நடிகர் சிம்பு பாடல் எழுதாவிட்டால் குடிமுழுகி விடுமா ?


பல நாட்களாக வயிற்றெரிச்சலில் இருக்கிறேன். இவனுக்கெல்லாம் எதற்கு இந்த வேலை என்று பெருந்தன்மையாக திட்டுவதை விட இவருக்கெல்லாம் இரக்கமே இல்லையே என்று நம் மீதே பச்சாதாபமாக இருக்கிறது. நான் கொஞ்ச நாளுக்கு முன்பு பயந்தேன். அது இப்போது நடந்தே விட்டது. அது என்ன ?

அதற்கு முன்பு சில வரிகள்

இது சலிப்பூட்டும் ஒரு பெரிய இடுகை, கோர்வையில்லாமல் புலம்பலாகவே எழுதியிருக்கிறேன். இதற்கு மேலும் விரும்பியவர்கள் தொடரலாம்.

 
தமிழ் மொழியை நாட்டியமாடும் நயத்துடன் பாடல்களாக எழுதியவர் விஜய டி ராஜேந்தர். அவரை மிகப்பெரும் கவிஞர் என்று பாராட்டத்தக்கவராக இல்லாத போதும் அவர் வலைப்பூவிலும், ஃபேஸ்புக்கிலும் எழுதும் நம்மைப் போன்ற சராசரிக் கவிஞர்களை விடவும் திறமையும், கவிதை, பாடல்கள் எழுதும் ஆற்றலும் பெற்றவர். திரைப்படத்துறையில் குறிப்பிடத்தகுந்த ஒருவரான அவருக்குப் பிறந்த ஒரே காரணத்தால் நடிகனாகி நம் உயிரை வாங்கி வருபவர் அவரது மகன் திருவாளர் சிலம்பரசன்.

அவரது இரண்டாவது படமான "தம்" என்ற காவியத்தை திரையரங்கத்தில் கண்டும் உயிருடன் விண்டவன் நான். அதனால் எனது உணர்வுகளைப் புரிந்து கொள்ள தம், குத்து போன்ற படங்களைப் பார்த்தவர்கள் மட்டுமே முடியும். அவர் மீது நான் கொண்ட பிரமிப்புக்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். எனக்கு கல்லூரி நண்பி ஒருவர் மீது அதிக பாசமும் மதிப்பும் வைத்திருந்தேன். எனக்குப் பிடித்த நடிகர் சிம்பு என்று அவர் சொன்ன ஒரே காரணத்திற்காக அவளிடம் நானும், இன்னொரு நண்பனும்  சொன்னது "உம்மேல இருந்த மரியாதையே போச்சு".  யாராவது சிம்புவைப் பிடிக்கும் என்று சொன்னாலே அவரை ஒரு மாதிரியான ஆளா இருப்பாப்பிடியோ என்றுதான் எண்ணும் அளவுக்கு அவரைப் பிடிக்கும். எங்காவது பேருந்திலோ, அல்லது வேறு எங்காவது படம் ஓடும் இடத்தில் மாட்டிக் கொண்டால் மட்டுமே படம் பார்க்க வேண்டிய நிலைக்கு ஆளாவேன். நானாக படத்தை விரும்பிப் பார்ப்பதில்லை. எந்தத் திரைப்படமும். அங்காடித் தெரு, ஆரண்ய காண்டம், வழக்கு எண் வகையான படங்களையாவது பார்க்க வேண்டும் என்று நினைப்பதுண்டு ஆனால் அதுவே நடக்க வில்லை. விஸ்வரூபம் கூடப் பார்க்கவில்லை. இதன் மூலம் எனக்கும்  திரைப்படங்களுக்குமான இடைவெளியை அறியலாம்.

இருப்பினும் திரைப்படமும் அதன் தாக்கமும் தூணிலும் துரும்பிலும் நீக்கமற நிறைந்திருப்பதால் அதைப்பற்றி முற்றிலும் தவிர்க்கவியலாமல் கேள்விப்படவும், பேசவும் நினைக்கவும் நேர்கிறது. இந்த எழவெடுத்த திரைப்படங்களின் ஒரு சில காட்சிகளைத் தொலைக்காட்சியில் காணும்போதே எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. முக்கியமாக சிம்பு, தனுஷ் ஆகியோரின் படங்களும் சரி பாடல்களும் சரி உலகமாக எரிச்சலாக இருக்கிறது.

நான் முடிந்த வரை இதையெல்லாம் பார்ப்பதையும் பாடல்களைக் கேட்பதையும் தவிர்த்தே வந்திருக்கிறேன். ஆனாலும் விதி நம்மை விடுகிறதா ? நான் பொதுவாக எனக்குப்பிடித்த நபர்களைப் பற்றிய எதிர்மறை செய்திகளை எதிர்கொள்வதில் இயல்பாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. எடுத்துக்காட்டாக தற்போது குமுதம் இதழில் இளையராஜாவின் பேட்டியைப் படித்தால் எடுத்தெறிந்த மாதிரி பேசும் இளையராஜாவின் மீது மரியாதை போய்விடும். அதனால் அதைப் படிப்பதில்லை. கமல்ஹாசனை அதிகம் வெறுத்து விடுவேனோ என்று உன்னைப் போல் ஒருவன், விஸ்வரூபம் விமர்சனங்களைப் படித்ததால் அப் படங்களை பார்க்கும் ஆசையே போய்விட்டது.

ஒரு சில படங்களில் வரும் ஒரு பாடல் வரியோ அல்லது காட்சியோ என்னை மிகவும் எரிச்சல் படுத்தி விடும். எடுத்துக்காட்டாக

ஐயா படத்தில் சரத் ஒரு காட்சியில், மனைவியை ஒருவன் மிகவும் கொடுமைப்படுத்துவானாம். அதற்கு அவனுக்கு பாடம் புகட்டும் விதமாக அவனது இடது கையை உடைத்துவிட்டுச் சொல்வார், அம்மா கூட செய்ய முடியாத வேலையை பொண்டாட்டிதான் செய்வா. இதன் மூலம் அவனது இடது கையை உடைத்து கணவனின் குண்டி கழுவும் வேலையை அந்தப் பெண்ணின் தலையில் கட்டிவிடுவார். இதன் மூலம் அந்த ஆண் பொண்டாட்டியின் பெருமையை உணர்ந்து கொள்வானாம். சரி. இது கணவனிடம் அடிவாங்குவதைவிடவும் கொடுமையான தண்டனையல்லவா ?

வரலாறு படத்தில் தன்னை ஆம்பிளையா என்று கிண்டல் செய்த பெண்ணை பாலியல் வன்முறை மூலம் பதில் சொல்லும் நாயகத்தனம்

தேவர் மகனில் வடிவேலு கமலுக்கு செருப்பு எடுத்துத் தரும் காட்சி

முதல்வனில் முந்தானையை எடுத்து என்னையே எடுத்துக்க என்று நாயகி சொல்லும் காட்சி

இப்படியாக பல இருக்கின்றன. இது போன்றே பல காட்சிகளிலும் எதுக்குடா இப்படி எடுக்கறானுக என்றெல்லாம் நினைத்துக் கொள்வதுண்டு.

எனக்கு இந்த சிம்பு, தனுஷ் படங்களில் பிடிக்காதது என்னவென்றால் எல்லாமேதான். அந்தக் காலத்தில் காதல் கொண்டேன், திருடா திருடியை விரும்பித்தான் பார்த்தேன். இப்போதெல்லாம் பார்த்தால் சுத்தமாகப் பிடிப்பதில்லை. ஏனென்றால் இவர்களது படங்களில் பொறுக்கித்தனத்தை நாயகத்தனமாக சித்தரிப்பார்கள். இவர்கள் மட்டுமல்ல இன்னொருவர் கார்த்தி. பார்த்தாலே பற்றிக் கொண்டு வரும். இவனுகள் இளித்துக் கொண்டு நக்கலடிப்பதெல்லாம் பார்த்து விட்டு சுற்றி இருப்பவர்கள் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். எனக்கோ எரிச்சலாக வரும்.

சுள்ளான் படத்தில் தனுஷ் அவரது அம்மாவிடம் சொல்வார். அவரது அப்பா மணிவண்ணன். வீட்டுக்குள் நடக்கும் ஏதோ ஒரு விளையாட்டுச் சண்டையில் அம்மாவிடம் "உம் புருசனை மூடிட்டு இருக்கச் சொல்லு". எப்படி இவனெல்லாம் இப்படிப் படமெடுக்கிறான் என்று எரிச்சல்.

மற்றபடி இவன்களின் படங்களில் என்ன எழவு இருக்கிறதென்று பார்த்தால் ஒரு மண்ணும் இல்லை. அரை மணிநேரம் கூடப் பார்க்க முடிவதில்லை. நிற்க. நான் சொல்ல வந்ததை விட்டு வேறெங்கோ சென்று விட்டேன்.

இந்தத் திரைப்படப்பாடல்களுக்கு வருவோம். நான் மேலே சொன்னது போல சில படக் காட்சிகளை சகிக்கவே முடியாது என்பது போலவே பாடல் வரிகளும் அதில் சில.

இந்தியன் படத்தில்

அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா உனக்குத் தடா

 
தித்திக்குதே படத்தில் வரும்

"ஈராக்கு யுத்தம் முடிஞ்சு போச்சு அங்க
எனக்குள்ள யுத்தம் தொடங்கிடுச்சு இங்க"
 


பூவெல்லாம் உன் வாசம் படத்தில் வரும்

இலங்கையில் நடக்கின்ற யுத்தம் நிறுத்து
எனக்கு காதல் வந்ததே (திந்திந்தாரா பாடலில்)

 
டிஷ்யும் படத்தில் வரும்

அமெரிக்கா நீயானா ஆஃப்கானிஸ்தான் நானானா
ஸ்ரீலங்கா நீயானா எல்டிடிஈ நானானா 

 
அந்நியன் படத்தில் வரும்

ஹிரோஷிமா நீதானோ நாகசாகி நீதானோ
உன்மீதுதானோ என் காதல் பாமோ

 
கந்தசாமியில் வரும்

ஹிட்லர் பேத்தியே ஹிட்லர் பேத்தியே
காதலொன்றும் யூதனில்லை கொல்லாதே
காஷ்மீர் நான் நீ பாகிஸ்தான் தீராது டிஷ்யும்தான்

 
2009 களின் தொடக்கத்தில் ஈழப்போர் நடை பெற்ற போது எல்லா ஊடகங்களிலும் அடிபட்ட ஒரு சொல் பாதுகாப்பு வலயப்பகுதி (யில் தாக்குதல் பல பேர் சாவு). இதை அப்படியே ஒரு பாடலில் பதிவு செய்தார் நா. முத்துக் குமார் மோதி விளையாடு படத்தில்

பாதி காதல் பாதி முத்தம் போதாது போடா ..
காதல் என்னைக் காதல் செய்ய
பாதுகாப்பு வலயப் பகுதியில் ...
  


என்று ஒரு பெண்ணின் பிரிவாற்றாமையை விளக்குகிறது. பூவெல்லாம் உன் வாசம், தித்திக்குதே பாடலையும் எழுதியவர் வைரமுத்து. இந்தப் பாடல்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெயர்களும் அதன் பின்னுள்ள வரலாறும் தெரிந்துதானே இதை எழுதியிருக்கிறார்கள். இப்படிச் செய்வது நியாயமா ? தடா என்றால் தெரியாதா ? அனுபவித்தவர்களைக் கேட்டால் தெரியும். பல இலட்சம் பேர் செத்துச் சுண்ணாம்பான வரலாற்றுப் பேரழிவுப் பெயர்களை ஆணுறுப்பு விரைப்பதற்கும், பெண்ணுறுப்பு விரிவதற்கு உவமைப்படுத்தலாமா ?

தில்லையாடி வள்ளியம்மா
தில்லிருந்தா நில்லடியம்மா


திரிஷாவுக்கு எழுதியது குருவி படத்தில். திரிஷாவை ஒப்பிட வேறு ஒன்றும் கிடைக்கவில்லையா ?

 
எங்கோ நடக்கு இழவுகள் நமக்கு பொழுது போக்கு, காதலுக்கும் காமத்துக்கும் ஒப்புமைப் படுத்துவதற்கா ? இதற்கெல்லாம் போராட்டமெல்லாம் செய்ய முடியாது எழுதுகிறவர்கள்தான் பொறுப்புணர்ந்து மனசாட்சியுடன் எழுதவேண்டும்.

"முள்வேலிக்குள்ளே வாடும் தமிழீழம் போல் ஆனேனே"   

தமிழ்நாட்டிலிருந்தும் இதைச் செய்தால், இதில் அடுத்தவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளவில்லை என்ற புலம்பல் வேறு. இதெல்லாம் ஒரு மேட்டரா, கிறுக்கத்தனம் என்று கடந்து விடவும் முடியும், சற்றே சிந்தித்தால் அதிலுள்ள வக்கிரம், பொறுப்பில்லா அலட்சியமும் புரியும்.

இப்போது மீண்டும் சிம்புவுக்கு வருகிறேன்.

இந்த ஜென்மம் எழுதிய பாடல்கள் !!?? (பாடல்கள் என்று சொல்வதை விட பாடலுக்கு ஒரு அவமானம் தேவையில்லை) கேட்டாலே எனக்கு வெறியாகிறது. லூசுப் பெண்ணே கூட பரவாயில்லை. அடுத்தடுத்து எழுதியதெல்லாம் எவ்வளவு கேவலமான வரிகள். என்னத்தைக் கிறுக்கிக் கொடுத்தாலும் தாம் தூமென்று மெட்டுப்  போட்டு அதை வெற்றிப் பாடலாக்கி விட யுவன் போன்ற இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள். அதனால் சிம்புவுக்குக் கவலையே இல்லை. ஆனா ஆவன்னா இனா ஈயன்னா என்று உளறினால் கூட அதை ஒரு பாடலாக்கி உலகத்தமிழர்களின் செவியைக் குதறும் அளவுக்கு நிலைமை மோசமாக இருக்கிறது. இவர் அடிவயிற்றிலிருந்து முக்கிப் பாடுவைதையும் நினைத்தால்

எவன்டி உன்னப் பெத்தான் கைல கெடச்சா செத்தான் ...........

வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
தேவையில்ல வைப்பாட்டி
 


 இப்ப ஒரு பாடலை ""இயற்றிப் பாடி"யிருக்கிறார். அதில் வரும் வரிகள்

மேட்டரை ஏன்டா பத்தினியாக்கற
பத்தினிய ஏன்டா மேட்டராக்குற"


இப்படியெல்லாம் என்ன மயிறுக்குடா எழுதறீங்க ? இதையெல்லாம் செல்பேசியில் வைத்துக் கொண்டு கேட்பதற்கு உலகத்தில் பல கிறுக்குப் பயல்கள் இருக்கிறார்கள். இந்த விடலை கிறுக்குகள் தொடங்கி வாலிப வயோதிக அன்பர்கள் வரை இது போன்ற ஆணாதிக்கக் குப்பைகளை ரசித்துக் கேட்கிறாரகள். அதாவது பெண்கள் என்றால் காதலித்து ஏமாற்றுகிறவர்கள், ஆண்கள் உண்மையானவர்கள் தியாகிகள் என்று தாங்களாகவே நம்பிக் கொண்டிருக்கு அல்பைகளுக்கு இது இனிக்கும். தண்ணியடித்துவிட்டு ஆட்டம் போடுவது இன்னும் கூடுதல் பலம்.

சொந்தமாக ஒண்ணும் தெரியாது. எல்லாமே பழைய பாடல்களின் ரீமிக்ஸ் அல்லது படங்களின் ரீமேக். எல்லாப் பாடல்களிலிலும் இவரது படங்களின் பெயர்களையும், பாடலின் வரிகளையும் தவறாமல் சொல்லிக்  கொள்ள வேண்டியது. 

இந்த சிம்பு அய்யா இதற்கு முன்பு செய்ததை நினைத்துப் பார்க்கவும், தன்னை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கடந்த 10 வருடங்களாகச் சொல்லிக் கொண்டவர். தற்போது யங் சூப்பர் ஸ்டார். இன்னும் கொஞ்ச நாளில் சூப்பர் ஸ்டார் என்று அவரே சொல்லிக் கொள்வார். பின்பு நாமும் சொல்ல வேண்டியதுதான்.

தனுஷ் ரஜினி மகளைத் திருமணம் செய்து கொண்டபோது பெரிய தியாகியாகி எங்கிருந்தாலும் வாழ்க என்றார்.  பின்பு மன்மதன் படத்தில் இது என்னுடைய சொந்தக் கதை என்று வசனம் வைத்து தனுஷின் முந்தைய படமான சுள்ளானில் நாயகியாக நடித்த சிந்து துலானியை காதலித்து ஏமாற்றுகிறவளாக நடிக்க வைத்தார் (கதை திரைக்கதை சிம்பு). நுண் அரசியல் புரியுதுங்களா ? இதெல்லாம் நான் மட்டும் சொல்லல, படம் வந்தப்ப எல்லாரும் பேசிக்கிட்டமாக்கும். அந்தப் படம் மிகப்பெரும் வெற்றிப் படமென்றும் சொல்லிக் கொண்டார்கள். அப்போது பெரிய தயாரிப்பாளராக இருந்தவர்தான் இந்தியன் தியேட்டர்ஸ் கிருஷ்ணகாந்த. அந்தப் படத்திற்கு பின்னர்தான் காணாமல் போனார். இயக்குநர் முருகன் இன்னும் கண்ணீர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

 வல்லவன் படத்துக்காக ஓவர்டோஸ் விளம்பரம் நயன்தாராவின் உதட்டைக் கடித்து இழுத்து மிகப்பெரிய ஃப்ளக்ஸ் பதாகையை மவுண்ட் சாலையில் வைத்தார். (அதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன). பின்பு நயனுடன் சண்டையில் பிரிந்தவுடன் இருவரும் படுக்கையறையில் இருந்த உதட்டு முத்தத்துடன் கூடிய படத்தை இணையத்தில் வெளியிட்டு (இவல்லாம் எங்கூட படுத்தவதானே என்று ஊர் பேச) தானொரு சாக்கடை என்று காட்டினார். (பழி வாங்கிட்டாராம்)

ரஜினி நீண்ட நாட்களுக்கு பின் நடித்த சந்திரமுகி. அதில் நாயகி ஜோதிகா அதில் ரஜினி பெயர் சரவணன். ஒரு குப்பைத் தெலுங்குப் படத்தை ரீமேக் செய்து அதற்கு சரவணா என்று பெயரிட்டு அதில் ஜோதிகாவை நாயகியாக்கினார் சிம்பு.

தனுஷின் கொலைவெறிக்குப்போட்டியாக உலக சமாதான கீதம், தனுஷின் மயக்கமென்ன நடித்த ரிச்சாவே ஒஸ்தியில் நாயகி என்று இவரது அரை வேக்காட்டுத்தனம் தொடர்கிறது. இதெல்லாம் பாட்டெழுதினால் எந்த லட்சணத்திலிருக்கும் என்பதற்கு உதாரணமே இவர் எழுதும் பாடல்கள்.

எல்லாப் படங்களிலும் செக்ஸியான உடைகளில் தன்னைச் சுற்றி வந்து கதாநாயகி பாடுவது போலவும், பத்து பதினைந்து பிகினிகள் சுற்றி நின்று தடவுவது போலவும் நடிக்கும் இந்த மன்மதன் "எவன்டி உன்னைப் பெத்தான்" பாடலில் "உன் மானங் காக்கிற மேலாடை நாந்தான்" என்ற வரியையும் எழுதியிருக்கிறார். பெண்களின் மானம் மேலாடையில் இருக்கிறது என்று நம்பும் சொல்லும் சராசரி ஆண்களைப் போலவே இந்த மன்மதனும் நினைக்கிறாராம். எல்லாப் பெண்களும் இவர் சொல்கிறது போல மானத்துடன் இருந்தால் இவர் புரட்டி எடுப்பதற்கும் மோப்பம் பிடிப்பதற்கும் எந்தப் பெண் நடிக்க வருவாள்?

அடுத்த அறிவாளி தனுஷ், பெரிய இடத்துப் பொண்ணை மடக்கிப் போட்டு இரண்டு குழந்தைகளுடன் செட்டிலான பின்பு
ம், 20 வயது பையனைப் போலவே தன்னைக் கருதிக் கொண்டு அப்பையன்களுக்குப் பிடித்த மாதிரி இன்னும் ஒரு அங்குலம் கூட பெண்கள் மீதான வன்மத்தை மாற்றாமல் இன்னும் பாடல்களிலும் படங்களிலும் காட்டிக் கொண்டிருப்பவர். நல்ல சிவந்த நிறமுடைய நடிகைகளை நாயகிகளாகப் போட்டுக் கொள்ள வேண்டியது, அவர்களின் பின்னால் அலைவது, ஊறுகாய் மாதிரி பாடல் காட்சிகளில் மோந்து பார்ப்பது அவர்களும் அவ்வப்போது ஸ்லோ மோசனில் திரும்பிப் பார்ப்பது கடைசியில் இவரது உண்மைக் காதலை உணர்ந்து ஒத்துக் கொள்வது இதெல்லாம் இவரது படத்தின் கதைகள். கதாநாயகிகள் எனப்படும் நடிகைகளுக்கு என்றுதான் விடிவோ தெரியவில்லை.

ஆடுகளம் படத்திற்கெல்லாம் தேசிய விருதென்றால் அதை விடக் கேவலம் வேறெதுவுமில்லை. சூரியா தம்பி கார்த்திக்கும் இதுதான் கதைக்களம். நல்லா வாயில வருது.

அப்பாவி மாதிரி மூஞ்சியை வைத்துக் கொண்டு தண்ணியடித்து, தம்மடித்து பொறுக்கித்தனம் செய்ய வேண்டியது ஊரிலேயே அம்சமான பொண்ணைப் பார்த்தி ஈயென்று இளித்துக் கொண்டு சுத்த வேண்டியது இது மாதிரியான மொன்னைகளுக்கெல்லாம் நம்ம அண்ணந்தான் குரு. சொந்த வாழ்க்கையில் ஃபிகர்களைக் கரெக்ட் பண்ண முடியாமல் ஏங்கித் தவிக்கும் லட்சோபலட்சம் இளைஞ்ஜர்களின் ஏக்கத்திற்கு வடிகால் இவர். யாரடி நீ மோகினியில் இவர் பெரிய நிறுவனத்தில் நேர்காணலில் தேர்வாவதும், காதல் கொண்டேனில் முதல் நாள் வகுப்பில்  கணக்கு வாத்தி கோட்டாவில் வந்தவன் என்று திட்டியதற்குப் பிறகு கரும்பலகையில் இவர் ப்ராப்ளத்தை சால்வ் செய்வதும் ரஜினி படத்தையே விஞ்சும் செம மாஸ் சீன்ஸ் (இதே மாதிரி பிரிச்சுப் போட்ட ஹீரோ ஹோண்டாவை சரியாக மாட்டும் ரவிகிருஷ்ணா - 7G படத்தில். யூத்துகளை அடித்து வீழ்த்தும் மாஸ். நன்றாக பல்ஸ் பிடித்து வைத்திருக்கும் இயக்குநர் செல்வராகவன்). பெண்கள் மீது வன்மத்தையும் வெறுப்பையும் கக்கும் பாடல்களை கூச்சநாச்சமில்லாமல் எழுதுவார்.

உன்னைப் பெத்தவன் உன்னப் பெத்தானா செஞ்சானா ?

ஒய் திஸ் கொலவெறி 

இப்படித் தொடர்கிறது இவரது சேவை. இவரது அண்ணாரோ ஒரு படி மேலே போய் 

வெட்றா அவள கொல்றா அவள அடிடா அவள 

 
என்று வெறியேற்றுகிறார்.

நண்பனின் அப்பாவையும் தனது அப்பாவையும் அவர் இவர் என்று சொல்வது, அதே நேரம் மனைவி, நண்பிகளின் அப்பாக்களுக்கு மரியாதை இல்லை. அவ அப்பன் இருக்கானே என்று ஒருமையில் விளிப்பதும் ஆண்கள் செய்வதுதான். அந்த அடிப்படையில்தான் இவர்கள் எழுதினால் அவர்கள் ரசிக்கிறார்கள். இந்தப் பெண்களெல்லாம் எப்படி இவனுகளையெல்லாம் பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்தாலே கசக்கிறது. ஆத்திரமே வராதோ ? இவரு சம்சாரத்தோட அப்பா ரஜினியை, உங்க அப்பன் இருக்கானே என்றா சொல்வார். மூச்சுக்கு மூச்சு ரஜினி சார்
ரஜினி சார்னு கடையத்தெரியுதுல ?

இடுகையின் ஆரம்பத்தில் நான் சொன்னது, நான் பயந்தது நடந்தே விட்டது. அது என்ன வென்றால் இந்த சிம்பு தனுஷ் செல்வராகவன் வகை அற்பர்கள் பாடல்கள் எழுதினால் கொஞ்சநாளில் ஙொம்மா, ஙோத்தா தொடங்கி தேவிடியா பயல் வரை எல்லா வசைச் சொற்களையும் இவர்கள் எழுதும் "பாடலில்" கொண்டு வருவார்கள் என்று நினைத்தேன். உலக சமாதானத்திற்கு கீதம் இசைத்த கவிப்பொறுக்கி அல்லது பொறுக்கிக் கவி சிம்பு அதை நிறைவேற்றி விட்டார். இந்த காதலுனு சொன்னவன் என்ற பாடலை முடிக்கும் போது "த்தா' என்ற ஒலியுடன் முடிக்கிறார்.  இந்த "த்தா" என்பது வரிக்கொருமுறை சென்னையிலிருப்பவர்கள் பயன்படுத்தும் வசைச் சொல். அது ங்கோத்தா என்பதன் சுருக்கம். அதைச் சொல்லும் பாதிப்பேருக்கு அதன் பொருளே தெரியாது என்பது தனிக்கதை. 


விஜய் பகவதியில் பாடிய போடாங்கோ பாடலுக்கும் இது போல சலசலப்பு வந்தது. குங்குமமோ அல்லது குமுதமோ ஒரு பேட்டியில் விஜய் சொன்ன விளக்கம் அது கெட்ட வார்த்தையில்ல போடா கோமாளின்னு சொல்றோமில்லையா அது மாதிர் என்றார். 


இந்த மாதிரி நடிகர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் தனது படங்களில் ? பொறுக்கியாக இருப்பது வீரம், ஆண்மை, நாயகத்தனம்.

பெண்கள் பின்னாடி சுற்ற வேண்டும். அவளுக்கு சொந்த புத்தியெல்லாம் கிடையாது அவள் உனக்குத்தான் கிடைப்பாள். அதுதான் காதல் உண்மைக் காதல்.

முக்கியமாக பெண்களை ஃபிகர், ஆண்டி என்றுதான் சொல்ல வேண்டும், இல்லையென்றால் நீ ஆணே இல்லை. சந்தானத்துடன், கருணாசுடன் இணைந்து அழகாக இல்லாத பெண்களை அட்டு ஃபிகர், அய்யே என்றும் இகழ வேண்டும். (என்னமோ இவனுக மூஞ்சி மட்டும் டாம் க்ரூஸ் மாதிரி)

ஆண்கள் பாவம் பெண்கள் ஏமாற்றுப் பேர்வழிகள், அலைய விடுகிறவர்கள் என்று பெண்களைத் திட்டுவதே பாடல்.

கிளப் டான்ஸ், பப், பாப் இசை, குத்துப் பாட்டு என்று பட்டையைக் கிளப்பினாலும் பெண்ணுக்கு அறிவுரை சொல்லவும் கற்பைக் காக்கவும் கற்காலத்திற்கு ரிவர்ஸ் கியர் போடுவாரகள்.

இவர்களின் அல்லக் கைகளாக சந்தானம், சிவகார்த்திகேயன், கருணாசை வைத்து சொரிந்து கொள்ள வேண்டியது.

இன்னும் விடலைகள் ஆண்கள் செய்தால் மன்மதன், பெண்கள் செய்தால் - மேட்டர் என்ற அளவுகோலுடன்தான் திரிகிறார்கள். ஆணுக்கு வந்தா ரத்தம், பொண்ணுக்கு வந்தா தக்காளிச் சட்னி. ஆண் செய்தால் என்ஞாய்மென்ட், பெண் செய்தால் கற்பு போச்சு. இந்தக் கான்செப்ட்டை ஒத்துக் கொண்டவர்கள் கொஞ்சமும் உறுத்தலின்றி எல்லாப்படங்களையும், பாடல்களையும் மனசாட்சியைக் கழட்டி வைத்து விட்டு ரசிக்கலாம். ரசிகன் என்று சிலிர்த்து கொள்ளலாம். ஆணாதிக்க அரிப்பையும் சொரிந்து கொள்ளலாம். பொறுக்கித்தனத்தை ஏற்றிப் போற்றலாம்.

இவர்களின் படங்கள், பாடல்கள் மட்டுமல்ல இன்னும் பல பேர்கள் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். எல்லாப் பாடல்களும் காதலைச் சொல்வதில்லை. வெறும் காமத்தைத்தான் சொல்கின்றன. பெண்ணின் அழகைப்புகழ்கின்றன (அழகே அழகே அழகின் அழகே நீயடி, அழகோ அழகு உன் கண்ணழகு). உடலை வர்ணிக்கின்றன (இடுப்பிருக்கானா இல்லையானா இலியானா, விட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின் மேலே). உடலை வர்ணிப்பதும், அழகைப் புகழ்வதும் எப்படியப்பா காதலாகும் ? மெலடிகளில் கொஞ்சம் கவித்துவமாக எழுதியைதே குத்துப் பாட்டில் கொச்சையான வரிகளைப் போட்டால் மாறிவிடுகிறது. குத்து, போடு, போட்டுத்தாக்கு, வெச்சிக்க என்று காது கூசுமளவிற்கு அடித்து விளையாடலாம்.

என்ன கருமாந்திரமோ இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொண்டு எழுத வேண்டுமா என்று தோன்றுகிறது. இரண்டரை மணி நேரம் ஒரு வாரத்துடன் மறக்கப்படும் இந்தத் திரைப்படக் குப்பைகளைப் பற்றியும் பாடல்களையும்தானே பற்றி பேசிக்கொண்டும், நினைத்துக் கொண்டும், எழுதுக் கொண்டுமல்லவா நாம் எல்லோரும் வாழ வேண்டியிருக்கிறது.  இணையம், அச்சு ஊடகம், தொலைக்காட்சிகள் வரை எல்லோரும் இதற்குத்தானே இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அதனால்தானே நானும் புலம்ப வேண்டியிருக்கிறது.

எனக்கு
ஜக்கி வாசுதேவ் சொன்னது ஒன்று நினைவுக்கு வருகிறது.  நாம் அயோக்கியர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், மோசடிப் பேர்வழிகள் ஆகியோரை வீட்டுக்குள் விடுவதற்கு விரும்ப மாட்டோம். ஆனால் அவர்கள் அனைவரும் தொலைக்காட்சியின் வழியாக நமது வீட்டுக்குள் வந்தே விட்டார்கள்.

திரைப்படங்களையும், பாடல்களையும் நினைத்தால் எனக்கு அவர் சொன்னது சரியென்று தோன்றுகிறது.இந்த மேதாவிகளுக்கு நான் சூடு சுரணை ரசனை உள்ளவர்கள் சார்பில் சொல்வது இதுதான், தயவு செய்து பாடலை எழுதாதீர்கள், எழுதினாலும் அதைப் பாடல் என்று சொல்லாதீர்கள், சொன்னாலும் அதை சொந்தக்குரலில் பாடி எங்களைக் கொல்லாதீர்கள், தனியாக நாலு பேரிடம் பாடிக்காட்டி என்ன கிடைக்கிறதோ வாங்கிக் கொள்ளுங்கள். நிறுத்துங்கடா டேய்.
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

4 கருத்துகள்:

  1. பெயரில்லா12/4/13 5:16 AM

    சிம்புவை விட பெரிய கிறுக்கன் நீ தாய்யா.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12/4/13 4:56 PM

    I completely agree with you. I am also having the same feeling about their songs.
    Tamil cinema has gone to dog several decade ago.Now a days song writers has no
    knowledge of the Tamil language. It is our fate we will have to stomach it.
    M.Baraneetharan.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்களுக்கு மிக்க நன்றி பரணிதரன். நினைத்தாலே பற்றிக்கொண்டு வருகிறது. தமிழ்மொழியைக் குதறி எடுக்கிறார்கள்

      நீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்