ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பில் கோவை அதிர்ந்த போது


தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் - இல் வெளியான ஒரு சிறு கட்டுரை. கோயமுத்தூரைச் சேர்ந்த ஒரு ஹிந்தி எதிர்ப்பு மொழிபோராளியைக் குறித்து சிறு கட்டுரை வெளியிட்டிருந்தது.  அறியப்படாத கொங்கு நாட்டு மொழிப்போர் வீரர்கள் - ஈகியர்கள் குறித்து ஒரு சிறு பதிவாக இருக்கும் என்று மொழிபெயர்த்தேன். பிழை நேர்ந்திருப்பின் வருந்துகிறேன்.

இளங்கீரன் - படம் நன்றி - தி நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ்


தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் முடிந்து 50 வருடங்கள் கடந்த பின்னரும், போராட்டக் காரர்களால் ஒரு காவலர் தீ வைத்து எரிக்கப்பட்டதை உலகம் நினைவில் வைத்திருக்கிறது. ஆனால் கோவையைச் சார்ந்த ஒரு காவலர், தான் ஒடுக்கும் சக்தியாக இருப்பதாக வருந்தி தனது சீருடையையே (காவலர் பதவியைத்) துறந்தார் என்பதை பலர் அறியவில்லை.

மனசாட்சி உறுத்திய அக்காவலர் காளிமுத்து, போராட்டக்காரர்களை நோக்கித் துப்பாக்கியால் சுடும்போது தன் கண்களை மூடிக் கொண்டவர். "அவர் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் இயக்கத்தின் இரகசிய ஆதரவாளர். அந்நிகழ்வின் பின்னர் தனது பணியை உதறிவிட்டு ஒரு தனியார் பேருந்தில் நடத்துனராக வாழ்க்கையை நடத்தினார் என்று நினைவு கூர்கிறார் இளங்கீரன் எனும் கோவையைச் சேர்ந்த பிரபலமான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு மாணவர் இயக்கத் தலைவர். இவர் பேரூரிலுள்ள தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்லூரியில் தமிழாசிரியர் பட்டம் படித்துக் கொண்டிருந்தவர். அந்நாளில் நகரமே தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது, அரசு இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டியிருந்தது என்கிறார். பூலைமேடு (இன்று பீளமேடு என்றழைக்கப்படுகிறது) தண்டபாணி என்ற பிஎஸ்ஜி தொழில்நுட்பக்கல்லூரியைச் சேர்ந்த மாணவர் நஞ்சுண்டு இறந்தார். மொழிப்போராட்டத்தில் எண்ணிறந்த மாணவர்கள் இறந்ததால் மனமுடைந்த அவர் இம்முடிவைத் தேடிக் கொண்டார்.

ஏ துரைக்கண்ணு என்று அரசுக் கல்லூரி மாணவர் தலைவர், கோவை நகர ஹிந்தி எதிர்ப்பியக்கத்தின் செயலாளராகவும், இளங்கீரன் தலைவராகவும் இருந்தனர். தலைமறைவாக இயங்கிய மாணவர்களைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்த போது, நாங்கள் உப்பிலிபாளையத்திலுள்ள காவலர் குடியிருப்பிலேயே பதுங்கியிருந்தோம். காவலர் காளிமுத்து தனது இல்லத்தில் அவர்களுக்குத் தஞ்சம் அளித்தார்.

தலைமை அஞ்சல் அலுவலகம் அமைந்திருக்கும் சாலையில் மறியல் போராட்டம் செய்த போது மைசூரிலிருந்து வந்திருந்த ஆயுதப் படைக் காவலர் எனது முடியைப் பிடித்து அடித்து, நான்தான் ரிங் லீடரா என்று கேட்டார். ரிங் லீடர் என்பது அந்நாட்களில் குழுத் தலைவர் என்று பொருள்படும். கோவையில் இராணுவமே வந்திறங்கிய போதும் மாணவர்கள் அஞ்சவில்லை என்று குறிப்பிடுகிறார் இளங்கீரன். அந்நாளில் வெளிவந்த தமிழ் நாளிதழ் ஒன்று இப்படித் தலைப்புச் செய்தி வெளியிட்டதாம். "சுட்டுத் தள்ளினார்கள்... சப்பாத்தியை ! "(யாரையும் சுடவில்லை என்பதை அப்படிக் கிண்டலடித்ததாம்).

இளங்கீரன் ஒரு கவிதைத் தொகுப்பைக் காட்டினார். அது பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்களால் எழுதப்பட்ட ஹிந்தித் திணிப்பு-எதிர்ப்பு கவிதைகளின் தொகுப்பாகும். அதன் விலை 25 பைசா. அதன் தலைப்பு "ஜனவரி 26 இல் மானம் கெடும் தமிழர்க்கு"

அந்நூலின் தொகுப்பாசிரியர், துரைக்கண்ணு கீழ்க்கண்டவாறு அணிந்துரை எழுதினார். "எப்போது தோன்றியது என்று கண்டறிய முடியாத பழம்பெருமை வாய்ந்த தமிழ் என்ற மொழி, இந்நாளில் (26.1.1965) இறந்து விடும்". இந்தச் சிறு கவிதைத் தொகுப்பு என்பது கோவை கல்லூரி மாணவர்களின் கூட்டு முயற்சியாகும். நாங்கள் ஹிந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை ஆனால் ஹிந்தியை ஆட்சி மொழியாக்குவதற்கு எதிர்க்கிறோம். என்பதே அதன் சாரமாக இருந்தது.

ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் தீவிரமாக இயங்கிய ஏ ராமசாமி என்பவர், இந்திய மொழிகளின் சுதந்திரப் போராட்டம் என்ற தனது நூலில் சொல்கிறார். துரைக்கண்ணுவால் தலைமை தாங்கப்பட்ட ஒரு போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் படுகாயமுற்றனர். அதனால் ஆத்திரமுற்ற மாணவர்கள், அதே நாள் மாலை 6 மணியளவில்
Aya Toofan என்ற ஹிந்திப்படம் திரையிடப்பட்ட நாஸ் திரையரங்கத்தை தீவைத்துக் கொளுத்தினர். அங்கே விரைந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்