இப்படியும் இருக் 'கலாம்' அப்படியும் இருக் 'கலாம்'


அப்துல் கலாம் கொலை தண்டனைக்கு எதிரானவர். அது கிடக்கட்டும் நான் சொல்ல வந்தது வேறு.  அப்துல் கலாம் விரும்பிகள் சைவ உணவுக்கு மாறுவார்களா ? இல்லை நான் இதையும் சொல்ல வரவில்லை.

எங்கள் ஊரில் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒரு பதாகை வைத்திருந்தார்கள் பேராயக்(Congress) கட்சிக்காரர்கள். அதில் இப்படி எழுதியிருந்தார்கள். ராஜீவ் காந்திக்குப் பிறகு இந்தியாவில் வல்லரசுக் கனவை விதைத்துச் சென்றவர் கலாம். அடக் கண்றாவியே என்று தோன்றியது. அடுத்தவன் சாவுக்கு அஞ்சலி செலுத்தும் போது கூட தன் தலைவரை முன்னிலைப்படுத்தும் ஈன ஜென்மங்களாக இருப்பதால் தான் இவர்களின் கட்சியும் இந்த இலட்சணத்தில் இருக்கிறது.

தொலைக்காட்சியில் பார்த்தேன். இறுதி அஞ்சலி நடந்து கொண்டிருந்தது. ஒரு கூட்டம் பாரத் மாதாகி ஜே என்று ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது எனக்குத் தோன்றியது. இந்தக்  கூட்டம்தானே இவரை அதிகாரமில்லாத பொம்மைப் பதவியான குடியரசுத் தலைவராக நிறுத்தியது. இவ்வளவு பெரிய அறிவாளியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதற்குப் பதில் ஏன் பிரதமர் வேட்பாளராகவோ அல்லது அதிகாரம் மிகுந்த பதவிக்கோ பரிந்துரைத்திருக்கக் கூடாது ?இல்லை இவரை விடவும் அறிவாளிகள் அதிகமாக அந்தக் கட்சியில் இருக்கிறார்களா ? யாருக்காவது பதில் தெரியுமா இந்த அறிவிலியின் கேள்விக்குப் பதில் ? 

மூன்று வருடங்களுக்கு முன்னர் கலாமுடன் இருக்கும் மோடியின் புகைப்படத்திலிருந்துதான் மோடியை பிரதமர் வேட்பாளர் விளம்பரப்படலம் ஆரம்பமாகியது. 2 வருடங்களாக முக்கி முக்கி ஊடகங்களின் தொடர்ந்த பரப்புரைகளின் காரணமாகத்தான் ஃபோட்டோஷாப் புகழ் பிரதமராகவும் முடிந்தது. அதற்குப் பதிலாக அப்துல் கலாமையே நிறுத்த வைத்திருந்தால் இன்னும் எளிமையாக வென்றிருக்கலாமே பாஜக ? அவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தாதற்கு வேறு உன்னதமான காரணம் ஏதேனும் இருக்குமா ?

பாபர் மஸ்ஜீத் இடிப்பு, மும்பை கலவரம், தொடர்ந்த வட இந்தியக் கலவரங்கள் குறித்து அப்துல் கலாம் வாய் திறந்திருந்தால் பாரத மாதாவின் காவல் காவிகள் இவரை இப்படிப் புகழ்வார்களா ?

இவர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவது அரசல் புரசலாக வரும் முன்னரே இவர் ஹிந்தி கற்றுக் கொள்ளுமாறு வட இந்தியாவின் ஹிந்தி வெறியர்களால் நிர்பந்தப்படுத்தப்பட்டாராம். இப்படி இருக்கும் போது ஒரு முஸ்லிம்+தமிழன் பிரதமராவது என்பது சாத்தியமா என்று புரியவில்லை. 

அதே நேரம் இந்தி வெறியர்களுக்கும், இந்தி கத்துக்காமல் விட்டேன் என்று புலம்பும் பத்தாம் பசலிகளுக்கும் செருப்பாலடித்த மாதிரி ஹிந்தி தெரியாமலேயே விஞ்ஞானியும் ஆகி, இந்தியர்களின் அன்புக்கும் பாத்திரமாகி விட்டார். அதை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

சரி. யார் யார்தான் இவருக்கு அஞ்சலி செலுத்துவது என்றில்லாமல், ஜாதி வெறியர்கள், மதவெறியர்கள் எல்லாரும் போட்டி போட்டுக் கொண்டு உருகி ஒழுகுவதைப் பார்த்தால் எரிச்சலோ எரிச்சலாக இருக்கிறது.

ஆனால் பெரும்பான்மை இந்து மதவெறி பிடித்தவர்களுக்கு ஒரு வயித்தெரிச்சல் வராமல் இருக்காது. அதென்ன ? ஒரு இந்துவுக்கு இப்படி இந்தியா முழுதும் அனைத்து மக்களும் வணக்கம் செலுத்த முடியாது. முஸ்லிமான அப்துல் கலாமுக்குத்தான் அது நடந்தது. வட இந்திய ஹிந்தி வெறியர்கள் இன்னும் பாவம். ஒரு மட்ராஸிக்கு இவ்வளவு மரியாதையா என்று புழுங்குவார்கள். இதை நினைத்து எனக்கு ரொம்பவும் இனிமையாக இருக்கிறது. :)

இது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. அத்தனை அயோக்கியர்களும் தேசபக்தி பொங்க இவருக்கு அஞ்சலி அட்டென்டன்ஸ் போடுகிறார்கள். இன்னும் இரண்டு நாட்கள் கழித்து இவர்களின் வழக்கமான வேலைகளுக்குத் திரும்புவார்கள். இந்தியா முழுவதும் இந்த இரண்டு நாட்கள் தேசபக்தி கரை புரண்டு ஓடுகிறது.

ஒரு முஸ்லிமை நாடே ஏற்றிப் போற்றுகிறது. இன்னொரு முஸ்லிமை நாடே தூற்றுகிறது. இதற்கு மேலும் நான் ஒரு டெம்ப்ளேட் செக்குலர் பதிவை எழுதுவதாக இல்லை. ஏனென்றால் அதை எழுதி என்னவாகப் போகிறது. அது இந்துக்களுக்கு எதிரானது, இந்தியாவுக்கு எதிரானது, தேசபக்திக்கு எதிரானது என்றெல்லாம் தோன்றும். கலாம் ஆதரவாளர்களை விமர்சித்து ஒரு கவிதையும் எழுதினேன். அதை வெளியிடாமல் சேமித்து வைத்து விட்டேன். அதைப் படித்தால் புரிந்து கொள்வதற்குப் பதில் புண்பட்டுக் கொள்வார்கள். என் மீதும் வெறுப்பே மிஞ்சும். எனவே அதை விட்டு வேறொரு பதிவை எழுத வேண்டிய நிலை.

யாகூப் மேமன்
அஜ்மல் கஸாப்
அஃப்சல் குரு

இப்பெயர்களைக் கேட்டவுடன் அனைவருக்கு ஏற்படும் உணர்ச்சிகள் என்ன ?

தீவிரவாதி. பயங்கரவாதி. தேசவிரோதிகள். பலர் கொல்லப்படக் காரணமாக இருந்தவர்கள். இன்னும் இத்யாதி உணர்ச்சிகள். கூடவே முஸ்லிம் என்பது வரும் என்று சொல்லத் தேவையில்லை. 

லஷ்கர்-இ-தொய்பா
இந்தியன் முஜாஹிதீன்
ஜிஹாதி

இப்போது என்ன நினைவுக்கு வந்தது. சரி அந்த உணர்ச்சியைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்

பாபு பஜ்ரங்கி
அஸீமானந்தா
மாயா கோட்னானி

இப்போது என்ன உணர்ச்சி வந்திருக்கும். யாரு இவங்கெல்லாம் என்றா ? சரி. 

ஆர்எஸ்எஸ்
பஜ்ரங் தள்
சிவசேனா

இப்போது என்ன நினைவுக்கு வருகிறது. என்னது மறந்து போச்சா ? சரி. இதற்கு மேல் நான் என்ன சொல்வது. இவர்கள் இரண்டு தரப்பு தனிநபர்களையும், இயக்கங்களையும் சமமாக யாரும் வெறுக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதுதான் பிரச்சனையே. 

படம் - நன்றி ஃபேஸ்புக்

தேசபக்திக்கு இன்னொரு காரணமாக, யாகூப் மேமனின் தூக்கு தண்டனையும் வலு சேர்த்திருக்கிறது. ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது, தூக்கில் போடுவது, அல்லது சுட்டுக் கொல்வது இவற்றை வெறித்தனமாக ஆதரிப்பது தேசபக்தியாகிவிடுகிறது. இதில் என்ன கூத்து என்றால் தூக்கிலிடப்பட்டவர்கள் தீவிரவாதிகள் - இவர்களால் சில நூறு பேர்கள் கொடூரமாக இறந்தார்கள் (என்று சொல்கிறார்கள்). ஆனால் இவர்கள் தூக்கிலிடப்படும் போது இருக்கும் ஆட்சியாளர்கள் இவர்களை விடப் பன்மடங்கு கொடியவர்களாக, அதிக உயிர்களைப் பலியெடுத்த இனப்படுகொலையாளர்களாகவும் இருக்கின்றனர். ஆட்சியாளர்களாக இல்லாமல் வெறும் கட்சிகளையும் இயக்கங்களையும் நடத்தும் தலைவர்களும் சிறைக்குச் செல்லாமல் தங்களின் வன்முறை அரசியலைத் தொடர்ந்து கொண்டும் இருக்கின்றனர். 

இந்த இனப்படுகொலைத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டாலோ, அல்லது ஆயுள் தண்டனை கிடைத்தாலோ இப்போது வெறி கொண்டு ஆதரிப்பவர்கள் அப்போதும் ஆனந்தக் கூத்தாடுவார்களா ? இல்லை எந்த சலனமும் இல்லாமல் ஒதுங்கிக் கொள்வார்கள். எனென்றால் அவர்களுக்கு இருப்பது அறவுணர்ச்சியே அன்று. அது வெறும் மதவெறியால் விளைந்த வெறுப்பே ஆகும். அந்த இனப்படுகொலைத் தலைவர்கள் நெஞ்சு வலி வந்தோ வயித்து வலி வந்தோ இயற்கையாகத்தான் செத்துப் போவார்கள். மகிந்தவைப் போல கோயிலுக்குச் செல்லலாம், சாமி கும்பிடலாம். அதிபரும் ஆகலாம், பிரதமரும் ஆகலாம். கைது கூட ஆகத் தேவையில்லை. நான் எப்போதும் இந்தப் போலிக் கொண்டாட்டத்தில் இணைந்து கொள்வதே இல்லை. தனித்தீவாக நின்று விடுவதுதான் பாவியாகாமல்  இருக்க ஒரே வழி. சில நேரம் போலி எழவுகளுக்கும் போகாமல் இருப்பதே சிறந்தது போலும். Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. நண்பருக்கு வணக்கம்
    மிகவும் நடுநிலையோடு எழுதி இருக்கின்றீர்கள் அருமை

    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்