அன்பில்லா கணவா

அப்படியென்னதான் உன்னிடம் கேட்டுவிட்டேன்
முகம் கொடுத்தாவது பேசேன் என்றுதானே
அதற்கும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால்
நானெங்கே போவது இல்லை என்னை என்ன செய்வது ?
உனக்கோ எனதன்பின் பதிலாக எரிச்சலேன் வருகிறது
கொஞ்சிப் பேச மாட்டாயாவென கெஞ்சியே கேட்கிறேன்
உன்னிடம் நான் கேட்பது அன்பைத் தவிர வேறென்ன

உன்னைப் போலவே நானும் வேலைக்குச் செல்கிறேன்
உன்னைப் போலவே வெளியில் எனக்கும் தொல்லைகள்
மனத்தின் அழுத்தத்துடன்தான் வீட்டிற்கு வருகிறேன்
உன்னைப் போல் உண்ணும் உணவுக்குக் காத்திருப்பதில்லை
நீ உண்ணும் உணவை உண்டாக்கிக் காத்திருக்கிறேன்
உன்னைக் காணும் ஆசையில் அழுத்தம் ஆனந்தமாகிறது
உன்னைக் கண்டதும் களைப்பு களிப்பாகிறது
ஊனெங்கும் உற்சாகமாகி காதல் களைகட்டுகிறது
உனக்கோ களைப்புதான் பெரிதாகத் தெரிகிறது

உன்னை அனைவரும் நல்லவன் என்கிறார்கள்
நான் கொடுப்பினை செய்தவளென்று உனைக்காட்டி ஊரார் சொல்ல
என்பதில் எனக்கு மகிழ்ச்சிதான் குறையில்லை
அதனால்தானென்னவோ எனக்கு உன்மேல்
அன்பு குறைவில்லாம் ஊற்றெடுக்கிறது
குறை எனதன்பிலா உன் புரிதலா உன் மனநிலையா
எதுவாயினும் மிகத்துயரம் என் நிலை
என் மீது சாய்வு கொள்ளுமோ உன் நிலை ?
அள்ளித் தராவிட்டாலும் தாழ்வில்லை
என் ஏக்கத்திற்கு ஏனென்ற கேள்வி கூட இல்லையா ?
இப்படி என் துக்கத்திற்கு அடித்தளமாகிறாயே ?

நீ எல்லோருடனும் அன்பாய் இருக்கிறாயாம்
எனக்கும் பெருமைதான் கசக்கவா செய்யும் கணவனின் நற்பெயர்
ஆனால் என்னிடம் மட்டும் ஏன் அப்படி இல்லை ?
எனக்கு மட்டும் நீ ஏன் அப்படித் தோன்றவில்லை
என்னிடம்தானே எரிந்து விழுகிறாய்
எரிசொற்களை வீசுகிறாய்
கேள்விக்கணைகளைத் தொடுக்கிறாய்
சிறுதவறுகளையும் பொருட்படுத்துகிறாய் குற்றம் காண்கிறாய்
என்னை ஏசுகிறாய் குறை சொல்கிறாய்
எனக்குத்தானே தெரிகிறது நீ எத்தனை நல்லவனென்று ?
உன் கோபக்கொடுக்கை அறிந்தவள் யானே
நான்கு சுவர்களுக்கு நடுவிலும் நான்கு பேருக்கு அருகிலும்
என்னிடம் அன்பாக பேசமாட்டாய் புன்னகை பூக்க மாட்டாய்
இத்தனையும் தெரிந்தும் உன்னை நல்லவனென 
ஊரார் சொல்வது எனக்கு உவப்பாகவே இருக்கிறதே
இதுதான் நான் என்று புரிகிறதா ?
என் அன்பு எத்தகையதென்று தெரிகிறதா
உன்னிலும் சிறந்தவள் நானன்றோ ?

 உனது நீதியும் நேர்மையும் எனக்குத் தேவையில்லை
உனது சாக்குகளும் போக்குகளும் நான் பொருட்படுத்துவதில்லை
உனது கொள்கையும் கோட்பாடும் எனக்குக் குப்பைகள்
உனது மனநிலையும் தோல்வியும் எனக்கு புரளிகள்
உனது இன்பமும் துன்பமும் மட்டுமே நான் காண்பவை
உனது தீண்டல் மட்டுமே
உனது அணைப்பு மட்டுமே
உனது முத்தம் மட்டுமே
உனது ஆசைப்பேச்சு மட்டுமே
என்னைக் கொஞ்சுவது மட்டுமே
அவை அனைத்தும் எனக்கு மட்டுமே
நான் வேண்டுவது இவை மட்டுமே
அன்புக்கு ஏங்குவதே என் பிறவிக்குணம்

அன்பு செய்வதெப்படியென
சமையல் செய்வதெப்படியென
சமர்த்தாக நடந்து கொள்வதெப்படியென
சினந்து பேசாமல் சிரித்து பேசுவதெப்படியென
பொங்கியெழாமல் பொறுமை காப்பதெப்படியென
என்பதெல்லாம் கற்றுக்கொள் என்னிடம்

திருமணமான ஆண்களுக்குக் காதல் சற்றே கடினம்தான்
மனைவியைக் காதலிப்பது என்னவோர் சாதனை பாரேன் கணவா
உனக்கு வேறுவழியில்லையே என்ன செய்ய ?
என்னை நேசிக்கக் கொஞ்சம் முயன்றுதான் பாரேன்
அதில் கிடைக்கும் தெவிட்டாத இன்பம் நான் உத்தரவாதம்
இயலாத காலத்தில் இன்பம் அனுபவிக்காது போனோமே
என்றெண்ணி ஏங்கி வாடும் நிலை உனது முதுமைக்கு
வேண்டாமே என் கணவா புரிந்து கொள்வாய் என் கணவா
அன்றேல் என் வாழ்க்கை போய்விடும் வெறும் கனவா
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்