சிற்றரசு, இளவரசன் மற்றும் பலர் :((

இப்போது இளவரசன் தற்கொலை செய்துவிட்டதால் எனக்கு பெரிய துக்கமோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் ஜாதியப்பேச்சுக்களையும், சடங்குகளையும் இன்ன பிற எழவுகளையும் வேறு வழியின்றி சகித்துக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டிய கட்டாயத்திலிருப்பவன். ஜாதிக்கு எதிராக எதையும் இது வரையில் செய்ததில்லை. அதனால் இது போன்ற நிகழ்வுகள் இப்படியும் இருப்பார்களா ஜாதி வெறிபிடித்த மனிதர்கள் என்று அதிர்வதில்லை. ஜாதி வெறி பிடித்தவர்கள் நினைப்பதை விடவும் மோசமானவர்கள்.

அவர்களுக்கு பெற்ற மகளின் உயிரை விடவும் ஜாதிக் பெருமிதம் மேன்மையானது. ஜாதியப் பெருமை என்று இல்லாதவொன்றைக் காப்பாற்றுவதாகக் கருதிக் கொண்டு கொலைகாரனாக மாறவும் துணிவு தருவதே ஜாதியம். மகள் தாலியறுத்தாலும் வாழ்க்கையே போனாலும், பரவாயில்லை என்று கருதுகிறார்கள்.

ஆதிக்க ஜாதிக்காரப் பெண் தலித்தை மணந்தால் கொலை, அதே தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் அருந்ததிய ஆணைத் திருமணம் செய்தாலும் கொலை இப்படிப்போகிறது ஜாதியத்தின் கதை. 


2008 ஆம் ஆண்டு சோமனூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிற்றரசு என்பவர் தன்னுடன் வேலை பார்த்த தொழிலாளியான கவுண்டர் ஜாதியைச் சேர்ந்த கோமதி என்ற பெண்ணை காதலித்து எதிர்ப்புக்களுக்கிடையில் திருமணம் செய்து கொண்டார். பின்பு சில முறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு, இறுதியாக தலை நசுக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார் சிற்றரசு. அவரது மனைவியிடம் அப்போது கைக்குழந்தையும் இருந்தது. அந்தப் பெண்ணின், குழந்தையின் எதிர்கால வாழ்க்கையைக் கூட நினைத்துப் பாராமல் கொலை செய்தனர் கொங்கு வேளாளக் கவுண்டர் ஜாதிக்காரர்கள். 


இப்போது இளவரசன்  பல்வேறு பிரச்சனைகளால் மன அழுத்தத்திற்குள்ளாக்கப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். (இது தற்கொலை என்று இன்னும் நான் நம்பவில்லை என்ற போதிலும்) இவருக்கும் திருமணமாகிவிட்டது என்ற போதிலும் காதலர்களைப் பிரிப்பதில் ஜாதி வென்று விட்டது. ஜாதியத்தால் கொலையுண்டவர்களில் இவர்களிருவரும் அதிகமான குற்றவுணர்ச்சியையும், பாதிப்பையும் ஏற்படுத்தினர். 


 தற்கொலையாகட்டும், கொலையாகட்டும் ஜாதியம்தான் காரணமாக இருக்கிறது. ஆதிக்க ஜாதிக் கட்சிகளுக்கு இருக்கும் தலித்களுக்கு எதிராக குற்றம் சாட்டுவது இரண்டு காரணங்களுக்காக.

வன்கொடுமை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவது. (எதிர்த்தரப்பினர் ஆதிக்க ஜாதியாக இருக்கும் பட்சத்தில் வேறு பிரச்சனைகளுக்காக தன் மீது ஆதிக்க ஜாதிக்காரர் வன்கொடுமை செய்தார் என்று புகாரளிப்பது)

பெண்களை காதலித்து விட்டுச் சென்று, பின்பு பெற்றோரிடம் பேரம் பேசி பணம் பறிப்பது.

இது இரண்டும் உண்மைகள். இந்தக் கட்டப் பஞ்சாயத்துக்குத் துணை நிற்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். இக்காரணங்களைக் கொண்டே வன்கொடுமை சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஆதிக்க ஜாதிக் கட்சியினர் கோருகின்றனர். கலப்புத் திருமணங்களை எதிர்க்க வேண்டும் சட்டம் போட வேண்டும் என்று சொல்கின்றனர். ஒரு படி மேலே போய் பெண்களுக்கு சொத்துரிமை கூடாது என்கின்றனர். இதை வைத்து ஜாதிய உணர்வைத் தூண்டி வாக்கு வங்கி அரசியலுக்கு ஆதாயம் தேடுகின்றனர். எனவே நாம் ஆதிக்க ஜாதிக் கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது இந்த தலித் அடையாள அரசியல் செய்யும் தலித்  கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது.

முன்பொரு முறை இதே போல் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.  வன்னிய பெண், தலித் ஆண் கலப்புமண தம்பதியர் வலுக்கட்டாயமாக நஞ்சு ஊட்டப்பட்டுக் கொல்லப்பட்டனர். பாமக அன்புமணி அப்போதைய நடுவண் அமைச்சராக இருந்தார். விடுதலைச் சிறுத்தைகள், பாமக ஒரே கூட்டணியில் இருந்தனர். கொல்லப்பட்ட தலித் ஆணின் தந்தை தனது மகன் கொல்லப்பட்டதற்காக வன்னியர் ஜாதி வெறியர்கள் மீது வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கைத் திரும்பப் பெறுமாறு வழக்குக் கொடுத்தவரை வற்புறுத்தினர் விசி கட்சியினர். காரணம் அவர்களிருவரும் ஒரே கூட்டணியிலிருந்தனர். இக்கொலையை முதன்முதலில் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்ததும் விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்களே அதை திரும்பப் பெறக் கோரினர். இதுதான் தலித் கட்சிகளின் உண்மை முகம். (கடலூர் மாவட்டம் கண்ணகி - முருகேசன் கொலை வழக்கு)
 
தற்கொலை செய்து கொண்டதன் மூலம், நாடகத் திருமணம் என்ற அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இளவரசன் என்ற இளைஞன்.

காதல் என்பது பொய், பெற்றோரை ஏமாற்றும் பிள்ளைகள் என்று சாடும் பெற்றோர்களுக்கு, பெற்றோருக்கு பயந்துதானே காதலர்கள் ஓடிப்போய்த் திருமணமும், திருட்டுக் கல்யாணமும் செய்துகொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. பெற்றோர்களிடமிருந்து உயிருக்குப் பயந்தும் ஓடிப் போக வேண்டியுள்ளது.

காதலுக்காக காதலித்தவர்கள் தற்கொலை செய்கிறார்கள். காதலித்து ஜாதிப் பெருமையைக் குலைத்த காரணத்திற்காக பெற்றோர்களே பெற்ற பிள்ளையைக் கொலை செய்கிறார்கள். எது உயர்ந்தது காதலா ?  ஜாதியா ?
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

8 கருத்துகள்:

 1. உங்கள் கருத்தை வரவேற்கிறேன். ஜாதியம் பேசும் எந்த கட்சிகளும் விளக்கி வைக்கப்படவேண்டும்.

  எது உயர்ந்தது என்று கேள்வி கேட்டு முடித்திருக்கிறீர்கள். இதில் உயிரின் மதிப்பு அடிபட்டுப்போவது அநியாயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உயிரின் மதிப்பு உயந்ததுதான். காதல், ஜாதியம் இரண்டுமே உயிரை வாங்குகிறது. ஜாதிதான் அடுத்தவன் உயிரையும், பெற்ற பிள்ளைகளையும் கூட காவு வாங்குகிறது.

   நன்றி கும்மாச்சி

   நீக்கு
  2. சூலை 6 சாதி ஒழிப்புப் போராளி தோழர்.சிற்றரசு க்கு.வீரவணக்கம் நினைவேந்தல் கூட்டம் ஊர்திப் பயணம். இடம் சாமளாபுரம் பிரிவில் தொடங்கி எல்லைக்காடு புதைமேடு வரை நேரம் காலை 10 மணிக்கு தலைமை கரு.தமிழரசன், நினைவேந்தல் உரை கு.இராமகிருட்டிணன் த.பெ.தி.க.- சுசி.கலையரசன் விசிக.- எம்.பி.செங்கேட்டையன் தவிக.- ஆனந்தன். ஆதித் தமிழர் பேரவை –வெண்மணி தமிழர் விடுதலை இயக்கம் –வழக்கறிஞர் பன்னீர்செல்வம் –ஊ.பி.இராசு ஆதித்தமிழர் விடுதலை முன்ணனி .-விடுதலைச்செல்வன் கற்பி சமூக கல்வி மையம்.- கார்க்கி சமுத்துவ முன்ணனி ..இளவவேனில் தமிழ்புலிகள்.-அ.சு.பவுத்தன் ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை . ..தமிழழகன் தமிழ்தேசக் குடியரசு இயக்கம்.. .-கலைவேந்தன் தஒவிஇ.- தமிழ்ச்செல்வன் இளைஞர் ஒருங்கிணைப்பு இயக்கம்.-திருப்பூர் குணா - வெங்கடேசன் ஆதித்தமிழர் மக்கள் பேரவை.-புரட்சிகர இளைஞர் முன்ணனி.-சு.அகத்தியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி..நன்றியுரை கதிரவன் இஒஇ..ஒருங்கிணைப்பு.. தலித் கூட்டமைப்பு தொடர்புக்கு …கரு.தமிழரசன்.9865035665 சு.அகத்தியன். 96595 50336

   நீக்கு
 2. உங்களின் அலசல்,ஆய்வு சில முரண்பாடுகள் இருந்தாலும் விவாதிக்க கூடியதே!
  21-ஆண்டுகள்,பொருளாதார நெருக்கடியில் வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களைவிட காதல் ஒன்றும் பெரிதல்ல என்பதை முற்போக்குவாதிகள் புரிந்து கொள்ளவேண்டும்.

  காதலர்களும் புரிந்து கொண்டு தாய்,தந்தையரை நேசியுங்கள்.தயவுசெய்து வாழ்க்கையை ஒரு முறை வாழ்ந்து பாருங்கள்.வழியப்போய் வம்பு தேடி,சுகமான வாழ்க்கையை சுட்டெரிக்கும் தீயில் சுட்டுவிடாதீர்கள்!ஒரு முறை சுட்டுவிட்டால் அது தொடர்ந்து வாழ்க்கை முழுவதையும் எரித்துவிடும்! முடிவில் சாம்பல்கூட மிஞ்சாது.எச்சரிக்கையுடன் காதலை தொடுங்கள்.ஒரு காதல் வழியில் இரண்டு உயிர்கள் மரணித்து,இரண்டு குடும்பங்கள் நடுத்தெருவில்… நினைக்கவே நெஞ்சு எரிகிறது….

  இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தமிழநாடு தீரன்சின்னமலைபாசறை,தீரன்சின்னமலை புலனாய்வு செய்தி ஊடகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா, பெற்றோரை ஏமாற்ற வேண்டும் என்று காதலிக்கவில்லை யாரும். காதலை ஏன் பெற்றோர்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கக் கூடாது.

   நன்றி !

   நீக்கு
 3. சிற்றரசுக்கு நடந்த கொடுமை இப்போ தான் அறிகிறேன்.
  //பெண்களை காதலித்து விட்டுச் சென்று பின்பு பெற்றோரிடம் பேரம் பேசி பணம் பறிப்பது//
  இந்த வரதச்சணை - மஹர் என்ற பகற் கொள்ளை முறைகள் திருமணத்தில் ஒழிக்கபட வேண்டும்.
  //எனவே நாம் ஆதிக்க ஜாதிக் கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது இந்த தலித் அடையாள அரசியல் செய்யும் தலித் கட்சிகளையும் ஆதரிக்கக் கூடாது.//
  ஏற்று கொள்கிறேன்.
  //தற்கொலை செய்து கொண்டதன் மூலம் நாடகத் திருமணம் என்ற அவதூறுகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் இளவரசன் என்ற இளைஞன்.//
  இன்னுமே இது கொலையில்லை என்று முடிவாகவில்லை அப்படி ஜாதி வெறியர்களின் அவதுறுகளுக்காக அவர் தற்கொலை செய்தால் கண்டிக்க தக்கது.இப்போ தற்கொலை என்ற அடிப்படையில் கூட உயர் ஜாதி குறைந்த ஜாதி பார்க்காம காதலித்தா இப்படி தான் நடக்கும் என்று பயமுறுத்துறாங்க நடுநலையானவங்க மாதிரி வந்து ஜாதி வெறியர்கள் சொல்கிறார்கள். நேற்று கூட ஒரு அம்மணியின் பதிவு படிச்சேன். நான் காதலுக்கு எதிரியில்லை ஆனா ஜாதி நிரந்தரமானது மாற்ற முடியாதது ஆகவே யதார்த்த்தை புரிந்து கொண்டு நடவுங்க என்றிருந்தது.இப்போ போற போக்கை பார்த்தா தமிழன் வெளிநாட்டு குடியுரிமை பெற்று தமிழை முற்றாக கைவிட்டு இந்தியாவுடன் தனது தொடர்புகளைன கைவிட்டு வெள்ளை இனத்தவனாக (கறுப்பு வெள்ளையனாக)மாற முடியும். மாறியும் இருக்கிறார்கள். மாறி கொண்டும் இருக்கிறார்கள்.(இலங்கை தமிழரும்) ஆனா போலித்தனமான கற்பனை ஜாதி அமைப்பைவிட்டு மாற முடியாதாம் தமிழகத்தில் என்ன கொடுமையிது:(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேக நரி !! இது சீதனம் பற்றி மட்டுமல்ல. கொஞ்சம் வசதியான, உயர்ந்த ஜாதிப் பெண்களைக் காதலிக்க வேண்டியது, பின்பு ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டோ, அல்லது செய்யாமலோ அந்தந்த ஊரிலுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கார பெரிய தலையிடம் தஞ்சமடைய வேண்டியது, பெண்ணை திரும்ப அனுப்புமாறு பெண்ணின் பெற்றோர் வருவார்கள் அவர்களிடம் சில இலட்சங்கள் கறந்து விட்டு பின்பு பெண்ணை ஒப்படைக்க வேண்டியது. இதைத்தான் கட்டப் பஞ்சாயத்து என்கிறார்கள். பாமகவினர் குற்றம் சாட்டும் காதல் நாடகத் திருமணம் என்பது இதைத்தான்.

   வெளிநாட்டுக்குப் போயும் ஜாதியைக் காப்பாற்றும் தமிழர்கள் இருக்கிறார்கள்.

   நீக்கு
  2. //வெளிநாட்டுக்குப் போயும் ஜாதியைக் காப்பாற்றும் தமிழர்கள் இருக்கிறார்கள்//
   உண்மை வெளிநாடுகளில் உள்ள ஜாதி விசுவாசிகளை பார்த்தீங்கன்னா பின்பு இந்தியாவில் ஜாதி மெல்ல மறையும் என்ற நம்பிக்கை அடியோடு போய்விடும்.

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்