தற்கொலையை நோக்கித் தள்ளப்படும் தமிழ்வழி மாணவர்கள் - ஆங்கில வழியில் படிப்பது தவறா ?

சமீபத்தில் நடந்த இரு தற்கொலைகள் நடந்தன. அது வெளிச்சம் பெற்றதற்குக் காரணம் தற்கொலை செய்து கொண்ட இருவரும் அண்ணா பல்கலைக் கழக மாணவர்கள். எவ்வளவு சூடாக வெளிவந்ததோ அதே வேகத்துடன் மறக்கப்பட்டும் விட்டது. 

இவ்விரு தற்கொலைகள் என்னை அதிகமாக பாதிக்கக் காரணம் தமிழ்வழியில் படித்ததால் கல்லூரியில் படிக்க முடியவில்லை என்று தற்கொலை செய்தவர்கள்; இவ்விருவருமே நன்கு படிக்கக் கூடியவர்களாக இருந்ததினால்தான் மாநிலத்திலேயே முதல் நிலையிலிருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தில் இடம் பெற்றார்கள். அவர்கள் தற்கொலைக்குக் காரணமாக சொல்லப்படும் காரணங்களில்  அவர்கள் தமிழ் வழியில் படித்தவர்கள், அதனால் ஆங்கிலப்புலமை குறைவு காரணமாக கல்வியை சரியாகக் கற்க முடியாமலும், சக மாணவர்களின் கிண்டலினாலும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதே என்னை மிகவும் பாதித்தது, காரணம் நானும் இது போன்ற பிரச்சனையை எதிர்கொண்டு தோற்றிருக்கிறேன். 

மேலும் இரு வருடங்களுக்கு முன்னர் ஒரு ஜோதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார் அவருக்கும் தமிழ் வழிக் கல்வியில் பயின்றதால் ஆங்கிலத்தில் படிக்க சிரமம் என்பதை ஒரு காரணமாக சொன்னார்கள். அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை.  காதல் தோல்வி, பகடி வதை (Ragging) போன்ற காரணங்களும் தற்கொலைக்குக் காரணம் என்று கூறப்பட்டது.

தற்கொலை செய்து கொண்ட மூவர்

முதலில் வருபவர் இரு வருடங்கள் முன்பு தற்கொலை செய்து கொண்ட ஜோதி.  அவர் எடுத்த மதிப்பெண்கள்

10 (S.S.L.C) - 475/500 

12 (H.S.L.C) - 1115/1200 
ஜோதி
அடுத்ததாக மணிவண்ணன்.  இவர் தனித்துவமான ஒரு மாணவராக இருந்திருக்கிறார். அவரைப்பற்றித் தெரிந்து கொள்ள இதைப் படிக்கவும். 10 வதில் 461 மதிப்பெண்கள். +2 வில் 1159. ஆனால் மூன்று வருடங்களில் பொறியியலில் 26 பாடங்களில் அரியர் வைத்திருந்திருக்கிறார்.  



மூன்றாவது தைரிய லக்ஷ்மி என்ற மாணவி எடுத்த மதிப்பெண்கள் குறித்த செய்திகள் எனக்குத் தெரியவில்லை. அவர் எழுதிய கடிதம்   அவரது பிரச்சனையைச் சொல்கிறது. அவர் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிப்பவர் என்பதால் எப்படியும் 1100 க்கும் மேல் எடுத்திருப்பார்.

     
       
 இதில் முதல் இருவருமே வழக்கமாக நாம் கேள்விப்படும் சிரமம் நிறைந்த 
பின்புலம், வறுமை எனபனவற்றைத் தாண்டி தமது கல்வியில் சிறந்து 
விளங்கினார்கள். குறிப்பாக மணிவண்ணன். +2 வில் 1167 என்பதெல்லாம் சராசரி மாணவர்களால் முடியவே முடியாது. மனப்பாடம் செய்தாலும் முடியாது.

இவர்கள் மூவரின் தற்கொலைகளுக்கும்
காதல் தோல்வி, குடும்பப் பிரச்சனை, பகடி வதை என்று சில காரணங்கள் சொல்லப்படுகின்றன. தமிழ்வழியில் படித்ததால்தான் தாழ்வு மனப்பான்மையாலும் கல்வி குறித்த அச்சத்தினாலும் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் இதுவும் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது. எனவே அக்காரணத்தை முன்னிலைப்படுத்தி எழுதுகிறேன். கிராமப்புறத்திலிருந்து சென்ற இவர்களுக்கு சென்னை கலாச்சார அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கும்.

சரி இப்போது தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் கல்லூரியில் எதிர்கொள்ளும் பிரச்சனை என்று பேசத் தொடங்கினால் வரும் கருத்துக்கள்

1. தாய்மொழியில் படிப்பதுதான் அறிவு வளர வழிவகுக்கும், எல்லாத் துறையிலும் சிறந்து விளங்குகிறவர்கள் அனைவரும் தமது பள்ளிக் கல்வியை தாய்மொழியில் கற்றவ
ர்களே

2. ஆங்கிலம் எனபது அறிவின் அடிப்படையல்ல வெறும் மொழி மட்டுமே

3. துறை சார்ந்த அறிவு இருந்தால் போதும் ஆங்கில அறிவு அவசியமன்று

4. ஆங்கில வழியில் படித்தவர்கள் எல்லாம் அறிவாளிகள் அல்ல.

5. நான் தமிழ்வழியில்தான் படித்தேன், கல்லூரியில் ஆங்கில வழியில் படித்தவர்களை விட நான்தான் அதிக மதிப்பெண் பெற்றேன்.

இப்படியாக பல கருத்துக்கள் வருகின்றன. அடுத்ததாக ஆங்கில வழி குறித்த விமர்சனமாக வருகின்றன

1. பெற்றோர்களின் ஆங்கில மோகம்

2. ஆங்கிலம் மேன்மைபடுத்தப்பட்டு தமிழைத் தாழ்வு படுத்துகிறது

3. ஆங்கில வழியில் படித்தவர்களை விட தமிழ் வழியில் படித்தவர்கள் தெளிவானவர்கள்

4. ஆங்கில வழியில் படித்தவர்கள் தெளிவில்லாதவர்கள், மனப்பாடம் செய்து வாந்தியெடுப்பவர்கள்


5. அவர்களுக்கும் ஆங்கிலம் சரியாகத் தெரியாது

இப்படியாக பலவிதமான கருத்துக்கள். முதலிலிருந்து வருகிறேன். சுருக்கமாக இக்கருத்துக்கள் யாரைச் சார்ந்து இருக்கின்றன என்று பார்த்தால் ஆங்கில வழியில் படித்த சராசரி மாணவர்களையும், தமிழ் வழியில் படித்த சிறந்து விளங்கும் மாணவர்களையும் ஒப்பிட்டது போல இருக்கிறது. ஆங்கில வழியில் படித்த சிறந்த மாணவர்களையும், தமிழ் வழியில் படித்த சராசரி மாணவர்களையும் இதே போல் ஒப்பிட்டுப் பார்த்தால் மேலே சொன்ன கருத்துக்கள் அத்தனையும் மாறி விடும்.


 முதல் கருத்து, தாய்மொழியில் படித்து அறிவு பெற்று பின்பு ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களே அதிகம் என்பது, இதில் ஒரு வகுப்பில் 40 பேர் இருக்கிறார்கள் எனில், அதில் 5 பேர் மட்டுமே சிறந்த மாணவர்களாக இருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கழித்துக் கட்டப்படுகிறாரகள். இதில் தமிழ் வழியாக இருக்கும் பட்சத்தில் அந்த 5 பேரில் ஒருவர் திணறி விடுவார். மேலே தற்கொலை செய்து கொண்டவர்களின் மதிப்பெண்களைப் பாருங்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களே இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளும்போது, சராசரி மாணவரகளின் நிலையை எண்ணிப் பாருங்கள். ஆனால் சிலர் மிக எளிதாக அதை எதிர்கொண்டு பழகி விடுகிறார்கள் பெரும்பான்மையினரால் அது முடிவதில்லை. யாராவது நான் தமிழ்வழியில் படித்தேன் இப்போது எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நான் நிபுணத்துவம் பெற்று விட்டேன் என்றால் மகிழ்ச்சி வாழ்த்துக்கள். எனக்கு வெற்றி பெற்றவர்கள் குறித்துப் பிரச்சனையில்லை. இதைப் படித்து நேரத்தை வீணாக்க வேண்டாம். தோல்வியடைபவர்கள் குறித்தே கவலை. மீதப்பேர்கள் உங்களைப்போல் வெற்றி பெற முடியாததற்கு ஆங்கிலப் போதாமைதான் காரணம். எத்தனை பேர் பொறியியல் படிக்கிறார்கள் வெளிவருகிறவர்கள் முக்கால்வாசிப்பேர் தகுதிக் குறைபாடுகளுடன் இருக்கிறார்கள் அதற்கு ஒரு காரணம் இந்த எழவெடுத்த ஆங்கிலம்.

ஆங்கிலம் வெறும் மொழி மட்டுமே என்பதற்குப் பதில்: அந்த வெறும் மொழி நமக்குத் தெரியவில்லை என்பதுதான் இங்கு பிரச்சனை. ஆங்கிலம் என்பது ஒரு மொழி. ஆனால் நம் கல்விமுறை அதை மொழியாகக் கற்பிப்பதில்லை. அதை ஒரு பாடமாகத்தான் கற்பிக்கிறது. கட்டுரைகள், மனப்பாடக் கவிதைகள் இரண்டையுமே தமிழ் வழி மாணவர்கள் மனப்பாடம் செய்துதான் எழுத வேண்டியுள்ளது. அதனால் மொழியறிவு என்பது தமிழ் வழி மாணவர்க்கு இன்னும் தொலைவிலிருக்கிறது. மேலும் ஒரு மொழியைக் கற்க வேண்டுமெனில் முதலில் அதில் நான் பேசுவதற்கும், கேட்டுப் புரிந்து கொள்வதற்கும் ஏற்கெனவே அதிகம் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். நமக்கு அந்த வாய்ப்பில்லை. ஆங்கில வழியில் படிப்பவர்கள் குறைந்த பட்சமாக மொழியுடன் 10 வருடங்களாக அறிமுகமிருப்பதால் கல்லூரிக்குச் செல்லும் போது பெரிய பிரச்சனையாக இருப்பதில்லை. ஒரு மொழியைக் கற்க வயது தடையில்லை. ஆனால் எப்போது மொழியைக் கற்பது 17 வயது வரை உயர்நிலைக் கல்வி கற்று பின்பு தொழிற்கல்வி கற்கும்போதா ? சரி மொழியைக் கற்பதா இல்லை பாடத்தைக் கற்பதா ? கல்லூரியில் படிக்க வேண்டுமென்றால் வெளிநாட்டு எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் எழுதிய தடியான நூல்களை நாம் கற்க வேண்டும் அல்லது படிக்க வேண்டும் அதை செய்ய அதிகப் படியான ஆங்கிலப் புலமை வேண்டும், இந்த நேரத்தில் உட்கார்ந்து ஆங்கிலத்தை எங்கே கற்பது ?

துறை சார்ந்த அறிவு போதும் ஆங்கில அறிவு அவசியமன்று என்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக கணிதம், கணிணி அறிவியல்,  தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் போன்ற துறைகள், ஓரளவுக்கு மொழிப்புலமை அவசியப்படாதவை. மேலும் துறைசார்ந்த அறிவுடன் ஆங்கிலப்புலமையும் சேர்ந்து  இருப்பவர்தான் துறை சார்ந்த அறிவுமட்டும் கொண்டவரை விடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். மருத்துவம், அறிவியல் துறைகள் இதில் சேராது. இதில் படிப்பவர்கள் நிச்சயம் திணறுவார்கள்.

பெற்றோர்களின் ஆங்கில மோகம் என்பது மிகப்பெரும் பொய். இதை எல்லோரும் அடிக்கடி சொல்கிறார்கள். இது அறியாமையா இல்லை அயோக்கியத்தனமா ? "என்னை ஏன் ஆங்கில வழியில் சேர்க்கவில்லை? " என்று நான் இன்னும்கூட அப்பாவிடமும் உறவினரிடமும் கேட்பதுண்டு. நான் கல்லூரியில் சேர்ந்தபின்பு பட்ட அவதியினால், நான் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் சொல்வது இதையே "தயவு செஞ்சு குழந்தையை தமிழ் வழியில் சேர்த்து விடாதீர்கள்". 


பெற்றோர்கள் என்பவர்கள் யார் ? கல்வி கிடைக்கப்பெறாதவர்கள். தம் குழந்தைகளாவது நன்றாக வரட்டும் என்றுதானே ஆங்கில வழியில் சேர்க்க அலைகிறார்கள். தனியார் பள்ளிகளில் தரம் அதிகம் என்று நம்புவது பிழைதானென்றாலும் அதற்கு அவர்கள் மட்டுமே காரணமா ? கல்வி அளிப்பதிலிருந்து அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டது, தனியார் பள்ளிகள் ஊர்தோறும் கட்டப்படுகின்றன. அரசுப் பள்ளிகளின் இலட்சணம் அனைவருக்குக்குமே தெரியும். அரசுப் பள்ளி ஆசிரியர்களே கூட அங்கு தமது பிள்ளைகளைப் படிக்க வைக்க விரும்புவதில்லை. பெற்றோர் தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் சேர்ப்பது ஆங்கில மோகத்தினாலல்ல, அவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறையினால்தான் இதை என்னவோ வரதட்சிணை கேட்கும் பெற்றோரின் பேராசை, குழந்தைக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கும் மாயையைப் போல் சித்தரிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை.

இன்னொன்று தமிழ்ச் சூழலில் தமிழ் குறித்த எதுவுமே உணர்ச்சிகரமாக மாறிவிடுகிறது. தமிழ் வழிக்கல்வி குறித்த விவாதமும்தான். தமிழில் பேசுவது இழிவு ஆங்கிலம் பேசுவது உயர்வு என்பது மாயை என்ற கருத்தை பாமரர்களிலிருந்து மும்பை எக்ஸ்பிரஸ் என்ற பெயர்தான் வைப்பேன் என்று அடம் பிடித்த கமல் வரை எல்லோரும் கூறுகிறார்கள். வெத்து பந்தாவுக்கு சிலர் பேசிக் கொள்வதை வேண்டுமானால் இதற்கு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு வேலைவாய்ப்பு முகாம், நேர்காணல் என்று எங்கு போனாலும் ஆங்கிலமே அடிப்படை, ஆங்கிலத்தில் சரளமாக உரையாடுவதையே முதல் தகுதியாக வைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் கௌரவக் குறைச்சல். பெருமை என்பதைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் ஆங்கிலப் புலமை அடிப்படைத் தகுதிகளில் ஒன்று என்று விளங்கும். தமிழில் பேசவேண்டும் என்பது மற்ற துறைகளில் இருக்கும் தமிழின் அளவுதான் சமூகத்திலும் எதிரொளிக்கும். இதை ஊடகம் கலைத்துறை, கல்வித்துறை என அனைத்திலும் தமிழ் மகுடம் சூடும்போது நிகழும் அதை விட்டு தனிப்பட்ட நபரின் தவறாகப் பார்ப்பது எவ்வகையிலும் உதவாது. மாறாக எதிரிவிளைவையே ஏற்படுத்தும். தமிழில் பேசு என்று கல்லூரி முடித்துவிட்டு வேலை தேடும் அல்லது வேலை கிடைக்காத இளைஞனிடம் சொல்வதற்கு  என்ன நேர்மை இருக்கிறது. இதை அவர்களிடம் சொல்லி அவர்களின் கருத்தைக் கேளுங்கள் தமிழ் வழியில் பயின்றதற்காக வருந்துகிறீர்களா இல்லை பெருமப் படுகிறீர்களா என்று. முதலில் நம் தமிழகம் ஒன்றும் ஜப்பானோ, ஃப்ரான்சோ, ஜெர்மனியோ அல்ல. குறைந்த பட்சம் ஈழத் தமிழர்களுக்கு சிங்கள அரசால் வழங்கப்பட்ட உரிமைகளைக் கூட இங்கு சாதிக்க வில்லை என்பது கசப்பான உண்மை. அங்கு மருத்துவமே தமிழில் கற்பிக்கப்படுகிறது என்றும் கேள்விப்பட்டேன். இங்கு பொறியியல் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்கிலத்தில் கற்பவர்களுடன் ஒப்பிடும்போது அதன் தரம் குறித்து எனக்கு மனநிறைவில்லை. நேர்காணல் என்று வரும்போது முதல் சுற்றிலேயே தமிழ் வழி மாணவர்கள் வெளியேற்றப்படுவார்கள். தற்பொது தமிழ் வழியில் படிப்பவர்களுக்கு படித்து முடித்துவிட்டு வந்து வேலை கிடைத்தால் மகிழ்ச்சி. 

சற்றே சிந்தித்தால் விளங்கும், நீல நிற பாவாடை தாவணிகளும், காக்கிக் கால் சட்டையும், வெள்ளைச் சட்டையும் கொண்ட அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும், நகர்ப்புறங்களில் கழுத்துபட்டை இறுக்க வாகனங்களில் செல்லும் வெள்ளைத் தோல் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் ஆங்கிலக் கல்வியும் சம அறிவைக் கொண்டதென்றா கருத முடியும் ? இதில் ஆங்கில வழியிலேயே
ஆங்கிலோ இந்தியன், சிபிஎஸ்சி என பல வகைகள் இருக்கின்றன. சமச்சீர் கல்வியும் மிகவும் எளிமையாக உள்ளதாகவே புலம்புகிறார்கள்.

தமிழகம் இந்தியாவின் அடிமை. இந்தியா அமெரிக்காவிற்கு அடிமை. இங்கு ஆங்கிலம்தான் சோறு போடும். தமிழ் வழியில் கற்று விட்டு கல்லூரியில் சென்று அவர்கள் படும் சிரமங்கள் எத்தனை என்று அவர்களுக்குத்
தான் தெரியும். நேர்காணலில் பட்ட அவமானங்கள் அவர்களுக்கு தமிழ் மீதான வெறுப்பைத்தான்  வரவழைத்திருக்கும். தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகை, ஆங்கில எழுத்துக்கள் தார்பூசி அழிப்பது என்பதெல்லாம் எள்ளி நகையாடப் பட வேண்டியவை. தமிழை வளர்க்கும் ஆக்கப்பூர்வமான வழிகள் ஆயிரம் இருக்கின்றன. குறைந்த பட்சம் கல்வித் துறையில் தமிழ் மொழியைப் படித்தவர்க்காவது வேலை வாய்ப்புக்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பணிகள், கல்லூரிகளில் தமிழில் இல்லை பின்பு பள்ளியில் மட்டுமே தமிழில் கல்வியை வைப்பது யாருக்காக. தமிழ் வழியில் படிப்பவர்க்கு ஆங்கிலம் சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட வேண்டும் கல்லூரியில் அல்ல, மூன்றாம் வகுப்பிலிருந்தே. இதெல்லாம் நடக்கவா போகிறது. அதற்கு முதலில் கல்வி முழுமையுமே அரசாங்கத்தின் பொறுப்பில் வர வேண்டும். தரமான சமமான இலவசக் கல்வி அனைவருக்கும் கற்பிக்கப் பட வேண்டுமென்பதே என நிலைப்பாடு. என்னுடைய வலைப்பூவின் பெயரும், புனைப்பெயருமே என்னுடைய தமிழ் ஆர்வக்கோளாறுக்குச் சான்று பகரும்மென்று நினைக்கிறேன். ஆனால் என்னுடைய சொந்த அனுபவத்தில் எனக்கு ஆங்கிலப் போதாமைதான் எதிரி, எனக்கு  விருப்பமான துறையில், வெற்றி பெற முடியாமல் கல்வியைக் கூட முறையாகக் கற்க விடாமல் செய்தது.  எனவே என் குழந்தையை தமிழ் வழியில் கல்வி கற்க வைப்பதில் எனக்கு விருப்பமில்லை. தமிழ் பெயர் வைப்பது தமிழைக் கற்பிப்பது, தமிழுணர்வு ஊட்டுவது என்பதெல்லாம் இதில் சேராது. இது சரிதானென்று எல்லோர்க்கும் என்னால் பரிந்துரைக்கவும் முடியவில்லை. யாராவது தமிழ் வழியில் சேர்க்க விரும்பினால் வாழ்த்துக்கள் !! அக்குழந்தை தமிழ் வழியில் கற்று நிபுணத்துவம் பெற்றால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பெண்கள் பெற்று அண்ணா பல்கலையில் இடம் பெற்றுப் படிக்க முடியாமல் தற்கொலைகளைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு கல்வி இருக்கின்றதென்றால் இன்னும் பல ஆயிரக் கணக்கான பள்ளி கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை நினைத்துப் பார்த்தால் புரியும் இது எவ்வளவு பெரிய பிரச்சனை என்று. தற்கொலை செய்தவர்கள் கோழைகளல்ல பலிகள். நான் தமிழ் வழிக்கல்விக்கு ஆதரவளிக்க மாட்டேன்
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

7 கருத்துகள்:

  1. நிறைய மாணவர்கள் திடீரென்று எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்தில் படிக்க சிரமப்படத்தான் செய்கிறார்கள். நல்ல அலசல்! கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு போராடிவிட்டார்கள் என்றால், எப்படியும் ஒரு இரண்டு ஆண்டுகளில் நன்றாக ஆங்கிலம் வந்துவிடும்.

    தாங்கள் எனக்குத் தந்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்மணி !

      அந்த மாதிரி சிரமப்பட வேண்டாம் என்றுதான் தமிழ் வழியில் படிக்க வேண்டாம் என்கிறேன். எத்தனை அரியர் வைத்து இன்னல் படுவது ? ஆங்கில வழியில் படித்துவிட்டு வந்தால் கல்லூரியில் அதிக சிரமமின்றி படிக்க முடியும். தமிழ் வழியில் படிப்பது தேவையில்லாத சுமை. நானும் அப்படித்தான் 6 மாதம், ஒரு வருடம் இரண்டு வருடம் என்று பல்லைக் கடித்துக் கொண்டு இருந்தேன். கடைசி வரை எனக்குப் புரியவேயில்லை. இது என்னுடைய அனுபவம் மட்டுமே. பொறியியல் மருத்துவம் போன்றவற்றைப் படிக்க விரும்புகின்ற மாணவர்கள் தமிழ் வழியின் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கக் கூடாது.

      நன்றி !

      நீக்கு
  2. ஒரு தவறு நடந்து விட்டது மேலே குறிப்பிட்டுள்ள தைரியலக்ஷ்மி என்பவர் பொறியியல் தமிழ் வழியில் படித்தவராம். சரியாக கவனிக்காமல் எழுதி விட்டேன்

    பதிலளிநீக்கு
  3. தமிழானவன் என்ற பெயர் வைத்துக்கொண்டு தமிழ் வழிக் கல்வி வேண்டாம் என்று சொல்ல உங்களுக்கு தில் வேண்டும். பாராட்டுகிறேன். தமிழ் என்றாலே உடனே நம் ஆட்கள் உணர்ச்சி வசப்பட்டு போய்விடுவார்கள். நீங்கள் கூறியிருக்கும் அத்தனை கருத்துகளும் நடைமுறை யதார்த்தங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரிகன்

      அது வலைப்பூவிற்கான ஒரு புனைப்பெயர்தானே ? தமிழ் என்று இருக்கவேண்டும் தமிழிலும் இருக்கவேண்டும் என்று வேண்டுமென்றே வைத்தது :)

      தமிழ் என்றாலே உணர்ச்சி வசப்படும் ஆட்களின் உணர்வுகளை நானும் மதிக்கிறேன். நடைமுறை வேறுவிதமாக அன்றோ இருக்கிறது ? ஹிந்திக்காரர்கள் தமிழ்நாட்டில் பானிபூரிக்கடை, பீடாக்கடை வைத்துப்பிழைக்க வருகிறார்கள். இங்கிலீஷ்காரர்கள் என்ன கடை வைத்துப் பிழைக்க வருகிறார்கள் என்று பார்த்தால் விளங்கி விடும் எளிதாக. ஹிந்தியும் ஆங்கிலமும் ஒன்றல்ல. இப்போதைய ஆங்கிலத்தின் வளர்ச்சிக்கு தமிழ் வர பல ஆண்டுகளாகும். நேருக்கு நேர் மோதி தமிழை வளர்க்க முடியாது என்று கருதுகிறேன்.

      நன்றிகள் !!

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்