ஹிந்தித் திணிப்பு - பாஜகவின் நாடித்துடிப்பு - பின்பு நடிப்பு

மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டுமல்லவா ? தமிழ்நாட்டில் நாம் சொல்வது தமிழர்கள் உட்பட ஹிந்தி பேசாத மக்களின் மீதான ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பேயன்றி, தமிழர்கள் இந்தி மொழி கற்பதை எதிர்ப்பதன்று.


நாட்டின் இருக்கு பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வாக ஒரு இரட்சகர் வருவார் என்றெண்ணிக் காத்திருந்த இந்தியர்கள், நரேந்திர மோடி என்று பெருமாளாக்கப்பட்ட ஈறை நம்பி வாக்களித்து எக்காலத்திலுமில்லாத அளவுக்கு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவைத்தனர்.

அன்னார் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததும் உத்தமபுத்திரர் மஹிந்தரையும் மற்ற நாட்டு அதிபருடன் அழைத்து வந்து ஈழத்தை வைத்து படம் காட்டிக் கொண்டிருக்கும் பத்தாம்பசலிகளுக்கும், அறிவிலிகளுக்கும் அதிர்ச்சியளித்தார். பாஜகவின் உண்மை முகத்தை அறிந்தவர்களுக்கு அது பெரிய ஏமாற்றமோ அதிர்ச்சியோ அளிக்காது. ஆனால் தூங்குவது போல் நடிப்பவர்களுக்கும், வேறு உள்நோக்கங்களுடன் ஆதரித்தவர்களுக்கும் (ஜாதிவெறி/ இந்துத்துவா + ஈழ ஆதரவு என கலந்து கலக்கும் நபர்கள்) அது கசப்பாக இருந்தது. அவர் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பார் என்ற அளவுக்கெல்லாம் நம்பும் ஆட்களும் இருக்கிறார்கள்.

அடுத்து ரயில்வே துறையை தனியார் மயமாக்கம், ரயில் கட்டண உயர்வு என்று அதிரடியாக முதல் மாதங்களிலேயே இந்தியாவையே குஜராத் பாணி "வளர்ச்சியை" நோக்கி நகர்த்தி வருகிறது பாஜக-மோடி அரசு. அதன் தொடர்ச்சியாக, RSS - கிளை இயக்கங்கள் படுகொலைகள்(புனே), கலவரங்கள் (சென்னை- பூந்தமல்லி இந்து முன்னணித் தலைவரின் இறுதி ஊர்வலம்) என தங்கள் பாணியில் செயல்பட்டு வருகின்றன.

அடுத்ததாக இந்தியாவிலிருக்கும் அனைத்து நடுவண் அரசு ஊழியர்களும் சமூக வலைத்தளங்களில் தமது கருத்துக்களை ஆங்கிலத்தில்தான் வெளியிட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. பின்பு அது தமிழ்நாடு தவிர்த்து பிற மாநிலங்களில் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. பின்பு ஹிந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே என்று அடக்கி வாசிக்கப்பட்டது.

இதற்கு முன்பாகவே டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி தமிழ்நாட்டில் ஒரு பள்ளியில் சென்று சிறுவர்களிடம் பேட்டி கண்டு தமிழர்கள் "We want HIndi" என்று வேண்டுவதாகக் கருத்தை உருவாக்கியது. (அது உண்மைதான் எல்லோருக்கும் தேசிய மொழியைக் கற்கவில்லை, இன்னொரு மொழியைக் கற்கவில்லை என்ற வருத்தம்தான்) அதாவது அரசு சட்டமோ அறிவிப்போ கொண்டு வரும் முன்பு இது கருத்தைத் திணித்து அதைப் பொதுக் கருத்து போலவும், தேவை போலவும் ஆக்குவார்கள். ஊடகங்கள் கருத்தைத் திணிப்பார்கள், ஊழல் மன்னர்கள் ஹிந்தியைத் திணிப்பார்கள்.

ஹிந்தியல்லாத மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பியவுடன் தாளத்தை மாற்றி வாசிக்கத் தொடங்கினர்,

கிரண் ரிஜிஜூ, இந்தியை அனைத்துத் துறைகளிலும் முன்னிறுத்துவதும் மேம்படுத்துவதுமே தங்களது அரசின் முதன்மையான பணி என்றும் மீண்டும் குறிப்பிட்டார்.

.“இந்தி என்பது தேசிய மொழி, இந்த நாட்டின் இதயமாக இருக்கும் மொழி. எனவே இந்திக்கு முதன்மை முக்கியத்துவம் அளிப்பது என்பது ஆங்கிலத்தை அவதூறு செய்வதாகாது. எனவே இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது என முடிவு செய்து அரசாங்கம் முன்னுரிமை அளித்திருப்பது வரவேற்கக்கூடிய நடவடிக்கையே. மேலும், இந்தி மொழி என்பதே தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, வங்காளி, அசாமி, உருது மற்றும் இதர பல்வேறு பிராந்திய மொழிகளின் கூட்டுக்கலவையே என்பதை புரிந்துகொள்ள வேண்டும்” இந்தி மொழியை அனைத்து இடத்திலும் பரப்ப காந்தி, நேரு, தீனதயாளன் உபாத்யாயா, ராம்மனோகர் லோகியா போன்ற தலைவர்கள் முயற்சி செய்ததாகவும், தங்களது அரசுக்குமுந்தைய அரசுகள் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என்றும் குறிப்பிட்ட அவர், தற்போது இந்தியை மேம்படுத்த வாய்ப்புள்ள அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்வதற்கான தருணமாகும் என்று முக்தார் அப்பாஸ் நக்பி தில்லியில் வெள்ளியன்று கூறினார்.

பாஜகவினர். வெங்கையா நாயுடு குட்டிகரணமடித்து இது மார்ச் 10 நாளே ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் அறிவித்ததாகும் அதை ஏன் சர்ச்சையாக்குகிறார்கள் என்றார்.

இவர்கள் இப்படி நாட்டியமாடிக் கொண்டிருக்கு தொலைக்காட்சி விவாதங்களிலோ பாஜக இன்ன பிற ஹிந்தித் திணிப்பு வெறியர்கள், ஹிந்தி வேண்டுமென்ற அறிவுத் தாகமுடையவர்கள் எல்லாம் 1940 களின் வாதங்களயும், இந்துத்துவ-ஹிந்தி வெறியுடனும் கத்திக் கொண்டிருந்தார்கள். வழக்கம் போலவே, தொலைக்காட்சியைக் கண்டு தனது அறிவை வளர்க்கும் பாமரத் தமிழர்கள், தமிழை வளர்க்கறானுகளாம் என்று ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்களையும், கருணாநிதியையும் திட்டிக் கொண்டிருந்தனர்.

தேர்தலுக்கு முன்பாக திருச்சியில் நடைபெற்ற இளந்தாமரை மாநாட்டில் ஹிந்தி மொழியில் உரையாற்றிய மோடி மொழி வாரி மாநிலங்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னார். பாரதிய ஜனதாவின் கொள்கையும் அதுதான். இந்நிலையில் இவர்கள் இப்படி கிளப்பியிருப்பது வெறும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் என்று சமாதானாம் சொல்கிறார்கள். ஹிந்தியை ஆங்கிலம் இரண்டாம் மொழியாக்கி விட்டது, ஆகவே அந்நிய ஆங்கிலத்திலிருந்து இந்தியாவின் கலாச்சாரத்தைக் காக்க ஹிந்தியை வளர்க்கிறார்களாம். ஹிந்தியை வளர்ப்பதென்றால் ஹிந்தி பேசுகிறவர்களிடமல்லவா செய்ய வேண்டும். ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பல கோடிப் பேர்களிடமுமல்லவா இவர்கள் திணிக்கிறார்கள். வளர்ப்பு வேறு திணிப்பு வேறு. இவர்கள் promotion என்கிறார்கள். ஆனால் அது  imposition மட்டுமே.

சரி பாகிஸ்தானிகள் பேசும் உருது கூட இவர்கள் பேசும் ஹிந்தி மாதிரியல்லவா இருக்கிறது. எல்லோரும் ஒன்றாகிவிட்டார்களா ? இல்லை இந்திய தேசபக்தர்கள் வந்தேறி முகலாயரின் வழி வந்த மொழியினை ஏன் உயர்த்திப் பிடிக்கிறார்கள்.

சரி இப்போது தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் அல்லது நீறு பூத்த நெருப்பாக இருக்கும் ஹிந்தி தாகம்/மோகம் என்றோர் மாயையைக் கலைப்பதுதான் எனது நோக்கம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்/ பதில்கள்

ஹிந்தியை ஏன் வெறுக்கிறீர்கள்

ஹிந்தியை வெறுக்க வில்லை. ஹிந்தித் திணிப்பைத்தான் எதிர்க்கிறோம். ஒருவரிடம் போய் ஏர்டெல் வாங்கிக்கொள்ளுங்கள் என்கிறீர்கள். அவர் என்னிடம் ஏற்கெனவே ஏர்செல் இருக்கிறது என்கிறார். நீங்கள் வந்து அவர் ஏர்டெல்லை ஏன் வெறுக்கிறார் என்று கேட்கிறீர்கள்


கருணாநிதியைக் கலாய்ப்பதாக நினைத்துக் கொண்டு இந்தப் புகைப்படத்தினை ஹிந்தி ஆதரவாளர்கள் பகிர்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் வேறு மொழியினரிடம் அவர்கள் மொழியில் வாக்குப்பிச்சை எடுப்பது எந்த வகையில் தவறு. இதன் மூலம் மக்களுக்கு ஹிந்திக் கல்வியைத் தடை செய்து விட்டு அவர்கள் கற்றுக் கொண்டார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள். இது ஒன்று தமிழ் வெறியாக இருக்க வேண்டும் இல்லை இந்தி வெறியாக இருக்க வேண்டும். இங்கே நடந்தது கட்டாய ஹிந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டமேயன்றி, ஹிந்திக் காரர்களைக் கல்லெறிந்து தாக்க வேண்டும் என்ற இனவெறிக் கலவரமல்ல. இதன் மூலம் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பாளர்கள் ஹிந்தியை வெறுக்க வில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். கருணாநிதியை எதற்குத் திட்ட வேண்டுமோ அதற்கு மட்டும் திட்டுங்கள்

தேசிய மொழியை ஏன் கற்க வேண்டாம் எனக் கூப்பாடு ?

ஹிந்தி தேசிய மொழி இல்லை என்பது மீண்டும் மீண்டும் நினைவூட்ட வேண்டியிருக்கிறது. ஹிந்தி அலுவல் மொழி மட்டுமே, மற்ற பிராந்திய மொழிகள் போலத்தான். அரசில் நிறைந்திருக்கும் ஹிந்தி மாநிலத்தவர்களின் ஆதிக்க வெறி காரணமாகத்தான் மற்ற மொழிகள் புறக்கணிக்கப்படுகின்றன.

இந்தியா முழுதும் பெரும்பான்மையினர் பேசும் மொழியை ஏன் நாம் கற்கக் கூடாது நமக்கு நன்மை பயக்கும்தானே ?


ஹிந்தி பெரும்பான்மையினர் பேசும் மொழியும் கிடையாது. இந்தியா முழுதும் பேசப்படும் மொழியும் கிடையாது. மாறாக ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத மற்ற மொழியினரே பெரும்பான்மையாக உள்ளனர். பேசப்படும் ஹிந்தி பேசுகிறவர்களும் ஒரே மாதிரியான ஹிந்தியைப் பேசுவதில்லை. கொஞ்சம் விரிவாக வாசிக்க இங்கு செல்க. 


வெளிமாநிலங்களுக்குச் செல்லும்போது ஹிந்தி தெரியாமல் சிரமப்படுவோம்தானே ?


தமிழ் நாட்டில் வந்து வேலை செய்யும், குடிவரும் வெளி/வட மாநிலத்தவர் தமக்குத் தமிழ் தெரியவில்லை, பள்ளியிலேயே தமிழ் கற்கவில்லை என்று கவலைப்படுகின்றனரா ?

நான் இங்கெல்லாம் பயணித்திருக்கிறேன். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி ஒரு பாடமாக இருக்கிறது என்கிறார்கள். அதெப்படி ஒரிரு நாட்கள் சுற்றுலா சென்றவர்கள் வட இந்தியாவின் பல மாநிலங்களில் ஹிந்தியை பாடமாக வழங்குவதை புள்ளி விவரமாகச் சொல்கிறார்கள். அப்படி சுற்றுலா செல்கிறவர்களுக்காக ஹிந்தியைக் கற்க வேண்டுமெனச் சொன்னால் தமிழ் நாட்டில் பெரும்பான்மையானவர்கள் செல்லும் சுற்றுலாத்தளமாக ஊட்டி இருக்கிறது, அடுத்து கேரளா இருக்கிறது, கர்நாடகா இருக்கிறது, கோவா இருக்கிறது. எனவே தமிழர்கள் படுகு, மலையாள, கொங்கணி, துளு மொழிகளையும் பாடமாக வைக்கச் சொல்லிக் கேட்கலாம்.

ஒரு மொழியாக அரசே வழங்கும்போது கற்கலாமே ?

பல நூறு மொழிகள் பேசப்படும் நாட்டில், நடுவண் அரசு ஒரு மொழிக்கு மட்டும் முகவராக செயல்படுவது ஏற்க முடியாதது. மக்களின் வரிப்பணத்தை வைத்து மொழியை அடுத்தவனிடம் திணிக்கிறது.  ஹிந்தி பேசுகிறவர்கள் வேறு மொழிகளைக் கற்க வேண்டும் என்று நடுவணரசு எல்லா மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வட இந்தியாவில் பரப்புமா ?

ஒரு மொழியைக் கற்காமல் இருப்பது நமக்கு இழப்புதானே ? ஆம் இழப்புதான். எப்படி ஹிந்திக் காரர்கள் தமிழ் கற்காமல் இருப்பது நமது இழப்போ அது மாதிரிதான் இதுவும். அதற்கு எவ்வளவு கவலைப்பட வேண்டுமோ அது போலத்தான் இதற்கும் கவலைப்படவேண்டும். தகவல் தொழில் நுட்ப துறையில் குறிப்பிடத்தகுந்த இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு 2014 ஆம் ஆண்டில் ஹிந்திக்கு ஏன் மெனக்கெட்டு வருத்தப்பட வேண்டும். ஜாவா, பெர்ல், C, C++  என்பதையெல்லாம் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று எண்ணுங்கள்.

ஏன் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலத்தவர் எதிர்க்க வில்லை.

தவறு. பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கின்றன. முத்தாய்ப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்தின் மாயாவதி எதிர்க்கிறார். கர்நாடகா, தமிழகத்திற்கு அடுத்தபடியாக எதிர்ப்பில் இருக்கிறது. தமிழகத்தின் இரு முதன்மைக்கட்சிகளும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட திராவிட இயக்கத்தின் வழி வந்தவை என்பதால் தமிழகம் முதன்மையில் இருக்கிறது. மேலும் சமஸ்கிருதத்திற்கு ஈடான பழமையும், வளமும் அதன் கலப்பு அதிகமில்லாத தனித்துவமான மொழி தமிழ் மட்டுமே. ஆனால் இந்தியாவின் மற்ற மொழிகளில் சமஸ்கிருத/ஹிந்தி கலப்பு அதிகம். ஆயிரம் வருட காலமாக சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய வரலாறுடைய தமிழ் மொழியைப் பேசும் நான் இன்னும் அதிகமாக எதிர்க்க வேண்டும்.

வெளி மாநிலங்களுக்குச் சென்றால் ஹிந்தி தெரியாதா என்று அவமானப்படுத்துகிறார்கள் வெட்கமாக இருக்கிறது

அது காட்டுமிராண்டிகளின் இழிசெயல். நீங்கள் கறுப்பாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறார்கள். அதற்காக வெள்ளையாக வேண்டும் அழகாக வேண்டும் அப்படியில்லாதது நம் தவறு என்பீர்களா ? மெட்ராஸி என்கிறார்கள், மலையாளிகள் பாண்டிகள் என்கிறார்களல்லவா அது போன்ற இனவெறிதான் அப்படிப் பேசவைக்கிறது. மேலும் ஹிந்தி பேசிகளின் ஆண்டைத்தனம், வட இந்தியனின் தென்னிந்தியா மீதான் இழிவான பார்வை. அதற்கு நீங்கள் குற்ற உணர்வு அடையத் தேவையில்லை. நீ தமிழகம் வரும் போது ஏன் தமிழ் தெரியவில்லை என்று நான் கேட்டால் என்ன சொல்வாயோ அதுதான் இதற்கும் பதில் என்று சொல்வோம். (தென்னிந்தியாவில் மூன்று மொழிகள் செம்மொழியாகியிருக்கிறது என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியுமா ? அட செம்மொழிகள் என்று கூட வேண்டாம் நான்கு மொழிகள் கோடிக்கணக்கானவர்களால் பேசப்படுவதாவது தெரியுமா)

தமிழ் பேசாத பல மாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாழும்போது அவர்கள் மீதும் தமிழகத்தில்  கட்டாயத் தமிழ் சட்டம் என்பது தமிழ்த் திணிப்பு ஆகாதா ?

தமிழகத்தில் கட்டாயத் தமிழ் என்றால் எல்லோர்க்குமே மொழியுரிமை நினைவுக்கு வந்து விடும் என்பது மகிழ்ச்சி. தமிழகத்தில் மட்டுமல்ல எல்லா மாநிலங்களுமே அவரவர் மொழியைக் கட்டாயப்பாடமாகவும், பிறமொழியினர்க்கும் சேர்த்து வைப்பது நியாயமான செயலே. இதன் மூலம் அம்மாநிலத்தில் இருக்கும் பிறமொழியினர் ஒரு மொழியைக் கற்க முடியும். அங்கேயே வசிப்பவர்கள் அம்மொழியைக் கற்பதில் என்ன தவறு, இது பிற மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் சேர்த்துத்தான். ஆனால் ஹிந்தியை, ஹிந்தி பேசாத பிற மாநிலங்களின் மீது திணிப்பது வேறு, அந்தந்த மாநிலங்களில் கட்டாயப் பாடமாக வைப்பது வேறு. இதன் மூலம் மட்டுமே பிராந்திய மொழிகளின் பாதுகாப்பும், வளர்ச்சியும் உறுதி செய்யப்படும்.

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்