சீக்கியரின் அடுத்த ஈடு செய்யமுடியாத இழப்புதான் பொற்கோயிலின் ஒரு பகுதியாக இருந்த அவரகளது நூலகம்(Sikh Reference Library) அழிந்து போனது. இராணுவச் சண்டைக்குள் காணாமல் போன துயரத்தில் ஒன்றாக கருதப்படுவது இந்த நூலகம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நிகழ்வு. அவர்களின் சில நூற்றாண்டுச் சேகரிப்புகள் ஒரு நாளில் மறந்து போயின. இது ஒரு வகையில் யாழ்ப்பாண் நூலகம் எரிக்கப்பட்டது போன்றதுதான்.
சீக்கியரின் பொற்கோயிலில் இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலின் பெயர்தான் நீல விண்மீன் நடவடிக்கை (Operation Blue star). அந்த இராணுவ நடவடிக்கையின் போது இந்திய இராணுவத்தால் பொற்கோயிலில் இருந்த விலைமதிப்பற்ற தங்கம் போன்ற பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. அவற்றில் சில திருப்பியும் அளிக்கப்பட்டன. பலவும் அழிந்து போயின அல்லது தொலைந்து போயின. பொற்கோயிலின் ஒரு கட்டிடத்தில் இருந்த இந்த நூலகம் 1947 - ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 600 ஆண்டுகால சீக்கியரின் வரலாற்றுக் களஞ்சியமாகவும், சீக்கிய மதத்தைப் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் , குருமார்களின் போதனைகள் கொண்ட பல நூல்களையும் கொண்ட அவர்களின் அடையாளமாகவும் விளங்கியது. இது இந்திய இராணுவத்தால் மர்மமான முறையில் எரித்து அழிக்கப்பட்டது அங்கிருந்த சில விலைமதிப்புள்ள கலைப்பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
எரிக்கப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதி
நூலகத்தில் ஏறக்குறைய 20000 நூலகள் இருந்திருக்கலாம். சீக்கிய குருக்களின் சீடர்களால் எழுதப்பட்ட மூலப்பிரதிகள், ஆதிகிரந்தத்தின் பல்வேறு கையெழுத்துப் பிரதிகள், குரு கோவிந்த் சிங் அவர்களால் தொகுக்கப்பட்ட போதனைகள், பல்வேறு இலக்கியங்கள், ஓவியங்கள், பாடல்கள் அடங்கிய பல பண்பாட்டு ஆவணங்கள் அழிக்கப்பட்டன. அதில் பஞ்சாபி மொழியிலிருந்த நூலகள், கையெழுத்துப் பிரதிகள் எண்ணிக்கை 2335. பஞ்சாபிய மொழி மட்டுமன்றி அஸ்ஸாமிய, சிந்தி, வங்காள மொழிகளிலும் இருந்த நூல்களும் இதில் அடக்கம். ஆங்கில மொழியில் மட்டும் 1047 நூல்கள் இருந்தன. ஏறக்குறைய 383 பாகங்களாக இருந்த நூல்கள் 980 தலைப்புக்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன.
நூலகம் எரிக்கப்பட்டதா என்ற சர்ச்சை
பிந்தரன்வாலேவையும் அவரது ஆதரவாளர்களையும் அழிப்பதற்காக இந்த நீல விண்மீன் நடவடிக்கை இந்திராவினால் உத்தரவிடப்பட்டது. சில நூறு காலிஸ்தானிகளை எதிர்த்து மிகப்பெரும் இராணுவ நடவடிக்கையாக பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மிகப்பெரும் தாக்குதல் சீக்கியர் மீது நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கை 1984 ம் ஆண்டு ஜூன் 3 முதல் 6 ம் தேதிவரையில் நடத்தப்பட்டது. அரசின் கணக்குப்படி 493-800 காலிஸ்தானிகள் (பொதுமக்களும் சேர்த்து ) 83 இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். ஆனால் பல்லாயிரம் சீக்கியர் கூடும் ஒரு திருநாளில் நடத்தப்பட்டதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்ககூடும்.
நீல்விண்மீன் நடவடிக்கை ஜூன் 6, 1984 வரை நடந்தது. அந்த நாளின் (ஜூன் 6) மாலை வரையிலும் நூலகம் பாதிப்படையவில்லை. ஜூன் 7 ம் நாள் அதிகாலை வேளையில்தான் எரிக்கப்பட்டுள்ளது. எனவே சண்டையில் நூலகம் சேதமடைவில்லை. பின்பு மர்மமான முறையில் இராணுவத்தால் எரிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
ஏன் நூலகம் அழிக்கப்பட்டது?
யாழ்ப்பாண நூலகம் மொத்தமாக அங்கு வைக்கப்பட்டிருந்த நூல்களுடன் சேர்த்து எரியூட்டப்பட்டது. சீக்கியரின் நூலகமோ அங்கிருந்த நூல்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்ட பின்பு எரிக்கப்பட்டது. நூலகத்திலிருந்த நூல்கள் பல நூற்றுக் கணக்கான பெரிய மூட்டைகளில் எடுத்துச் செல்லப்பட்டன. அந்த மூட்டைகள் இலக்கமிடப்பட்டவையாக (numbered) இருந்தன. இவையனைத்தும் பல இராணுவ வாகனங்களில் ஒரு இரகசிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. பின்பு நூலகக் கட்டிடம் எரியூட்டப்பட்டது. இது மைசூர் புலி திப்பு சுல்தானின் நூலகத்தை வெள்ளையர்கள கொள்ளையடித்த செயலுக்கு ஒப்பானது.
அவை ஏன் எடுத்துச் செல்லப்பட்டன எனபது குறித்துத் தெளிவான செய்திகள் இல்லை.அவை இந்திராவால் பிந்தரன்வாலேவுக்கு எழுதிய முக்கியமான கடிதங்களை கைப்பற்றும் பொருட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அந்தக் கடிதங்கள் கைப்பற்றப் படவில்லை. கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களில் 2 விழுக்காடுகள் சீக்கியரிடம் திருப்பியளிக்கப்பட்டன. தற்போது கைப்பற்றப்பட்ட பல பொருட்களும், ஆவணங்களும், கோப்புக்களும் நடுவண் புலனாய்வுத் துறையினரிடம் உள்ளன. இந்தத் தகவல்கள் நடுவண் புலனாய்வுத் துறையில், நீலவிண்மீன் நடவடிக்கையில் இருந்த ஒருவரால் வெளியிடப்பட்டது.
Download As PDF
அறிந்திராத நல்ல தகவல்கள் தொடருங்கள்
பதிலளிநீக்குஊக்கத்திற்கு நன்றிகள் சுரேஷ்குமார்
பதிலளிநீக்கு