சீக்கியர்கள், இராஜீவ்காந்தி, காங்கிரஸ் மற்றும் இந்துப் பயங்கரவாதம்


இந்திய அரசால் (காங்கிரஸ்) இந்தியாவிற்குள்ளும், வெளியேயும் சிறுபான்மையினர் மீதான கலவரங்கள் விடுதலை பெற்ற 63 ஆண்டுகளில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், காஷ்மீரிகள், வடகிழக்கு மாநிலங்கள், பழங்குடியினர், ஈழத்தமிழர்கள் ஆகியோர் இதற்கு இரையானவர்கள் என்று சொல்லலாம் . இதில் சீக்கியர்களும் தப்பவில்லை. பயங்கரவாதம், பிரிவினைவாதம், அந்நியர்களின் சதி, தேசிய ஒருமைப்பாடு, உள்நாட்டுப் பாதுகாப்பு, பிராந்திய மேலாதிக்கம், நக்ஸல் பயங்கரவாதம், புலிப்பயங்கரவாதம் போன்ற காரணங்களுக்காக இவை நியாயப்படுத்தப் படுகின்றன. இந்த வகையில் ஒன்றுதான் சீக்கியர் மீதான கலவரம். தன்னுடைய தேர்தல் நலன்களுக்காக மதவாதத்தைத் தூண்ட காங்கிரஸ் தயங்கியதே இல்லை. காங்கிரசின் இந்துமதப் பயங்கரவாதத்தின் ஒரு உதாரணம்தான் 1984 - ல் நடைபெற்ற சீக்கியர் மீதான படுகொலைகள். பாஜக ஆதரவாளர்கள் காங்கிரசை என்னமோ பயங்கரவாதம், அருந்ததிராயைக் கைது செய்யாமல் இருப்பது, நக்சலைட்டுகளுடனான் போர், பாகிஸ்தானுடன் அமைதிப்பேச்சு வார்த்தை, சீன ஆக்ரமிப்பு போன்ற விவகாரங்களில் ரொம்பவும் மென்மைப் போக்கைக் கடைப்பிடிப்பதாகவும் பாஜக ஆட்சிக்கு வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் அலட்டிக் கொள்வார்கள். ஆனால் பாஜகவை விட காங்கிரஸ் பலவிதங்களில் முன்னோடியாகவும், கொடூரமாகவும்  இருக்கிறது. நரேந்திரமோடிக்கு முன்னோடியே இராஜீவ் காந்திதான் என்பதற்கு  சீக்கியர்படுகொலை ஒரு எடுத்துக்காட்டு.

1984 - ல் சீக்கியர் இனப்படுகொலை முடிந்து 26 வருடங்கள் முடிந்துவிட்டன. இன்றுவரையில் அதன் முக்கியக் குற்றவாளிகள்(சஜ்ஜன் குமார், ஜெக்தீஷ் டைட்லர், ஹெச்.கே.எல். பகத், கமல்நாத் போன்ற) எவருக்கும் தண்டனை கிடைக்கவில்லை. இனிமேலும் கிடைக்காது. காங்கிரஸ் கொலைகாரகள் தமது ஊடக செல்வாக்கையும், அடியாள்களையும் பயன்படுத்தி சீக்கியர் மீதான இனப்படுகொலையை சீரும் சிறப்புமாக செய்து முடித்தனர். இந்த சீக்கியர் மீதான கொலையை கலவரம் என்று சொல்வதே தவறானது. கலவரம் என்பது இரண்டு குழுவினர் மோதிக்கொள்வது, இங்கே கொல்லப்பட்டவர்கள் சீக்கியர்கள் மட்டுமே என்பதால் இதைக் கலவரம் என்றே சொல்ல முடியாது . இதே விதிதான்  மும்பை, குஜராத் போன்ற நிகழ்வுகளுக்கும் பொருந்தும். இது எவ்வாறு நடைபெற்றது என்பதைப் பார்த்தாலே விளங்கிவிடும் இது கலவரமா இனப்படுகொலையா என்று. 

அக்டோபர் 31 1984 இல் இந்திரா காந்தி கொல்லப்படுகிறார். அதே நாள் இராஜீவ் பிரதமராகிறார். அன்றைய நாளில் சில இடங்களில் சீக்கியர் மீதான தாக்குதல் நடைபெறுகிறது, இருப்பினும் இரவுக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது. சீக்கியர்கள் நிம்மதியடைகிறார்கள். அன்றைய நாளின் பின்னிரவில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நவம்பர் 1,2, மற்றும் 3 ம் தேதிகளில் நடந்த வெறியாட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்படனர். அவர்கள் உடமைகள் கொள்ளையடிக்கப்பட்டனர். பெண்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

                                          

இது மிகத்தெளிவாக திட்டமிடப்பட்ட  இனப்படுகொலை என்பதற்கு சாட்சியாக 


டெல்லியில் பாலம்(palam) விமான நிலையத்தில் வந்திறங்கிய இராஜீவ், இந்திரா கொலையான செய்தியைக் கேட்டதும் அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினார். "என் அம்மா சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். நீங்கள் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? போய்ப் பழி வாங்குங்கள். ஒரு தலைப்பாகையும்(Turban) இங்கே இருக்கக் கூடாது. (No turban should be seen)

அக்டோபர் தேதி டெல்லியிலிருந்த சீக்கிய காவலர்களுக்கு  விடுப்பு அளிக்கப்பட்டு , அவர்களின் ஆயுதங்கள் பெறப்பட்டு,இராணுவக்  குடியிருப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஒரு சீக்கியர் தனது இந்து நண்பரின் வீட்டில் மறைந்து கொள்கிறார். அவரைத்தேடி வந்த கும்பல் அந்த வீட்டுக்காரரிடம் கேட்க, அவர் ஏற்கெனவே கொல்லப்பட்ட அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது என்று பதிலளிக்கிறார். நம்பாத அந்தக கும்பல் தம்மிடமுள்ள வாக்காளர் பட்டியலைக் காட்டி அதில் இன்னும்  அவரது பெயர் குறிக்கப்படவில்லை எனவே அவர் இன்னும் கொல்லப்படவில்லை என்றது.

மேலும் கலவரம் நடந்து கொண்டிருக்கும்போதே வாகனங்களில் வந்த நபர்களால், மண்ணெண்ணெய் போன்ற எரிப்பதற்குப்  பயன்படுத்தும் பொருட்கள்  கலவர கும்பலுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது. காவல்துறை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பாரத்தது, சீக்கியர் தற்காபபுக்காக வைத்திருந்த ஆயுதங்களைப் பறிமுதல் செய்தது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் கொலை வெறியாட்டத்தில் பங்குபெறும் காலாட்படையாக செயல்பட விடுதலை செய்யப்பட்டு இருந்தார்கள். 

கலவரம் நடந்த இடம் இந்தியாவின் தலைநகராகிய டெல்லியில், மூன்று நாட்களாகக் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல, இராணுவத்தைக் கொண்டு சில மணிகளிலேயே கட்டுப்ப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும். இராணுவமும் ஈடுபடுத்தப்படவில்லை. அதே நேரம் டெல்லி கலவரத்தின் எதிர்வினையாக பஞ்சாப்பில் சீக்கியர்கள் இந்துக்களின் மீது வன்முறையில் ஈடுபடுவார்கள் என்ற அச்சத்தினால் பஞ்சாப்பிற்கு அனுப்பவதற்கும் ஆயத்தமாக இருந்தது அரசு. ஆனால் பஞ்சாப்பில் எதிர்ப்பார்த்தபடி  கலவரம் ஏற்படவில்லை.

கலவரமானது டெல்லியிலிருந்து வட இந்திய மாநிலங்களுக்கும் பரப்பபட்டது. அரசு எந்திரமே இந்தப்படுகொலைக்கு உதவியது என்பதற்குச் சான்றாக டெல்லியின் மாநகர அரசுப் பேருந்துகள் கொலைக் கும்பலை கொண்டுவருவதற்காக பயன்படுத்தப்பட்டன.

அன்றைய ஊடகங்களான தூர்தர்ஷனும், அனைத்திந்தியா வானொலியும் "பிரதமர் இந்திராகாந்தி தனது "சீக்கிய" மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டார்" என்று தொடர்ந்து ஒலிபரப்பின.

சீக்கிய எதிர்ப்பு மனநிலை

அந்நாள்களில் தற்போது காஷ்மீரிகள் மீது இந்தியர்களின் மனப்பான்மை  எப்படி இருக்கிறதோ  அதே போல் சீக்கியர்கள் மீது இருந்தது. இந்திரா காந்தியால் அகாலிதள் கட்சிக்கு எதிராக வளர்க்கப்பட்ட காலிஸ்தானிகள் தனிநாடு கேட்டுப் போராடிக் கொண்டிருந்தனர். இவர்களால் பஞ்சாப் மாநிலத்தில் வாழ்ந்த இந்துக்கள் கொல்லப்பட்டனர். மேலும் சீக்கியர்கள் இந்தியாவை வெறுப்பவர்கள் என்ற கருத்தும் பொதுவாக நிலவியது. இது போன்ற ஒரு காலகட்டத்தில் சீக்கியர்களின் புனித பொற்கோயிலில் நீல விண்மீன் நடவடிக்கையின் (Operation Blue Star)  வாயிலாக காலிஸ்தானிகளின் தலைவர் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். சீக்கியரின் பொற்கோயிலுக்குள்  இந்திராவினால் இந்திய இராணுவம் நுழைந்ததை சீக்கியர்கள் தமது சமூகத்தின் மீதான அவமானமாகக் கருதினர். இந்துக்கள் சீக்கியரிடையே வெறுப்புணர்வும் இருந்தது.  இதற்குப் பின்னர்தான் தனது மெய்க்காப்பாளர்களால் இந்திரா கொல்லப்பட்டார்.

இதைப் பின்புலமாகக் கொண்டே இந்த வன்முறைக்கு சீக்கியர்மீதான கொலைவெறி திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டது. இந்திராவின் படுகொலைக்குப் பின்னர், சீக்கியரின் படுகொலை குறித்து  இராஜீவ் தனது புகழ்பெற்ற கருத்தான "பெரிய மரம் சாய்கையில் தரை பலமாக அதிர்வது இயற்கைதான்" என்பதை வெளியிட்டார்.

இந்த சீக்கிய எதிர்ப்பு மனநிலையே பெரும்பான்மை இந்துக்களின் வாக்குகளை  சீக்கியர்  படுகொலைக்குப் பின்பு நடந்த தேர்தலில் பேராயக்கட்சிக்கு பெற்றுத் தந்தது.

இந்துத்துவாக்களின் ஆதரவு 

இந்திராவின் படுகொலையைத் தொடர்ந்து வீசிய அனுதாப அலையில் இந்துத்துவ  இயக்கங்களும்   இராஜீவ் காந்திக்கு ஆதரவாக இறங்கின. இராஜீவ் தேசிய ஒருமைப்பாடு சீக்கிய பயங்கரவாதம் ஆகியவற்றைப் பேசி வாக்குகளை வாங்கினார். முதன் முதலாக இராஜீவ் காந்திதான் பாபர் மசூதியின் கதவை இந்துக்களுக்காகத் திறந்துவிட்டு கலவரம் ஏறபடக் காரணமானவர் எனபதையும் நினைவில் கொள்ளவேண்டும்.  தற்போதைய் பாஜக வின் செயல்களெல்லாம் அன்றைய பேராயக் கட்சியிடமிருந்து கற்றுக் கொண்டதுதான். 1986 லிருந்தே இந்துத்துவாக்கள் ராஜீவின் பேராயக்கட்சிக்கு ஆதரவாகவே இருந்தன.

                                     


1984 தேர்தலில் காங்கிரஸ்  வரலாறு காணாத வெற்றி பெற்றது. மொத்தம் 80% இடங்க்ளைப் பெற்றது. காரணம் இந்திரா காந்தி கொலை தோற்றுவித்த அனுதாப அலை,  தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து, சீக்கிய தீவிரவாதம்  உடபட இந்துக்களைத் தூண்டி விடும் பரப்புரைகளும் மேற்கொள்ளப்பட்டன. RSS அமைப்பு பேராயக்கட்சிக்கு முழு ஆதரவளித்தது. அன்றைய RSS இயக்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் ராஜீவ் காந்தியை ஆதரித்ததற்கு சாட்சியாக எழுதியவை

 "சீக்கியர் மீதான இந்துக்களின் உண்மையான உணர்ச்சியை 1984 - இன் சீக்கியர்க்கெதிரான கலவரங்கள் காட்டுகின்றன." எல்லா சீக்கியர்களுமே இந்திரா காந்தி அவரது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் கொல்லப்பட்டதை ஆதரிக்கும்போது, அப்பாவி சீக்கியர்கள் மீதான தாக்குதலகளையும் மௌனமாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்" .

RSS கருத்துக்களால் தூண்டப்பட்ட ஒருவன் மகாத்மா காந்தியைக் கொன்றபோது RSS காரர்கள் தாக்கப்படுகிறார்கள். அதற்குக் கொலைகாரனுக்கும் இயக்கத்திற்கும் தொடர்பில்லை என்றவர்களின் தலைவர் , இரண்டு சீக்கிய மெய்க்காவலர்கள் கொன்றதற்கான பாவத்தை மொத்த சீக்கியரும் அனுபவிக்க வேண்டும் என்கிறார்.

நானாஜி தேஷ்முக் சீக்கியர்களை தம்மை, இந்துக்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டுவதையும் கடிந்து கொள்கிறார்.

மேலும் பஞ்சாப்பில் நிகழ்ந்த வன்முறைக்கு சீக்கியரைக் குற்றம் சொல்கிறார், இந்திய ராணுவத்தின் பொற்கோயில நுழைவையும் நியாயப்படுத்தினார்.

குஜராத் படுகொலையப் பற்றிக் காங்கிரஸ்காரர்கள்  பேசும்போதெல்லாம் பாஜகவும் காங்கிரஸ் கொலைகாரர்களின்  சீக்கியருக்கெதிரான கலவரத்தைப்  பேசி பதிலடி கொடுப்பார்கள்.டெல்லியின் கலவரத்தின்போது சீக்கியர்களை காங்கிரஸ் கொலைகாரர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றினோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்களின் லட்சணம். கிறித்தவமும், இசுலாமும் வெளிநாட்டு மதமென்பதால் எதிர்க்கிறோம் என்று கூறியவர்கள், உள்நாட்டு மதத்தவரான  சீக்கியர்கள் கொல்லப்பட்டபோது அவர்களின் அரசியல் நிலைப்பாடு இதுதான். 

                                                                                                                                             ( தொடரும் )
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

1 கருத்து:

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்