ஜால்ரா மணி கலாச்சிட்டாராம்

தினமணிக்கு அம்மாவின் புகழ் பாட முடியவில்லை. அதனால் இந்தத் தீர்ப்பு தவறானது என்று ஜாடை மாடையாகச் சொல்லும் கட்டுரைகள் நடுப்பக்கத்தில் வருகின்றன. அம்மா சிறையில் வாடுகிறார். அதனால் துன்பத்தில் வாடும் தினமணி ஆசிரியர், இரண்டாம் பக்கத்தில் அதிமுக காரர்கள் மொட்டயடிப்பது, காவடி எடுப்பது, காது குத்துவது, சிறப்பு யாகம் நடத்துவது, பட்டினிப் போராட்டம் நடத்துவது, நடைப் பயணம் போவது, வேலை நிறுத்தம் செய்வது என்று பலவாரியானா போராட்டங்கள் மூலம் தமிழகத்தையே ஒரு புரட்சிகரமான சூழலில் வைத்திருக்கிறார்.

அவருக்கு இருக்கும் மிகப்பெரிய பலம், நிம்மதி என்னவெனில் நடுவணரசாக வீற்றிருக்கும் பாஜகதான். அதனால் பிரதமர் என்ன செய்தாலும் அதை ஏற்றிப் போற்றுவார்.

இன்றைக்கு தினமணியில் வந்த அடடே மதி கேலிச்சித்திரத்தைப் பாருங்கள். முன்னாள் அரசை கலாச்சிட்டாராம். கலாய்ப்பதற்கு ஒரு தகுதி வேண்டாமா தினமணி ? தற்போதைய சூழலில் கருணாநிதியை நொட்டுவதற்கு ஒன்றும் கிடைக்க வில்லை போலும் அதனால் மன்மோகனைக் கலாய்க்கிறது தினமும் ஜால்ரா அடிக்கும் மணி.


தினமணி ஆசிரியர் வைத்திய நாதன் அகில உலக புரட்சியான "தூய்மை இந்தியா" திட்டத்தைப் போற்றியும் ஏற்றியும் கடந்த வாரத்தில் ஒரு தலையங்கம் எழுதியுனார். கடைசியில் அவரது விதியின்படி (காந்தி அல்லது பாரதியார் பற்றி) ஒரு செய்தியைச் சொல்லி) உச் கொட்டியிருக்கிறார். விளம்பர மன்னனான பாரதப் பிரதமர் என்னவொரு திட்டமோ, செய்தியோ , அறிவிப்போ சொன்னால் அதை ஆமோதித்து நைசாக மிகப்பெரும் சிந்தனை போல் சித்தரித்து அதை ஏற்றி விடுவதை செவ்வனே செய்வார்.

ஒன்று தலையங்கத்தில் மிகப்பெரும் சிந்தனை செயல் வடிவம் பெற்றது எதிர்காலத்தில் பட்டையக் கிளப்பப் போகும் திட்டம் என்று அடக்கமான மொழியில் எழுதுவார். இல்லையெனில் "அடடே மதி" யை விட்டு கேலிச்சித்திரத்தின் மூலம் மறைமுகமாகப் புகழ்வார்.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருத, ஹிந்தித் திணிப்பு வெறி பிடித்த பாஜக அரசு ஆசிரியர் தினத்தை "குரு உத்சவ்" என்று சம்ஸ்கிருதப் பெயரில்தான் கொண்டாட வேண்டும் என அறிவித்தது. அதற்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்பு வந்தது. ஏற்கெனவே இளைஞர்களின் முதன்மை ஆளுமையாக பிம்பமேற்றப்பட்டிருக்கும் பிரதமருக்கு அப்துல் கலாம் (குழந்தைகளின் நாயகன்) பிம்பத்தை உருவாக்கும் முகமாக பள்ளிக் குழந்தைகள் விடுமுறை நாளன்று மாலை வரை இருத்தி வைக்கப்பட்டு பாரதப் பிரதமர் ஹிந்தியில் அறுத்துத் தள்ளியதை செவியில் சீழ் வடியக் கேட்டு வாடினர். ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும் ஹிந்தியிலேயே "பாத் கர்த்தே ஹோ" செய்தார் பிரதமர்.

அப்பேர்ப்பட்ட நன்னாளன்று அடடே மதி வெளியிட்டிருந்த சித்திரம் - ஒரு மாணவன் ஆசிரியரிடம் சொல்கிறான். "ஆசிரியர் தினம், டீச்சர்ஸ் டே, குரு உத்சவ் வாழ்த்துக்கள் சார்." இதில் என்ன பிரச்சனையிருக்கிறது என்று நினைத்தால் உங்களுக்குப் புரியவில்லை என்று பொருள். தினமணி ஜால்ரா அடிக்கும் அரசு ஒரு சர்ச்சைக்குரிய அறிவிப்பை விடுகிறது. அதைக் கண்டிக்காமல் எதிர்க்காமல், குரு உத்சவ் என்பதையும் சேர்த்து ஒரு மாணவன் சொல்வதாக இருந்தது அந்தச் சித்திரம். அரசு ஹிந்தி, சமஸ்கிருதத்தைத் திணித்தால், அதை எதிர்க்காமல் அதைப் பரப்பி சேவை செய்கிறது தினமணி. பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக "ஆசிரியர் நாள்"  என்று தமிழில் முதலில் சொல்லி, கடைசியில் குரு உத்சவ் - ஐ வாலை ஒட்டி விடுகிறது. இனி அடுத்த வருடத்திலிருந்து குரு உத்சவ் இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்படும் கலாச்சாரம் என்றெல்லாம் கட்டுக் கதைகள் அவிழ்த்து விடப்படும் பாருங்கள்.

போன வாரமே எழுத நினைத்து முடியாமல் போனது இது.

இந்தியா ஏன் சுத்தமில்லாமல் இருக்கிறது என்றால் மாலையில் வீட்டைப் பெருக்கி கோலமிட்டு விளக்கேற்றும் பண்பாடு மறைந்து விட்டது, மேல் நாடுகளைப் போல் இந்தியாவில் குப்பை அது சேர வேண்டிய இடத்தில் சரியாகச் சேர்வதில்லை. வீடுகளில் கூட கழிவறைகள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மனிதர்களே காரணம், நவீன வாழ்வில் பெருகிவிட்ட ஞெகிழி உட்பட பல குப்பைகள். எல்லாம் சரிதான் பாராட்டக் கூடியதுதான்.

புறத்தூய்மை நீரான் அமையும் என்கிறது வள்ளுவம். அதாவது புறத்தூய்மைக்கு நீங்கள்தான் அடிப்படை என்று தலையங்கம் முடிகிறது. நாமனைவரும் பொறுப்புதான் என்கிறார். எனவே நாமனைவரும் பொறுப்பு எனில் அதில் அன்னார் வைத்தியநாதரும் அடக்கம்தானன்றோ !

ஆகவே இவருக்கு மனசாட்சியிருந்தால், விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில், மக்களின் கடவுள் நம்பிக்கைக்குள் புகுந்து மதவெறியாட்டம் போடும் பயங்கரவாத இயக்கங்களுக்கு இலவச விளம்பரம் தருவதை நிறுத்துவாரா ?

கண்ட இடங்களிலெல்லாம் சிலைகளை வைத்து சுற்றுச் சூழல் மாசுக்களை அதிகப்படுத்தும் விநாயகன் சிலைகளை நீர் நிலைகளில் கரைத்து நீரை நாசப்படுத்துவதை எதிர்ப்பாரா ?

இல்லை காட்டுக்கூச்சல் போட்டுக் கொண்டு போவதை, வன்முறையைத் தூண்டுவதை, தெருவெங்கும் குப்பை போடுவதை எதிர்ப்பாரா ?

உத்தமரின் "தூய்மை இந்தியா" திட்டத்தில் முதலில் இணைக்க வேண்டியது இந்தத் திட்டத்தை அல்லவா !

இல்லை இந்தியாவையே குப்பை மேடாக்கும் கூறு கெட்ட தீபாவளி என்ற பண்டிகையின் பேரில் பட்டாசு வெடிப்பதை எதிர்ப்பாரா ?

செய்யவே மாட்டார்.  இந்து முண்ணனியும், இந்து மக்கள் கட்சியும், பாரதிய ஜனதாக் கட்சியும் தெருவுக்குத் தெரு, ஊருக்கு ஊர் விநாயகர் சிலை பிரதிஷ்டை என்று விளம்பரம் கொடுப்பார்.

இன உணர்வு என்றால் சும்மாவா ??

தீபாவளி விளம்பரங்கள், பட்டாசு கடைகள், எதையும் எதிர்க்க மாட்டார். ஆனால் இந்த தீபாவளியின் புது வரவான சீனப் பட்டாசு தீமைகள் பற்றி, இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று கட்டுரை வெளியிடுவார். அதனால் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்துவிட்டதால் மட்டும் தினமணி இனிமேல் தனது குப்பைக் கட்டுரைகள் வெளியிடாது என்று நம்ப இடமில்லை.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்