மெட்ராஸ் கஃபே - தமிழர்களுக்கு எதிரான விஸ்வரூபம் ?

 

மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியைக் கண்டால் ஈழப் போரை அடிப்படையாகக் கொண்ட கதைக் களம் போல் தெரிகிறது.  இந்தப் படம் முதலில் ஜாஃப்னா (Jaffna ) என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது. இலங்கை வரைபடத்தினைப் பின்புலமாகக் கொண்டு நிற்கும் ஜான் ஆப்ரஹாம் இந்திய உளவுத்துறை ஒற்றன். விடுதலைப் புலிகள் கடத்திச் செல்வதாகவும் காட்டுகிறார்கள். ஈழப் போரை மையமாக வைத்து, இந்திய உளவுத்துறையின் நாதாரித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிக்கும் திரைப்படமாக இருக்கும் போல் தெரிகிறது. கிளுகிளுப்புக்காக ஆங்கிலப் படத்தின் பாணியிலேயே ஒரு பெண் நிருபரையும் சேர்த்திருக்கிறார்கள். எத்தனையோ போர் (war) படங்களைப் பார்த்திருக்கிறேன், பெரிய அளவில் வருந்த வில்லை. இப்போது ஈழப்போரைப் பின்னனியாகக் கொண்ட ஒர் சண்டைப் படம் வருகிறது அதிலும் இந்திய உளவாளியை நாயகனாகக் கொண்டு எனும்போது உலகமகா எரிச்சலாகவும் வேதனையாகவும் இருக்கிறது. இப்படித்தானே அந்தந்தப் போரைப் பின்னனியாகக் கொண்ட ஒவ்வொருவருக்கும் தங்கள் நாட்டைப் பற்றிய ஹாலிவுட் படங்களைப் பார்க்கும்போது இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு கருவியைக் கண்டுபிடித்தார் என்பதற்காக ஒரு தமிழரைப் புகழ்கிறார்கள். ஈழப்போரை நடத்தியது இந்தியாதான் என்று தெரிந்த பின்னும் இன்னும் இந்தியாவை விடாமல் நம்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர். மிச்சமிருக்கும் சில லட்சம் தமிழர்களை இந்தியா கொன்றாலும் அவர்கள் இந்தியாவின் புகழ் பாடிக் கொண்டிருப்பார்கள். நம்மைப் போன்றவர்களால்தான் அதை சகிக்க முடிய வில்லை. அத்தகைய தமிழர்கள் மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை எப்படி எதிர்ப்பார்கள் அவர்கள் இந்தியாவையும் நம்புகிறவர்கள் அமெரிக்காவையும் ஆதரிப்பவர்களாயிற்றே ?!

எட்வர்ட் ஸ்னோடன், பிராட்லி மானிங்க், அஸாஞ்ஜே என பலரும் அமெரிக்காவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியும் அமெரிக்காவின் ஆதரவை வேண்டித் தமிழர்கள் காத்திருக்கிறார்கள். ஒசாமா பின் லேடனைக் கொல்லவும் அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்றனர். ஆனால் அமெரிக்காவோ அதற்கு நன்றியாக தமிழர்களுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக தமிழரை அழித்த சிங்களப் பேரினவாத பயங்கரவாத ராணுவத்தினருடன் ராணுவக் கூட்டுப் பயிற்சி நடத்துகிறது. தமிழர்களின் ஒரே நம்பிக்கையான இந்தியா இன்னும் அகதிகளைக் கூட அவமானப்படுத்தியே வருகிறது.

திரிகோணமலையில் சிங்கள - அமெரிக்க ராணுவத்தினர் பயிற்சி
விஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தது ஏனென்றால் அது இஸ்லாமியரைப் புண்படுத்தியது, தாலிபன்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது. அமெரிக்காவைப் புகழ்கிறது. அவ்விவகாரத்தில் எனக்கு இப்போதும் அதே நிலைப்பாடுதான். இஸ்லாமியர்களின் தம்மை தீவிரவாதியாக சித்தரிப்பதையும், ஆப்கானியர்களைத் தீவிரவாதியாகவும் அமெரிக்கனை யோக்கியனாகக் காட்டுவதாகவும் எதிர்த்தது நியாயமானதே. 30 வருடங்களாக வல்லரசு நாடுகளின் ராணுவ ஆக்ரமிப்பால் 2 மில்லியன் ஆப்கானியர்கள் கொல்லப்பட்டும், பலர் ஊனமுற்றும், அகதியாகவும் அலைகின்றனர். இதை கேவலப்படுத்தி அமெரிக்காவை ஆப்கானியத் தீவிரவாதிகள் வைக்கும் குண்டு வெடிப்பிலிருந்து காக்கும் அமெரிக்காவைப் போற்றும் படமாகவும் அமெரிக்காவால் ராணுவ ஆக்ரமிப்புக்குள்ளாகியிருக்கும் ஆப்கானியரைக் கேவலமாகவும் காட்டி இருப்பதை எதிர்ப்பது நியாயமானது. ஆனால் இஸ்லாத்தை இழிவு செய்கிறது, இஸ்லாமியரைப் புண்படுத்துகிறது, என்று மத உணர்வு ரீதியாக எதிர்த்துப் படத்தையே தடை செய்யக் கேட்டது தவறே.

விஸ்வரூபம் பற்றிய பதிவில் இஸ்லாமியரின் எதிர்ப்பை கொச்சைப்படுத்துகிற தமிழர்களுக்கு என்று நான் எழுதியது இதுதான், //இப்போது கற்பனையாக, விஸ்வரூபம் படத்திற்கு பதிலாக மலையாள இயக்குநரின் ஒரு பாலிவுட் படம் கமலுக்குப் பதிலாக சல்மானும் அமெரிக்க இராணுவத்திற்குப் பதிலாக இந்திய அமைதிகாக்கும் ராணுவம், தாலிபனுக்கு பதிலாக புலிகள், ஆப்கனுக்குப் பதிலாக ஈழத்தை ஆகிரமிக்கிற கதைக்களன், "இந்திய ராணுவம் பெண்களை பாலியல் வன்முறை செய்யாது" என்று ஒரு ஈழத்தமிழன் பேசுகிற மாதிரி வசனமும் வைத்து இருந்தால் நாம் எதிர்ப்போமா மாட்டோமா ? // அது இப்போது மெட்ராஸ் கஃபே வடிவில் ராணுவத்திற்குப் பதிலாக உளவாளியாக மாறி  சிறு அளவில் உண்மையாகி விட்டது.

இந்த மெட்ராஸ் கஃபே படமும் இந்தியாவை யோக்கிய சிகாமணியாகக் காட்டப்போகிறது. இரு தரப்பும் இலங்கையில் போர் புரிந்தனர் என்று பார்ப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் ரசிகர்கள். இந்தியாவிலிருந்து போய் இலங்கையில் நாடு கேட்டால் அவன் சும்மாயிருப்பானா, ராஜீவைக் கொன்ற தீவிரவாதிகளுக்கு இதுதான் சரியான தண்டனை  என்று முற்றுமறிந்த ரசிக சிகாமணிகள் வக்கனை பேசுவார்கள். இந்திய உளவுத்துறை அதிகாரி உயிரைப் பணயம் வைத்து என்ன சாகசம் செய்யப் போகிறாரோ தெரியவில்லை. 

விடுதலைப் புலிகளைத் தீவிரவாதிகளாகவும், இந்திய உளவுத்துறை அதிகாரியை கடத்துவதாகவும் காட்டியிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விடுதலைப் புலிகள் தீவிரவாதிகள் அல்ல போராளிகளே, இந்திய உளவுத் துறையினரைக் கடத்த மாட்டார்கள் அவர்கள் இந்தியாவின் நண்பர்கள் என்றெல்லாம் சொல்லி அப்படத்தைத் தடை செய்யச் சொல்லி விளம்பரம் தேட மாட்டார்கள் "தமிழர்கள்"  என்று நம்புகிறேன்.

படம் வெளியான பின்பு திரைப்படத் திறனாய்வு (விமர்சனம்) எழுதும் வலைப்பதிவர்கள் இப்படத்தைக் கிழித்துத் தொங்கவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஹாலிவுட் படங்களில் ராம்போ, ஜேம்ஸ்பாண்ட், மிஷன் இம்பாஸிபிள், இன்னும் பல ராணுவத்தின் பெருமைகளை பீற்றிக் கொள்ளும் படங்கள்  உளவுத்துறை அமெரிக்காவின் பெருமை சொல்பவை. இப்படங்களைப் பார்ப்பவர்கள் உலகிலேயே ஜனநாயகத்திற்காக உயிரைக் கொடுத்துப் போராடுகிறவர்கள் அமெரிக்க ராணுவத்தினர்கள், சிஐஏ எஜென்ட்கள் ஆகியோர்கள் என்றுதான் நம்புவார்கள். நானும் அப்படித்தான் நம்பினேன். நம் இந்தியப் படங்களில் ராணுவத்தை, காவல்துறையை வைத்து போலி தேசபக்தியைத் தூண்டும் படங்கள் எடுக்கப்படுகின்றதுன . இப்போது டான்கள், கேங்ஸ்டர்கள், மாஃபியாக்கள் போன்ற அயோக்கியர்களை நாயகர்களாகக் காட்டும் இந்தியப் படங்கள் வருகின்றன. அதே போல் உளவுத்துறை,  உளவாளிகள் செய்யும் சாகசங்கள் வரத் தொடங்கி விட்டன. ஏஜென்ட் வினோத், கமோன்டோ, ஏக் தா டைகர்  ஆகியன எடுத்துக்காட்டுகள். அடுத்ததாக இந்த மெட்ராஸ் கஃபே. இந்த உளவுத்துறையினர் எனப்படுகிறவர்கள், இறையாண்மையுடைய இன்னொரு நாட்டுக்குள் புகுந்து அந்நாட்டிற்கெதிரான பாதுகாப்புக்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுகிறவர்கள். இறையாண்மையுடைய இலங்கையில் இந்தியா தலையிடாது என்று சொன்னார்கள்.  வாய்கிழியப் பேசினார்கள். இப்போது இந்திய உளவாளியை இலங்கைக்கு அனுப்புவது இலங்கை என்ற நட்பு நாட்டிற்குச் செய்யும் துரோகம். எனவே இந்த இயக்குநர் இந்தியாவை கேவலப்படுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். இன்னொரு கோணத்தில் பார்த்தால், உளவாளியை அனுப்பி வீரதீர சாகசத்திற்கெல்லாம் இடம் கொடாமல் இலங்கை அரசு இந்திய அரசு மிகச் சிறந்த நட்பு நாடுகளாகவே இருக்கின்றன.பார்ப்போம்.

விடுதலைப் புலிகளுக்குள் ஊடுருவும் இந்திய உளவாளி என்று இத்திரைப்படம் விமர்சிக்கப்படுகிறது. இதில் ஒன்றும் நடக்காததல்ல. புலிகள் உட்பட அனைத்து ஈழ விடுதலை இயக்கங்களும் இந்திய உளவுத்துறையால், இஸ்ரேலிய உளவுத்துறையால்  பயிற்றுவிக்கப்பட்டவர்களே , அது போல் உலகெங்கும் உள்ள் இஸ்லாமிய இயக்கங்களும் அமெரிக்க உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டவர்களே. இவ்வியக்கங்களுக்குள் பல உளவாளிகள் ஊடுருவி போராட்டங்களுக்கு உலை வைத்ததும் ஈழம் வரை நடந்த வரலாறு. இதிலெல்லாம் எதிர்ப்பதற்கு என்ன இருக்கிறது ? ஒரு வேளை இப்போது நாம் எதிர்பார்ப்பது போல இந்திய உளவாளி புலிகளுக்குள் ஊடுருவி ரகசியங்களைக் கறந்து வருவது போலவோ அல்லது பணயக் கைதிகளை மீட்பது போலவோ இருந்தால் நாம் என்னவென்று அதைப் புரிந்து கொள்வது ? இந்திய உளவுத்துறை என்ன செய்யுமோ அல்லது செய்ததோ அதைத்தான் கொஞ்சம் திரைப்பட மசாலாத்தனத்துடன் வேறுவிதமாக படம் காட்டியிருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டியதுதான். என்ன சிங்கள ராணுவம் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகள் படத்தில் வரும் அதை சகித்துக் கொள்ள வேண்டும்.

என்ன இதனால் சங்கடப் படப் போகிறவர்கள் இந்தியாவை நம்பிக் கொண்டிருப்பவர்கள்தான். எனக்கு இதையெல்லாம் கேட்டு சலித்து விட்டது. 

அமெரிக்காவில் அமெரிக்க அரசை விமர்சித்துக் கூட ஹாலிவுட் படம் எடுக்க முடியும். அத்தகைய சுதந்திரம் இந்தியாவில் இல்லை. ரசிகர்களும் அவ்வளவும் பக்குவமானவர்கள் இல்லை. இந்திய இயக்குநர்கள் படமெடுத்தால் இந்தியாவின் பங்கை மறைப்பார்கள், தமிழர்கள் எடுத்தால் புலிகளின் தவறுகளை மறைப்பார்கள். இந்திய அரசை விமர்சித்துப் படமெடுத்தால் படம் தடை செய்யப்படும். புலிகளைப் பற்றி எடுத்தால் தமிழர்கள் எதிர்ப்பார்கள். நடுநிலையுடன் நேர்மையாக படம் எடுக்க இங்கு சூழ்நிலையோ ஆட்களோ இல்லை. தமிழர்கள் இதைத் தடை செய்யக் கோரினால் நமக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும். சீமான்களை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

இஸ்லாமியர் ஏன் திரைப்படங்களில் தவறாக சித்தரிக்கப் படுவதை எதிர்க்கின்றனர் என்று இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். அதே போல் தடை செய்ய வேண்டும், வெளியிட வேண்டாம் என்று முரட்டுத்தனமாக செயல்படுவதால் என்ன நேர்ந்தது என்றும் அவர்களிடமிருந்தே தெரிந்தும் கொள்ளலாம். தமிழர்களை இனவெறியர்களாகக் காட்டுவதற்கு வட இந்திய ஆங்கில ஊடகங்களும், சோ ராமசாமிகளும், சுப்ரமணிய சாமிகளும் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

10 கருத்துகள்:

 1. பெயரில்லா16/7/13 12:07 முற்பகல்

  Boss first of all stop blaming about India always. See if srilankan tamilians are killed it is thier country problem what we will do they are paid off because of LTTE. and in India we tamilians have plenty of problems in our daily lifes, if you could obtain tamil ellam you can go on. But for that don't criticize India always. We are tamilians above all Indians

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனப்படுகொலை நடந்து இன்னும் 5 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் இந்தியா என்ன செய்ய முடியும் ? இலங்கைத் தமிழனது பிரச்சனை அவர்களது, நீங்க உங்க வேலையைப் பாருங்க என்கிறீர்கள். இதனால் இந்தியாவுக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போல் சொல்கிறீர்கள். அல்லது இந்தியாவுக்கும் இனப்படுகொலையில் இந்தியாவுக்கும் பங்கு இருக்கிறது என்பது பற்றி உங்களுக்கு ஆர்வமில்லை. புலிகளால்தான் எல்லாம் நிகழந்தது என்று அவர்களை மட்டும் குறை சொல்லித் தப்ப முடியாது. புலிகள் உட்பட பல இயக்கங்களுக்கு இந்தியாதானே ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது. இந்தியாவில் ஈழ அகதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தப்பிச் சென்றால் காவல்துறை மடக்கிப் பிடிக்கிறது. ஆனால் தமிழக-இந்திய எல்லைக்குள் சிங்கள் ராணுவம் வந்து இந்தியத்-தமிழனை சுடுகிறது, இந்தியாவோ இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கிறது. இதைத்தான் என்னால் சகிக்க முடியவில்லை. இந்தியாவைக் குறை சொல்வதால் எனக்கென்ன வரப் போகிறது. இந்தியனாக இருப்பதால் இந்தியா தவறு செய்வதை மறைக்கவேண்டுமென்பதில்லையே ?

   நீக்கு
 2. எத்தனைக் காலம் புலிகளுக்கு புனிதப் பட்டம் கட்டுவீர்களோ, ஈழப் பிரச்சனை மிகவும் சிக்கலானது, ஈழத் தமிழர் - சிங்களவர் - இந்தியா & உலகம் என மும்முனை நகர்வுகளைக் கொண்டது. தொடக்கக் காலம் முதல் இன்று வரை ஈழத் தமிழ் குழுக்கள் புலிகள் தவிர ஏனையோர் இந்திய ஆதரவானோர். சிங்களவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியும், தமிழ் புலிகளும் மேற்கு நாடுகளிச் சார்பானோர், சிங்கள சுதந்திரக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி இடதுசாரித்துவமானது, இந்த மும்முனைப் போட்டியின் விளைவே ஈழப் போர், சிங்கள இடதுசாரிகள் படுகொலை, ராஜிவ், பிரேமதாச படுகொலை என்பவை எல்லாம். இதில் யாரும் யோக்கியர் இல்லை, புலிகளும், இந்தியாவும், சிங்களவரும் தத்தமது நலனை மட்டுமே கருதினார்கள் சமயத்தில் மாற்றுக் கருத்துடைய தம் சொந்த மக்களையே கொன்றொழித்தார்கள். திரைப்படம் என்பது கற்பனையின் பிம்பம். ஒரு அமெரிக்கப் படத்தில் இடதுசாரியும், முஸ்லிமும் கெட்டவன். அதே போல இஸ்லாமிய நாடுகளில் யூதரையும், அமெரிக்கரையும் கெட்டவராய் காட்டுவர், இந்தியாவில் பாகிஸ்தானியரையும், பாகிஸ்தானில் இந்தியரையும், இதை எல்லாம் எதிர்க்கத் தொடங்கினால் சினிமா, டிவி எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி விட்டு போக வேண்டியது தான். மக்களுக்கு ஆக்கப் பூர்வமாய் எதையாவது செய்வது தான் நல்லது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைத்தான் நானும் சொல்கிறேன். புலிகளுக்கு புனிதப்பட்டம் கட்டவில்லை. இதில் சிங்கள அரசை மட்டும் எதிர்த்து விட்டு இந்தியாவையோ அல்லது புலிகளையோ தவறே செய்யாதவர்கள் என்று சொல்பவர்கள் இருக்கிறார்களல்லவா அதற்குத்தான் இதை எழுதினேன். ஈழத்தமிழனின் குருதியில் கை நனைத்தவர்கள் சிங்களப் பேரினவாதிகள் மட்டுமல்ல, இந்தியனும், புலிகளும் கூட குற்றவாளிகள். அமெரிக்கா நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக போரில் பங்கெடுத்துக் கொண்டதுதான். இந்தக் கடவுள்களை நம்பவேண்டும் என்று சொல்வதைத்தான் நான் எதிர்க்கிறேன்.

   //திரைப்படம் ஒரு கற்பனை, இதை எல்லாம் எதிர்க்கத் தொடங்கினால் சினிமா, டிவி எல்லாவற்றையும் மூட்டைக் கட்டி விட்டு போக வேண்டியது தான். // வேறு யாரும் இப்படிச் சொல்லலாம். "ஊடகங்களில் காட்டப்படும் பெண்கள் பாலியல் உணர்வைத் தூண்டுகின்றனரா ? என்று எழுதியவர் இப்படிக் சொல்லலாகாது. திரைப்படம் என்பது ஒரு ஊடகம். சொல்லாமல் பல செய்திகளைச் சொல்வது. தமிழக முதலமைச்சர் தொடங்கி, அமெரிக்க அதிபர் வரை திரைப்பட நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் பாலூத்தி தலைவன் என்று கொண்டாடுகிறார்கள். 40 வருடமாக ஜேம்ஸ்பாண்ட் என்ற அயோக்கியன் திரைப்படங்களில் உலக நாயகனாக இருக்கிறான். இந்தியாவைப் பாதுகாக்க ஏஜென்ட் விநோத் பாகிஸ்தானுக்கு எதிராகவும், கமாண்டோவில் சீனாவுக்கு எதிராகவும் இந்திய உளவாளியை அனுப்பிய பாலிவுட்காரர்கள் இப்போது ஸ்ரீலங்காவிற்கு அனுப்புகிறார்கள். இதை ரசிகர்கள் இந்திய உணர்ச்சி மேலிட இந்திய உளவாளியை நாயகனாகப் பார்ப்பார்கள். ஈழப்படுகொலையின் வெப்பத்தை அருகிலிருந்து அனுபவித்த நம்மால்தான் இதை சகிக்க முடியாது. ஒரு பிரச்சனையைப் பற்றி எடுத்தால் அதை நேர்மையாக படம் எடுக்க வேண்டும். இல்லையென்றால் எதிப்பு வரும். ஹாலிவுட் திரைப்படமும் இஸ்லாமிய நாடுகளில் எடுக்கப்படும் திரைப்படமும் ஒன்றா ? ஈராக்கியனோ, ஈழத்தமிழனோ தங்களைப் பற்றிப் படமெடுத்தால் பார்ப்பதற்கு ஈ, காக்கா கூட இருக்காது. ஹாலிவுட் பாலிவுட் படங்களெல்லாம் உலகின் பல பேர்கள் பார்ப்பது. அதைப் பார்ப்பவர்கள் அய்யோ பாவம் அமெரிக்க ராணுவ வீரன், அய்யோ பாவம் ஜேம்ஸ்பாண்ட், ஈதன் ஹன்ட், ராம்போ ஆகியோர் தாய்நாட்டுக்காக என்னவெல்லாம் சிரமப்படுகிறார்கள் என்றுதான் தோன்றும், ஒரு படம் நேர்மையாக இருந்தால் அதை தலையில் வைத்துக் கொண்டாடுகிறோம் அது போல இப்படி தவறான செய்தியைச் சொன்னால் எதிர்ப்பதில் என்ன தவறு ? தடை செய் வெளியிடக் கூடாது என்று சொன்னால்தானே தவறு, இப்படி திரைப்பட விமர்சனம் போல் எதிர்க்கருத்து வைப்பதில் என்ன தவறு ?

   நீக்கு
  2. விமர்சிப்பதும், எதிர் கருத்து வைப்பதிலும் தவறில்லை, ஜீரோ டார்க் தர்ட்டி என்ற படத்தை அமெரிக்க (நல்ல) ஊடகங்களே கிழித்தன, இடித்துரைப்பது நம் பணியே, ஆனால் தடை செய், வெட்டு கொளுத்து என கூட்டம் இறங்குமே நம் நாட்டில் அது தான் என் கவலையே, படைப்பாளிகளுக்கான் வெளி எப்போதும் கொடுக்கபடல் வேண்டும், எனக்கு என்னவோ சீமான் ரோட்டில் இறங்குவார் போலிருக்கு இப்படம் வெளியானதுமே. ம்ம்ம்

   நீக்கு
  3. அமெரிக்காவில் அமெரிக்க அரசை விமர்சித்துக் கூட ஹாலிவுட் படம் எடுக்க முடியும். அத்தகைய சுதந்திரம் இந்தியாவில் இல்லை. ரசிகர்களும் அவ்வளவும் பக்குவமானவர்கள் இல்லை. இந்திய இயக்குநர்கள் படமெடுத்தால் இந்தியாவின் பங்கை மறைப்பார்கள், தமிழர்கள் எடுத்தால் புலிகளின் தவறுகளை மறைப்பார்கள். இந்திய அரசை விமர்சித்துப் படமெடுத்தால் படம் தடை செய்யப்படும். புலிகளைப் பற்றி எடுத்தால் தமிழர்கள் எதிர்ப்பார்கள். நடுநிலையுடன் நேர்மையாக படம் எடுக்க இங்கு சூழ்நிலையோ ஆட்களோ இல்லை. தமிழர்கள் இதைத் தடை செய்யக் கோரினால் நமக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகும். சீமான்களை நினைத்தால்தான் கொஞ்சம் பயமாக இருக்கிறது.

   நீக்கு
 3. //ஒசாமா பின் லேடனைக் கொல்வதற்கு ஏதோ ஒரு கருவியைக் கண்டுபிடித்தார் என்பதற்காக ஒரு தமிழரைப் புகழ்கிறார்கள்//
  ஒசாமா பின் லேடன் என்கின்ற மதவெறியன் பயங்கரவாதியை கொல்வதற்கு கருவியைக் கண்டுபிடித்தவர் சிறந்த திறைமைசாலி ஒரு தமிழருமாக இருக்கிறார். சிவலிங்கம் சிவானந்தன் அவர் இலங்கையனாக இருக்கலாம் அல்லது அமெரிக்கராக இருக்கலாம் எனது பெற்றோர்களின் மொழி பேசிய ஒருவர். அதனாலே பெருமை அடைகிறேன்.பயங்கரவாதிகளுக்குகெதிராக மக்கள் நன்மைக்காக சாதனை படைத்துள்ளார். அவருக்கு நான் தலை வணங்குகிறேன். அவரை புகழாமல் என்ன செய்ய வேண்டும் என்பது உங்க விருப்பம்?
  //விஸ்வரூபம் படத்தை முஸ்லிம்கள் எதிர்த்தது ஏனென்றால் அது இஸ்லாமியரைப் புண்படுத்தியது, தாலிபன்களைத் தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.//
  தலிபான்கள் இஸ்லாமிய விரோதிகள் என்று சொல்லி இஸ்லாமியர்கள் உட்பட மற்றவர்களை கொன்று குவிப்பதோடுமட்டுமல்ல இப்போ நோன்பு பிடிக்காதவர்களுக்கு சிறைதண்டணை என்று அறிவித்துள்ளது.ஆகவே நேன்பு என்பது எல்லோருக்கும் கட்டாயமாக்கபட்டுள்ளது. இப்படிபட்ட தலிபான்களை பற்றி ஒரு சிறு துளி உண்மை விஸ்வரூபம் படத்தில் சொல்பட்டது.அது தமிழக இஸ்லாமியர் சிலரை புண்படுத்தியது என்றால் அவர்கள் தங்கள் பயங்கரவாதிற்கான ஆதரவு மன நிலையை திருத்தி கொள்ள வேண்டும்.
  //..இன்னும் இந்தியாவை விடாமல் நம்புகிறார்கள் ஈழத்தமிழர்கள் சிலர்.
  ..அமெரிக்காவின் ஆதரவை வேண்டித் தமிழர்கள் காத்திருக்கிறார்கள்.//
  நடைமுறை சாத்தியம் எதுவுமற்ற தனி ஈழம் என்பதை இந்தா அமைய போகுது, வரலாற்றில் ஒரு திருப்பு முனை தமிழக மாணவர்கள் போராட்டம் என்று சொல்லி கொண்டிருப்பதிற்க்கு இந்தியாவோ, அமெரிக்காவோ எப்படி பொறுப்பேற்க முடியும்?

  அமெரிக்காவுக்கு தெரியாதா ஈழம் நாடு கேட்பவர்கள் அமெரிக்காவில் உள்ளவர்களோ, கனடாவில் உள்ளவர்களோ ஒரு போதும் விடுமுறைகளை தவிர வழக்கமாக இப்போ இலங்கை போய்வரு வருவதை தவிர தப்பி தவறி கூட ஈழம் என்று கற்பனை நாடு அமைந்தாலும் அங்கே சென்று ஒரு போதும் நிரந்தரமாக வாழ தயாராக இல்லாதவர்கள் என்பது.
  அமெரிக்காவின் தேவை தனது சொற்படி நடக்கும் ஆட்சியாளர் ஒருவர் இலங்கையில் தேவை.அதற்காக அப்படி ஒருவரை கொண்டுவருவதற்கு அமெரிக்காவின் பயன் பாட்டு உதவுவோரே வெளிநாட்டில் வசிக்கும் ஈழ ஆதரவாளர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேகநரி நீண்ட விமர்சனத்திற்கு நன்றிகள். அவரைப் புகழ்வது சரியாகவே இருக்கட்டுமெ. அதற்கு நன்றியாக அமெரிக்கா தமிழர்களுக்கு செய்தது என்ன(இலங்கை ராணுவத்துடன் பயிற்சி) அதற்கு ஏன் தமிழர்கள் மௌனமாக இருக்க வேண்டும் என்பதே என் கேள்வி

   நீக்கு
 4. இதை வெறுமனே ஒரு திரைப்படம் சார்ந்து பார்க்க வேண்டும் என்று சொல்பவர்களுக்கு ஒரு செய்தி. இந்த படத்தின் இயக்குநர் இரண்டு முறை ஈழம் சென்று கோத்தபய முதல் அங்குள்ள அதிகாரவர்க்கத்தினர் வரைக்கும் சென்று பார்த்து வர வேண்டிய அவசியம் என்ன?

  மத ரீதியான உணர்வுகளை கொச்சைப்படுத்தக்கூடாது என்று சொல்பவர்கள் ஒரு இனம் குறித்த நடந்த அவலங்களைக்குறித்த ஆவணங்களில் உள்ள உண்மை என்ன என்று ஆராயாமல் அதை வெளியிடு அனுமதித்தால் அதற்குப் பிறகு உள்ளே இருப்பது அக்மார்க்க நயவஞ்சகம். இதைத் தவிர வேறொன்றுமில்லை.

  எல்லோரும் சீமான் குறித்து மாற்றுக் கருத்தை வைக்கும் போது எப்போதும் போல அவர் மேல் எனக்கு இன்று வரையிலும் ஒரு மரியாதை தான் உள்ளது. காரணம் கேள்வி கேட்ட யாரும் இல்லை என்றால் கேழ்வரகில் நெய்வடிகின்ற கதையாகத்தான் நாளை தமிழர்களின் சரித்திரம் சந்தி சிரிக்க வைத்து விடுவார்கள்.

  நம்மவர்கள் மற்றவர்கள் நம் கைகை வைத்து நம் கண்களையே குத்துவதைக்கூட பொறுத்துக்கொள்வார்கள். ஆனால் நாம் இது குறித்து ஒரு கேள்வி கேட்டால் போதும்? பொங்கி பொங்கல் வைக்க தயாராக இருப்பார்கள்.

  என்னமோ போங்க. இரண்டு தலையும் காணாமல் போனா புதிததாக தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சி உருவாகும் என்று காத்திருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 5. ஜோதிஜி, கட்டுரை எழுதியது ஒரு மாதத்திற்கு முன்பு, படத்தின் முன்னோட்டக் காட்சி யூட்யூப்பில் கண்டதை வத்து எழுதியது. தற்போதைய தகவல்கள் அப்போது இல்லை. இருப்பினும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் பெரிய மாற்றங்கள் திரைப்படத்தில் இல்லை.

  இயக்குநர் சென்றது படப்பிடிப்புக்கு அனுமதி வாங்குவதற்காக இருக்கலாம். போர் குறித்த படமென்பதால் அந்நாட்டு நடிகர்கள், போர்த் தளவாடங்கள் கூட பயன்படுத்தப்பட்டிருக்கின்றன போல் தெரிகிறது.

  திரைப்படம் இந்திய இலங்கை அரசுகளின் படமென்பதுதான் ஏற்கெனவே தெரிந்ததுதானே. எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்யலாம். தடை என்பதுதான் உறுத்துகிறது.

  தமிழ்நாட்டின் இரு தலைகளுக்கு மாற்றாக சீமானை நம்புவது ஆபத்து. அவர் தனது திருமணத்திற்குக் கூட ஈழத்தைக் கோர்க்கிறார். நான் அவரை நம்ப மாட்டேன்.

  பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்