பெரும்பான்மை மனநோய் தவிர்ப்போம்


பெரும்பான்மை மனநோய் எப்படி இருக்கிறது. இறைவனைப் போன்று பலவித வடிவங்களில் பலவித நிறங்களிலும், பண்புகளிலும் இருக்கிறது. நம் நாட்டிலும் அண்டை நாடுகளிலும் குருதியாறு ஓட வைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

இலங்கையில் பெரும்பான்மை மனநோய் சிங்களப் பேரினவாதமாக இருக்கிறது.

அது சிறுபான்மையினரை வந்தேறிகள் என்கிறது அவர்களது மதம் வந்தேறி மதம் என்கிறது. அவர்கள் மற்ற நாடுகளில் பெரும்பான்மை என்கிறது, நம்மிடம் இருப்பது இந்த ஒரு நாடுதான் என்கிறது. அவர்கள் முன்னோர்கள் நம் நாட்டின் மீது படயெடுத்தவர்கள் என்கிறது. அவர்கள் தேசதுரோகிகள் என்கிறது. அவர்கள் வழிபாட்டிடங்களை அழிக்கிறது தமது மத வழிபாட்டிடங்களாக மாற்றுகிறது. அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறது. தமது பண்பாட்டுச் சின்னங்களைத் திணிக்கிறது. மொழியைத் திணிக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுகிறது. மொத்த நாடும் தன்னுடையது என்று உரிமை கோருகிறது. பெரும்பான்மை ஆதிக்க வெறியை சமூக இயல்பாக மாற்றுகிறது. அவர்கள் மீது வன்முறை செலுத்துகிறது. அவர்களை இனப்படுகொலை செய்கிறது. அவர்களின் சொத்துக்களைக் கொள்ளையடிக்கிறது. அவர்களை வாழிடங்களை விட்டு துரத்துகிறது. அவர்களை ஆயுதம் ஏந்த வைத்து இன்னும் உயிர் சேதங்களை ஏற்படுத்துகிறது. பயங்கரவாதிகளாக்கி மொத்த சமூகத்தையும் மீள முடியாத துயரத்தில் ஆழ்த்துகிறது.

இந்தியாவில் பெரும்பான்மை மனநோய் இந்து மதவாதமாக இருக்கிறது.

அது சிறுபான்மையினரை வந்தேறிகள் என்கிறது. அவர்கள் மதம் வந்தேறி மதம் என்கிறது. அவர்கள் மற்ற நாடுகளில் பெரும்பான்மை என்கிறது, நம்மிடம் இருப்பது இந்த ஒரு நாடுதான் என்கிறது. அவர்கள் முன்னோர்கள் நம் நாட்டின் மீது படயெடுத்தவர்கள் என்கிறது. அவர்கள் வழிபாட்டிடங்களை அழிக்கிறது தமது மத வழிபாட்டிடங்களாக மாற்றுகிறது. அவர்களின் பண்பாட்டுச் சின்னங்களை அழிக்கிறது. தமது பண்பாட்டுச் சின்னங்களைத் திணிக்கிறது. வரலாற்றை மாற்றி எழுதுகிறது. மொத்த நாடும் தன்னுடையது என்று உரிமை கோருகிறது. அவர்கள் தேசதுரோகிகள் என்கிறது. முன்பு நாம் வாழ்வாங்கு வாழ்ந்தோம் இவர்கள் வந்ததால் நாம் நாசமானோம் என்கிறது

பாகிஸ்தானில் உருது திணிக்கப்பட்டதால் வங்க மொழி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டு கலகம் மூண்டு தனிநாடாயினர். தனிநாடாக முடியாதோர் அகதிகளாய் அவதியுறுகின்றனர். அரச பயங்கர வாதத்தினால் அல்லல் படுகின்றனர்.

ஈராக்கிலும், பாகிஸ்தானிலும், சிரியாவிலும் பெரும்பான்மை (சன்னி) மனநோயால் குர்துகள், யஸ்திகள், ஷியாக்கள் அல்லல் படுகின்றனர். இனப்படுகொலைக்கு ஆளாகின்றனர். துருக்கி நாட்டிலும் பெரும்பான்மை மனநோய் சிறுபான்மை குர்து இனம் தனிமைப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் வாழும் சிறுபான்மை இனமானது அவர்கள் முன்னோர் செய்த தவறுகளுக்கு பொறுப்பாகாது. ஒரு நாட்டில் சிறுபான்மையாக வாழும் பிரிவு பின்பற்றும் மதம் மொழி இன்னோர் நாட்டில் வாழும் பெரும்பான்மை பிரிவினர் பின்பற்றுவதாகவும் இருக்கக் கூடும். ஒரு நாட்டிலோ மாநிலத்திலோ பெரும்பான்மை செய்யும் தவறுக்கு மற்றொரு நாட்டில் வாழும் சிறுபான்மையினர் தாக்கப்படுவதும் இந்த பெரும்பான்மை மனநோய்தான் காரணம்.  அதற்கு அந்த சமூகத்தையே ஒட்டு மொத்தப் பழியும் சுமக்க வேண்டும் என்று நினைப்பது அறியாமை.

இந்தப் பெரும்பான்மை மனநோய்க்கு எந்த வித அடையாளங்களும் இருக்கலாம். மதம், இனம், மொழி அல்லது மூன்றுமாகவும் இருக்கலாம். ஜாதியாகவும் இருக்கலாம். இதில் ஈடுபடுவோர் மிகச்சிலராக இருந்தாலும் பெரும்பான்மை சமூகத்தைச் சார்ந்தவரே இருப்பர். பண்பாடு, பிறப்பு, பின்பற்றும் நம்பிக்கைகள் காரணமாக பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவர்கள் பெயரால் இயக்கம் நடத்துவோர் சிறுபான்மையினருக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமலும், மனசாட்சியை மறைத்துக் கொண்டும் வாழ்கின்றனர். அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராக வெறி கொள்வதற்கேற்ற பொய்க் காரணங்கள், வரலாறுகள் எங்கும் நிறைந்து காணப்படுகின்றன. இந்தப் பெரும்பான்மை மனநோயால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே மக்களாகிய நாம், நாம் பின்பற்றும், நம்பிக்கை கொள்ளும், நேசிக்கும் இன, மத, மொழி காரணமாக அதன் பெயரால் மற்ற சமூகத்தின் மீது செலுத்தப்படும் எந்தவொரு வன்முறைக்கும் ஆதரவளிக்காமல் இருக்க வேண்டும்.

அந்த வன்முறையா நம்மால் தடுக்க முடியாவிட்டாலும் அந்த வன்முறையை, வன்முறையை நடத்துகிறவர்களை ஆதரிக்கவே கூடாது. ஏனெனில் பெருங்கொடுமை செய்வோர் தாம்தான் அந்த சமூகத்தையே காக்க வந்தவர் உய்விக்க வந்தவர் போன்ற தோற்றத்தை உருவாக்குவர். சமூகத்தில் மத நல்லிணக்கம் இருப்பதை வெறுத்து வெறுப்பை விதைப்பவர். அதன் மூலம் அரசியல் செய்து தமது நோக்கங்களை நிறைவேற்றுவர்.

இன்று #டிசம்பர் 6

#பாபர் மஸ்ஜித்  பள்ளி வாசல் இடிக்கப்பட்ட நாள். இதை ஜனநாயகம் இந்நாட்டில் தொடர விரும்புவோர் அனைவரும் வெறுக்கப்பட வேண்டிய செயல். நினைவு கூரத்தக்க நாள்.

இதை கொஞ்சம் விருப்பு வெறுப்பின்றி புரிந்து கொள்ள வேண்டும். மதவெறியால், பெரும்பான்மை வெறியால் பீடிக்கப்பட்டவர்களுக்கு இது எள்ளலாகத் தெரியும். ஆனால் நம்பிக்கை காரணமாக ஊசலாடும் மனங்கள்தான் இங்கே அதிகம் என்பதாலும், இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இங்கே வாழும் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பயன்படுத்தி சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தளம் இடிக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும். இல்லை முஸ்லிம்கள் எப்போதும் தம் மதத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் இந்துக்கள் மட்டும் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்குக் கொஞ்சம் வரலாறு சொன்னால் போதும்.

எத்தனையோ மன்னர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தான் எதிர்களும் இந்து மதம்தான் அவர்கள் படையெடுத்து வென்ற மன்னர்களும் இந்து மதமாக இருந்தாலும் அவர்கள் கட்டிய கோவிலை இடிப்பார்கள், இடித்திருக்கிறார்கள். ஏன் ராஜ ராஜ சோழன் எத்தனை இடங்களை வென்றான் ? அவன் கங்கை கொண்டான் கடாரம் கொண்டான் என்றால் என்ன அங்கே போரும் இனப்படுகொலையும் நடந்திருக்கிறது என்றுதானே பொருள். 800 வருடங்கள் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்த போதும், ஆண்ட போது இந்தியாவிலே இந்து மதம்தானே பெரும்பான்மையாக இருக்கிறது.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் 1000 வருடங்களுக்கு மேலாக ஆண்ட போதும் இந்தியாவில் இந்து மதம்தான் பெரிய மதமாக இருக்கிறது. இப்படியிருக்க அவர்களால்தான் இந்து மதத்துக்கு ஆபத்து, இந்துக்களுக்கு ஆபத்து என்பது என்ன வகை தந்திரம்.

இஸ்லாமிய ஆட்சி நடக்கும் மலேசியாவில் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. இஸ்லாமிய ஜனநாயகக் குடியரசான பாகிஸ்தானிலும் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் தாடிக்காரர்கள் ஒன்று சேர்ந்து இந்துக் கோயிலை இடித்திருக்கிறார்களா ? இல்லை அந்நாட்டின் முதன்மையான எதிர்கட்சி ஒன்று அப்படி செய்தால் எப்படி இருக்கும்.

அவ்வளவு எதற்கு இலங்கையில் இருக்கும் இந்துக் கோயில்களை இடித்து புத்த விகாரைகளை கட்டும் சிங்களப் பேரினவாத அரசும், புத்தர் சிலைகளை வைத்து வன்முறை ஊர்வலங்களை நடத்தும் பொதுபல சேனாவை வழிநடத்துவதும் சிறுபான்மைக்கெதிரான பெரும்பான்மை வெறிதான்.

கொஞ்சம் அடையாளம் கடந்து சிந்தித்தால் விளங்கும். தவறு செய்யும் ஒரு சிறு கும்பலே பெரும்பான்மை அடையாளத்தை தனது முகமூடியாக அணிந்து வரும்.
 
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

0 பின்னூட்டங்கள்:

கருத்துரையிடுக

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்