இந்தியான்னா இந்தியாதான் !!

இதை எதற்கு எழுதுகிறேனென்றால் நேற்று முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி விட்டன. அந்தக் கொடுமையை எதிர்க்க வேண்டும். எந்தக் கேவலமான சிறிய மொன்னைக் காரணம் கிடைத்தாலும் கூட அதை வைத்து கிரிக்கெட்டை விமர்சிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்ற கொள்கை வைத்திருக்கிறேன். அதற்காகத்தான் இதை எழுதுகிறேன். தற்போது முகநூலில் ஒரு புகைப்படமானது பகிரப்பட்டு வருகிறது. 


இதுதான் அது. ஒரு வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா என்பது அவரது பெயர். அவர் இந்தியாவிற்காக உலக அளவிலான வில்வித்தைப்  போட்டிகளில் சில பட்டங்களையும் வென்றவர். 

நிஷா ராணி தத்தா
அவர் வென்ற பட்டங்கள்

*  2006 - இல் ஓவரால் சிக்கிம் சாம்பியன்
*  தெற்காசிய சாம்பியன் போட்டியில் வெள்ளிப்பதக்கம்
* 2006 பாங்காக்கில் நடந்த கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தார்.
*  2007 - இல் தைவானில் நடந்த ஆசிய கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் சிறந்த வீரருக்கான விருதும் பெற்றார்

இவரையெல்லாம் நாம் கொண்டாடவோ அல்லது நினைவு கொள்ளவோ முடியுமா ? இல்லை நமது அரசுதான் இவர்களுக்கு உதவ முடியுமா ? இவருக்கேன் இந்த வேண்டாத வேலை ? போய் கல்யாணங்கட்டிக் கொண்டு புள்ளையைப் பெத்து உப்புமாவைக் கிண்டிவிட்டு காலத்தை ஓட்டுவதை விட்டு இந்தியாவுக்காக விளையாடுகிறாராம். இவருக்கெல்லாம் இது தேவையா ?

தற்போது வறுமையின் காரணமாக தனது பொக்கிஷமாய்ப் பாதுகாத்த உலகத்தரம் வாய்ந்த அம்பையும் வில்லையும் விற்று விட்டாராம். 4 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள அதை எப்படி அவரால் வாங்க முடிந்தது. விளையாட்டுத் துறை கொடுத்ததா இல்லை இல்லை, அவரது திறமையைக் கண்டு அவரை ஊக்கப்படுத்தும் விதமாக அவரது பயிற்சியாளர் கொடுத்தது. 4 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள அதை வெறும் 50000 க்கு விற்றிருக்கிறார். அவர் கொரியர். நல்லவேளை இந்தியாவில் பிறக்கவில்லை அவர். கூடவே அவரது வில்வித்தையில் செய்ய விரும்பிய சாதனைகளையும். ஏன் தெரியுமா களிமண்ணால் கட்டப்பட்ட அவரது வீடு இடிந்து விட்டதாம். அதை சரி செய்ய அவருக்குக் காசு இல்லையாம். எடுபட்ட ரவீந்திர ஜடேஜா என்னும் வீராதி வீரர் 9 கோடி ரூபாய்க்கு ஏலம் போன திருநாட்டில் நிஷாவுக்கு ஒரு வீடும், வேலையும், ஊக்கத் தொகையும், பயிற்சியும் கொடுப்பது நம் அரசாங்கத்தால் இயலாது அல்லவா ? அதற்கு நாமெப்படி கிரிக்கெட்டையும், அரசையும் குறை சொல்வது ?

அவரது தங்கை திருமணம் செய்து கொண்ட போதும் சாதனை செய்ய வேண்டுமென்ற வேட்கையினால் மட்டுமே இன்னும் திருமணம் செய்யாமல் (21 வயது) அரசை நம்பிக் கொண்டிருக்கிறார். இவரது செயல் துரதிருஷ்டவசமானது என, விளையாட்டுத்துறை அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார். இல்லை இந்தியாவில் இதுதான் நியாயமானது. 

அடுத்ததாக கபடியில் உலக சாம்பியன் மகளிர், ஆடவர் என இரு பிரிவிலும் இந்தியாதான் சாம்பியன். ஆனால் அவர்களுக்கு நடந்ததைப் பார்ப்போமா ? 12 நாடுகள் விளையாடிய உலக மகா சோம்பேறி மொக்கை விளையாட்டிற்கு சாம்பியன் பட்டம் வென்ற சோதாவிற்கு எத்தனை ஆர்ப்பாட்டங்கள் !!(கபடியும் நிறைய நாடுகள் விளையாடவில்லைதான்). உலக சாம்பியன் பட்டம் வென்ற கையோடு அப்பெண்கள், அவர்கள் தங்கள் கோப்பைகளையும், பதக்கங்களையும், விளையாட்டுச் சான்றிதழ்களையும் ஏந்திக் கொண்டு ரிக்ஷாவிற்காகக் காத்திருந்தார்கள். சிலர் நடந்து சென்றனர். அவர்களுக்கு மகிழுந்து பரிசாகத் தரவேண்டுமென்பதல்ல, போட்டியில் வாகை சூடியதற்காகவாவது ஒரு நாளுக்கு அவர்களுக்கு அந்த வசதியைச் செய்து தந்திருக்கக் கூடாதா ? 

உலக சாம்பியனான இந்தியப் பெண்கள் கபடி அணி
அவர்கள் தங்கியிருந்த விடுதியின் காசைக்கூட போட்டி நிர்வாகிகள் செலுத்தவில்லை. அவர்கள் விடுதியின் பணியாளர்களால் ரூ 22,000 பணம் செலுத்தாததற்காகத் 2 மணி நேரங்களாகத் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஒரு சிறிய தீ விபத்தின் காரணமாக அவர்களது சீருடைகள் எரிந்து விட்டன. இது அரை இறுதிப் போட்டிக்கு முன்பாகவே நிகழ்ந்து விட்டது. போட்டி நடந்தது இந்தியாவின் பஞ்சாப்தான் என்றாலும் ஒரு வாரமாக அவர்கள் ஒரே சீருடையை வைத்து சமாளிக்க வேண்டியிருந்தது. இதுதான் இந்தியாவில் விளையாட்டுப் போட்டிகளில் சாதனை செய்தவர்கள் நடத்தப்படும் விதம்.

இதே கிரிக்கெட் என்றால் இந்த மூஞ்சிகளைத்தான் நாம் ஆணுறை விளம்பரத்தைத் தவிர அனைத்திலும் பார்க்க வேண்டியிருக்கிறது. சச்சின், டோனி சகாப்தம் முடிந்து இனி கோலி கோடி கோடியாக அள்ளப் போகிறார். 10 வருடங்கள் முன்பு மேற்கிந்தியத் தீவுகள், தற்போது ஆஸ்திரேலியா என பெரிய அணிகளெல்லாம் போண்டியான நிலையில் இனி இந்தியாதான் வெற்றிகளைக் குவிக்கப் போகிறது. இதில் பரவசமடையும் இந்திய தேசபக்தர்கள் எப்படி ஐபிஎல்லையும் அதே பரவச மாநில உணர்வுடன் ரசிக்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை. எப்படியோ தேசபக்தி ஒழிந்தால் சரி.

இந்தியா பாகிஸ்தான் போட்டிகளை நடத்தி வருமானத்தை அள்ள முடியாமல் அதை விட பல மடங்கு அள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தி வெற்றியும் பெற்று விட்ட போட்டியை நடத்தும் முதலாளிகள், வெளிநாடுகள் போலவே இன்னும் cheerleaders - களின் பாவாடையின் உயரத்தைக் இன்னும் மேலே குறைக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறார்கள். அதையும் குறைத்து விட்டால் அவர்களது போர்னோகிராபிக் கலாச்சாரத்தை இந்தியாவில் நிறுவிய பெருமையும் சேரும். அது சரி இப்போது மட்டும் என்ன வாழுதாம் ?

மாணவர்களின் தேர்வை முன்னிட்டும், தமிழகத்தின் மின்பற்றாக்குறையை முன்னிட்டும் இதை தடை செய்ய வேண்டுமென்கிறார்கள். பிராந்திய உணர்வை வளர்த்து தேசத்திலேயே பிரிவினைவாத உணர்வை வளர்க்கும் இந்த ஐபிஎல் போட்டிகளை தடை செய்ய வேண்டும் என்று ராம கோபாலன் மாதிரி யாராவது தேசபக்தரகள் குரல் கொடுத்தால் தேவலை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

  1. இணையத்தில் வருமானம் ஈட்ட ஒரு எளிய வழிமுறை!
    Vist Here : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்