தமிழ்த்தேசியத்திடமிருந்து பிரிக்க முடியாத இந்திய இறையாண்மை !!

திராவிட எதிர்ப்புக்கு மறுப்பு வரும்போதெல்லாம் தமிழ்நாட்டில் தமிழர் என்றாலே பலருக்குப் பிடிப்பதில்லை என்கிற பாணியில் புலம்பலும், காழ்ப்பும் நிரம்பிய வகையில் பதிலடி வருகிறது. தமிழுணர்வை திராவிட வெறியர்கள் எதிர்த்து நிற்பதைப் போல காட்டுகிறார்கள். பெரியாரியத்தை பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள், ஜாதிவெறியர்கள் எதிர்க்கிறார்கள், மதவாதிகள் எதிர்க்கிறார்கள் அந்தோ மறத்தமிழர்களும் எதிர்க்கிறார்கள்.

தற்போது நாம் தமிழர் இயக்கத்தினரால் வெளியிடப்பட்ட கட்சி செயல்திட்டத்தில் இந்திய இறையாண்மையை காக்க வேண்டும் என்ற உறுதிமொழி வெளியிடப்பட்டத்தைத் தொடர்ந்து அக்கட்சியின் மீது பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். வழக்கம் போலவே நாம் தமிழர் கட்சியும் திமுக எதிர்ப்பு, கருணாநிதி எதிர்ப்பு, பின்பு திராவிட எதிர்ப்பு இறுதியாக வேறு வழியின்றி பெரியார் எதிர்ப்புடன் முடித்து பெரியார் தமிழினத் துரோகி என்ற முழக்கத்தின்படியே தமது திட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதில் பார்ப்பனியம் என்ற சொல் கவனமாகத் தவிர்க்கப்பட்டுள்ளது. பார்ப்பனர் என்ற சொல்லுக்கு ஆய்வாளர் என்று புதிய அருஞ்சொற்பொருளும் தரப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஆரியம், பார்ப்பனீயம் என்ற வடமொழிச் சொற்களுக்கு மாறாக மனுவியம் என்பதைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறது நாம் தமிழர் இயக்கம். செய்திகளை வெளியிட்ட பின்பு முன்னுக்குப் பின் முரணாகத் தற்போது சீமான் தமிழக அரசியல் இதழுக்கு பேட்டி வழங்கவேயில்லை என்று மறுத்திருக்கிறார்.

தமிழர் விடுதலைக்காக போராடக் கிளம்பிய கட்சியினர் ஏன் இந்திய இறையாண்மையக் காப்பதாக உறுதி மொழி எடுத்துக்கொள்ளவேண்டும். இந்திய இறையாண்மையைக் காப்பதற்குத்தான் எத்தனையோ பேர் இருக்கின்றனர். பொதுவாக ஈழத்தமிழர் விடுதலை தனித் தமிழ்நாடு என்றாலே இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசினார்கள் என்று போட்டுக் கொடுக்க தினமலர், பேராயக் கட்சி என்று பலர் இருக்கின்றனர். இதுவரை தமிழ்நாட்டிலிருக்கும் எந்தத் தமிழ்தேசியக் கட்சியும் இந்திய இறையாண்மையைக்காப்பதாகக் கூறவில்லையே என்று எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். நாம் தமிழர் இயக்கத் தமிழர் சீமானை மேடையேற்றி அவரை அறிமுகப்படுத்திய பெரியார் திகவினர். ஈழப்போரின் போது தமிழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது நாம் தமிழர் இயக்கம் தொடங்கப்பட்டது. இவர்கள் நாம் தமிழர் இயக்கத்தின் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வந்தனர். இப்போது பெரியார் ஈழத்தந்தை செல்வாவுக்ககு ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று கைவிரித்ததை வைத்து திராவிடத்தால் ஏதும் முடியாது ஏய்த்துவிட்டதாக என்று சொல்கின்றனர். சுவாரசியமாக இவர்கள் சிங்களத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். பேசாமல் பார்ப்பனியத்தையும் திராவிடப்பட்டியலில் சேர்த்திருக்கலாம், ஏனென்றால் சிங்கள இனவாதிகள் தம்மை ஆரியர்களாகக் கருதிக் கொள்கிறவர்கள்.

கேட்டுக் கேட்டு சலித்துபோன பழைய வாதங்களே மீண்டும் கேரளாவிலோ ஆந்திராவிலோ, கர்நாடகாவிலோ எவனும் திராவிடன் என்று சொல்வதில்லை என்று, இதற்கென்ன சொல்வது, பெரியார் அன்றே சொல்லி விட்டார் இவர்களுக்கு எந்த சுயமரியாதையும் இல்லை என்று, இவர்களெல்லாம் பார்ப்பனியத்திற்கு அடிமையானவர்கள் என்று. அவர்கள் திராவிடன் என ஒத்துக் கொள்ள வேண்டுமென்றால் தமிழ்தான் திராவிட மொழிகளின் தாய் என்று ஒத்துக் கொள்ள வேண்டும். இதற்கு பார்ப்பனியத்திற்கு அடிமையான அவர்கள் தயாரில்லை. ஏன் 60 வருடங்களாக போராடியே தமிழ்நாட்டில் எத்தனை பேர் ஒத்துக் கொண்டார்கள், அங்கே விழிப்புணர்ச்சி ஊட்ட யாரும் பெரியார்போலப் பிறக்க வில்லை. கன்னடராக இருந்தாலும் தமிழர்களுக்குப் போராடியதால்தான் பெரியார் இன்னும் பெரியாராகிறார்.

தற்போதுள்ள தமிழ்தேசிய வாதிகள் வைக்கும் எந்த வாதமும் மராட்டிய இனவெறியன், இந்துத்துவாவாதி பால் தாக்கரே, ராஜ் தாக்கரே ஆகியோரின் இனவாத வன்முறை அரசியலுக்கும் எந்தளவும் மாறியதில்லை, கூடவே வாட்டாள் நாகராஜ் என்ற தலைவரும்தான். தமிழ்நாட்டிலுள்ள பிற மொழியினர் மீதான் வெறுப்புணர்வை வளர்ப்பது, வந்தேறிகள் வாழ்கிறார்கள் தமிழர்கள் வீழ்கிறார்கள் என்பது, இவர்களின் அரசியலுக்கு அவ்வப்போது ஈழத்தமிழர்களை இழுத்து பச்சாதாபம் தேடிக்கொள்வது என்று தொடர்கிறார்கள். தமிழ்தேசியவாதிகளில் பல வகையினர்  இருக்கிறார்கள். சமனியவாதிகள்(சோஷலிஷ்டுகள்) தொடங்கி இனவாதிகள், மத அடிப்படைவாதிகள் வரை. இவர்களுக்குள் பல வேறுபாடுகள், இவர்களுக்குள் எந்த கருத்து மோதல்களும் காணோம். உதாரணத்துக்கு ஒன்று. பொதுவில் (தமிழக) தமிழ்தேசியம் இந்தியாவை ஒத்துக் கொள்ளாது. அதன் கொள்கை தனித் தமிழ்நாடு, தனி ஈழம். அதே ஈழத் தமிழ்தேசியம் இத்தனை பட்ட பின்பும் இந்தியாவை தந்தை நாடு என்கிறது, தமிழீழம் அமைவது ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பதை விட இந்தியாவுக்கு பாதுகாப்பு என்று இந்தியாவின் காலைச் சுற்றி வருகிறது. இதெல்லாம் ஏன் பேசப்படுபொருளாகவில்லை ? பெரியாரியமல்லாத தமிழ்தேசியம் என்ன கொள்கையை வைத்திருக்கும் என்பதற்கு ஈழத்தமிழ்த்தேசியமே உதாரணம். இலைங்கையிலிருந்தாலும் தமிழ்தேசியம் கடல் தாண்டி பார்ப்பன இந்தியாவின் காலில் விழும்.

சீமான்

சீமான் வெறும் உணர்ச்சிவயப்படும் மனிதராகத்தான் இருந்தார். தமிழுணர்வாளர்கள் அனைவராலும் கருணாநிதி வெறுக்கப்படக் காரணமாக இருந்தது, ஈழபோர்தான். ஆனால் ஈழப்போரின்போது நடந்த தேர்தலில் திமுக விற்கு எதிராகவும், அதிமுகவிற்கு ஆதரவாகவும் இருந்த சீமான், தேர்தல் முடிந்தவுடன் ஏதோ ஒரு வார இதழுக்கு வழங்கிய பேட்டியில் இப்படிக் கூறியிருந்தார். நம்மை எதிரி சுற்றி வளைத்துவிட்டால் கையில் கிடைப்பதை நாம் ஆயுதமாகப் பயன்படுத்துவதுபோலத்தான் நாங்கள் அதிமுகவை ஆதரித்தோம், ஆனால் கலைஞர்தான் தலைவர் என்பதில் மாற்றமில்லை, இப்போதும் என் அலுவலகத்தில் திமுக கொடியைக் காணலாம் என்றார். பின்பு ஜெயா தொலைக்காட்சியில் பேசினார். அப்படியே அம்மா ஆதரவாளராக மாறிவிட்டார்.

10 வருடங்கள் இருக்கலாம் நானும் என்னுடைய நண்பனும் ஈரோட்டில் பெரியார் வாழ்க்கையைப் பற்றி ஒரு படம் திரையிட இருந்தார்கள். அந்தத் திரைப்படம் ஞாநி இயக்கியதாகும். அந்தத் திரைப்படம் தொடங்கும் முன் சீமானின் உரையைக் காண நேர்ந்தது. அதில் பார்ப்பனிய, தீண்டாமை எதிர்ப்பு, பகுத்தறிவு தன்மான சீமான்தான் உணர்ச்சிகரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சொன்ன வாசகம் இன்னும் நினைவிலிருக்கிறது. நண்பர்களே !! ஒரு சினிமாக்காரன் வந்து இங்கு பகுத்தறிவு பேசுகிறேன் என்று எண்ண வேண்டாம். சினிமா என்பது எனது தொழில். இங்கே நான் உங்களில் ஒருவனாக உணர்வுடன் வந்திருக்கிறேன். எனக்கு சினிமாத் தொழில் இல்லையென்றால் கள்ளச் சாராயம் காய்ச்சுவேன். (தொழில் கொண்டு பார்க்க வேண்டாம் உணர்வு கொண்டு பார்க்கவும்) என்று சொன்னார். கூட்டத்தில் கைதட்டல் அதிகமாக இருந்தது. இதற்கும் அவர் இப்போது நடந்து கொள்வதற்கும் ஏதாவது வேறுபாடு இருக்கிறதா ?

இதே போலத்தான் ஒருமுறை தமிழீழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை ஆதரிப்போம் ஆனால் காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம் என்றார். பிரபாகரன் படம்போட்ட சட்டையுடன் போய் பசும்பொன்தேவரின் விழாவில் கலந்து கொண்டு ஏன் தேவரைப் போராளியாக பார்க்க மறுக்கிறீர்கள் என்றார். பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தார் என்றார். மற்ற திராவிட எதிர்ப்பாளர்களின் கேட்டுக் கேட்டுக் சலித்துப் போனதையே இவரும் பேசுகிறார்.

திராவிட எதிர்ப்பு

திராவிட எதிர்ப்பு என்றாலே கருணாநிதியை விமர்சிக்க வேண்டியது கருணாந்தி, திமுகவின் தவறையெல்லாம் திராவிடத்தின் தவறாகவும் பெரியாரே மூலகாரணம் என்பதைப் போல பேச வேண்டியது இறுதியில் பெரியார் எதிர்ப்பில் முடிக்க வேண்டியது. திராவிடத்தால்தான் தமிழன் வீழ்ந்தான் என பிதற்ற வேண்டியது.

ஃபேஸ்புக்கில் கருணாநிதியின் பெயர் தட்சிணாமூர்த்தி, அவர் ஒரு தெலுங்கு வந்தேறி தமிழின் வெறுப்பாளர் என்ற ரீதியிலெல்லாம் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பகுத்தறிவு கருணாநிதி மஞ்சத் துண்டு அணிவது இந்து மதப் பண்டிகைகளுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது பற்றியெல்லாம் எல்லோரும் கருணாநிதியைக் குதறி எடுப்பவர்கள், ஒரு கன்னடப் பார்ப்பனர் எப்படி திராவிடக் கட்சியில் தலைவராக இருக்கலாம் என்று ஒருவரும்  கேட்பதேயில்லை. அதுதான் தமிழக நாளிதழ்கள் தமிழர்களின் மண்டையில் திணித்திருக்கும் கருத்தின் தன்மை. முன்னாள் இன்னாள் பேராயக் கட்சியினர் என அனைவரும் தினமணியில் எழுதுவார்கள் என்ன பிரச்சனையென்றாலும் அதிலே நாலுவரியாவது கருணாநிதிதான் இதற்கெல்லாம் காரணம் என்ற பெயரில் எழுதுவார்கள், அப்படியே சந்தடி சாக்கில் திராவிடக் கட்சிகள் என்று பன்மையில் எழுதிவிட்டு திராவிடக்கட்சிகள் என்றாலே கருணாநிதி என்ற பெயர் வரும்படி பார்த்துக் கொள்வார்கள். இதில் கருணாநிதியை மட்டுமே கொள்கை ரீதியில் விமர்சிப்பார்கள், ஜெயலலிதாவை அப்படி விமர்சிக்க மாட்டார்கள் வெறும் நிர்வாகக் குளறுபடிகள், ஊழல் என பொதுவில் மட்டுமே விமர்சிப்பார்கள்.

தினமணி, தினமலர் ஞாநி என அனைவரும் இவ்வகையினரே. இம்மாதிரியானவர்கள் திராவிடக் கட்சிகளை அதிகம் திறனாய்வு (விமர்சனம்) செய்வார்கள், அதே நேரம் அதிமுகவின் பழ.கருப்பையா தினமணியில் எழுதுவார், அவர் இதுவரையில் எழுதியது கருணாநிதி எதிர்ப்புதான் அதேபோல் கருணாநிதியை வைத்து கொள்கையையும் நடத்தையையும் ஒப்பிட்டு எழுதுவார். ஆனால் தான் சார்ந்திருக்கும் திராவிடக் கட்சியைப் பற்றி நெல்லை கண்ணன், பழ. நெடுமாறன் இன்னும் பலர் எழுதுவதை கண்டுகொள்ள மாட்டார். இங்கு கருணாநிதியை நல்லவராக்கும் என்று சொல்லவில்லை. கருணாநிதியின் பெயரால் திராவிட வெறுப்பை ஊட்டும் விதத்தைச் சொன்னேன். அதற்கேற்றார்போல் கருணாநிதியும் அவரது பாதந்தாங்கி வீரமணியும் நோபால்களாக வீசுகிறார்கள். அதை அரசியலே தெரியாத பச்சைப் பிள்ளைகள் கூட சிக்ஸராக்குகிறார்கள். இதற்கெல்லாம் கருணாநிதியே காரணம்.

பார்ப்பன எதிர்ப்பு என்றால் அதிகம் போராட வேண்டும் கொள்கைப் பிடிப்பு வேண்டும். காசு பார்க்க முடியாது. இருப்பதிலேயே எளிதானது, கருணாநிதி எதிர்ப்பு, திமுக எதிர்ப்பு, திராவிட எதிர்ப்பு, இந்திய இறையாண்மை, ஈழத்தமிழர் என்பது இன்னும் இலாபம் தரும், அரசியல் செல்வாக்கை உயர்த்தும் என்பது நிலவரமாக இருக்கிறது. திராவிடம் மட்டுமல்ல, மார்க்சியம், தமிழ்த்தேசியம், தலித்தியம் என என்ன கொள்கையானாலும் மக்கள் அமைப்புகளிலிருந்து தேர்தல் அரசியலுக்குச் சென்றாலே அது யாருக்குப் பயனளிக்கும் என்பது வெள்ளிடை மலை.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

 1. முத்தமிழ்8/6/12 12:34 முற்பகல்

  தயைகூர்ந்து சீமானுக்கு அனுப்பி வையுங்கள். முடிந்தால் பாவாணர், பெருஞ்சித்திரனார் முதலானோர் பெரியார் தோன்றியிராவிட்டால் தமிழ்நாட்டின் கதி பற்றி எழுதியுள்ளவற்றையும் சேர்த்து அனுப்புங்கள். தேவநேயருக்குப் பாவாணர் பட்டமளித்ததே பெரியார் என்பதை சீமானுக்கு நினைவுகூறுங்கள்.
  பாவாணர், பெருஞ்சித்திரனாரைவிட இன்றைக்கு எந்தப் பெரிய கொம்பனும் தமிழ்த்தேசியத்திற்காகப் போராடிய வீரனல்ல. அவர்கள் பட்ட துன்ப வரலாறும் 95 வயதிலும் மூத்திரப் பையை சுமந்துகொண்டு தமிழ்நாட்டை லெனின் சோவியத்தைச் சுற்றியதைவிட பன்மடங்கு சுற்றிய அந்த மறக்கிழவனின் தமிழ்த்தேசியம் தமிழ் மக்கள் பற்று தமிழர்கள் மான உணர்வுபெற அவர் ஆற்றிய தொண்டு முதலானவற்றை முழுமையாகப் வாசிக்கச் சொல்லுங்கள். வேண்டுமானால் ”பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் ௨௦௧௨” தொகுப்பு ஒன்றை அனுப்பி வைக்கலாம். குறைந்தபட்சம் அதன் பொருளடக்கத்தையும் முன்னுரையையும் அவர் கூர்ந்து வாசித்தாலே போதும். சீமான் அண்ணனுக்குத் தேவையான விளக்கம் கிடைக்கும். அவர் ஒரு முறை ஈழம் சென்று தலைவருடன் படம் எடுத்து வந்திருக்கலாம். அங்கு உள்ள இருப்பு என்ன? பார்ப்பனியத்தின் சதிவேலை என்ன என்பதை எல்லாம் பெரியார் கண்கொண்டு பார்த்திருந்தால் ஈழப்போரில் பார்ப்பனியத்தின் சதியும் பெரியாரியத்தின் தேவையும் புரிந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி முத்தமிழ் !! கண்ணீர் வந்துவிட்டது படித்தவுடன். எனது பதிவை விட ஆயிரம் வரலாறு சொல்கிறது உங்கள் பின்னூட்டம். அவரின் படத்தை வைத்துக் கொள்ளவே எனக்கெல்லாம் தகுதியில்லை. இருந்தாலும் அவர் மீதான் அவதூறுகளைத் தாங்க முடியாமல்தான் எழுத வேண்டியுள்ளது. பெரியாரியவாதிகளிடம்தான் சீமான் தமிழும் இனவுணர்வும் கற்றுக் கொண்டார். பின்பு ஏன் இப்படி எனும்போதுதான் குழப்பமாக இருக்கிறது.

   நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்