இந்திரா காந்தியின் படுகொலையும் மக்களின் எதிர்வன்முறையும்
சிறுபான்மையினரின் மேல் வன்முறை ஏவப்படும்போது இந்துப் பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள் ஒரு பதில் சொல்வார்கள். இந்த வன்முறை இந்துக்களின் எதிர்த்தாக்குதல் என்று மொத்த இந்துக்களின் மீதும் பழியைப்போட்டுவிடுவார்கள். இதைத்தான் டெல்லியில் நடந்த படுகொலைக்குப் பின்பும் சொன்னார் இராஜீவ் காந்தி. இந்திராவின் படுகொலைக்கும் பஞ்சாப்பில் நிலவிய பிரிவினைத் தீவிரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் பல்லாயிரம் சீக்கியர்கள் பேராயக்கட்சிப் பேய்களின் கொடூரத்திற்கு இலக்காகி மாண்டுபோனார்கள். டெல்லியிலிருந்த சீக்கியர்கள் பலர் பேராயக்கட்சியின் ஆதரவாளர்களாகவும் இருந்தனர். இந்து மதவெறியைத் தூண்டுவதற்காக இவர்களைக் கொல்லப்படக் காரணமான கொலைகாரப் பயங்கரவாதி உதிர்த்த முத்துக்கள்தான் இவை.
"இந்திரா அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து சில கலவரங்கள் நடைபெற்றன. இந்தியாவே சில நாள்களுக்கு உலுக்கப்பட்டதிலிருந்து (சீக்கியர் படுகொலை) மக்கள் மிகவும் ஆவேசத்துடன் இருந்ததை நாம் அறிவோம், ஆனால் பெரிய மரம் வீழும்போது தரை சிறிது அதிர்வது இயற்கையானது" என்றார் இராஜீவ்.
இந்திராகாந்தி 1984 -ம் ஆண்டு, அக்டோபர் 31 ம் நாள் காலை 9.15 மணிக்கு சுடப்படுகிறார். அவர் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தில் (AIIMS) சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகிறார். பலனின்றி இரண்டு மணிநேரத்தில் இறந்துவிடுகிறார். அவரது இறப்புச் செய்தி அனைத்திந்திய வானொலியில் அறிவிக்கப்படுகிறது. நண்பகலில் அனைத்திந்திய மருத்துவக் கழகத்தில் மக்கள் கூடத் தொடங்குகின்றனர். அவர்களால் வெறுப்பைக் கக்கும் "இரத்ததிற்கு இரத்தம்", "சீக்கியர்கள் தேசத்துரோகிகள்" போன்ற முழக்கங்கள் எழுப்பப்படுகின்றன. அவை அரசுத் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் அந்நாள் முழுவதும் ஒலிபரப்பப்பட்டன. அன்றைய குடியரசுத்தலைவரான ஜைல் சிங் அன்று மாலை அவ்விடம் வந்து சேர்ந்த போது அவரது வாகனம் தாக்கப்பட்டது. அங்கங்கே சீக்கியர்கள் மகிழுந்துகளிலிருந்தும், பேருந்துகளிலிருந்தும் வெளியே இழுத்து வரப்பட்டுத் தாக்கப்பட்டனர், அவர்களது தலைப்பாகைகள் கிழித்தெறியப்பட்டு எரிக்கப்படுகின்றன. இவ்வளவுதான் இந்திரா காந்தி படுகொலை நடந்த நாளில் சிக்கியருக்கு எதிரான பொதுமக்களின் எதிர்வினையாக இருந்தது.
திட்டமிடப்பட்ட வெறியாட்டம்
இந்த ஆவேசமானது ஒரு இரவுக்குள் மிகப்பெரும் படுகொலைகளைத் தொடக்கிவைக்கும் அளவுக்குக் கொலைகாரர்களால் ஊதிப்பெருக்கப்பட்டது. இதற்குக் காரணம் வருகின்ற தேர்தலில் பெரும்பான்மை இந்துக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளை அள்ளிக் கொள்ள வேண்டுமென்பதே. அந்தத் தந்திரம் வெற்றி பெற்றது. அந்தத தேர்தலில் மிகப்பெருமளவிளான வாக்குகளைப் பெற்று வென்றது பேராயக்கட்சி (காங்கிரஸ்).
திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலையும் காவல்துறையின் உதவியும் மிகப்பெருமளவில் படுகொலைகள், கொள்ளையடிப்புகள், வன்கலவிகளுக்கு வழிவகுத்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜன்குமாரும், வர்த்தக சங்கத் தலைவர் லலித் மேகன் என்பவரும் கொலைகாரக் கும்பலுக்குப் பணமும், சாராயமும் தந்து தூண்டிவிட்டவர்கள். ஜே.ஜே காலனி எனப்படும் இடம் அவசரநிலைக் காலத்தில் பேராயக்கட்சியின் ஆட்சியாளர்களால் சேரிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட மறுகுடியேற்றப் பகுதிகளாகும். இந்தப் பகுதி பேராயக் கட்சிக்கு மிகப்பெரும் வாக்குவங்கியாக இருந்தது. குஜ்ஜார், ஜாட் போன்ற பிற்படுத்தப்பட்ட சாதியினர், பாங்கீஸ் என்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் வரை பலரும் பேராயக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்தனர். இப்பகுதிகளில் இருந்த படிப்பறிவற்றவர்கள், உதிரிப்பாட்டாளிகள், சமூகப்பகைவர்கள், பொறுக்கிகள், பொறம்போக்குகளைக் கொண்டு பேராயக் கட்சி தமது அரசியல் போராட்டங்களில், பேரணிகளில், பொதுக்கூட்டங்களில், கலவரங்களில் ஈடுபடுத்தி வந்தது. இவர்களே கொலை, கொள்ளை, வன்புணர்ச்சிகளை நடத்தும் அடியாள்களாக செயல்பட்டனர்.
இந்தக் கொலைகாரர்களுக்கு மூன்று நாட்களும் போக்குவரத்து வசதி எல்லாவகையிலும் செய்து தரப்பட்டது. டெல்லி போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் தொடங்கி, காவல்துறையினரின் வாகனங்கள் வரையில் இந்தக் கும்பல்களை சீக்கியர்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு உதவின. இந்தக் கும்பலுக்குத் தொடர்ந்து வெறியூட்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன். "சீக்கியரைக் கொல், கொள்ளையடி", "சீக்கியனுக்குப் பாடம் கற்பிக்க!", "ஒரு சர்தாரும் தப்பக்கூடாது!", "காவல்துறையே நம்முடன் இருக்கிறது!" இவை முழக்கமிடப்பட்டன. இந்தக் கொலைகாரப் பேய்களுக்கு உருட்டுக்கட்டைகள், கம்புகள், வேல்கள், வாட்கள், கத்திகள், இரும்புத்தடிகள் மண்ணெண்ணெய் போன்றவை தொடர்ந்து வழங்கப்பட்டன, அவர்களின் கைகளில் வாக்காளர் பட்டியல் இருந்தது. வீடுவீடாக வெறியாட்டம் நடந்தது. வீடுகளிலிருந்தவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டு அடித்தும், வெட்டியும், உயிருடன் எரிக்கப்பட்டும் கொல்லப்பட்டார்கள். சாலையில் துரத்தித் துரத்தி வெட்டியும் எரித்தும் கொல்லப்பட்டார்கள். ஆண்கள் தலைப்பாகையைக் கிழித்தும் முடியை வெட்டியும், பெண்கள் கணவர்கள், அண்ணன்கள் முன்னிய்லையில் கும்பல்களால் வன்புணர்ச்சி செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டார்கள். பாதி உயிருடன் எரிக்கப்பட்டவர்கள் உட்பட அனைவரது பிணங்களும் தெருவிலே கிடந்தன. அவைகள் மூன்று நாட்களுக்குப் பின்பே கொலையானவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டவேண்டிய நிலையில் அப்புறப்படுத்தப்பட்டன.
காவல்துறையினர் பரப்பிய வதந்திகள்
டெல்லியின் காவல்துறையும் தன் பங்கிற்கு பொய்யான வதந்திகளைப் பரப்பி சீக்கியருக்கு எதிரான மனநிலையை உருவாக்கியது. பரப்பப்பட்ட மூன்று வதந்திகள்
1. சீக்கியர்கள் இந்திராவின் இறப்புச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியுடன் நடனமாடினர், பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடியும், இனிப்புகளைப் பரிமாறிக்கொண்டும் மகிழ்ந்தனர்.
2. ஒலிப்பெருக்கியுடன் இருந்த காவல்துறையினரின் வாகனங்கள் "சீக்கியர்கள் டெல்லியின் குடிநீர் விநியோகத்தில் நச்சைக் கலந்து விட்டார்கள்" என்றன , சில இடங்களில் மக்கள் நீரைக் குடிக்க வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டனர்.
3. பஞ்சாப்பில் கொல்லப்பட்ட இந்துக்களின் உடல்களுடன் இரயிலொன்று பழைய டெல்லி இரயில் நிலையத்தில் வந்துள்ளது. சீக்கியர்களின் கூட்டமொன்று கலவரத்தைத் தூண்டுகிறது, எனவே இந்துக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்கிற பாணியில் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டன.
இதனால் சீக்கியர்களின் வழிபாட்டிடங்கள் இடிக்கப்பட்டன. அவர்களின் புனித நூல்கள் எரிக்கப்பட்டன. அவர்களின் குருத்துவாராக்களில் சிறுநீரைக் கழித்துவிட்டு அவைகள் தீக்கிரையாக்கப்பட்டன. காவல்துறையினர் சீக்கியரை வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர். கொலைகாரர்கள் வீடுவீடாக வாக்காளர் பட்டியலுடன் சென்று அடையாளம் கண்டு கொன்று குவித்தனர். மேலும் சீக்கியர்களில் ஆண்கள் தலைப்பாகை, தாடிகளைக் கொண்டும், பெண்கள் உடைகளைக் கொண்டும் எளிதாக அடையாளம் காணப்பட்டு சூறையாடப்பட்டனர். இத்தனைக் களேபரத்திலும் மிக நேர்த்தியாக நடந்த நிகழ்வுகள் சில, அன்றாடங்காய்ச்சிகளான உழைப்பாளி சீக்கியர்கள் வாழும்பகுதிகளில் அதிகமாக கொலைகளும் , பணக்கார சீக்கியர்கள் வாழுமிடங்களில் கொள்ளைகளும் அதிகமாக நடந்தன. கொலைகார ஓநாய்க்கூட்டத்திற்கு எந்தெந்தக் கடைகள் கொள்ளையடிக்கப்படவேண்டும், எந்தெந்தக் கடைகள் எரிக்கப்படவேண்டும் என்பதைத் தெளிவாக அறிந்து வைத்திருந்தனர்.
இந்தக் கொலைவெறியாட்டத்தினால் 3000 க்கும் அதிகமான எண்ணிக்கையில் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. விதவைகள் எண்ணிக்கை 1300, பெற்றோர், உறவினரை இழந்து அநாதைகளானவர்கள் 4000 பேர்கள். உண்மையில் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். இதனால் டெல்லியிலிருந்து மட்டும் ஏறக்குறைய 50,000 பேர்கள் வெளியேறினார்கள். இந்தக் கலவரத்தைப் பற்றியும், பாதிக்கப்பட்டவர்களில் சிலர் குறித்தும் பஞ்சாப்பில் சீக்கியர் மனநிலை குறித்தும் ஒரு ஆவணப்படம் கீழே.
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
பதிலளிநீக்குகீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !