திமுகவில் முளைத்த சுயமரியாதைச் சிங்கங்கள் !

இந்த அதிசயம் தமிழ்நாட்டின் அதிசயமான கூடங்குளத்தில் நடந்துள்ளது. இந்த சுயமரியாதை எனும் சொல் ஒரு காலத்தில் தமிழ்நாட்டைப்பிடித்து உலுக்கியது. இன்று வரை அது வீரியம் மிக்க சொல்லாக உள்ளது. தற்போது திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாடிய இத்தருணத்திலோ அந்தக் கட்சியும் அதன் தலைவருக்கும் உள்ள மதிப்பு எந்தளவுக்கானது என்பது தெரியும். திராவிடம் என்றாலென்னவென்ற தலைமுறையும் உருவாகியிருக்கிறது இதற்குப் பெரியார் காரணமல்ல. திராவிட இயக்கம் சிறு சிறு மாற்றங்கள் முதல் பெரிய மாற்றங்கள் வரை அனைத்து வகையிலும் ஓரளவு வெற்றியீட்டியுள்ளது என்பதையும் மறுக்க இயலாது.

எடுத்துக்காட்டாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கல்வி, அரசுப் பணி மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் உரிய பிரதிநிதித்துவம், பிராமணரல்லாத மற்ற சமுதாய மக்களுக்கும் இவ்விஷயங்களில் சட்ட ரீதியிலான அங்கீகாரத்தையும் உரிமையையும், மாநில மற்றும் மத்திய அரசு இரண்டிலும் பெற்றுத் தந்ததில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்கு அளப்பறியது. அதிலும் மத்திய அரசுப் பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நிறைவேற்றி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை சட்ட ரீதியாக பெற்றுத் தந்ததில் டாக்டர் கலைஞர் அவர்களுடைய உழைப்பும், பங்களிப்பும் வேறு எவரையும் விட முன்னிலை வகிப்பதாகும். (நன்றி
). இதெல்லாம் அண்ணா பெரியாருடன் முரண்பட்டு திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்து திமுகவைக் உருவாக்கி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றாமல் சாத்தியமாகியிருக்காது. சமச்சீர் கல்விக்கான தொடக்கப்புள்ளியாக கொண்டுவரப்பட்ட பாடத்திட்டம், இப்படி இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.

அதே நேரம் திராவிட இயக்கம் பெரியாரால் எந்த நோக்கத்துடன் துவங்கப்பட்டதோ அதற்கு நேரெதிரான விளைவுகளுக்கும் காரணமாக இருந்தது திமுக தான் என்பதையும் மறுக்கவியலாது. எடுத்துக்காட்டாக ஜாதிக்கட்சிகளை வளர்த்து விட்டதைச் சொல்லலாம். இன்னும் எத்தனையோ உண்டு. இருப்பினும் எத்தனை வகையில் பித்தலாட்டம் செய்தும், மற்ற எந்த மாநிலத்தைச் சேர்ந்த சராசரிக் கட்சிகள் செய்யும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் செய்தாலும் அதற்கென்று ஒரு தனித்துவமிருந்தது. பெரியாரின் வழிவந்த கட்சி என்பதுதான் அது. ஓரளவிற்கு பார்ப்பன எதிர்ப்புடன் இருந்தே வந்தாலும் 30 வருடங்களுக்கு முன்பிருந்தளவுக்கு வீரியமில்லாமல் பல்லில்லாப் பாம்பாகவே இருக்கிறது. அதுவும் கருணாநிதி, பாஜகவுடன் கூட்டணி வைக்குமளவுக்கு ஆனபின்பு எல்லாவற்றுக்கும் கொள்கையை உரிமையை விட்டுக் கொடுத்து தனது அரசியல் அதிகாரத்தை, ஆதாயத்தைத் தேடிக்கொள்ளத் தவறியதேயில்லை.

இப்படியான சமரசப்போக்கிலான அரசியல்தான், எல்லா தீமைகளுக்கும் காரணமாக இருந்து, திமுகவின் நிறுவனராகிய அண்ணாவின் பெயரிலேயே அதற்கு எதிரான அரசியல் கட்சி உருவாகி, பார்ப்பனர் ஒருவரே அதன் தலைமையைக் கைப்பற்றியிருப்பது பெரியாரிய அரசியலுக்கே ஒரு நெத்தியடிதான். அடுத்து பெரியாரின் கொள்கைக்கு நேரெதிர் கொள்கைகளைப் ஊடகங்களின் வழியாகப் பரப்பி கல்லா கட்டுன் கருணாநிதி உறவினரின் சன் குழுமம், அழகிரியின் தாதா ராச்சியம், காங்கிரசுடன் கூட்டணி வைத்ததுக் கொண்டு, ஊழல்கள் உட்பட எந்த ஒரு தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளின் கீழ்த்தரமான செய்கையில் ஈடுபடுவது. உலகெங்குமில்லாதவகையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் முறையை அறிமுகப்படுத்தியது, இலவசத்தின் பெயரால் மக்களை ஏமாளியாக்குவது என இன்னும் நீள்கிறது. இது பெரியாரின் தோல்வியல்ல. சமரசப்போக்கில்லாமல் தேர்தல் அரசியலில் தாக்குப் பிடிக்க முடியாது என்று சமாதானம் பேசும் கருணாநிதி ஆதரவுக் குரல்கள், இதற்குப் பதில் சொல்ல முடியாது. எதை வைத்துக் கொண்டு கருணாநிதியை ஆதரிப்பது என்றால் அதிமுக ஜெயலலிதாவின் செயல்களோடு ஒப்பிட்டு இந்தளவுக்கு திமுக மோசமில்லை என்றளவில்தான் இருக்கிறது. அடுத்து ஓரளவு பார்ப்பன எதிர்ப்பாளர்களாக இருப்பது போல் காட்டிக் கொள்வது.

இபடியாக இருக்கும்போத, இதற்கெல்லாம் மகுடம் சூட்டியது போல் 3 வருடங்களுக்கு முன்பு ஈழப்போர் நடந்த போது காங்கிரசுடன் சேர்ந்து நடத்திய நாடகங்கள் உச்சகட்ட வெறுப்பை திமுகவை சம்பாதிக்க வைத்தன. ஈழப்போர் உச்சத்திலிருந்த போதுதான் கலைஞர் தொலைக்காட்சியின் நகைச்சுவைப் பதிப்பான சிர்ப்பொலி அலைவரிசை தொடங்கப்பட்டது. போரை நிறுத்துவதற்காக 6 மணிநேரம் உண்ணாநிலை இருந்த கருணாநிதி போர் நிறுத்தப்பட்டதாக அறிவித்து உண்ணாநிலையை முடித்தார் பின்பு போர் நிற்கவில்லையே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு மழை நின்ற பின்பு நீடிக்கும் தூறலைப் போன்றே இதையும்(போர் நிறுத்தப்படாததை) கருத வேண்டுமென்றார். இது போன்ற செய்கைகள் மிகவும் எரிச்சலூட்டியதாகும். தனது வாய் சாமர்த்தியத்தை இராமன் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தான் என்று இந்துத்துவாக்களைக் கேட்ட போது ரசித்து சிலிர்த்தேன் ஆனால் அதையே ஈழப்போரின் போது தனது நக்கலைக் காட்டிய போது எரிச்சல்தான் வந்தது. இப்படித் தனது பித்தலாட்டங்களுக்கெல்லாம் சாமர்த்தியமாகப் பதிலளித்து சமாளிப்பவர்தான் கலைஞர். இவர் என்ன செய்தாலும் ஆதரிப்பார்கள் திமுகவினர். இத்தனைக்கும் அவர்கள் சாமானியர்கள் அல்ல. வரலாறு, பெரியாரியம் அறிந்த சுயமரியாதைக்காரர்கள், இப்படி சுயமரியாதைக்கெதிராக எந்த செயலைச் செய்தாலும், அதை ஆதரிப்பார்கள் தனது திறமையான வாதத்தைக் கொண்டு, இதை ஜெயலலிதா என்ன செய்தாலும் அதை நியாயப்படுத்தும் சோ வைப் போன்றவர்கள்தான். மக்களின் சராசரியான நாளும் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக போராடாதா ஒரு கட்சியாகவே திமுக சராசரி மக்களிடமிருந்தே தனிமைப்பட்டுப் போய்விட்டது.

தற்போது தலைப்புக்கு வருவோம். இப்படியாக சுயமரியாதையையும் கொள்கையையும் தமது ஆட்சிக்காகவும், பதவிகளுக்காகவும் துறந்த திமுகவினரில் சில பேர்கள் தமது சுயமரியாதையை மீண்டும் காட்டியுள்ளனர்கள், முத்தாய்ப்பாக திமுக தலைவருக்கெதிராகவே. காரணம் தமது பிரச்சனைக்கு ஆதரவு தராத தலைவர் எதிர்களுக்கு ஆதரவாகப் பேசியதால்தான் கட்சியைத் துறந்து கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்கள் கூடங்குளம் சுற்று வட்டாரப்பகுதியைச் சேர்ந்த போராட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த திமுகவினர். பொதுவாக வாக்குக் கட்சிகளின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாகக் கட்சியிலிருந்து விலகுவதும், மற்றொரு கட்சியில் சேர்வதும் இயல்பானதுதான். ஆனால் இங்கோ தமது வாழ்வாதாரப் பிரச்ச்னைக்கு எதிராக தலைவர் குரல் கொடுத்ததால் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விட்டார்களாம், கரை வேட்டியை எரித்தார்களாம்,. தமது ஆரம்பகால சுயமரியாதையை மீட்ட சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். 

நன்றி கீற்று

தமது ஆரம்பகால சுயமரியாதையை மீட்ட சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள். இது குறித்த கட்டுரையைக் கீற்று இணையத்தில் வாசிக்கலாம்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்