக்காரன் விவசாய வேலை செய்து விளைந்த காய்கறிகளை நான் உண்ண மாட்டேன், அவன் தொட்ட பணத்தை
தொட மாட்டேன் என்று சொல்ல மாட்டான். தனக்கு சாத்தியமான எல்லா விதங்களிலும் முற்போக்காக நடப்பான். ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த மனிதனை மட்டும் மனிதனாகவே மதிக்க மாட்டான்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

 1. ஏனென்றால் பலரும் ஜாதியை ஏன் எதிர்க்கிறார்கள், அது வெறும் அடையாளம்தானே இருந்துவிட்டுப் போகட்டுமே என்றும் நினைக்கக்கூடும். ஆனால் அது எந்த வகையிலும் ஏற்கத் தக்கதல்ல என்பதற்கு இந்தப் படமே உதாரணம். கிராமங்களில் மேல்ஜாதிக்காரர்களின் தேநீர் கடையோ வீடோ, இன்றும் இப்படித்தான் தாழ்த்தப்பட்டவர்கள், தண்ணீர் குடிக்க வேண்டுமெனில் இப்படித்தான் இரு கைகளாலும் வாயில் வைத்துக் குடிக்க வேண்டும். மேல்ஜாதிக்காரர்களின் பாத்திரத்தில் குடிக்கக் கூடாது. இல்லையெனில் அவர்களுக்கென்று கொட்டாங்குச்சியையோ, தனிக் குவளையோ தனியாக எடுத்து வைத்திருப்பார்கள். யூஸ் அன்ட் த்ரோ காகிதக் குவளைகள் வந்ததால் இது அதிகமாக வெளியே தெரியாமல் நடக்கிறது. எங்கள் ஜாதிக்காரர்கள் இப்படி ஒரு மனிதனை நடத்த மாட்டார்கள் என்று எந்த ஆண்ட பரம்பரை ஜாதி வெறியனாவது சொல்ல முடியுமா ? இல்லை இது எங்கள் ஊரில் இல்லை என்று மறுக்கத்தான் முடியுமா ?/ மிகவும் உண்மையான கருத்து! கேவலம்....நாம் இன்னும் எந்த யுகத்தில் இருக்கின்றோம் என்று தோன்றுகின்றது.

  இறுதியில் சொல்லி உள்ளீர்கள் பாருங்கள் நச்! நம் நாடுமுன்னேறாததற்கு காரணமும் இதுவே!

  அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி துளசிதரன்.

   சொன்னது கொஞ்சம் சொல்லாதது நிறைய உள்ளன

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்