அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்மா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தாய்மை

மகளைப் பிரசவிக்கும்போது ஏற்பட்ட வலியைத் 
தாங்கிக் கொண்ட அம்மாவால்
மகள் பிரசவிக்கும்போது ஏற்படும் வலியைத் தாங்கிக்
கொள்ள முடிவதில்லை

தம்பியோ தங்கையோ பிறக்கையில் அரைத்தாயாக
மாறும் அம்மா தம் சொந்த வயிற்றில் 
சுமந்து பிறப்பிக்கும்போது முழுத்தாயாகிறார்

தம் பிள்ளைகளின் பிள்ளைகளை வளர்க்கும்போதில்
தாய்மையை விஞ்சும் பெருந்தாய்மையை அடைகிறார்
அதற்கான பெருந்தன்மையுடனேயே பிறக்கிறார் அம்மா

அடுத்தவரிடம்  அடக்கமும் அமைதியும் உருவானவராகப் 
பெயர் பெற்ற பிள்ளைகளும் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ளும் 
வடிகால்தான் அம்மா

அம்மா பேசினாலே சலித்துக் கொள்ளும்
அலுத்துக் கொள்ளும்  பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை 
அம்மாவின் மொக்கைத்தனமே கடிந்து கொள்வதையும் 
காயப்படுத்துவதையும் சகித்துக் கொள்கிறது
தொடர்ந்து அம்மாவை அம்மாவாகவே நீடிக்கச் செய்கிறது
நாம் நல்லவரென்று நம்மையும் கருதச் செய்கிறது
Download As PDF
Bookmark and Share

Post Comment

உலக அன்னையர் நாள்

என்னிடம் ஒரு நண்பர்(பெண்) கூறினார். "என்ன இருந்தாலும் எனக்கு ஜெயலலிதாவை ஒரு விசயத்தில் பிடிக்கும்." எத்தனை ஆம்பளைகளை கால்ல விழ வைக்கிறா !. அதுக்கு எத்தனை கெத்து இருக்கணும் என்றார்.  அது தவறு என்று சொல்ல நினைத்து பின்பு அமைதியாகி விட்டேன். அவர் ஒரு கோணத்தில் சொல்கிறார். அது சரியாகவே தோன்றியது. எல்லா இடத்திலும் அவர்கள்தான் வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் மூலம் அவர்கள் தங்கள் "எதிரிகளை" பழிவாங்கிவிட்டதாக நினைத்துக் கொள்கின்றனர் போலும், நாமெல்லாம் திரைப்பட நடிகனை நாமாகக் கற்பனை செய்து கொண்டு மகிழ்கிறோமே அது போல. இதற்கும் அன்னையர் தினத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் உண்மையில் அன்னையர்களை அடிமைகளைப் போலத்தான் நடத்தி வருகிறோம். இதில் ஆண் பெண் பேதமில்லை. அம்மா என்றால் நாம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆத்திரத்தையும் காட்டலாம். அவர்கள் அருகாமையை நாம் இழக்கும் போதுதான் தெரிகிறது. நாமெல்லாம் எதற்கும் உதவாதவர்கள் என்று. வீட்டில் ஒரு பொருளை நம்மால் தேடி எடுக்க முடிகிறதா ?

ஒரு முறை ஜக்கி வாசுதேவ் கூறினார். நான் பல பெண்மணிகளிடம், "நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? என்று கேட்டிருக்கிறேன். அதற்கு அவர்கள், "ஓ, நான் வெறும் குடும்பத் தலைவிதான்" (just housewife) என்பார்கள். "ஏன் நீங்கள் வெறும் இல்லத்தரசிதான் என்று சொல்கிறீர்கள் ?!" என்று நான் கேட்பேன். இரண்டு அல்லது மூன்று புதிய உயிர்களை ஊட்டி வளர்ப்பதன் முக்கியத்துவன் அவர்களுக்குப் புரிவது போலத் தோன்றவில்லை. இது ஒரு மிக முக்கியமான வேலை. என் தாயார் என்னிடம் ஒரு போதும் "எனக்கு உன்மேல் கொள்ளை பிரியம்" என்றெல்லாம் எதுவும் சொன்னதில்லை. அவர் சும்மா வாழ்ந்தார். அவருக்கு எங்கள் மேல் பிரியம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் எங்களுக்குத் தோன்றியதே இல்லை. அவர் வாழ்க்கை முழுவதையும் எங்களுக்காக அர்ப்பணித்திருந்ததால் எங்களுக்குள் அந்தக் கேள்வியே எழுந்ததில்லை. அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் என்னுடன் வாழ்ந்த காலகட்டத்தில் இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. நான் இப்போது இருக்கும் நிலைக்கு என் தாயாரின் நேரடியான பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனால் எனக்காக அவர் உருவாக்கிய சூழ்நிலை இல்லாமல், நான் இப்போது இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன். இது ஏதோ ஒரு கட்டத்தில் வெளிப்படும் என்பதை நன்கு உணர்ந்து, அந்த சூழ்நிலையை உருவாக்க அவர் தன் உயிரையே கொடுத்தார். அதுதான் அவர் எனக்காகச் செய்திருப்பதில் முக்கியமானது. இது முக்கியமானதல்ல என்று எவரும் ஏன் நினைக்கப் போகிறார்கள் ? வாழ்வின் ஆரம்பக் கட்டத்தில், எதைப் பற்றியும் நாங்கள் நினைக்க வேண்டிய தேவை எங்களுக்கு இருந்ததில்லை. சரியான பின்னணி எப்போதும் இருப்பதை அவர் உறுதி செய்தார். எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்த கவலையே இல்லாமல் நாங்கள் வாழ்ந்தோம். பல நாட்களுக்குத் தொடர்ந்து கண்மூடி அமர்ந்திருக்கும் சாத்தியத்தையும் எனக்கு இதுவே அளித்தது.

இதிலிருந்து அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்திருக்கும். அவர்கள் (அம்மாக்கள்தான்) என்ன செய்கிறார்கள் என்பதையே நாம் கவனிக்கத் தேவையில்லை. அம்மா செய்யும் எல்லாச் செயல்களுமே குடும்பத்துக்காக அன்றி அவளுக்காக இல்லை. இன்னும் சோறாகலையா என்று கேட்கத்தான் நமக்குத் தெரியும். ஒரு நாள் அம்மா வீட்டில் இல்லையென்றால் என்ன பாடு பட வேண்டியிருக்கிறது ?

அன்னைகளுக்குத் தெரியவில்லை
நமக்கான நாளை "உலகமே" கொண்டாடுகிறது
மற்றவர்க்கான தினங்களைப் போல மற்றவர்களைப் போல
இன்றும் அவர்களுக்கு விடுமுறை கிடையாது
அன்றாட வேலைகளையே இன்றும் செய்கிறார்கள்
அன்னையர்களின் புதல்வர்களோ
அன்னையர் தினமென்று தொலைக்காட்சிகளில் வாழ்த்துகிறோம்
வெட்கச்சிரிப்புடைய அம்மாவுடன் எடுத்த கைப்படத்தையும் பகிர்கிறோம்
நிலைத்தகவல் போடுகிறோம்
கவிதை புனைகிறோம்
அடுக்களையில் இருக்கும் அம்மாவிடம்
அலட்டலாக ஒரு தேநீரும் கேட்கிறோம்
Download As PDF
Bookmark and Share

Post Comment