பேராசையா அபத்தமா வாழ்க்கை ! - இவர்கள் இப்படித்தான் - 1

இந்த நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில்தான் எத்தனை பரவசம் அடுத்தவனைப்போல் பாவனை செய்வதற்கு ? இவர்களுக்கு தெரியும் எல்லோரது குழந்தைகளும் முதல் மதிப்பெண் வாங்க முடியாது என்று. ஆனாலும் குழந்தைகளுக்கு இவர்கள் கொடுக்கும் அழுத்தம் அவன் மட்டும் நல்லாப் படிக்கிறான் உன்னால மட்டும் ஏன் முடியல என்று ஆயிரம் கிலோ தாழ்வு மனப்பானமையை கொண்டு போய் பிஞ்சுகளிடம் ஏற்றி வைப்பார்கள்.

இது பள்ளிக்கூடம் முடியும் வரை தொடரும். நல்ல வேளையாக எனக்கு அப்பேர்ப்பட்ட கொடியவர்கள் பெற்றோர்களாக வாய்க்க வில்லை. என் அப்பா எனக்கு நினைவு தெரிந்து என்னுடைய பதினைந்து வயதிற்கு மேல் திட்டியதோ அதிர்ந்து பேசியதோ இல்லை. நான் கொஞ்சம் முன்கோபக்காரன், எனவே எனக்குக் கோபம் வந்து விடக்கூடாது எனவும், மனம் வருந்திடக் கூடாதெனவும் மிகவும் எச்சரிக்கையுடனே என் அப்பா என்னிடம் நடந்து கொள்வார். ஆனாலும் அவருக்கு மற்ற எல்லாப் பெற்றோர்க்கும் இருக்கும் சராசரியான ஆசைகள் இருந்தது, மகன் முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்றெல்லாம், இருந்தும் குழந்தையாக இருந்ததிலிருந்துஅதை மிகவும் அலட்டலுடனோ, எரிச்சலுடனோ சொன்னதில்லை.

ஆனால் என்னுடைய நண்பர்களின் தந்தைமார்களோ மிகவும் அலட்டல்காரர்கள், அவர்கள் தம் சொந்த மகனிடம் பேசுவது போலப்பேசவே மாட்டார்கள். என்னவோ குற்றவாளியிடம் பேசும் ஒரு காவலரின் தோரணைதான். படிப்பிற்கு இத்தன பணம் கஷ்டப்பட்டுக் கட்டியிருக்கிறோம் நீ என்ன மார்க் வாங்கற ? பேசாம மாடு மேய்க்கப் போக வேண்டியதுதான ? என்கிற பாணியில் பொளந்து கட்டுவார்கள். இவர்களைப் பார்த்தால் எனக்குப் பற்றிக் கொண்டு வரும்.  நீ மட்டும் ஏன் அம்பானி மாதிரி பணக்காரனாகல ? என்று கேட்பது எத்தனை அபத்தமோ அது போலத்தான் இவர்கள் பேசுவதும் இருக்கும். பணத்தைக் கட்டினால் மார்க்கு வாங்கிட வேண்டும். தந்தைமார்கள் இங்கனம் பேசுவதை நண்பர்கள் அவ்வளவாகக் கண்டு கொண்டதில்லலை அவர்களுக்கு இது பழக்கமானதுதான். எனக்குத்தான் மனம் கிடந்து தவிக்கும். இது படிக்கும் காலத்தில் நடந்தது.

அதே பாணியில் இப்போது வேலைக்குச் செல்லும் அல்லது வேலை தேடியலையும் பருவத்திலும் அவர்கள் பேராசைக்காரர்களாக இருக்கிறார்கள். எல்லோருக்கும் தகவல் தொழில் நுட்பத்துறையில் ஐந்திலக்க ஊதியத்தில் வேலை கிடைக்காது. வெளிநாட்டுக்கும் போக முடியாது என்பது எதார்த்தமான உண்மை. வேலை கிடைப்பது என்பதே எதார்த்தமில்லாத உண்மை. ஆனால் இவர்கள் விடும் ரவுசுதான் தாங்க முடிவதேயில்லை. இன்னுமா வேலை கிடைக்கல என்று ஆரம்பிப்பார்கள். அவர்களுக்கு தெரிந்தவரோ அல்லது உறவினரின் மகனோ இன்ன இடத்தில் படித்தார் இன்ன இடத்தில் வேலை கிடத்திருக்கிறது இத்தனை சம்பளம் என்று பற்ற வைக்க வேண்டியது. போகும் போது ம்ஹூம் எல்லாருக்குமா வேலை கிடைக்குது என்று உச் கொட்டிவிட்டுப் போக வேண்டியது. இது இவர்களுக்குத் தேவையில்லாத வேலைதானே ?

என்னுடைய அலுவலத்தில் வேலை பார்க்கும் இளைஞன் ஒருவனுக்கு உறவினர்களால் இத்தொல்லை ஏற்படுவதாகச் சொன்னான். அவனது உறவினரின் மகளுக்கு அக்சென்ஞ்சர் நிறுவனத்தில் வேலை கிடைத்து விட்டது. அவள் பொறியியல் இவனும் பொறியியல், வழக்கம் போலவே பெண்கள் நன்றாகப் படிக்ககூடியவர்கள், சிலருக்கு மட்டுமே வாய்க்கும் வளாகத்தேர்வு என்ற விதிகளின்படி அவளுக்கு வேலை கிடைத்து  விட்டது, இவனுக்கு இன்னும் அரியர் இருக்கிறது. 2 பட்டம் வாங்கியும் வேலை கிடைக்காத உலகில் அரியர் வைத்தும் ஒரு வேலை கிடைத்து விட்டது. ஒரு சுமாரான நிறுவனத்தில் 9000 ஊதியத்தில் அட்மினாக வேலை. இவன் பெற்றோர்களுக்கு வேறொரு கவலை. இவனுக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்கும் ஆலோசனை என்னவென்றால் இவன் தகவல் தொழில்நுட்ப வல்லுநராகாவிட்டாலும் பரவாயில்லை அக்சென்ஞ்சர் நிறுவனத்திலாவது அட்மினாக வேலை பார்க்க வேண்டும். இல்லையெனின் இலண்டன் சென்று ஒரு வருடமாவது இருந்து விட்டு வர வேண்டும்.

இந்த மாதிரியான எண்ணங்கள் உருவாவதற்கு பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் அவர்களின் நண்பர்கள்தான் காரணம். நடுத்தரவர்க்க ஜாதிக்காரர்களுக்கு இந்த போலி கௌரவம் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மற்றவர்கள் முன்னர் தான் ஒரு அங்குலம் கூடத் தாழ்ந்து போகக்கூடாது என்பதில். எப்படியாவது கெத்துக் காட்ட வேண்டும். இன்னொரு பிரச்சனை பையனுக்குப் பெண் தேடுவதுதான். பெண்கள் இப்போதெல்லாம் ரொம்பவும் கிராக்கி பண்ணுகிறார்கள். அவர்களின் பெற்றோர்கள் அதற்கும் மேலே இருக்கிறார்கள். பெண்கள் கிடைப்பது ரொம்பவும் சிரமமாகி விட்டது. (பெற்றோர் நிச்சயிக்கும் திருமணமென்றாலே சொந்த ஜாதிக்குள்தானென்பதை சொல்லத் தேவையில்லை). பெண்கள் எல்லோரும் படித்தும் விடுவதால் பெரிய வேலையிலிருக்கும் ஆணைக் கேட்கிறார்கள். எஞ்சிய ஆண்கள் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்கிறது. அதனால்தான் சென்னையில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலையோ அல்லது வெளிநாட்டில் இருந்து விட்டு வந்திருக்கிறான் என்ற பெயரை எடுக்கவோ பெற்றோரை இது போல எண்ண வைத்திருக்கிறது. என்ன வேலையாக இருந்தாலும் சிங்கியடிப்பது அவரவர்க்குத்தான் தெரியும். பெற்றோர்க்கு அங்கலாய்க்க மட்டும் தெரியும். கள நிலவரமே அவர்களுக்குத் தெரிவதில்லை தம்முடைய தம்பட்டத்தை நிறுத்தவே அவர்களும் விரும்பவில்லை
Download As PDF
Bookmark and Share
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Post Comment

2 கருத்துகள்:

  1. இன்றைய முரண்பட்ட வாழ்க்கைமுறையை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

நான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்