கூடங்குளம் அணு உலை - நடுநிலை கருத்துக்களின் உண்மை நிலை !!


தற்போது நடந்து கொண்டிருக்கும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் பல தரப்பிலிருந்து எதிர்ப்புக்களும் ஆதரவுகளும் வருகின்றன. நான் அணு உலைக்கு எப்போதுமே எங்குமே எதிரான நிலைதான். இயற்கை சாராத இயற்கைக்கு எதிரான, சுற்றுப்புறச் சூழலுக்கு எதிரான, மனிதர்க்கு எதிரான, அழிவு தரக்கூடிய, அல்லது அழிக்க முடியாத கழிவுகளை உருவாக்கும் எவ்வகையான திட்டமுமே என்னால் ஆதரிக்கப்படாது. எந்த ஒரு இயற்கை ஆர்வலரும் ஆதரிக்க மாட்டார்கள். இயற்கைக்கு எதிரான எல்லாவற்றையும் எதிர்ப்பார்கள். இதை  இயன்ற வழிகளிலெல்லாம் சொல்லி விட்டாயிற்று. எதிர்ப்பாளர்களின் கருத்துக்கள் என்னை பெரியதாக ஒன்றும் கவரவில்லை, எனது நிலையை மாற்றிடவில்லை. சில இடங்களில் பதில் சொல்ல இயலாத விடை தெரியாத விஞ்ஞான விளக்கங்கள் என்னை மௌனமாக்கிய போதும் கூட.

அணு உலை என்பது அணு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையைப் போல என்று நான் கற்பனை செய்து கொள்ள வில்லை. ஆனால் ஒரு சிறு விபத்து என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று படித்ததன் விளைவே அதன் மீது கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.  அணு உலை விபத்துக்களினால் இறந்தவர்கள்  போகட்டும், அதனால் பாதிப்படைந்தவர்கள் எதிர்கொள்ளும் விளைவுகள், அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் உதவிகள் இது குறித்த விபரங்கள்தான் இன்னும் அச்சுறுத்துகின்றன. ஒரு வேளை ஒரு வேளைதான், ஏதாவது நடந்து விட்டால் அரசின் உதவிகள் இன்ன பிறவும் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி வரலாறு ஏற்கெனவே பல பாடங்களை கற்றுத் தந்திருக்கிறது.

இன்னொன்று இந்த வளர்ச்சி என்பதையெல்லாம் நான் ஏற்றுக் கொள்வதேயில்லை. இந்த வளர்ச்சியினால்தான் சிலருக்கு வசதிகள் கிடைத்திருக்கலாம். ஆனால் முப்போகம் விளையும் விவசாய நிலத்தைப் பறித்து அதில் செல்பேசி நிறுவனத்தையோ, மகிழுந்து தயாரிக்கும் நிறுவனத்தையோ கட்ட வேண்டும் என்று அரசு காவல்துறையையும், இராணுவத்தையும் வைத்து விவசாயிகளை அச்சுறுத்தும் திட்டங்களைத்தான் செயல்படுத்தி வருகிறது. இது போன்றதொரு திட்டம்தான் அணு உலை மின்சாரம். வளரும் நாட்டுக்குத் தேவை. இது இல்லாவிட்டால் நாட்டிற்கு மின்சாரம் கிடைக்காது, இந்தியா வல்லரசாவது தடைப்படும் இது மாதிரியான கதைகளெல்லாம் நம்ப முடியாது. 100 செயற்கைக்கோள்கைளை ஏவுவதை விட எல்லோருக்கும் சோறு கிடைக்க வேண்டும், இருப்பவனிடம் வளர்ச்சியின் பேரால் இருப்பவை பிடுங்கப்படக் கூடாது என்பதையே விரும்புகிறேன்.

நடுநிலையாளர்களின் கருத்துக்கள்

எல்லா இடங்களிலும் நடுநிலை எடுக்க முடியாது. ஒன்று வேண்டு அல்லது வேண்டாம் என்பதே இங்கு நிலைப்பாடாக இருக்க முடியும். அதிமுக அல்லது திமுக, விடுதலைப்புலிகள் அல்லது இலங்கை அரசு, அமெரிக்கா, ரஷ்யா இது போன்ற இடங்களில் இரண்டையும் எதிர்த்து நடுநிலை எடுக்கலாம், ஒரு கருத்தையோ அல்லது தீர்வையோ சொல்லலாம். ஆனால் சில இடங்களில் ஏதாவது ஒன்று மட்டுமே இருக்க முடியும். இடது சாரியா வலது சாரியா என்றால் நான் நடுநிலை என்று சொன்னால் அது வலதுசாரிக்கு ஆதரவாகவே முடியும். அது போல இங்கே அணு உலைக்கு எதிர்ப்பும் இல்லாமல் ஆதரவும் இல்லாமல் நடுநிலைக் கருத்து என்று சிலவற்றைக் காண நேர்கிறது. நடுநிலை என்ற பார்வை அல்லது போர்வையில் என்ன சொல்கிறார்கள் என்றால் அணு உலை வேண்டும் என்கிறார்கள்.

நடுநிலை பார்வையின் படி,

அணு உலை எதிர்ப்பாளர்கள் பல நாடுகளில் அணு உலை பாதுகாப்புடன் இயங்கி வருவதை மறைக்கிறார்கள், எல்லா அணு உலையும் ஆபத்தானதில்லை

எல்லா நாடும் அணு உலைகளைக் கைவிட்டு விட விருப்பமில்லாமல் இருக்கின்றன.

தற்போதைய நிலையில் இதை விட்டால் வேறு வழியே இல்லை

அல்லது

தமிழனுக்கு உணர்ச்சி வசப்பட மட்டுமே தெரியும், கேட்டுப்புரிந்து கொள்ளும் பொறுமை கிடையாது.

வழக்கமான போராட்டக்காரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், உதயகுமார் மீதான அவதூறுகள்

பாமரர்களை ஏமாற்றும் சில அறிவிலிகள்

மக்களுக்கு அச்சத்தைப் போக்க வேண்டும் அணு உலை திறக்க வேண்டும்

இந்த வகைகளில் இருக்கின்றன. இவை அனைத்தும் அணு உலை ஆதரவாளர்களின் கருத்துத்தான். பல நாடுகளில் இருந்தாலும் இயங்கினாலும் அவை எதிர்க்கப்படும், எல்லாப் போராட்டமும் எதிர்ப்புக்களும், ஆதரவும் சூழல் ஆர்வலர்களின் கருத்துக்களும் கூடங்குளம் அளவுக்கு பெரிய அளவில் கவனமும், ஆதரவும், ஊடக வெளிச்சமும் படாமலே போயிருக்கலாம். சிறிய அளவில் இருந்திருக்கலாம். ஃபுகுஷிமா விபத்து வரை உதயகுமாரையே கூடங்குளத்திலேயே பல பேர் நம்பவில்லை.

உதயகுமார், தனிநாடு கேட்கவில்லை, தடை செய்த இயக்கங்களை ஆதரிக்க வில்லை, யாரையும்  கொல்லவுமில்லை, வன்முறையில் ஈடுபடவில்லை. பின்பே இத்தனை அவதூறுகள் ? இத்தனை நாளாக நல்லவர்கள், அறிவாளிகள் நடுநிலையாளர்கள் என்று சொல்கிறவர்கள் கூட அவதூறு மழை பொழிகிறார்கள். தினமலரைப் போல உருமாறுகிறார்கள், திரைக்கதை எழுதிகிறார்கள். அணு உலை வேண்டாமென்று சொல்ல இத்தனை தரவுகளும், ஆதாரங்களும் உலகெங்கும் கண்டுமா இன்னும் தூங்குவது போல நடிக்கிறார்கள். 

படம் - நன்றி : ஃபேஸ்புக்

தமிழ்நாட்டு தமிழனின் மின்சாரத் தேவைக்குத்தான் தினமலரும் தினகரனும் செய்தியை வெளியிடுகிறார்கள் போல. எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் போல.

சிந்திப்பவர்களுக்கு அத்தாட்சிகள் உண்டு. மனசாட்சி இருந்தால் !!!
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்