அணு உலைக்கு ஆதரவாக அவதூறுகளே ஆயுதம் !!

கூடங்குளம் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே கவனித்தால் ஒன்று புலனாகிறது. அணு உலை பாதுகாப்பானது என்று கருத்து நம்பவைக்கப்படுவதை விட உதயகுமாரை தேசத்துரோகியாக்குவது மட்டுமே ஒரே வழி என்ற கருத்துகள் அதிகமாக வைக்கப்படுகின்

திரும்பவும் ஆரம்பத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் அவதூறுகள்மட்டுமே இன்னும் பரவலாக வெவ்வேறு வகையில் வைக்கப்படுகின்றன. காலம் எல்லாவற்றையும் மறக்கடித்துவிடுமல்லவா அதனால்தான்.

அணு உலை பாதுகாப்பானது நாட்டுற்கு மிகவும் இன்றியமையாதது என்றெல்லாம் விளக்க முயன்று அதில் பெரிய வெற்றி பெற முடியாத நிலையில் உதயகுமாரையும் அவரது போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அவதூறு செய்வது மட்டுமே இப்போது அணு உலை ஆதரவாளர்களின் போராட்டமாகியுள்ளது.

கடந்த ஒரு வருடமாக வன்முறையின்றிப் போராடி வந்த போதும், தற்போது உயர்நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே அடிதடிகள் நடந்தன தூத்துக்குடியில் ஒரு மீனவர், அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் முதல் பலி ஆவார். இது போக போராட்டக்காரர்களின் ஒரு குழந்தையும் பலியாகியுள்ளது. காவல்துறை உள்ளே இறங்கிய பின்னர்தான் இந்த வன்முறையும் நிகழ்ந்தது. உயிர்கள் பலியானதும் இதனால்தான்.

இதன் போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே பார்த்தால் புரியும். உதயகுமாரை அவதூறு செய்வதன் மூலமே அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு எதிரான மனநிலையை வளர்த்து வந்துள்ளார்கள். கருணாநிதியும், ஜெயாவும் ஒரே நிலைப்பாடு எடுத்த  விவகாரம், கம்யூனிஸ்டுகளும், பாஜகவும், காங்கிரஸும் ஒரே நிலைப்பாடு, வீரமணியும், இந்து முண்ணனியும் ஒரே நிலைப்பாடு. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழுக்கு உயிரையை கொடுக்கும் தமிழ்ப் போராளிகள் பலர் லேசான முனகல் மட்டுமே செய்தார்கள்.


நடுவண் அமைச்சர் நாராயண சாமி இதில் நக்சல்களின் தொடர்பு என்றார். பிரதமர் மன்மோகன் சிங் நக்சலைட்டுகளை விட ஒரு அடி மேலே போய் அமெரிக்காவின் பணம் இப்போராட்டத்தில் இருக்கிறது என்றார்.

அடுத்து தனிநபர் அவதூறுகள். கிறித்துவ நிறுவனங்களின் சதி என்கிறார்கள். ரஷ்யா இந்து நாடோ, முஸ்லிம் நாடோ, கம்யூனிஸ நாடோ  இல்லை. கிட்டத்தட்ட கிறித்தவ மதவாதிகள் ஆதிக்கம் செய்யும் நாடுதான். கிறித்தவ நாடுகளின் திட்டங்கள்தான் இந்தியாவில் பலதும் நிறைவேற்றப்படுகின்றன. அதற்குத்தான் இந்திய அரசியல்வாதிகளே முகவர்களாக செயல்படுகின்றனர். பிடி பருத்தி, பிடி கத்தரிக்காய், மேலும் சில்லறை வர்த்தகத்தில் வால் மார்ட் என்ற கிறித்த நாட்டு நிறுவனம்தான் வரப்போகிறது.

அமெரிக்காவுடன்தான் இந்தியா ராணுவ ஒப்பந்தம், அணு சக்தி ஒப்பந்தம் போட்டுள்ளது. இதெல்லாம் கிறித்தவ நாடுகளோ, மிசனரிகளோ இல்லையா ? இந்தியாவிற்கு எதிரான பொதுமக்களுக்கு எதிரான இதில்தான் வெளிநாட்டுப்பணமும், தொண்டு நிறுவனங்களும் பணத்தைக் கொடுத்து அரசியல் வாதிகளைச் சரிக்கட்டி, இத்திட்டத்தை நாட்டு மக்களை ஏற்றுக் கொள்ள வைக்கிறார்கள்.

இந்தியாவில் மின்சாரம் பற்றாக்குறை என்கிறார்கள். கூடங்குளம் தொடங்கினால் அது தீர்க்கப்படும் என்கிறார்கள். அதே வாயால்தான் பாகிஸ்தானுக்கும், இலங்கைக்கும் மின்சாரம் இந்தியாவிலிருந்து வழங்கப்படும் என்கிறார் பிரதமர். இந்தியாவிற்கே பற்றாக்குறையான மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு ஏனப்பா வழங்க வேண்டும்.

அணு உலை ஆதரவாளர்களின் மிகப்பெரியா தேசபக்திக் கோரிக்கை என்ன வென்றால், கூடங்குளம் மின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டுமாம். இது ஒரு பெரிய கோரிக்கையாம். அது நடக்காது என்பது எல்லோருக்குமே தெரியும்.

அணு உலையை நம்பித்தான் இந்தியாவே இருப்பது போல இல்லையென்றால் இந்தியாவின் வளர்ச்சியே நின்று விடுமாம். இந்த வளர்ச்சிக்குத்தான் தினமலரும் இதற்காகத்தான் இத்தனை அவதூறுகள் செய்கிறது போல. காவல்துறையும், விமானத்துறையும் மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, இவர்களை வேவு பார்ப்பதும் நாடு வளர்வதற்கா இல்லை அணு நிறுவங்களின் வளர்ச்சிக்கா ? புல்லரிக்கிறது. 




ஜெய்தாபூர் அணு மின்நிலையத்தை எதிர்க்கும், கம்யூனிஸ்டுகள், கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கிறார்கள். கேரள சிபிஎம் தலைவர் அச்சுதானந்தன் கூடங்குளம் திட்டத்தை எதிர்க்கிறார். ஆனால் காங்கிரஸின் உம்மன் சண்டி, கேரளத்திற்கு 500 மெகாவாட் கேட்டு நடுவண் அரசுக்குக் கடிதம் எழுதுகிறார்.

இதை மற்ற மாநிலத்தவர் எதிர்க்கவில்லையா ? இது பொய் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். கேரளத்தவரும் இணைந்துதான் போரட்டத்தில் இருந்தார்கள். முல்லைப் பெரியாறு பிரச்சனையினால்தான் கேரள அறிவாளர்களின் எண்ணிக்கை குறைந்து போனதாக போராட்டக்காரர்கள் சொல்லி வந்தனர். இந்தியா முழுவதும் சிறு அளவிலான போராட்டங்கள் அணு உலைக்கு எதிராகவும், கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவாகவும் நடந்துள்ளன.

எல்லாக் கட்சிகளும் எதிர்க்கின்றன, எந்தக் கட்சியும் ஆதரிக்கவில்லை ஏன் ?

தமிழகத்தில் எல்லா மக்களும் போராட்டத்தில் ஈடுபடவில்லை ஏன் ? 

உதயகுமார் நாட்டுப்பற்றுள்ளவர் எனில், ஏன் இத்தனை நாள் அமெரிக்காவிலிருந்தார் ?

அவர் ஏன் அமெரிக்காவில் இயங்கும் அணு உலைகளை எதிர்க்கவில்லை ?

குழந்தைகளையும் பெண்களையும் அனுப்பி விட்டு, படகில் ஏறித்தப்பினார் ?
சோனியா காந்தியை ஏன் எதிர்க்கவில்லை ?

என்றெல்லாம் அடித்து விடுகிறார்கள். இதெல்லாம் வயித்தெரிச்சலின் விளைவுகள் தவிர வேறொன்றுமில்லை.

வெளிநாட்டிலிருந்தால் அவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையாம். வெளிநாட்டு அணு உலையை ஆதரிப்பவர்களை தேசத்துரோகிகள் என நாம் சொல்லலாமா ?

அமெரிக்காவிலிருக்கும் அணு உலையை எதிர்ப்பது குறித்து இந்தியர்கள் ஏனப்பா கவலைப்பட வேண்டும். இந்தியாவிலிருந்து எதிர்த்தாலே அவதூறுகள் வருகின்றன. இதில் அமெரிக்காவிலிருப்பதை எதிர்க்க வேண்டுமாம்.

அவர் காவல்துறையின் காட்டு மிராண்டித்தனத்துக்கு அஞ்சி, சரணடையவே முன்வந்த அப்பாவி என்பது நமக்குத் தெரியும். போரட்டத்தை வலுவிலக்கச்செய்யத்தான் தேசத்துரோக வழக்குகள், அவர் மீதான அவதூறுகள், என அனைத்தும் நடக்கின்றன. அவர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முன்னால் வந்தால் கைது செய்து விடலாம் அல்லது கொன்று விடலாம் என்பது போலத்தானே திட்டம் போட்டிருக்கிறாரக்ள்

கிறித்தவரான சோனியா காந்தியை எதிர்க்கவில்லையாம் ? இதற்கெல்லாம் பதிலில்லை என்னிடம். ஏன் மற்றவர்கள் கேட்கலாமே கிறித்தவ சோனியா அணு உலைக்கு எதிரானவரா என்று ? ஏன் உதயகுமார், அமெரிக்காவின் இஸ்லாமிய எதிர்ப்புத் திரைப்படத்தைக் குறித்து விமர்சிக்கவில்லை அதனால் அவர் அமெரிக்க ஆதரவாளர், அவர் ஜப்பானில் அணு குண்டு வீசியதைக் கூட கண்டிக்க வில்லை அதனால் அவர் அமெரிக்கக் கைக்கூலி. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

சீனா இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் பணிகளைத் தொடங்கியபோது, தினமலர்-இந்தியர்கள் என்ன சொன்னார்கள் சீனாக்காரன் வந்துவிட்டான் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிட்டது, தென்மாவட்டங்கள் தாக்குதலுக்கு உள்ளாகும். உளவு பார்க்கிறது சீனா. எனறெல்லாம் அடித்து விட்டாரகள். அவர்கள் அணு உலையை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படி எதிர்த்திருக்கலாம் தெரியுமா ? இலங்கையிலிருந்து சீனா இந்தியாவைத் தாக்க வேண்டுமென்றால் கூடங்குளம் அணு மின்நிலையத்தை தாக்கி விடும் என்று பீதியைக் கிளப்பியிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. சீனாக்காரன் இலங்கையிலிருந்து அல்ல சீனாவிலிருந்தே அடிக்கும் வல்லமை பெற்றவன் என்பது அவர்களுக்குத் தெரியும். அதனால் அலட்டிக் கொள்ளவில்லை போலிருக்கிறது. போரில் அணு ஆயுதங்களைத்தான் பயன்படுத்தக் கூடாது, ஆனால் அண் மின் நிலையங்களைத் தாக்குவது குறித்து யாரும் பிரச்சனை செய்ய மாட்டாரகள்.

எந்தப் பிரச்சனையாகட்டும் எல்லா மக்களுமே எப்போதும் போராடியதில்லை. கொஞ்சப்பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள், எதிர்நோக்கியிருப்பவர்கள் மட்டுமே போராடுவார்கள், சிலர் எதிர்ப்பார்கள் சிலர் ஆதரிப்பார்கள். முக்கால்வாசிப்பேர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள், அல்லது அவதூறு செய்வார்கள்.

இன்னொரு பெரிய வியாக்கியானம் தொடங்கிய போது யாரும் எதிர்க்கவில்லையாம். 13000 கோடி செலவழித்த பின்னர் எதிர்க்கிறார்களாம்.  அய்யா திட்டம் தொடங்கப்பட்ட போது யாருக்கும் தினத்தந்தி படிக்கும் அறிவு கூட இல்லை. போபால் குற்றவாளி ஆண்டர்சனை தனி விமானம் மூலம் தப்ப வைத்த ராஜீவ் காந்தி இந்தத் திட்டத்தை அறிவித்த போது அக்கால நிலையை நினைத்தல் நலம். பின்தங்கிய மாவட்டதிலிருக்கும் படிப்பறிவில்லாத ஏழைகளிடம் மின் நிலையம் வந்தால், அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொன்னால் யார் அதை எதிர்ப்பார்கள். இதுதான் நிலை. செர்னோபில் விபத்து பற்றி எத்தனை பேருக்கு விழிப்புணர்வு இருந்திருக்கும்.

செர்னோபில் அணு உலை வெடித்த போது மொத்தம் 50 பேர் கூட சாகவில்லை. விபத்து நடந்த அன்று 2 பேரும், விபத்து நடந்த வாரத்தில் 28 பேர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். ஆனால் இன்று வரை அதிகம் பேரைப் பலிகொண்ட, புற்று நோய் பாதிப்புகளுடன் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்திய விபத்து அதுதான். அது போல அணு உலை விபத்து என்றால் வெடிகுண்டு வெடித்து பெரிய பாதிப்பு ஏற்படுவது போல, அல்லது சிவகாசி விபத்து போலவோ, ஹிரோஷிமா போலவோ, போபால் போலவோ அதிக எண்ணிக்கையில் இறப்புக்களோ ஏற்படாது. அது நிலம், நீர், காற்றை நச்சாக்கி மெதுவாக பல உயிர்களைப் பலிவாங்கும். அதனால் விபத்தைக் கண்டு நமக்கு உச் கொட்டக் கூட தேவையிருக்காது. 20 பேர்கள் விபத்தில் செத்தால் 2 நாளைக்கு அதைப் பேசுவார்கள், ஆனால் நாளுக்கு நாள் நடக்கும் விவசாயிகளின் தற்கொலைகளை அது இலட்சத்தைத் தாண்டி விட்ட போதும் கூட யாரும் கண்டு கொள்வதில்லை, அது அவர்களை பாதிப்பதுமில்லை என்பது போல அணு விபத்து நடந்தால் பாதிப்பின் அளவு நமக்குத் தெரியாது. அந்தத் துணிச்சலில்தான் பாதுகாப்பான அணு உலை என்கிறார்கள்.

எதிர்க்கவில்லை என்பவர்களுக்குத் தெரியும். வைக்கோ எதிர்த்துப்பேசியிருக்கிறார். இலங்கையிலிருப்பவர்களும் எதிர்த்தார்கள். தமிழீழப்பிரச்சனையின் காரணமாக அக்குரல் அதிகமாகக் கேட்கவில்லை. இந்தியாவின் பல அறிவாளர்களின் எதிர்ப்பு, ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்திருக்கின்றன. தற்போது கூட ஃபுகிஷிமா வெடிப்பின் பின்னர்தான் அச்சம் பன்மடங்கு உயர்ந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. தொழில்நுட்பத்தில் உச்சம் கண்ட ஜப்பானியரே கையைப் பிசைந்து கொண்டிருக்க, இந்தியர்கள் எல்லாம் அணு விஞ்ஞானிகளே சொல்ல முடியாத அணு உலை பாதுகாப்பானது என்று சொல்கிறார்கள்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. பெயரில்லா15/9/12 12:47 AM

    அணு உலையை திறக்க வேண்டும் என பல வணிகர்கள் போராடுகிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்றதும் எதிர்க்கிறார்கள்.
    அணு உலையை உடனே திற - என தஞ்சை விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள். இருந்த விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் காரனுக்கு விற்றுவிட்டு, காவேரி தண்ணீர் வேணும் என கர்நாடகாவிடம் பிச்சை கேட்கிறார்கள். மனசாட்சிக்கு விரோதமாக விவசாயிகள் நடந்து கொள்வதால்தான், கர்நாடகாக்காரன் ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டேன் என்கிறான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி !! இங்கு பிரச்சனைக்குக் காரணமான அரசு தப்பிக்கொள்ள இரு வேறு போராட்டங்களை மோதவிட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறது. இங்கு இரண்டு போராட்டங்களுக்குக் காரண்மே அரசுதான். காவிர் நீரை உச்சநீதி மன்ற தீர்ப்புக்குப் பிறகும் கர்நாடகா திறக்க மறுக்கிறது. இதில் இனவாதத்தைக் கிளப்பிக் கர்நாடகா அரசியல்வாதிகள் விளையாடக் கூடும். கூடங்குளம் தமிழகத்தில் பலரது தன்னலத்தையும் இரட்டை வேடததையும் ஏற்கெனவே நாம் அறிந்ததுதான்.

      நீக்கு
  2. பெயரில்லா15/9/12 5:19 AM

    நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை இந்த இடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    16 தடவை தெரியுமா?


    1. ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?

    2. கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?

    4. புற்று நோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்று நோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா ?

    5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது; அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால், இப்போது அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்துவருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா ?

    6. 10 ஆண்டுக்கொரு முறை அடுத்த 10 ஆண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும் சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?

    7. இந்தியாவில் ஒரு அணு உலை கூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் 30 ஆண்டு கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும உங்களுக்குத் தெரியுமா ?

    8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்ட்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செய்யும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய்விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும் கிடைக்கப்போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில் கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப்பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா ?

    10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    11. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான் பணிகளுக்காவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா ?

    12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் சென்னை முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

    13. உலகத்தில் எங்கேயும் எந்த இன்சூரன்ஸ் கம்பெனியும் தனி நபர்களுக்கு விமான விபத்து முதல் ஆயுள்காப்பு வரை இன்சூரன்ஸ் கொடுத்தாலும், அணு உலை விபத்து பாதிப்பு இன்சூரன்ஸ் மட்டும் தருவது கிடையாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?

    14. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தி துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தை விட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளை தெரிந்து கொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா ?

    15. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப் எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று தமிழக அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக் குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

    16. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி தமிழக அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி !! இது எழுத்தாளர் ஞாநி எழுதியது. இது பழையதுதான் என்றாலும், மீண்டும் மீண்டும் நினைவூட்டப்பட வேண்டியுள்ளது.

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்