சத்யராஜ் டக்கால்டி


நடிகர் சத்யராஜ் பாகுபலி படத்திற்காக, கன்னட இனவெறி கிறுக்குகளிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். 9 வருடங்களுக்கு முன்னர் தான் பேசியதற்காக வருத்தம் தெரிவித்த சத்யராஜ் தான் கர்நாடக மக்களுக்கு எதிரானவன் இல்லையென்றும் கூறியுள்ளார். 9 வருடங்களுக்கு முன்னர் பேசிய பேச்சுக்காக இப்போது திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மறுத்து போராட்டத்தில் இறங்குகிறவர்கள் எந்த இலட்சணத்தில் இருப்பார்கள் அவர்கள் என்னென்ன பிரச்சனைகளில் போராடியிருப்பார்கள் என்று நினைத்தால் பாவமாக இருக்கிறது.

இப்போது சத்யராஜ் வருத்தம் தெரிவித்ததற்காக அவரை எல்லாரும் பாராட்டுகிறார்கள். அவர் தமிழனை விட்டுக் கொடுக்கவில்லை. படத்தில் பணியாற்றிய ஆயிரம் குடும்பங்களுக்காகத்தான் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அவர் இனமுரசு, பெரியாரியர், பகுத்தறிவுவாதி, தமிழ் உணர்வாளர் என்கின்றனர். ஏன் வருத்தம் தெரிவித்து விட்டு தமிழனாக இருப்பதே இறப்பதே பெருமை என்று சொல்லி விட்டார். என்னென்ன அட்டூழியம் செய்தாலும் செய்து முடித்து விட்டு பாரத் மாத்தா கீ ஜே என்று சொல்கிறவர்கள் தேசபக்தனாவதைப் போலத்தான் இதுவும் இருக்கிறது. தமிழனாக இருப்பதே தமிழன் என்பதே அவருடைய நிலையை நிர்ணயித்து விடுகிறது தமிழ்நாட்டில்.


இதே போல் நடிகர் ரஜினியின் படத்திற்கு பிரச்சனை வந்த போது ரஜினி வருத்தம் தெரிவித்தார். தான் கன்னட மக்களைக் குறிப்பிடவில்லை என்றும், வன்முறை செய்தவர்களைத்தான் உதைக்க வேண்டும் என்று கூறினேன் என்று கூறினார். ஏன் சத்யராஜ் நடித்த பாகுபலி படத்தில் மட்டுமா ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறது. ரஜினியின் படத்திலும்தானே இருந்தார்கள். இத்தனைக்கும் சத்யராஜ் பக்க கதாபாத்திரம் மட்டுமே. ரஜினியின் படம் என்றால் சொல்ல வேண்டியதில்லை. பாகுபலி சத்யராஜின் படம் என்றில்லாத போதும் சத்யராஜ் நடித்த காரணத்திற்காக அதை தடை செய்யச் சொன்னார்கள். அப்படியிருக்க கன்னடர்களை எதிர்த்த ரஜினி படத்தின் மீதான எதிர்ப்பு எப்படி இருந்திருக்கும் ? எனவே சத்யராஜின் பிரச்சனையை விட ரஜினிக்குத்தான் அழுத்தம் அதிகம். அவர் கேட்க விரும்பாவிட்டாலும், திரையரங்க அதிபர்கள், சங்கத் தலைவர்கள், விநியோகிப்பாளர்கள், படத் தயாரிப்பாளர், துணை நடிகர்கள் மற்றும் திரைப்படத்திற்குப் பின்னால் வேலை செய்த அனைவரின் வாழ்க்கைக்கும் சேர்த்துத்தானே ரஜினியும் மன்னிப்புக் கேட்டார். என்ன ரஜினி கன்னடனாகப் போனதால் அவரைத் திட்டுவதற்கு அருமையான காரணம் கிடைத்து விட்டது.   தன் படத்தில் பணியாற்றிய தமிழ்த் தொழிலாளர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் சேர்த்துத்தான் ரஜினி மன்னிப்புக் கேட்டிருப்பார் என்பது உண்மையிலேயே யாருக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லைதான். ஒரு கன்னடன் கன்னடர்களிடம் தமிழர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டான் என்ற உணர்ச்சிதான் மேலோங்கியிருந்திருக்கிறது.

அவரை எதிர்த்தவர்கள் கன்னட அமைப்பினர் என்றபோதும் அவரது படத்தை வாங்கி ஓட்டும் திரையரங்கு முதலாளிகள் கன்னடர்கள்தானே, அவர்களுக்கு மட்டும் கன்னட உணர்வு இல்லையா ?

ரஜினி படத்தை வெளியிடுகிறவர்கள், படத்தில் பணியாற்றியவர்கள் எனப் பெரும்பான்மைத் தமிழர்களின் குடும்ப வாழ்வும்தானே ரஜினியின் படத்தில் இருக்கிறது. அதற்குத்தானே ரஜினியும் மன்னிப்புக் கேட்டார் என்றால் ஒத்துக் கொள்வார்களா ? இப்போது சத்யராஜ் மற்றவர்களுக்காகத்தான் மன்னிப்புக் கேட்டார் என்பவர்கள்.

நான் தொடர்ந்து தமிழர்களின் பிரச்சனைக்குக் குரல் கொடுப்பேன், என்னால் பிரச்சனை வரும் என்று நினைப்பவர்கள் என்னை ஒப்பந்தம் செய்ய வேண்டாம் என்று சத்யராஜ் சொன்னது வீரம்தான் நேர்மைதான் என்று ஒத்துக் கொள்கிறேன். அதை மதிக்கிறேன்.

ஆனால் ரஜினி வருத்தம் தெரிவித்த போது இந்த சத்யராஜ் என்ன சொன்னார் ? நானாக இருந்தால் மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டேன், எனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருப்பேன் என்றார். இப்போது இவரும் மன்னிப்புதானே கேட்டிருக்கிறார் ? என்னவோ ரஜினி மன்னிப்புக் கேட்டதை வைத்து தமிழ்நாட்டின் தன்மானமே அடகுவைக்கப்பட்டதைப் போலல்லவா பேசினார். ரஜினிக்கு இதுமாதிரியெல்லாம் வாயடிக்கத் தெரியாது. உளறி மாட்டிக் கொள்வதால் ரஜினியைப் போட்டு கும்மிவிட முடிகிறது.

உண்மை என்ன. சத்யராஜ்-க்கு ரஜினியைப் பிடிக்காது, அதனால்தான் அன்று கன்னட இனவெறியைக் கண்டிப்பது போல் இவரைத் திட்டினார். பகுத்தறிவுவாதி என்று சொல்லிக் கொள்ளும் சத்யராஜ் தன்னை நடிகன் எம்ஜிஆரின் ரசிகன் என்பதில் பெருமைப்படுவார். அதெப்படி ஒரு பகுத்தறிவுவாதி ஒரு நடிகனுக்கு ரசிகன் என்பதைப் பெருமையாகச் சொல்வார் ? மேடையில் ஏறினாலும் சரி அவரது படங்களிலும் சரி அவ்வப்போது எம்ஜிஆரைப் போல பாடியோ நடித்தோ பேசியோ சலிப்பேற்றுவார். அதிலும் எம்ஜிஆரைக் குறிப்பிடும்போது புரட்சித் தலைவர் என்றுதான் குறிப்பிடுவார்.  தன்னையும் சில படங்களில் புரட்சித் தமிழன் என்று போட்டுக் கொண்டார். எம்ஜிஆர் என்ன புரட்சிக்குத் தலைமை வகித்தார் என்று யாராவது சொல்லுங்களேன்.

சரி அதாவது போகட்டும். சத்யராஜ் தனது படங்களில் மக்கள் நடிகனுக்கு கொடி பிடிப்பதையும், தலைவனாக்குவதையும் விமர்சனம் செய்வார். கிண்டலடிப்பார். நடிகர் விஜய் அரசியலுக்கு நுழைவதற்காக விஜய் மக்கள் இயக்கம் என்று ஒரு விழா நடத்தினார். தனது கட்சி அல்லது இயக்கக் கொடியை அறிமுகம் செய்தார். அந்த நிகழ்ச்சியில் பதினாறு பல்லையும் காட்டிக் கொண்டு அந்த விழாவை சிறப்பிக்கக் கலந்து கொண்டார். தனது படத்தில் மக்களைக் கிண்டலடித்து நடிகனைத் தலைவனாக்காதே, நடிகனைக் கொண்டாடாதே உன் வேலையைப் பார் என்றெல்லாம் உபதேசித்து விட்டு ஒரு நடிகனைத் தலைவனாக சித்தரித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் எப்படி இன முரசு ஆக முடியும் ?

எனக்கு எம்ஜிஆருக்கு அப்பறம் விஜய்தாங்க என்பார். இவருக்கு பிடித்த நடிகர் எம்ஜிஆர் பிறகு விஜய் ஆம். அதாவது மறைமுகமாக எம் ஜிஆருக்குப் பின்னர் விஜய்தான். முன்னாள் சூப்பர் ஸ்டார் எம்ஜிஆர் நாளைய சூப்பர் ஸ்டார் விஜய். நடுவில் இருக்கும் ரஜினி ஒர் ஆளே இல்லையாம். ரஜியின் பஞ்ச் வசனங்களை தனது படங்களில் கிண்டலடிப்பார் சத்யராஜ்.  (பேரக் கேட்டாலே அதிருமா நீ என்ன பூகம்பமா ?)

பெரியார் பெண்கள் என்ன நகை மாட்டும் ஸ்டேண்டா என்று கேட்டார். பெரியாரியவாதி சத்யராஜ் தங்கநகை விளம்பரத்தில் நடிக்கிறார். சின்ன வேறுபாடுதான்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்