ஏதாவது ஒரு மலையாளப்படம் தமிழில் மறுஉருவாக்கம் (remak) செய்யப்படுகிறது என்று கேள்விப்பட்டால், முடிந்தவரை அதை உடனே பார்த்துவிடுவேன். இல்லையெனில் தமிழில் பார்க்க நேரிட்டால் மலையாளப் படத்தின் உயிர்ப்பு நமக்குக் கிடைக்காது என்ற எண்ணம்தான். சந்திரமுகி படம் பார்த்த மலையாளிகளுக்குத் தெரியும். போக்கிரி பார்த்த தெலுங்கர்களுக்குத் தெரியும். ஓரளவுக்கு மலையாளமும் தெரியும் என்பதால் 90% வசனங்களும் புரிந்து விடும். இதுதான் (How old are you) தமிழில் 36 வயதினிலே என்று வரப்போகிறது என்று அறிந்தவுடன் முன்பே அதைப்பார்த்து விடவேண்டும் என்று பார்த்து விட்டேன்.
இந்தப் படமும் இங்க்லிஷ் விங்கிலிஷ் போன்றதொரு பெண்ணைச் சுற்றி நடக்கும் கதைதான். பெண்களின் பார்வையில் எடுக்கப்பட்ட படமும் ஆகும். இங்க்லிஷ் விங்க்லிஷ் படத்தில் ஒரு வேலைக்குப் போகாத இல்லத்தரசி என்றால் இதில் வேலைக்குப் போகும் இல்லத்தரசி. அதே புரிந்து கொள்ளாத கணவன், மறுக்கப்பட்ட வாய்ப்புகள், தொடரும் கணவன், குழந்தைகளின் கிண்டல்கள் இறுதியில் அவளது திறமையால் அனைவரது முன்னிலையில் உயர்ந்து நிற்கிறாள் என்று முடியும் கதை.
பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆண்களுக்கும் பிடிக்கும், படத்தின் சில இடங்களில் தங்களையே அந்த இடத்தில் வைத்துப் பார்ப்பார்கள். எனக்கு அப்படித்தான் இருந்தது. ஆண்கள் தங்கள் வசதிக்காக ஆண்/கணவன் என்ற காரணத்தினால் பெண்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள், அவளது ஆசைகள் எளிதாக நிராகரித்து அவளை முடக்குகிறார்கள் என்று வெவ்வேறு வழிகளில் யோசித்தால் புரிந்து கொள்ளலாம்.
படத்தின் ஆரம்பக் காட்சி ஒரு நேர்காணலில் தொடங்குகிறது. அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த INIRISH - நிறுவனத்தின் அதிகாரி கேட்கும் முதல்வசனத்துடன் ஆரம்பிக்கிறது. அந்தக் கேள்விதான் "How old are you ?"
அதன் பின்புதான் நாயகியின் (மஞ்சு வாரியர்) முகம் காட்டப்படுகிறது. 36 என்று பதிலளிக்கிறாள். தமது நிறுவனத்தில் வேலை செய்ய வயது வரம்பு 35 தான் என்று அவள் நிராகரிக்கப்படுகிறாள். தான் ஒரு வருடம் மட்டுமே அதிகமான வயதுடையவள் என்று வாதிடுகிறாள். கணவன் மட்டுமே வேலைக்குச் சென்று மூன்று பேர் கொண்ட தனது குடும்பத்தால் சமாளிக்க முடியாது என்றும் கூறுகிறாள். அவளது நிலை தனக்குப் புரிந்தாலும் தன்னால் ஏதும் செய்ய முடியாது என்று அந்த அதிகாரி கைவிரித்து விடுகிறார்.
இதற்கிடையில் காவல்துறை நிருபாமாவின் செல்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கிறது. அவள் குறித்த விவரங்களை ரகசியமாக அவள் வேலை செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் வரை சென்று சேகரிக்கிறது.
அவளது கணவன் ராஜீவ் ஒரு சிறுவனின் மீது தனது வண்டியில் மோதி விடுகிறான். அதனால் அவன் மீது வழக்கு போட்டு விடுகிறார்கள். அவன் இரு ஆண்டுகள் தேடிப் பிடித்த வேலைக்காக அயர்லாந்து செல்ல வேண்டும். எனவே ராஜீவ் இரண்டு நாட்களில் தனது வசிப்பிடஉரிமம்(Visa) தொடர்பான நேர்காணலுக்காக சென்னை செல்ல வேண்டியிருப்பதால், அவ்வழக்கு விசாரணையிலிருந்து எப்படியாவது தப்பிவிட வேண்டுமென்று தனக்குத் தெரிந்த காவலரிடம் கூறுகிறான். ராஜீவின் மனைவி நிருபமா (மஞ்சு வாரியர்) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கிறாளா என்று கேட்கிறார் காவலரான நண்பர்.
பின்பு ராஜீவ் தனது மனைவியிடம் வந்து நடந்த விபத்து குறித்தும், அயர்லாந்து நேர்காணல் குறித்தும் கூறுகிறான். பணம் கட்டினால் போதும் என்றும் கூறுகிறான். நிருபமா - நான்தான் வண்டியை ஓட்டினேன் என்று கூறிவிடலாம என்று கேட்கிறாள். அதற்காகவே காத்திருந்த ராஜீவ் அதற்கு சம்மதிக்கிறான். அதை தனது காவலர் நண்பரிடம் சொல்கிறான். பின்பு இருவரும் அடுத்த நாள் போக்குவரத்துக் காவல் அலுவலகம் செல்கின்றனர்.
அங்கே போக்குவரத்துக் காவலரிடம் நிருபமாவின் ஓட்டுநர் உரிமம் கலாவதியானது தெரியவருகிறது. தண்டனை நிச்சயம் என்று அச்சுறுத்துகிறார் அந்த அதிகாரி. இதனால் ராஜீவுக்கும் நிருபமாவுக்கும் இடையில் விவாதம் நடக்கிறது இல்லம் திரும்புகையில். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது இடையிடையே கைபேசி சிணுங்கிக் கொண்டே இருக்கிறது. விவாதத்தின்போது சிணுங்கிக் கொண்டே இருப்பதால் அதை எடுத்துத் தொலை என்று எரிச்சலாகிக் கத்துகிறான் ராஜீவ். அந்த அழைப்பில் வந்த தகவல் மற்ற நாள் காலை 10 மணிக்கு காவல்துறை ஆணயர் அலுவலத்தில் ஆஜராக வேண்டும் என்று கட்டளை வந்திருப்பதாகக் கூறுகிறாள்.
அங்கே அவளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன ? அதைப் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதுவே அதன் மதிப்பாகும். நான் இங்கேயே எழுதி விட்டால் அதன் #களிநயம்(interst) குன்றி விடும். அதற்குப் பிறகு நடக்கும் காட்சிகள் இனிமையோ இனிமை. தொடர் கேலிகளாலும், சலிப்பூட்டும் வாழ்க்கையிலும் அல்லற்படும் ஒரு பெண் எப்படி தன்னைத் தானே உயரத்தில் வைக்கிறாள். ஒரு விழிப்புணர்வையும் புத்துணர்வையும் ஊட்டுகிறாள் என்பதே படம். இதன் இயக்குநர் ஒரு ஆண் என்பது ஒரு இனிய முரண்நகை.
படத்தின் சிறப்பம்சங்களாக,
நிருபாவின் மெலிய நகைச்சுவையூட்டும் நடத்தைகள், புறக்கணிப்புகள் பின்பு அதை எதிர்கொள்ளும் விதம் குறிப்பாக ஃபேஸ்புக்கில் தனது பெயரில் பரவியிருக்கும் நகைச்சுவைத் துணுக்குகளுக்கு நிருபமா பதிலளிப்பது
நிருபமாவின் வளரிளம் பருவத்து மகளுடனான உரையாடல்களில் எப்போதும் எடுத்தெரிந்து பேசுவதும், எள்ளி நகையாடுவதும், ஆத்திரமடைந்து பேசாமலிருக்கும்போதும் காணும் நிருபமாதான் நாம் நித்தமும் எடுபிடி வேலைக்குப் பயன்படுத்தி அவர்களை மட்டம் தட்டும் நம்முடைய அம்மாக்கள்.
கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே கொஞ்சம் வயதானவர்களை பெருசு என்றும் அங்கிள் ஆன்ட்டி என்றும் கிண்டலடிக்கும் கீழ்த்தரமான ஒரு செயல்பாடு எல்லாவிடங்களிலும் நிரவியிருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் எனில் 20 வயது கல்லூரிமாணவன், 25 வயதுப் பட்டதாரியை பெருசு என்பான், 25 வயதில் வேலை செய்கிறவன், 30 வயதான மூத்தவனை அங்கிள் என்பான். 30 வயதுக்காரன் 35 வயதான் மேலாளரை கெழவன்/கெழவி என்று பழிப்பார்களல்லவா ? அதையும் இந்தப் படத்தில் சிறிய அளவில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
40 வயதிலும் வாழ்க்கை இருக்கிறது. துவண்டு போகாமல் சாதிக்க முடியும் என்று ஊக்கப்படுத்துகிறார்கள்.
முக்கியமாக இந்தப் படம் சொல்லும் செய்தி, செயற்கை மருந்துகள் கொண்டும், பூச்சிக்கொல்லிகள் கொண்டும், இரசாயங்கள் செலுத்தியும் விற்கப்படும் காய்கறிகளுக்கு எதிராகப் பேசுகிறது. இயற்கை முறையில் தயாரிக்கும் காய்கறிகள், பழங்களை ஏற்றிப் போற்றி அதற்காக நம்மை மாற்றச் சொல்கிறது.
இங்கே நாயகர்கள் எனப்படும் நடிக்கவே தெரியாத நடிகர்கள் படத்தி வீர வசனம் பேசிவிட்டு, விளம்பரங்களில் இயற்கைக்கு எதிரான குளிர்பானத்தின் தூதுவர்களாக விளக்குப் பிடிப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், புரியும். ஒரு பெண்ணை முதன்மை பாத்திரமாக வைத்து நெடுந்தொடர்களை போன்ற காட்சிகளையும் வைத்தே இது போன்றதொரு திரைப்படம் எடுக்க முடியும் என்பதே சிலிர்ப்பாக இருக்கிறது. இது போன்ற படங்களினால்தான் எனக்கு மலையாளப் படங்களின் மீதான மதிப்பு எப்போதும் குறைவதே இல்லை.
தவற விடக்கூடாத படங்களில் ஒன்று.
0 பின்னூட்டங்கள்:
கருத்துரையிடுக
நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்