வாசிப்பு - கமலின் கலப்படங்கள்


எனக்கு மிகவும் பிடித்த நடிகர் கமல்ஹாசன். கமலின் ரசிகர்களைப் போலவே அவர் குறித்த உண்மைகள் தெரியாத வரையில் அவர் எனக்கொரு அதிசயமாகவே இருந்தார். சகலகலா வல்லவர் என்ற பிம்பம் அவரைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்தாலும் அது எந்தளவுக்கு உண்மை என்பது அவர் பல படங்களின் கதைகளையும், காட்சிகளையும் திருடி அல்லது தழுவி எடுத்திருப்பதைக் கொண்டு முடிவு செய்து கொள்ளலாம்.  அதை செய்ததற்காக அவர் வெட்கமோ வருத்தமோ அடையவில்லை. ஒரு முறை பேட்டியில் கூறினார் எனது சிப்பிக்குள் முத்து திரைப்படத்திலிருந்துதான் ஃபாரஸ்ட் கம்ப் என்ற படத்தை எடுத்தார்கள் (உண்மையா ?). நாம் அவர்களிடமிருந்து காப்பியடிக்கிறோம், அவர்கள் நம்மிடமிருந்து அடிக்கிறார்கள் என்று சொன்னார்.

அவர் மீதான போலிக் கற்பிதங்கள் உடைந்தும் பிரமிப்புகள் அகன்ற பின்னும், அவரது கவிதைகள், வசனங்களில் வரும் சிறிய நகைச்சுவைத் துணுக்குகள் என்று பல விடயங்களில் இன்னும் கமல்ஹாசனை எனக்குப் பிடிக்கத்தான் செய்கிறது. மகனை மட்டும் திரைப்படத்தில் களமிறக்கி விடுவது, மகள் என்றால் மணமுடித்துக் கொடுப்பது என்றிருக்கும் நிலையில் தனது மகளையும் திரைத்துறைக்கு அனுமதிக்கும் துணிச்சலும் நேர்மையும் உள்ள சில நடிகர்களில் கமலும் ஒருவர். நடிகன் என்பதைத் தாண்டி, பாடல், கதை, வசனம், இயக்கம் என்று மற்ற இடங்களிலும் தனது முத்திரையைப்பதித்தவர். யாரென்றாலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. அதுவும் கலைஞன், படைப்பாளி என்றால் விமர்சனம் நேர்மையென்றால் ஏற்றுக் கொண்டு மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும் அதுதான் அழகு. என்ன நமக்குப் பிடித்தவர் என்பதால் விமர்சனம், உண்மை எல்லாம் கசக்கத்தான் செய்யும்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். "எனது பெயரைச் சொல்லும்போது பத்மஸ்ரீ கமல் என்று சொல்லாதீர்கள், பத்மஸ்ரீ  விருது வாங்கியவர்கள் அதை பெயருடன் இணைத்துப் பயன்படுத்தக்கூடாது என்று விருது வாங்கியவர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள்". இதே கமல்தான் தனது பெயருக்கும் முன்பு உலகநாயகன் என்றும் மனசாட்சியில்லாமல் போட்டுக்கொண்டிருக்கிறார். இந்தப் பெயருக்கு நிச்சயம் தகுதியில்லாதவரே.

உலகத் திரைப்படங்களிலின் கதைகளை எடுத்து தனது பெயரில் போட்டுக் கொள்வது, அதை மற்றவர்கள் புகழ்வதை ஏற்றுக் கொள்வது என்ன வகையான மனநிலை என்பது தெரியவில்லை. குறைந்த பட்சம் நன்றி கூட எழுத்துப்பூர்வமாகப் போடாமல் தனது பெயரில் போட்டுக் கொள்வதெல்லாம்.... !!

கமல்ஹாசனை யாருக்கெல்லாம் பிடிக்கிறது, யாருக்கெல்லாம் பிடிக்காது. பிடித்தவர்களை விட பிடிக்காதவர்கள்தான் அதிகமிருப்பார்கள். கடவுள் இல்லையென்று சொல்வதால் பிடிக்காது, உதட்டு முத்தம் கொடுப்பதால் பிடிக்காது. இந்து மதத்தை கிண்டல் செய்வதால் பிடிக்காது. இஸ்லாமியர் மீதான காழ்ப்புச் சித்தரிப்புகளால் அவர்களுக்குப் பிடிக்காது. திருமணமின்றி இணைந்து வாழ்வதால் பிடிக்காது. இதில் சில பிடிக்காதுகள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர் மீதான தனிநபர் வெறுப்பிலிருந்து வருவதால் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவேண்டியதில்லை. அதெல்லாம் மனநோயாளிகள் பிதற்றல் என்று கடந்து விடலாம்.

ஆனால் அவர் மீது அறிவாளர் (Intellectual) முத்திரை குத்தப்படுவதால், பிம்பம் கட்டமைக்கப்படுவதால் அவர் மீதான கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். தரமான படங்கள், உலகத்தரத்தில் திரைப்படம் என்றெல்லாம் அவரே முன்னிலைப்படுத்திக் கொண்ட கருத்து என்பதால் இன்னும் அவசியமாகிறது. 

கமலின் கலைலப்படங்கள்
 
கமல் மீதான நேர்மையான, அதே நேரம் மிகவும் கடுமையான, எள்ளலும் நிறைந்த விமர்சனத்துடன் ஒரு நூலைப் படிக்க நேர்ந்தது. கமலின் கலப்படங்கள் என்ற இந்த நூலை இப்போதுதான் படித்தேன், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 


தமிழில் தரமான படங்கள் வரவேண்டும் என்று விரும்பும் அனைவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர் B.R. மகாதேவன். இவர் இந்த நூலுக்கு முன்பே மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவையும் திரைப்படக் கலைஞர்கள், படைப்புகளின் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களே என்று தெரிய வருகிறது. ஒரு திரைப்படத்தைத் விமர்சனம் செய்ததோடு அல்லாமல் அந்தத் திரைப்படம் இப்படி இருந்திருக்கலாம் என்று அதற்கு மாற்றான கதையையும் இவர் எழுதியிருக்கிறார்.

கமல் நடிப்பு மட்டுமல்லாமல், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் என்று பங்களிப்பு செய்த திரைப்படங்களான, ஹேராம், விருமாண்டி, தேவர் மகன், அன்பே சிவம், குணா, குருதிப் புனல் ஆகிய ஆறு படங்களின் விமர்சனத்தையும், அப்படங்களுக்கு தான் திரைக்கதையாசிரியராக இருந்திருந்தால் எப்படி எழுதியிருப்பேன் என்றும் ஒரு கதையையும் சில காட்சிகளையும் சற்றே மாற்றியும் எழுதியிருப்பது சிறப்பாக இருக்கிறது. அட  இப்படியும் கூட எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே. என்ற ஏக்கமும் தோன்றுகிறது.

உதாரணத்திற்கு

விருமாண்டி படத்தில் நெப்போலியன் எதிரியிடம் தனியாகப்போய் மாட்டிக் கொண்டும், கையில் துப்பாக்கியிருந்து அரிவாளுடன் இருப்பவனை சுடுவார், அடுத்த தோட்டாவை லோட் செய்வதற்குள் பசுபதி வெட்டிக் கொன்று விடுவார். கையில் இருக்கும் துப்பாக்கியை வைத்துக் கொண்டு  அரிவாள் வைத்திருப்பவனிடம் மாட்டிக் கொள்வதா ? துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கலாமே ... என்று ஒரு காட்சியில் இருக்கும் அபத்தத்தை விமர்சிப்பது முதல்

ஒரு தீவிரவாத இயக்கத்தின் தலைவனே காவல்துறையின் கைதியாக  இருக்கும்போதும், இரண்டாம் நிலையில் இருக்கும் தீவிரவாதிகளுக்கு அஞ்சாமல், தீவிரவாத இயக்கத்தை அழிக்கவே முடியாதா என்று குருதிப் புனலின் கதையின் அடிப்படையையே கெள்வி கேட்கும் வரையில் ..

கமல்ஹாசனின் திரைப்படங்கள் பல மொழிப் படங்களின் திருட்டு என்பதோடல்லாமல், பல இடங்களில் தமிழ்த் திரைப்படங்களின், தமிழ் நாயகர்களின் அபத்தமான வழமைகளிலிருந்து வேறுபட்டதில்லை என்று சொல்கிறது. நேற்று வந்தவர்களெல்லாம் தரமான படங்கள் கொடுக்க முடிந்தபோதும், திரைப்படத் துறையில் அரை நூற்றாண்டாக இருக்கும் கமலால் ஏன் முடியவில்லை என்றும் எண்ணத் தோன்றுகிறது.

எல்லாவகையிலும் சிறப்பாக எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படத்தை அல்லது கதையை எப்படிப் பார்க்க வேண்டும், விமர்சிக்க வேண்டும், அல்லது இயக்க வேண்டும் என்ற ஒரு கோணத்தை ஏற்படுத்துகிறது இந்நூல். திரைப்பட விரும்பிகள், விமர்சகர்கள் படிக்க வேண்டிய நூல். முக்கியமாக திரைப்படம் விமர்சனம் எழுதுகிறவர்கள், கமல் ரசிகர்கள் படிக்க வேண்டிய நூல்.

நூலின் பெயர்:
கமலின் கலைலப்படங்கள்
160 பக்கங்கள்
விலை ரூ 120

ஆசிரியர்
B.R. மகாதேவன்.

நிழல் வெளியீடு
ப.திருநாவுக்கரசு,
31/48, ராணி அண்ணாநகர்,
சென்னை - 600 0078
கைப்பேசி 94444-84868
மின்னஞ்சல் : arasunizhal@gmail.com

Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. அண்ணன் மஹா தேவன் ...............நீங்கள் யார் என்றே தெரியாது ..அனால் உங்களின் புத்திசாலித்தனம் புல்லரிக்க வைக்கிறது ............லாஜிக் பார்க்கிற ஆளை பாரு ///// நீர் லாஜிக் பாகும் லட்சணத்தை முதலில் இந்த விஜய் , ரஜினி படங்களிருந்து ஆரம்பியுங்கள் .....................மைனசில் லாஜிக் வைத்து படம் பண்ணும் இந்த நடிகர்கள் பற்றி முதலில் சொல்லுங்கள் ..........................போங்கய்யா போய் புல்லை குட்டிகளை படிக்க வைங்க ...................கமலை பற்றி பேச உங்கள் எவனுக்கும் அருகதை கிடையாது ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நூல் கமல் என்ற நடிகரை விமர்சிக்கவில்லை. கமல் என்ற கதாசிரியரை, இயக்குநரை, வசனகர்த்தாவைத்தான் விமர்சிக்கிறது. விஜய், ரஜினியின் படங்களில் லாஜிக் இல்லை என்பது தெரியும், கமலின் படங்களிலும் அந்த லாஜிக் மீறல் இருக்கிறது என்றுதான் இந்நூல் சொல்கிறது. ரஜினி, விஜய் படங்கள் உலகத் தரமானவை என்று சொல்லப்படுவதில்லை. கமல் படங்களுக்கு அப்படி ஒரு கருத்திருப்பதால் அதை கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். படிக்காமல் எதையும் சொல்லக் கூடாது.

      நீக்கு
  2. unmaiyalan போன்றோர் இருக்கும் வரை கமல் திருந்த வாய்ப்பில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. johan paris வந்து படம் இயக்கும் வரை தமிழ் சினிமா திருந்த வாய்ப்பில்லை !

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்